
ஜெயமோகனின் படைப்புலகு தமிழ் நவீன இலக்கியத்தில் மானுட வாழ்வியலின் சிக்கல்களையும் அரசியல் அதிகாரப் பிரமைகளையும் உளவியல் சிதைவுகளையும் மிக ஆழமாகப் பதிவுசெய்து வருகிறது. அந்த வகையில், தேர்தல் காலச் சூழலை மையமாகக் கொண்டு மனிதர்களின் வெறிபிடித்த பேச்சுகளையும் ஊடகங்களின் சத்தங்களையும் நவீனத் தொழில்நுட்பத்தின் தேவையற்ற திணிப்புகளையும் நையாண்டியோடு அணுகும் முக்கியமான சிறுகதை ‘நகைமுகன்’. இக்கதை தொலைபேசி பரிமாற்ற மையத்தை (Telephone Exchange) களமாகக் கொண்டு, நவீன மனிதனின் வாழ்வியல் நெருக்கடிகளையும் அக-புற முரண்பாடுகளையும் தத்துவார்த்த மற்றும் மெய்யியல் தளத்தில் ஆராய்கிறது.
கதையின் மையக் கதாபாத்திரம் ஆறுமுகம். எவ்விதப் பெரிய லட்சியங்களும் இன்றி, அன்றாடப் பிழைப்புக்காகப் போராடும் எளிய டெக்னீசியன். அவரைச் சுற்றியுள்ள உலகம் தேர்தலைக் கொண்டாடுகிறது; அரசியல்வாதிகள் சாதி, மதம், கட்சி அடையாளங்களைக் கடந்து ஒருவரையொருவர் அச்சுறுத்திக் கொள்கின்றனர். ஆனால், ஆறுமுகத்தின் அன்றாட வாழ்வோ அறுந்துபோன தொலைபேசிக் கம்பிகளை இணைப்பதிலும், பொதுமக்களின் வசவுகளையும் மிரட்டல்களையும் தாங்குவதிலுமே காலாவதியாகிறது.
இங்குத் தகவல் தொடர்புச் சாதனம் (Telephone) என்பது மனிதர்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்; ஆனால், அதுவே மனிதர்களுக்கு இடையிலான வன்மத்தையும் சந்தேகத்தையும் சண்டைகளையும் பெருக்குவதற்கான ஆயுதமாக மாறுகிறது. ஊடகங்களும் தொலைபேசிகளும் பெருக பெருக, மனிதர்களின் தனிமையும் பதற்றமும் பன்மடங்கு அதிகரிக்கின்றன என்பதை ஆறுமுகத்தின் சோர்வுற்ற முகம் துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
தேர்தல் காலம் என்பது ஜனநாயகத்தின் திருவிழா என்று வர்ணிக்கப்பட்டாலும், கதையில் அது ஒரு சாதிய, மத மோதல்களின் களம். குமாரசாமி நாடார் கூறுவது போல, “சாமானியனின் மனம் என்பது கணக்குத் தீர்க்கும் இயந்திரம்“. அங்கு நியாயமோ, தர்க்கமோ எடுபடுவதில்லை; மாறாக, சாதியும் மதமும் சொந்தக் கணக்குகளுமே மனிதர்களின் அசைவுகளைத் தீர்மானிக்கின்றன.
ஊர் முழுவதும் வதந்திகள் தீயாய்ப் பரவுகின்றன. ஒருபுறம் அரசியல் கட்சிகளின் மிரட்டல்கள், மறுபுறம் சண்டை போட்டுவிட்டு எதற்காகச் சண்டையிட்டோம் என்றே தெரியாமல் நிற்கும் சாமானிய மனிதர்கள்.
இந்தச் சூழலில் மனிதர்கள் அனைவரும் ஒருவித சமூகப் பித்துநிலை பிடித்தவர்களாக (Mass Hysteria) மாறிவிடுகிறார்கள். அவர்களின் பேச்சுகள் அனைத்தும் ஒலிகளாக மட்டுமே எஞ்சுகின்றன; அதில் உண்மை எள்ளளவும் இல்லை.
கதையின் மிக முக்கியமான மெய்யியல் குறியீடு முருகன். அவனுக்குப் பேசத் தெரியாது, சிந்திக்கத் தெரியாது; யாருக்காகவும் எதற்காகவும் அவன் தன் விருப்பப்பட்டுச் சிரிப்பதில்லை. அவனது உதட்டமைப்பே ஒரு சர்க்கஸ் கோமாளியைப் போல எப்போது சிரிப்பதுபோலவே இருக்கும். அவனைக் கதையின் நாயகனான ஆறுமுகம் ஆபீஸில் அடையாளமாக, மூலைப் பொருளாகவே வைத்திருக்கிறார்.
ஆனால், கதையின் உச்சக்கட்டப் பகுதியில் அந்தப் பேரமைதியின் தருணம் அமைகிறது. தொலைபேசி எக்ஸ்சேஞ்ச் முழுமையாகத் தடைபட்டு, சத்தங்கள் அனைத்தும் அடங்கிப்போகும்போது, எல்லா எண்களிலும் ஆப்புகளைச் செருகி மொத்த அமைப்பினையும் ஸ்தம்பிக்கச் செய்தவன் அந்த வாய் பேச முடியாத, சிந்திக்கத் தெரியாத முருகன் என்பது தெரியவருகிறது.
இங்கு ஜெயமோகன் முன்வைக்கும் மெய்யியல் கேள்வி ஆழமானது: மனிதர்கள் அனைவரும் அரசியல், தேர்தல், வன்மம், சண்டைகள் என்று எதை எதையோ பேசி பேசி ஆகாயத்தை நஞ்சாக்குகிறார்கள்.
அந்தப் பெருஞ்சத்தங்களுக்கு மத்தியில், எதைப் பற்றியும் கவலைப்படாமல், எளிய புன்னகையுடன் இருக்கும் முட்டாள் என்று சமூகம் கருதும் மனிதன், ஒட்டுமொத்த நவீன இயந்திர உலகத்தையும் ஒரே நொடியில் அணைத்து அமைதியாக்குகிறான்.
அமைதி என்பது பெரும் தத்துவார்த்த விவாதங்களாலோ, அரசியல் பிரகடனங்களாலோ வருவதன்று; அது சத்தங்களின் முடிவில் எஞ்சும் வெறுமையின் வெளிப்பாடு. முருகன் செருகிய அந்த ‘ஆப்புகள்’ வெறும் மரத்துண்டுகள் அல்ல; அவை மனித நாகரிகம் உருவாக்கி வைத்துள்ள ஆரவாரமான பொய்களுக்கு எதிராக இயற்கையும் அறியாமையும் வைக்கும் முற்றுப்புள்ளிகள்.
‘நகைமுகன்’ சிறுகதை, நவீனத் தொழில்நுட்பமும் அரசியலும் சேர்ந்து மனிதனை எவ்வாறு இயந்திரத்தின் உதிரிப்பாகமாக மாற்றிவிடுகின்றன என்பதைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. சத்தங்களால் நிறைந்த ஒரு உலகத்தில், அமைதியின் அருமையைச் சொல்லும் குறியீடாக முருகனின் புன்னகை மாறுகிறது.
ஆறுமுகத்தின் சிரிப்பும், டி.இ மற்றும் மகாதேவனின் சிரிப்புகளும் சேர்ந்து இறுதியில் அந்த எக்ஸ்சேஞ்சையே அதிரவைப்பதன் மூலம், ஜெயமோகன் மனித வாழ்வியலின் அபத்தங்களை மெய்யியல் கோணத்தில் நையாண்டி செய்கிறார். வாழ்க்கையின் குழப்பங்களை மாற்றுவதற்குத் தீர்வுகள் தேவையில்லை; சில வேளைகளில் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டுச் சிரிப்பது மட்டுமே எஞ்சியிருக்கும் ஒரே வழியlக மாறுகிறது என்பதை இக்கதை அழுத்தமாக உணர்த்துகிறது.
– – –
