இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 141.புத்தகப் பிசாசு  (இரா. நாறும்பூநாதனின் ‘மூச்சுக்காற்று’ சிறுகதையை முன்வைத்து…)

 

எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் திருநெல்வேலி மண்ணின் வாசனையோடும் எளிய மனிதர்களின் அந்தரங்க உளவியலோடும் இயங்கி வந்த எழுத்தாளர். இவரது ‘மூச்சுக்காற்று’ எனும் சிறுகதை, புத்தகங்களின் மீது தீவிர காதல்கொண்ட மனிதனின் (சிவராமன்) அகால மரணமும் அந்த மரணம் அவனது குடும்பத்தினரின் மீது திணிக்கும் தனிமனித வாழ்வியல் தத்தளிப்புகளையும் குறித்து ஆழமாகப் பேசுகிறது.

மனிதனின் மறைவுக்குப் பின்பு அவன் விட்டுச்செல்லும் பொருள்களும் நினைவுகளும் எப்படிப் பின்தங்கியவர்களை வாழ வைக்கின்றன அல்லது வதைக்கின்றன என்பதை இக்கதை வாசகர் மனத்தில் அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. தனிமனிதனின் வாழ்வியல் நெறிகளையும் பாசப் பிணைப்புகளையும் அடித்தளமாகக் கொண்டு இக்கதையை வாசிக்கலாம்.

கதையின் மையக் குறியீடாக விளங்கும் சிவராமன், சாதாரண அரசு குமாஸ்தா வாழ்க்கையை வாழ்ந்தவன் அல்லன். அவன் தீவிரமான புத்தகப் பிரியன்; கதையின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு “புத்தகப் பிசாசு”.

தான் வாங்கும் ஒவ்வொரு நூலிலும் தனது பெயரையும் தேதியையும் எழுதி, நேர்த்தியாகப் பேணும் பழக்கம் கொண்டவன். அவனது சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை புத்தகங்களை வாங்குவதற்கே செலவிட்டவன்.

அன்றாடக் குடும்பப் பொறுப்புகளையும் தங்கை மாலதியின் திருமணத்தையும் தள்ளிவைத்துவிட்டு, புத்தகங்களை மட்டுமே தனது உலகமாக வாழ்ந்தவன்.

இறப்புக்குப் பின் அவன் சேமித்து வைத்த இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெறும் காகிதக் குவியல்கள் அல்ல; அவனது மூச்சுக்காற்று அடங்கியுள்ள ஆன்மாவாகவே அவனது தாய்க்கும் தங்கைக்கு மாறிவிடுகிறது. தனிமனிதன் ஒருவன் தன் வாழ்நாளில் சேர்த்து வைக்கும் நேசிப்புக்குரிய பொருள்கள், அவனது வாழ்க்கையில் எத்தகைய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு சிவராமனின் பாத்திரம் சிறந்த சான்றாகும்.

இக்கதையின் சோகமான மற்றொரு முகம் சிவராமனின் தங்கை மாலதியின் வாழ்க்கை. நாற்பதைத் கடந்தும் திருமணம் ஆகாமல், முதிர்கன்னியாகத் தவிக்கும் அவளது வாழ்வியல் சிக்கல் நடுத்தர வர்க்கத்தின் சாபக்கேட்டை வெளிப்படுத்துகிறது.

பெற்றோரின் காதல் திருமணத்தால் சமூகத்தில் எதிர்கொண்ட சவால்களும் வரதட்சணை மற்றும் ஜாதிச் சிக்கல்களும் மாலதியின் திருமணத் தள்ளிப்போகத்திற்குக் காரணமாகின்றன. காந்திமதி அம்பாள் சந்நிதியில் கொடிமரத்தின் முன்பு கைகளைப் பரப்பி வேண்டிக் கிடக்கும் அவளது ஏக்கம், சமூகத்தின் மரபுசார் அழுத்தங்களுக்கு நடுவில் சிதறிப்போன பெண்ணின் உளவியல் சிதைவைக் காட்டுகிறது.

அண்ணன் உயிரோடு இருந்தபோது அவனது புத்தகப் பிரியத்தைக் கண்டித்த அதே மாலதி, இன்று அண்ணனின் மறைவுக்குப் பின்பு அவனது நினைவுகளுடன் வாழத் தொடங்குகிறாள். அண்ணன் தொட்ட புத்தகங்களை வாசிப்பதன் மூலமும் அவனுடன் உரையாடுவது போல பாவனை செய்வதன் மூலமுமே தனது தனிமையை அவள் எதிர்கொள்கிறாள்.

சிவராமனின் திடீர் மரணம் அவனது தாயை மனத்தளவில் முற்றிலும் உலுக்கிவிடுகிறது. அவன் உயிரோடு இருந்தபோது புத்தகங்களை வாங்குவதற்காக அவனைத் திட்டிய அதே தாய், இன்று அவனது மரணத்திற்குப் பின்னர் அந்தப் புத்தகங்களில்தான் மகனின் மூச்சுக்காற்று இருப்பதாக நம்புகிறார்.

“இந்த அறைக்குளேயே தாம்பா நான் எப்பவும் இருக்கேன்…..இந்த புஸ்தகங்களில் தான் சிவராமின் மூச்சுக்காற்று இருப்பதுபோல இப்பெல்லாம் தோணுது..அவன் வாங்கி அடுக்கி இருக்கிற இந்த புஸ்தகங்களைப் புரட்டும்போதெல்லாம் அவனோடு பேசுவது போலவே இருக்கு..” – என்ற இந்த வரிகள் தனிமனித வாழ்வியலின் மிக ஆழமான துயரத்தைப் பேசுகின்றன. மகனை இழந்த தாயின் பெருமூச்சும் அவனது நினைவுகளைச் சுமந்து திரியும் தவிப்பும் வாசகர் கண்களில் நீரை வரவழைக்கக் கூடியவை. யாருக்கோ விற்கச் சொன்ன புத்தகங்களை விற்க மறுப்பதும் அந்த அறையிலேயே முடங்கிப் போய் வாழ்வதும் தாயின் தீவிரமான மகன்பாசத்தின் வெளிப்பாடாகும்.

கதையின் இறுதியில் கதாநாயகன் ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாமிர்த சாகரம்’ நூலை எடுப்பதற்காகச் சென்றாலும் அந்தச் சூழலில் ஏற்பட்ட உளவியல் மாற்றத்தால் அதை எடுக்காமல் திரும்புகிறான்.

அண்ணன் உயிரோடு இருந்தபோது அவனுடன் சுக்குக் காபி குடித்துவிட்டு இலக்கியம் பேசிய நாள்களின் நினைவுகள், இப்போது வீட்டின் அமைதியிலும் வெற்றிடத்திலும் கரைந்துபோய் விடுகின்றன.

தாயும் தங்கையும் இறுதி வரை தங்கள் வாழ்க்கையின் பாரத்தை வெளிப்படுத்தினாலும் அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் புத்தகங்களையே பற்றுக்கோடாக மாற்றிக்கொண்டுள்ளனர்.

இந்தச் சிறுகதை, மனித உறவுகளின் ஆழத்தையும் புத்தகங்களின் மீதான தீவிர காதலையும் ஒரு மரணம் குடும்பத்தில் ஏற்படுத்தும் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தையும் பதிவு செய்துள்ளது.

தனிமனித வாழ்வியலின் வலிகளையும் மரணத்தைத் தாண்டி நிற்கும் நினைவுகளின் பலத்தையும் கறாராகவும் யதார்த்தமாகவும் பேசும் இக்கதை, மனித மனங்களின் உளவியல் சிக்கல்களைப் புரிந்துகொள்ள உதவும் ஆவணமாகத் திகழ்கிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *