இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 142. தத்தளிப்பு  (கலாப்ரியாவின் ‘பிள்ளைப் பூச்சி’ சிறுகதையை முன்வைத்து…)

 

தமிழ்க் கவிஞராகவும் எழுத்தாளராகவும் அறியப்படும் கலாப்ரியா, தனது கவித்துவமான மொழியாலும் கிராமியச் சூழலின் யதார்த்தப் பதிவுகளாலும் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். 

இவரது ‘பிள்ளைப் பூச்சி’ எனும் சிறுகதை, கிராமியப் பின்னணியில் வாழும் எளிய மக்களின் விளிம்புநிலை உளவியலையும் குறிப்பாகப் பெண்ணின் ஆழ்மன ஆசைகள், அச்சங்கள், சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் பாலியல் தத்தளிப்புகளையும் பற்றிப் பேசுகிறது.

தமிழ்ச் கிராமப் புறங்களின் அன்றாட இயக்கத்திற்குள் மறைந்து கிடக்கும் அந்தரங்க உண்மைகளை, பூச்சிகள் மற்றும் இயற்கைக் குறியீடுகளுடன் இணைத்து இக்கதை விவரிக்கிறது. தனிமனிதனின் வாழ்வியல் நெறிகளையும், நடுத்தர/எளிய வர்க்கத்துப் பெண்களின் மனப் போராட்டங்களையும் அடித்தளமாகக் கொண்டு இக்கதையைப் பற்றி விரிவாகப் பேச இடமுள்ளது.

இந்தக் கதையின் மையக் கதைமாந்தரான ராசாத்தி, எளிய கிராமத்துப் பெண் அல்லள்; அவள் கூர்மையான அவதானிப்புத் திறன் கொண்டவள். வீட்டின் பின்புறத் தார்சாலில் பருத்திக் கொட்டை அரைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் வீட்டின் மூலைமுடுக்குகளில் நடக்கும் சிறு அசைவுகளைக்கூட அவளால் கணிக்க முடிகிறது.

பானைக்கு அடியில் ஓடும் தேள், பூரான் போன்றவற்றை அவள் கவனிக்கும் முறையும் அவற்றை எதிர்கொள்ளும் விதம் பற்றிய அவளது புரிதலும் அவளது கூர்மையான வாழ்வியல் அனுபவத்தைக் காட்டுகிறது.

‘பூரானை ஆண்கள் அடிக்கக் கூடாது’ என்று அவள் சொல்லும் சங்கரன் கோவில் கோமதி அம்மன் கதை, ‘கிராமிய நம்பிக்கைகளின் வழியாக ஆணாதிக்கச் சமூகத்தில் பெண்கள் தங்களை விரிவுபடுத்திக் கொள்கிறார்கள்’ என்பதைக் காட்டுகிறது. நம்பிக்கைகளும் சடங்குகளும் எளிய மக்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை இது புலப்படுத்துகிறது.

கதையில் வரும் கோவிந்தனின் பாத்திரம், சமூகத்தின் விளிம்பில் நிற்கும் ஒரு மனநலம் குன்றிய/திகைப்பூட்டும் மனிதனின் குறியீடாகும். அவனது தோற்றமும், இடுப்பில் சுற்றப்பட்ட துணியின் வழியாக வெளிப்படும் நிர்வாணமும், பெண்களின் மனத்தில் ஒருவித அச்சத்துடனான ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

கோவிந்தனைக் கண்டால் ராசாத்திக்கு அச்சம் ஏற்படுகிறது. அது வெறுப்பன்று; அவனது திகம்பர கோலத்தைப் பார்க்கும்போது தன் வசத்தை இழப்பது போன்ற ஒருவித உளவியல் தடுமாற்றம் அது.

கோவிந்தனைப் பார்த்து ஆண்கள் கேலி செய்வதும் பெண்கள் கமுக்கமாகச் சிரிப்பதும் கிராமியச் சமூகத்தின் பாலியல் குறித்த வெளிப்படையற்ற முரண்களை வெளிப்படுத்துகிறது. ராசாத்தி கோவிந்தனுக்குச் சுண்ணாம்பு நீட்டிவிட்டு, அவனது இடுப்புக்குக் கீழ்ப் பார்வை செல்வதைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பது, பெண்ணின் அடக்கப்பட்ட பாலியல் தேடலின் வெளிப்பாடாகும்.

ராசாத்தியின் கணவன் ஆறுமுகத்திற்கும் அவளுக்கும் இடையிலான உறவு எவ்விதப் பாசப் பிணைப்பும் இன்றி, இயந்திரத்தனமான கிராமிய உழைப்புச் சூழலில் நகர்கிறது.

கோவிந்தனிடம் சுண்ணாம்பு கொடுத்துவிட்டுத் திரும்பும் ராசாத்தியின் கையை ஆறுமுகம் பிடித்து இழுப்பதும் அவள் அதனை விலக்கிவிட்டு வேலையைத் தொடர்வதும் தமிழ்க் கிராமத்துப் பெண்புலத்தின் யதார்த்தம்தானா?.

பகலில் வேலைச் சுமைக்கும் வெயிலுக்கும் நடுவில் அமுக்கப்படும் உணர்வுகள், இரவில் வெளிப்படும் என்ற ஆறுமுகத்தின் வார்த்தையும் ராசாத்தியின் மனத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. 

“ராத்திரியென்ன பகலென்ன முதலிலேயே உடன் பட்டிருக்கலாமோ என்று நினைத்தாள்” என்ற வரிகள், சமூகத்தின் வெட்கத்திற்கும் தனது சொந்தத் தேவைகளுக்கும் நடுவில் தவிக்கும் பெண்ணின் பாலியல் சார்ந்த உளவியலைத் தெரிவிக்கின்றன.

முருகாத்தாள் பாத்திரம் கிராமியச் சமூகத்தின் மற்றொரு முகம். கணவன் இல்லாமல், சில்லரை வேலைகளைச் செய்து கொண்டு, சாமியாடுவது, காத்துப் பிடிப்பு எடுப்பது போன்ற காரியங்களைச் செய்யும் அவளைச் சமூகம் முரண்பட்ட பார்வையோடு அணுகுகிறது.

ராசாத்தி தனது மனத்தில் கோவிந்தனைப் பற்றித் தோன்றிய எண்ணத்தை முருகாத்தாளிடம் தயக்கத்துடன் பகிர்ந்துகொள்வது, அவளுக்குள் இருக்கும் குற்ற உணர்ச்சியைக் காட்டுகிறது.

ஆனால், முருகாத்தாள் அதைப் பெரிதுபடுத்தாமல் கோவிந்தனின் கடந்த காலத் துயரத்தைச் சொல்வது (அவள் மனைவியுடன் ஓடிப்போனது), கிராமியச் சமூகத்தில் அந்தரங்கள் எப்படி எளிதாகப் பொதுவெளியில் பேசப்படுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

கதையின் தலைப்பாக அமைந்துள்ள ‘பிள்ளைப் பூச்சி’ என்பது வெறும் பூச்சியைக் குறிப்பதன்று; அது மனிதர்களின் வாழ்க்கையோடும் விதியோடும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் குறியீடு. குளிக்கும் போது சகதியிலிருந்து கிளம்பிவரும் பூரானும் பிள்ளைப் பூச்சியும், எந்த நேரத்திலும் மனித வாழ்க்கையில் எதிர்பாராமல் எழுந்துவரும் ஆசைகள், அச்சங்கள் மற்றும் விபத்துகளைக் குறிக்கின்றன.

கோவிந்தன் செங்கல்லை எறிவதும் பசுவின் கால் பக்கமாகப் பிள்ளைப் பூச்சி ஊர்ந்து செல்வதுமான கதையின் முடிவு, இயற்கையின் இயக்கத்திற்கும் மனிதனின் கட்டுப்பாட்டுக்கு அடங்காத மன எழுச்சிகளுக்கும் இடையிலான தொடர்பை உணர்த்துகிறது.

கவிஞரும் எழுத்தாளருமான கலாப்ரியாவின் ‘பிள்ளைப் பூச்சி’ என்ற இந்தச் சிறுகதை, கிராமத்துப் பின்புலத்தில் வாழும் எளிய மக்களின் கடினமான உழைப்புக்குள்ளும் மரபுச் சடங்குகளுக்குள்ளும் புதைந்து கிடக்கும் நுட்பமான உளவியல் உண்மைகளை மிகச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.

தனிமனிதனின் அந்தரங்க ஆசைகள், சமூகத்தின் பயங்கள், விளிம்புநிலை மனிதர்கள் மீதான பார்வை மற்றும் பாலினச் சிக்கல்களைக் கறாராகவும் யதார்த்தமாகவும் பேசும் இக்கதை, தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் பெண்களின் உளவியலைப் புரிந்துகொள்ள உதவும்.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *