
மாநகரங்களின் இரைச்சல்களுக்குள் தொலைந்துபோகும் விளிம்புநிலை மனிதர்களின் அக உலகை, அவர்களின் அடையாளமற்ற வாழ்வியலைத் துல்லியமாகப் பதிவு செய்துவரும் எழுத்தாளர்களில் இலட்சுமண பிரகாசம் முக்கியமானவர்.
அவர் எழுதிய ‘நூற்றாண்டு பழமைவாய்ந்த சிதிலமடைந்த கட்டடத்தைப் பற்றிய சில குறிப்புகள்’ என்ற சிறுகதை, வெறுமனே வீடில்லா மனிதனின் கதையன்று; நவீன நாகரிகத்தின் பேரழிவிலிருந்து தப்பியோடி, பாழடைந்த கட்டடத்தில் அடைக்கலம் புகுந்து, இயற்கையோடும் விலங்குகளோடும் தன்னை இணைத்துக்கொள்ள முயலும் ஒருவனின் சிதைந்த உளவியலையும் அரசு எந்திரத்தின் வன்முறையையும் பேசும் முக்கியமான படைப்பாகும்.
கதையின் நாயகனுக்கு ஊரும் பெயரும் கிடையாது. அவன் நகரத்து வீதிகளில் மூத்திரம் பெய்து, தனது கோடுகளில்லா, பாதைகளில்லா வழிப்போக்கு வாழ்வை வாழ்பவன். நெடுநாள் உறக்கமற்றுச் சிவந்த அவனது கண்கள், அவனது அகத் தவிப்புகளின் வெளிப்பாடாகும். அவன் அடைக்கலம் புகுந்த அந்த நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த, ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு கைவிடப்பட்ட கட்டடம் வெறும் சுவர்களால் ஆனது அன்று; அது நாகரிக உலகத்தால் துரத்தப்பட்ட அகதிகளின் இறுதி அடைக்கலக் குறியீடு.
கட்டடத்தின் மூலையில் படுக்கும்போது, இடது கண்ணிழந்த, முலைசூம்பிய மெலிந்த நாயை விரட்டிவிட்டுத் தன் இடத்தை அவன் தேர்வு செய்கிறான். ஆரம்பத்தில் விலங்குகளுடனான அவனது உறவு ஒருவித ஆதிக்கமாகவோ அல்லது அந்நியத்தன்மையாகவோ தொடங்கினாலும் போக போக அந்த விலங்குகளின் உலகமே அவனது உலகமாக மாறுவதைக் கதை நுட்பமாக விவரிக்கிறது. மனிதர்களின் வாசனை அவனுக்கு அலுத்துப் போய்விட்டது; மனிதர்கள் காட்டும் வன்முறையும் சுயநலமும் அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான்.
அதிகாலையில் வீதிகளைத் தூய்மைப்படுத்தும் பெண், தன் வழக்கத்தின்படி வீதியில் திரியும் நாய்களுக்குப் பிஸ்கட்டுகளைப் போடுபவள். அவள் அந்தச் சிதிலமடைந்த கட்டடத்தின் மூலையில் படுத்திருக்கும் அழுக்கேறிய நெடிய உருவத்தைக் கண்டு முதலில் அச்சமடைந்தாலும் அவனது கைவிடப்பட்ட நிலையைக் கண்டு அவளுக்குள் எழும் கரிசனம் மனிதநேயத்தின் எச்சமாகத் தெரிகிறது. ஆனால், அந்தத் தூய்மைப் பணிப் பெண்ணின் உலகம்கூட மாநகராட்சியின் சட்டதிட்டங்களுக்கும் கருத்தடை உத்தரவுகளுக்கும் கட்டுப்பட்டதே.
வழிப்போக்கன் தனக்குக் கிடைக்கும் பிஸ்கட்டுகளைத் தானும் தின்றுவிட்டு, இடது கண்ணிழந்த அந்த முலைசூம்பிய நாய்க்கும் பகிர்ந்து கொடுப்பதில் விலங்குயிர் மீதான மெல்லிய ஈரம் வெளிப்படுகிறது. ஆனால், அந்த நாயை மாநகராட்சி நிர்வாகம் பிடித்துச் சென்று கருத்தடை செய்து காப்பகத்திற்கு அனுப்பும்போது, அவனது உலகத்தில் மீண்டும் வெறுமை ஏற்படுகிறது. மனித சமூகம் எங்குச் சென்றாலும் அங்குள்ள இயற்கையையும், விளிம்புநிலை உயிர்களையும் தன் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவந்து அடக்க முயல்கிறது என்பதன் குறியீடே இந்நிகழ்வு.
கட்டடத்தின் பின்பகுதியில் மனிதர்களின் இரகசியப் புணர்ச்சிகளைப் பார்க்க நேர்ந்த பின்பு, வழிப்போக்கனின் நடவடிக்கைகளில் ஒருவித பிறழ்வு ஏற்படுகிறது. சுவர்களில் ஆண்-பெண் சேர்க்கைக் குறிகளை வரைவதும் பெண்களின் உடல்களை வெறித்துப் பார்ப்பதும் நாய்களின் புணர்ச்சியைக் கல்லை எறிந்து துரத்துவதும் அவனது அகத்தில் தேங்கியிருக்கும் பாலியல் வக்கிரத்தையும் சமூகத்தின் மீதான கோபத்தையும் காட்டுகின்றன. மனித உறவுகளின் இயல்பான தன்மையை இழந்துவிட்ட அவனுக்கு, அந்தப் பாழடைந்த கட்டடத்தின் சுவர்களிலுள்ள கிறுக்கல்களும் குறியீடுகளுமே வாழ்க்கையின் வெளிப்பாடுகளாக மாறுகின்றன.
இரவு நேரங்களில் அந்தப் பழைய கட்டடத்தின் சுவர்கள் அவனுக்கு அதிகாரக் குரல்களை எழுப்பி அவனை மிரட்டுவது போலத் தோன்றுகின்றன. நவீன அரசு எந்திரமும் மாநகரக்காவல் துறையும் விளிம்புநிலை மனிதர்களை ஒருபோதும் நிம்மதியாக வாழவிடாது என்பதை அவனது அகத் தவிப்புகள் உணர்த்துகின்றன.
கதையின் உச்ச நிகழ்வு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பின்னணியில் நிகழ்கிறது. புனித தோமாவின் தேவாலயத்தில் மின் சரவிளக்குகளும் சுவிசேஷப் பாடல்களும் பாதிரியாரின் சிலுவைக் குறியீடும் அந்த நகரத்தையே மாய உலகமாக மாற்றுகின்றன. அந்தக் கொண்டாட்டத்தைக் கண்டு வியக்கும் வழிப்போக்கன், தன் கட்டடத்தின் சுவரிலும் செங்கலால் சிலுவைக் குறியை வரைந்து பார்க்கிறான். அவனுக்கு மதம் அல்லது ஆன்மிகம் என்பது கடவுளை அடைவது அன்று; அது அந்த அநாதைக் குறியீட்டின் வழியே தன்னை ஏதோவொரு சக்தியோடு இணைத்துக்கொள்ளும் தவிப்பு மட்டுமே.
ஆனால், காவல்துறையின் ரோந்துப் பணியில் மர்ம நபராகச் சந்தேகிக்கப்பட்டு அவன் கைது செய்யப்படுகிறான். அவனிடமிருந்து எந்த வார்த்தையையும் பெற முடியாத காவல்துறை, அவனை மனநலம் பாதிக்கப்பட்டவன் என முத்திரை குத்தி மனநலக் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கிறது.
அங்கு அவனது முடியும் தாடியும் மழிக்கப்பட்டு, அவனுக்குப் புதிய உடைகள் அணிவிக்கப்பட்டு, கழுத்தில் சிலுவையும் மாட்டப்பட்டு ஒரு ‘நாகரிக மனிதனாக’ மாற்றப்படுகிறான். ஆனால், அந்த மாற்றம் அவனது சுயத்தையோ சுதந்திரத்தையோ மீட்டுத் தரவில்லை; அவனது அடையாளத்தை முழுமையாக அழித்துவிட்டு, அவனை நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்துகிறது.
வழிப்போக்கன் காப்பகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், அவன் வசித்துவந்த நூற்றாண்டு பழமையான அந்தச் சிதிலமடைந்த கட்டடம் தொல்லியல் துறையின் அறிவிப்போடு பாதுகாக்கப்பட்ட இடமாக மாறுகிறது.
“அக்கட்டடத்தில் பறவைகளின் வருகையும், நாய்களின் வருகையும்… தொல்லெச்சமாகவும் சுவர்களில் வரையப்பட்ட விநோதமான கிறுக்கல்கள், கரியாலும் செங்கலாலும் தீட்டப்பட்ட சித்திரங்களுடன் வெறுமைக் காற்று நிரம்பிய மயான அமைதியாகக் காட்சியளித்தது.”
கட்டடம் பாதுகாக்கப்பட்டுவிட்டதா என்ன? ஆம், சுவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன; ஆனால் அங்கே வாழ்ந்த மனிதனின் ஆன்மாவும் அவனுடன் வாழ்ந்த விலங்குகளின் சுதந்திரமும் கொலை செய்யப்பட்டுள்ளன.
வரலாற்றின் பெயரிலும் தொல்லியலின் பெயரிலும் பழங்காலக் கட்டடங்களைப் பாதுகாக்கும் சமூகம், அதற்குள் வாழும் ஏழை எளிய விளிம்புநிலை மனிதர்களை எப்படிக் கொன்று புதைக்கிறது என்பதை எழுத்தாளர் இலட்சுமண பிரகாசம் இக்கதையின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.
– – –
