
கிராமிய அரசியல், குடும்பச் சண்டைகள் மற்றும் மனித மனங்களின் அகக் குரூரங்களைத் துல்லியமாகப் பதிவுசெய்யும் எழுத்தாளர்களில் என். ஸ்ரீராம் குறிப்பிடத்தக்கவர்.
அவர் எழுதிய ‘மசை’ என்ற சிறுகதை, வெறுமனே ஒரு பட்டி நாயைத் துரத்தி அடிக்கும் எளிய கிராமத்துக் கதையன்று; அரசியல் பகைகள், சாதிய-குடும்ப கவுரவம் மற்றும் வன்முறை ஆகியவற்றின் நடுவே சிக்கித் தவிக்கும் ஒருவனின் தவிப்புகளையும் மனிதர்கள் எப்படித் தங்களின் சுயநலத்துக்காக மற்றவர்களை ஒரு ‘மசை நாயைப்’ போல வேட்டையாடுகிறார்கள் என்பதைப் பற்றியும் பேசும் முக்கியமான படைப்பாகும்.
கதையின் தொடக்கத்திலேயே வறட்சியின் கோரமும் ‘மசை’ நாயைத் துரத்தி அடிக்கும் வெறியும் கதையின் களத்தை நிர்ணயிக்கின்றன. ‘மசை நாய்’ என்பது கிராமத்தில் மனிதர்களால் அநாவசியமாகத் துரத்தப்படும் சந்தேகிக்கப்படும் ஒரு குறியீடு. ஆனால், கதையின் நாயகன் தன் மாமாவின் மகளைக் கரம் பிடிக்க நினைக்கும் போது, அவனும் இதே சமூகத்தால் மசை நாயைப் போலத்தான் நடத்தப்படுகிறான் என்பதைக் கதை நகர நகரப் புரியவருகிறது.
பஞ்சாயத்துத் தேர்தலின் போது மாமாவும் சித்தப்பாவும் எதிரெதிர் அணியில் நின்றார்கள். அந்த அரசியல் பகை இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான உறவை நிரந்தரமாகச் சிதைத்துவிடுகிறது. “மூணு தலக்கெட்டா நம்ம குடும்பத்துக்கு நல்ல உறவு இருக்கு… அதைக் கெடுத்திட மாட்டீங்கன்னு நெனைக் கறேன்…” என்று மாமா பேசும் போதே, தனிமனிதனின் காதலும் உணர்வுகளும் குடும்பத்தின் அதிகார அரசியலுக்கும் சாதிய கவுரவத்திற்கும் முன்னால் எங்குமே மதிக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது.
கதையில் வரும் மசை நாய் கொல்லப்படும் காட்சியும் இறுதியில் நாயகன் வேட்டையாடப்படுவதைப் போலத் துரத்தப்படுவதும் நுட்பமாக இணைக்கப்பட்டுள்ளன. ஊர்க்காரர்கள் ஒரு பட்டி நாயைப் பழைய பகையின் காரணமாக அடித்துக் கொல்கிறார்கள். ஆனால், அதே ஊர்தான் நாயகனையும் ஒரு நாயைப் போலக் கருதித் துரத்துகிறது.
“மசை நாய நாரத்தான் மரத்தடியில பொதைச்சா, மரம் நல்லா காய் புடிக்குமாம்பா…” என்று சித்தப்பா சொல்வது, கிராமியச் சமூகத்தின் மூடநம்பிக்கைகளையும் வன்முறையையும் வெளிப்படுத்துகிறது. எதற்கெடுத்தாலும் வன்முறையைத் தூண்டும் சித்தப்பாவும் தன் அதிகாரத்தைக் காட்டத் துடிக்கும் மாமாவும் சேர்ந்து அந்த இளைஞனின் ஒட்டுமொத்த வாழ்வியலையும் சூனியமாக்குகிறார்கள். காதலுக்காகத் துணிந்து இறங்கும் நாயகன், இறுதியில் தன் சொந்தக் குடும்பத்தினராலேயே பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுகிறான். சித்தப்பா தூண்டிவிட்டுப் பெண்ணைக் கடத்தச் சொல்வதும் கடைசி நேரத்தில் கைவிட்டுவிடுவதும் கிராமிய அரசியலின் கோர முகத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.
நாயகனின் காதல் என்பது வெறும் ஆசையன்று; அது அவனது வாழ்வின் அர்த்தமாக மாறுகிறது. ஆனால், சமூகத்தின் பார்வையில் அது மீறலாகவும் கவுரவக் குறைச்சலாகவும் பார்க்கப்படுகிறது. மாமாவின் மகள் வித்யாவிடம் அவன் பேசும்போதும் அவள் நடுங்கும் குரலில் “எதா இருந்தாலும் அப்பாகிட்டே பேசுங்க!” என்று சொல்வதும், அச்சம் நிறைந்த கிராமியச் சூழலில் பெண்களின் நிலை எத்தகையது என்பதை உணர்த்துகிறது.
பெண்ணைக் கடத்திச் செல்லும் உச்சக்கட்ட காட்சியில், கார் வராததும் ஊர்க்காரர்கள் கம்புகளுடன் துரத்தி வருவதும் அவனது ஒட்டுமொத்தத் திட்டத்தையும் தகர்க்கிறது. அப்போது மாமாவின் குரல் ஒலிக்கிறது: “உட்ராதே… ஒரே போடா போட்டெறி… மத்ததை நான் பாத்துக்கறேன்!”
இந்த வரி நாயுக்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்கிறது. நாயை எப்படி அடித்துக் கொன்றார்களோ, அதேபோலத் தங்களுக்கு எதிராகத் திரும்பும் சொந்த மனிதர்களையும் ஈவுயிரின்றி ஒடுக்கும் சமூகத்தின் வன்முறை உளவியலை இது பிரதிபலிக்கிறது.
கதையின் இறுதியில் பளீரென மின்னல் வெட்டி இடி இடித்து, பெருந்துளியாய் மழை விழ ஆரம்பிக்கிறது. கிராம மக்கள் பல நாள்களாக எதிர்பார்த்த மழை இறுதியில் வருகிறது. ஆனால், அந்த மழை வறண்ட பூமிக்குக் குளிர்ச்சியைக் கொண்டுவந்ததா அல்லது வன்முறையின் ரத்தக் கரைகளை மறைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தனிமனிதனின் வாழ்வு வறண்டுபோன நிலையில், இயற்கையின் சீற்றம் அவனது அகத் தவிப்போடு கலந்து விடுகிறது.
எழுத்தாளர் என். ஸ்ரீராமின் ‘மசை’ சிறுகதை, கிராமிய வாழ்வியலின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் அதிகார வெறியையும் மிகக்கறாராக விமர்சிக்கிறது. தனிமனிதனின் உணர்வுகளையும் காதலையும் குடும்ப அரசியலும் சாதிய கவுரவமும் எவ்வாறு நசுக்குகின்றன என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது. மனிதர்களை மனிதர்களாக மதிக்காத ஒரு சமூகத்தின் அகக் குரூரங்களை இந்தச் சிறுகதை ஆழமான உளவியல் பார்வையுடன் பதிவுசெய்துள்ளது.
– – –
