
மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவை, அதிலும் குறிப்பாக விளிம்புநிலை மனிதனின் அகத் தவிப்புகளையும் கானகத்துடனான அவனது ஆழ்ந்த பிணைப்பையும் துல்லியமாகப் பதிவுசெய்த எழுத்தாளர்களில் பவா செல்லதுரை முக்கியமானவர்.
அவர் எழுதிய ‘வேட்டை’ என்ற சிறுகதை, வெறுமனே காட்டில் விலங்குகளை வேட்டையாடும் எளிய மனிதனின் கதையன்று; நவீன நாகரிகத்தின் பெயரால் இயற்கையிலிருந்து துண்டிக்கப்பட்டு, நகரமயமாக்கலின் நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு, தனது இருப்பையே இழந்துபோகும் கிழவனின் அகக் குமுறல்களையும் வாழ்வியல் துயரங்களையும் பேசும் முக்கியமான படைப்பாகும். தனிமனித வாழ்வியலின் உளவியல் சிக்கல்களைக் கானகத்தின் பின்புலத்தில் வைத்து இப்படைப்பு விவாதிக்கிறது.
கதையின் நாயகனான கிழவனின் ஒட்டுமொத்த வாழ்வியலும் மரத்தைப் போன்றது. அவனது உலகம் ஆலமர மைதானமாகவும் கானகத்தின் ஒத்தையடிப் பாதைகளாகவும் இருந்தது. ஆனால், அவனது சம்மதமின்றி அவனை அங்கிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கி வந்து ஓட்டுவீட்டில் உட்கார வைக்கிறார்கள். “தூங்கி எழுந்தவுடன் சுவர்களின் முகத்தில் முழிச்சது தாங்கமுடியாமல் இருந்தது” என்ற வரி, சுதந்திரமாக வெளியில் பறந்து திரிந்த பறவையைக் கூண்டுக்குள் தள்ளப்பட்டதாகக் காட்டுகிறது. நவீனச் சமூகத்தின் ‘பாதுகாப்பு’ அல்லது ‘நல்வாழ்வு’ என்ற பெயரில் மனிதனை அவனது இயல்பான வாழ்விடத்திலிருந்து பிரித்து, நான்கு சுவர்களுக்குள் அடைப்பது அவனது ஆன்மாவைக் கொல்வதற்குச் சமம் என்பதை இக்கதை அழுத்தமாகப் பதிவுசெய்கிறது.
கிழவனுக்கு எந்நேரமும் முன்னால் விரிந்திருந்தது அந்த மைதானம்தான். அங்கே அவனுக்குப் பேச்சு இருந்தது, இயக்கம் இருந்தது. ஆனால், ஓட்டுவீட்டின் சுவர்கள் அவனது பேச்சை, வாசனையை, வாழ்வின் அர்த்தத்தை உறிஞ்சிவிட்டன. எதுவுமே பிடிக்காத ஒருவனின் வாழ்வின் இறுதி விளிம்பை இந்தக் கதையின் தொடக்கம் தீவிரமாகச் சித்தரிக்கிறது.
ஜப்பான் கிழவனுக்கும் காடுக்கும் இடையிலான உறவு எஜமானனுக்கும் அடிமைக்குமான உறவன்று; அது ரத்தத்திலான தொடர்ச்சி. காடு அவனுடன் சதா மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது; இவனும் காடுடன் மல்லுக்குத்ரிகிறான். ஆனால், அந்தப் போராட்டத்தில் காடு கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்று, இவன் ஜெயிக்கிறான். இவனது இரத்தம் கானகத்தின் மண்தரையில் பட்டவுடன்தான் அவனுக்கு உயிர் வருகிறது.
“வேலிக்காத்தான் முள் இடதுகால் பெருவிரல்பட்டுத் தைத்தது. அனாவசியமாகக் காலை மேல் தூக்கிப் பிடுங்கி எடுத்தான். ரத்தம் கசிந்தது. எச்சிலை மண்ணில் தொட்டு ரத்த வாயில் பூசினான்.”
இந்தக் காட்சி மிக ஆழமானது. காட்டின் முள் குத்துவதும் அந்த மண்ணை ரத்தத்தில் தொட்டு வைப்பதும் காடுடன் அவன் கொண்ட மரபுவழித் தொடர்பைக் குறிக்கிறது. செருப்புப் போட்டுக்கொண்டு நடப்பவர்களை எகத்தாளமாகப் பார்க்கும் அவனது பார்வை, இயற்கையிலிருந்து துண்டிக்கப்பட்ட நாகரிக மனிதர்களை விளிம்புநிலை மனிதன் எதிர்கொள்ளும் ஏளனத்தின் வெளிப்பாடாகும்.
நவீன மனிதனின் ‘வேட்டை’ என்பது ஆசைக்காகவும் இலாபத்துக்காகவும் இயற்கையைச் சூறையாடுவது. ஆனால், கிழவனின் வேட்டை என்பது அவனது வாழ்வியலின் அத்யாவசியமான சடங்கு. அதற்கு என்று சில பிரத்யேக விதிகள் உண்டு:- அமாவாசைக்கு முந்தின மற்றும் பிந்தின ஐந்து நாள்களே வேட்டைக்கு உகந்தவை. வெளிச்சத்துக்கு எப்போதுமே ‘டார்ச் லைட்’ கிடையாது; கண்களும் இயற்கையான சூழலுமே துணையாய் இருக்கும். காட்டைக் காவல் காப்பவனாக, அதன் விதிகளுக்கு உட்பட்டு அவன் அதை அணுகுகிறான்.
ஆனால், கானகத்தில் சமீபத்தில் குழிவெட்டிப் புளியங்கன்றுகள் நட்டிருப்பது அவனுக்குக் கோபமூட்டுகிறது. “ஆண்டவனுக்குத் தெரியாதா… இந்தக் காட்டு சீவன்களுக்கு என்ன என்ன மரம்?… என்ன என்ன தழைன்னு?…” என்று அவன் ஆவேசப்படுவது, இயற்கையின் மீது மனிதன் திணிக்கும் செயற்கையான மாற்றங்களை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைக் காட்டுகிறது. அவனது கோபம் வெறும் மரத்தின் மீதான கோபமன்று; காட்டின் இயற்கையான போக்கை மாற்றத் துடிக்கும் நவீன மனிதனின் குறுக்கீட்டின் மீதான வெறுப்பு.
அம்பது அறுபது வருடங்களாகத் தப்பாத அவனது கணக்கு, இந்தப் பௌர்ணமி இரவில் பிசகிப்போகிறது. கண்ணியைச் சமீபத்துப் பார்த்தால் எந்த ஜீவனின் காலடியும் தெரியவில்லை; புனுகுப்பூனைகூட மாட்டவில்லை. “வாழ்வின் முதல் தோல்வி. ஆடிப்போனான்.”
இந்தத் தோல்வி வெறும் வேட்டையில் தோற்பது அன்று; அவனது முழு வாழ்வியலும் அடையாளமும் கேள்விக்குள்ளாக்கப்படும் தருணம் இது. தான் நம்பிய கானகமே தனக்கு எதிராகத் திரும்புவது போலவும் தன்னை விடுத்து காலம் நகர்ந்துவிட்டது போலவும் அவன் உணர்கிறான். கையறுநிலையில் அவன் சிறுங்கண்ணி வலையெடுத்துக் காடை, கௌதாரி பிடிக்க முயல்வதும் அதுவும் தோல்வியில் முடிவதும் அவனது முதுமையையும் இயலாமையையும் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. காடு காற்றின் சத்தத்துக்கு வெறியாட்டம் போட்டு இவனை வெறிகொள்ளச் செய்கிறது.
கதை முடியும் தருணம் மிக முக்கியமான உளவியல் மாற்றத்தைப் பதிவு செய்கிறது. தோல்வியோடு, வெறுமையான பையுடன், தளர்ந்த நடையுடன் தன் தெருவுக்குத் திரும்புகிறான் கிழவன். அந்த நேரத்தில் வேதக்காரர்களின் மேடையில் ஒலிக்கும் பாடல் அவன் காதில் விழுகிறது.
எப்போதும் அந்தச் சத்தங்களை, வேதக்காரர்களை முணுமுணுத்து வெறுத்த அதே கிழவனின் மனத்தில், இப்போது இந்தப் பாடல் ஒரு மருந்தாக இறங்குகிறது. “அடிபட்ட காயங்களுக்குத் தவிட்டு ஒத்தடம் தருகிறமாதிரி, வலியெல்லாம் கரைந்து போகிறது” என்ற வரி, தனிமனிதனின் தனிமை மற்றும் தோல்வியின் உச்சத்தில் அவனுக்கு ஆறுதலாக எஞ்சவது ஏதோ ஆன்மிகத் தேறுதலே என்பதை உணர்த்துகிறது. தன் வீட்டைத் தாண்டி மேடையை நோக்கி அவன் தொடர்ந்து செல்வது, அவனது பழைய வன்மமான, வேட்டைக்கார வாழ்வு முடிவுக்கு வந்து, ஆன்மாவில் அமைதியைத் தேடி அவன் நகர்வதைக் குறிக்கிறது.
எழுத்தாளர் பவா செல்லதுரையின் ‘வேட்டை’ என்ற சிறுகதை, மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவை வெறும் பிழைப்புவாதமாக அணுகாமல், அது ஆன்மிக மற்றும் வாழ்வியல் தேவையாக எப்படி இருக்கிறது என்பதை விசாரணை செய்யும் விதத்தில் அணுகுகிறது. நாகரிகம் எவ்வளவோ முன்னேறிவிட்டதாகச் சொல்லிக்கொண்டாலும் வேரோடு பிடுங்கப்பட்ட விளிம்புநிலை மனிதனின் அகத்தில் எழும் சூன்யத்தையும் தனிமையையும் இக்கதையைவிட ஆழமாக எவராலும் பதிவுசெய்திட முடியாது. தனிமனிதனின் அகவெளிகளையும் தோல்விகளையும் இயற்கையின் பிரம்மாண்டப் பின்னணியில் வைத்து வாசிக்கும்போது, நவீன மனித வாழ்வியலின் துயரம் முழுமையாகப் புரிய வருகிறது.
– – –
