இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 159.தாய்மைச் சிறை  (ரா. சண்முகவள்ளியின் ‘தங்க அரளி’ சிறுகதையை முன்வைத்து…)

 

மனவளர்ச்சியற்ற குழந்தைகளின் தாய்மார்கள் எதிர்கொள்ளும் சொல்லொணாத் துயரங்களைத் துல்லியமாகப் பதிவுசெய்துவரும் எழுத்தாளர்களில் ரா. சண்முகவள்ளி குறிப்பிடத்தக்கவர். அவர் எழுதிய ‘தங்க அரளி’ என்ற சிறுகதை, சமூகத்தின் பாலியல் ஒழுக்க நெறிகள், மனவளர்ச்சியற்ற ஒருவனின் விலங்கான தேடல்கள் மற்றும் இந்தச் சமூகம் அத்தகைய மனிதர்களை எவ்வாறு கொடூரமாக ஒதுக்கித் தள்ளுகிறது என்பதைப் பேசும் மிக முக்கியமான படைப்பாகும். 

கதையின் நாயகியான மங்கலம், கணவனை விபத்தில் இழந்தவள். ஐந்து வயதுக்கு மேல் வளர மாட்டேன் என அடம்பிடிக்கும் மனத்தையும் இருபத்து இரண்டு வயதைத் தொட்டுவிட்ட பூத உடலையும் கொண்ட மாரியப்பனைச் சுமந்துகொண்டு வாழும் தாயின் வாழ்க்கை நரகத்தை ஒத்தது. ஓடு வேயப்பட்ட இரண்டு அறைகள் கொண்ட அந்தச் சிறிய வீடே அவளது மொத்த உலகமும்.

ஆரம்பத்தில் மாரியப்பன் எளிய முறையில் தன் தாயைச் சார்ந்திருக்கும்  குழந்தையாகவே இருக்கிறான். ஆனால், காலம் கடந்து அவன் பதின்ம வயதைத் தாண்டி இருபத்து இரண்டு வயதை எட்டும்போது, அவனது உடல் வளர்ந்து விடுகிறது; ஆனால் மூளையோ நான்கு வயதுக் குழந்தையின் நிலையிலேயே தேங்கிவிடுகிறது. இந்த முரண்பாடுதான் கதையின் மையப் பிரச்சினையாக மாறுகிறது.

“வயதுக்கேற்ற ஹார்மோன்களின் வளர்ச்சி அவனை இரவுகளில் துடிக்கவைத்தது. இரவுகளில் விழித்துக்கொள்ளும் அவனின் ஆண்மையின் உந்துதலைச் சரிசெய்யும் வழி தெரியாது தவிக்கத் தொடங்கினாள் மங்கலம்.”

இந்த இடத்தில் மங்கலத்தின் துயரம் என்பது வெறும் வறுமை சார்ந்ததன்று; அது உடலியல் சார்ந்த பெரும் நெருக்கடி. மனவளர்ச்சியற்ற இளைஞனின் பாலியல் தூண்டுதல்களை எங்குக் கொண்டு போய் வைப்பது? யாரிடம் முறையிடுவது? அவனுக்கு நல்லதும் கெட்டதும் தெரியாது; பசி எடுத்தால் சாப்பிடுவதைப் போல, உடல் கூச்சம் எடுத்தால் அதை வெளிப்படுத்தும் மிருகத்தனமான இயல்பு அவனிடம் எழுகிறது. பீடி சுற்றும் இடத்திலும் ஊருக்கு நடுவேயும் அவன் தன் உறுப்பைத் தடவுவதும் அனஞ்சியைக் கட்டிப்பிடிப்பதும் போன்ற செயல்கள் சமூகத்தின் பார்வையில் ‘ஒழுக்கக்கேடானவை’ அல்லது ‘மிருகத்தனமானவை’. ஆனால், அந்த உடலியல் தவிப்புக்கு என்ன தீர்வு என்பதைச் சமூகமோ மருத்துவமோ சொல்லத் தவறிவிடுகிறது.

மங்கலத்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆரம்பத்தில் பரிதாபமாகத்தான் பார்க்கிறார்கள். பால்வாடியில் சேர்ப்பது, காப்பகத்திற்கு அனுப்பச் சொல்வது எனச் சில உதவிகளைச் செய்கிறார்கள். ஆனால், அந்த இரக்கம் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் மட்டுமே இயங்குகிறது. மாரியப்பன் குழந்தையாக இருக்கும் வரை அவனுக்குச் செய்யும் உதவிகள், அவன் பதின்ம வயதைத் தாண்டி ஆம்பளையாக மாறிப் பெண்களின் அருகில் அத்துமீறும்போது உடனடியாக அருவருப்பாகவும் அச்சமாகவும் மாறிவிடுகிறது.

அனஞ்சி மங்கலத்திடம் கூறு வார்த்தைகள் மிகக் கொடூரமானவை: “உம் மவன் அப்படி இல்ல, அவனுக்கு அவன் தாத்தன் இரத்தம். அவன இப்படிகூட வச்சிருக்கிறது உனக்கும் நல்லது இல்லை, இந்த ஊருக்கும் நல்லது இல்லை. நீ அவன எங்கையாவது கொண்டுபோய் சேர்த்துவிடு. நாளைக்கே நீ கண்ண மூடிட்டா இவன் நிலைமைய யோசிச்சுப் பாரு!”

இங்கே சமூகம் மாரியப்பனை மனிதனாகப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, சாபமாகவும் ஆபத்தாகவும் பார்க்கத் தொடங்குகிறது. அவனது தாத்தாவின் இரத்தக் குற்றச்சாட்டை அவன் மீதும் சுமத்துகிறது. மங்கலத்திற்குத் தெரியும், ‘காப்பகத்தில் சேர்ப்பது என்றால் அதற்குத் தன் தலையை விற்றாலும் போதாத அளவு பணம் வேண்டும்’ என்று. அந்தப் பணம் இல்லாத நடுத்தர, விளிம்புநிலைத் தாய்க்குச் சமூகம் காட்டும் ஒரேவழி அவனைத் தன்னிடம் வைத்துச் சாவது மட்டும்தான். ஆனால், அப்படி வைத்துக்கொள்ளும்போது இந்தச் சமூகம் அவனையும் வாழ விடுவதில்லை, தாயையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை.

கதையின் குறியீடாக விளங்குவது மாரியப்பனுக்குப் பிடித்தமான அந்தத் தங்க அரளிச் செடிதான். அவன் அதன் மீது கொள்ளைப்பிரியம் கொண்டிருக்கிறான். அரளி விதையின் நச்சுத்தன்மை என்பது மரணத்தின் குறியீடு. சமூகத்தின் நெருக்கடிகளும் அனஞ்சியின் எச்சரிக்கைகளும் மங்கலத்தின் மூளையைச் சுழலச் செய்யும்போது, அவளுக்கு வேறு வழியே இல்லாமல் போய்விடுகிறது.

தன் மகனுக்குப் பிடித்த கோழிக்கறியைச் சமைத்து, அதில் அரளிவிதை விழுதை அரைத்துக் கலந்து ஊட்டுவது சாதாரணமான கொலையன்று; அது தாய் தன் கையாலேயே தன் வாழ்வின் எல்லாவற்றையும் அழித்துவிட்டு, அந்த உயிரைத் தன் சொந்தக் கருவுக்குள்ளேயே மீண்டும் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் கோரமான முடிவு.

“சோற்றையும் குழம்பையும் பிசைந்தவளின் கரங்கள் நடுங்கத் தொடங்கின. நடுங்கிய கரங்களில் இருந்து சிதறி விழுந்த சோற்றுப் பருக்கைகளை அள்ளி வாய்க்குள் அதக்கியபடி, தன் தாயைப் பார்த்துப் பல்லக் காட்டிச் சிரித்தான் மாரியப்பன்.”

ஒன்றும் அறியாமல் தாயின் முகத்தைப் பார்த்துச் சிரிக்கும் அந்தப் பேதைக்குத் தான் உண்ணுவது விஷம் என்பது தெரியாது. தன் மகனுக்குப் பின் இந்த உலகம் அவனைக் கொடூரமாக நடத்துவதைவிட, தன் கைகளாலேயே அவனுக்கு முக்தி அளித்துவிடுவது மேல் என்று மங்கலம் எடுக்கும் முடிவு, அவளது கையறுநிலையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.

எழுத்தாளர் ரா. சண்முகவள்ளியின் ‘தங்க அரளி’ சிறுகதை, மனவளர்ச்சியற்ற ஒருவனின் உடலியல் தேவைகளையும் அவனால் தாய் மற்றும் சமூகம் எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகளையும் துணிச்சலாகவும் கறாராகவும் காட்டுகிறது. 

பரிதாபங்களை மட்டும் கடந்து செல்லாமல், விளிம்புநிலை மக்களின் வாழ்வில் மனநலக் குறைபாடுகள் எத்தகைய கொடூரமான முத்திரைகளையும் முடிவுகளையும் தருகின்றன என்பதை இப்படைப்பு வெளிப்படுத்துகிறது. மங்கலத்தின் கண்ணீரும் மாரியப்பனின் புன்னகையும் இந்தச் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டிக் கேட்கும் கேள்விகளாகவே காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *