இருநூறு தமிழ்ச் சிறுகதைகள் – 164.வெட்கத்தின் அரசியல்   (களந்தை பீர்முகம்மதுவின் ‘பூப்படைந்த ஒளி’ சிறுகதையை முன்வைத்து…)

 

விளிம்புநிலை மக்களின் உளவியல் சிக்கல்களையும் கிராமியச் சூழலின் நுட்பமான வாழ்வியலையும் எதார்த்தமாகப் பதிவுசெய்தவர்களில் எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது குறிப்பிடத்தக்கவர். 

அவர் எழுதிய ‘பூப்படைந்த ஒளி’ என்னும் சிறுகதை, தமிழ் மரபுவழிச் சமூகத்தில் ‘வெட்கம்’ என்ற பண்பாடு எவ்வாறு பெண்களின் உடல் மற்றும் அக உலகைக் கட்டுப்படுத்துகிறது என்பதையும் அந்தச் சுவருக்குள்ளேயே அவர்கள் தங்கள் வாழ்வின் அர்த்தத்தை எவ்வாறு தேடிக்கொள்கிறார்கள் என்பதையும் கூர்மையாகவும் பேசும் சிறந்த படைப்பாகும்.

கதையின் தொடக்கத்திலேயே சரோஜா அக்காவின் வீடு அமைந்துள்ள புவியியல் அமைப்பை எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது விவரிக்கும் விதம் முக்கியமானது. தெருவைப் பார்த்தவாறு இல்லாமல், முடுக்கு தாண்டிச் செல்லும் அந்த வீடு, சரோஜாவின் வாழ்க்கையையும் உலகத்திலிருந்தும் வெளிச்சத்திலிருந்தும் சற்றுத் தள்ளி வைக்கப்பட்ட தனிமைத் தீவாக மாற்றுகிறது. அடுப்படி தெருவை ஒட்டி அமைந்திருந்தாலும் அவள் பார்க்கும் உலகம் வரையறுக்கப்பட்டதே.

“சரோஜா அக்காவின் கண்கள் போகும் தூரத்தளவுக்கே போகும். அதற்கு மேற்பட்ட எல்லையைத் தாண்டாது.”

இந்த வரிகள் வெறும் புவியியல் எல்லை மட்டுமன்று; அவளது சமூக மற்றும் உளவியல் எல்லையும்கூட. ஊர் நடமாட்டத்தைப் பார்ப்பதும் குளக்கரைக்குச் செல்வோரை உற்று நோக்குவதும் மட்டுமே அவளது உலகமாகச் சுருங்கிவிடுகிறது. அவளைக் கட்டுப்படுத்தக் குடும்பத்தில் கண்டிப்பானவர்கள் யாருமில்லை; அவளது அம்மா பேச்சியம்மாளோ எருமைகளை மேய்க்கவும் ஊர் சுற்றவுமே சரியாய் இருந்தார். அப்படியிருந்தும், சரோஜாவாகவே தன்னை ஒரு பிரகாரத்திற்குள் சுருக்கி, தன் மீது ‘வெட்கம்’ என்ற கண்ணியமான முள்வேலியைப் போட்டுக் கொள்கிறாள்.

சரோஜாவுக்கு முறைமாப்பிள்ளையான பாலு அண்ணன், வயல்களையும் மாடுகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பான இளைஞர். இவர்களின் திருமணம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று போலத் தோன்றினாலும் இருவரிடையேயும் வெளிப்படையான காதலோ அல்லது உரையாடலோ கிடையாது. பாலு அண்ணனின் வெட்கமும் சரோஜாவின் வெட்கமும் ஒன்றுக்கொன்று நிகரானவை.

ஊரில் எங்கு பார்த்தாலும் கலகலப்பாகப் பேசும் பாலு அண்ணனும் அடுப்படிக்கே தன்னைச் சுருக்கிக் கொள்ளும் சரோஜாவும் எப்படித் தங்களின் வாழ்க்கையை இணைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வி சிறுவர்களான கபீருக்கும் சபீருக்கும் புதிராகவே நீடிக்கிறது. சமூகம் கற்பித்துள்ள ‘அடக்கம்’ மற்றும் ‘வெட்கம்’ என்ற பண்பாடுகள் இவர்களின் அக உலகை எப்படிக் குழைத்து வைத்திருக்கின்றன என்பதை எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது மிகக் கூர்மையுடன் வெளிப்படுத்துகிறான்.

கபீரும் சபீரும் விடுமுறை நாள்களில் சரோஜா அக்காவிடம் சென்று பேசுவதும் சினிமா கதைகளைக் கேட்பதும் கதையின் சுவாரஸ்யமான பகுதியாகும். களக்காட்டுத் தியேட்டரின் பக்கமே போகாத சரோஜா, எம்.ஜி.ஆர். படங்களைப் பற்றி விசாரிப்பதும் கபீரை எம்.ஜி.ஆர். மாதிரி ஆடிக்காட்டச் சொல்வதும் அவளது ஏக்கம் கலந்த கற்பனை உலகைக் காட்டுகிறது.

“கபீர் வாசல் திண்ணையில் உட்கார்ந்து சிரிசிரியென்று சிரித்தான். உடன் வீட்டுக்குள் நுழைந்து அந்தக் கண்ணாடியில் நன்றாகப் பார்த்தான் தன் மூஞ்சியை. அக்கா சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள். தன் முகம் அசப்பில் எம்.ஜி.ஆர். மாதிரியே இருக்கிறது.”

சரோஜா அக்காவின் இந்தச் சிறு செயல்கள், அவளது மந்தமான அல்லது அசமந்தமான வாழ்க்கைக்குள் நடக்கும் அரிய வெளிப்பாடுகளாகும். கோவில் திருவிழாக்களுக்கோ, தேரோட்டத்திற்கோ போக மாட்டேன் என்று அடம்பிடிக்கும் அவள், ஊரில் நடக்கும் அத்தனை விசயங்களையும் சல்லடை போட்டுத் துளைத்துக் கேட்பவளாக இருக்கிறாள். இது அவளது முரண்பாடான உளவியலைக் காட்டுகிறது; உடலால் முடக்கப்பட்டு, மனத்தால் எல்லாவற்றையும் ரசிக்கத் துடிக்கும் கிராமியப் பெண்ணின் தவிப்பு இது.

கதையில் வரும் அலிபாத்து பெரியம்மாவின் கதை முக்கியமான குறியீடாகும். கணவனைப் பார்த்தாலே வெட்கப்பட்டு முகம் பார்த்துப் பேசத் தெரியாததாலேயே அவருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்ற சபீரின் பேச்சு, சிறுவர்களின் மனதில் ஒருவித அச்சத்துடனான குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இதே நிலைதான் பாலு அண்ணனுக்கும் சரோஜாவுக்கும் ஏற்பட்டால் என்னாவது என்ற கவலை கபீரை வாட்டுகிறது. கல்யாணம் முடிந்த பிறகும்கூட ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளாமல், ஊமைப் பொம்மைகளைப் போலச் சடங்குகளைச் செய்யும் இவர்களின் வாழ்க்கை, அந்தச் சமூகம் கட்டமைத்த பாரம்பரிய வெட்கத்தின் விளைச்சலாகும். தேரோட்டத்தின் போது மகராஜன் சரோஜாவிடம் உரிமையாகப் பேசுவதைக் கண்டு அவள் சிரிப்பதும், கபீரும் சபீரும் அதை இயல்பாக அனுமதிப்பதும் வெட்கத்தின் எல்லைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்க்கும் இளைய தலைமுறையின் மாற்றத்தைக் குறிக்கிறது.

கதையின் தலைப்பான ‘பூப்படைந்த ஒளி’ என்பது வெறும் உயிரியல் மாற்றத்தைக் குறிப்பதன்று; நீண்டகாலமாக இருட்டிலும் அடுப்படியின் முடுக்கிலும் முடங்கிக் கிடந்த பெண்ணின் அக ஒளி, சமூகத்தின் சடங்குகளையும் வெட்கத்தின் எல்லைகளையும் தாண்டி எப்படி மலர்கிறது என்பதைக் குறிக்கிறது.

இறுதியில், பாலு அண்ணனுக்கும் சரோஜாவுக்கும் ஐந்து ஆண்மக்களும் ஒரு பெண் மகவுமாகப் பிறந்து, ஊரில் மக்களைப் பெற்ற மகராசியாக சரோஜா பெயர் வாங்குகிறாள். ‘மங்கல விழாக்களில் அவளைக் குறுக்கே நடக்கவிட்டால் காரியம் ஜெயம்’ என்ற நிலை உருவாகிறது. ஆரம்பத்தில் ஊமைப் பெண்போல் முடங்கிக் கிடந்தவள், தன் தாய்மையின் மூலமும் குடும்பத்தின் மூலமும் சமூகத்தின் முக்கியமான மையப் புள்ளியாக மாறுவதுதான் அவளது வாழ்வியலின் உச்சமாகும்.

எழுத்தாளர் களந்தை பீர்முகம்மதுவின் ‘பூப்படைந்த ஒளி’ சிறுகதை, தமிழ் கிராமியச் சூழலில் வாழும் எளிய மக்களின், குறிப்பாக பெண்களின் உளவியல் வெளிப்பாடுகளை மிகச் சரியாகப் பதிவு செய்துள்ள ஆவணமாகும். 

வெட்கத்தையும் அடக்கத்தையும் அணிகலன்களாகப் பூண்டு வாழும் பெண், தன் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களைக் கடந்து எவ்வாறு பரிணாமம் பெறுகிறாள் என்பதைத் தன் படைப்பில் காட்டியுள்ளார் எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது. 

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *