முந்நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 180.அகவேதனை  (பாமா எழுதிய ‘வலி’ சிறுகதையை முன்வைத்து…)

 

விளிம்புநிலை மக்களின் குரலாகவும் ஒடுக்கப்பட்ட பெண்களின் வலியின் குறியீடாகவும் விளங்கும் எழுத்தாளர் பாமா எழுதிய ‘வலி’ என்ற சிறுகதை, கிராமியச் சமூகத்தின் ஆழ்மனதில் புதைந்துகிடக்கும் கொடூரமான மூடநம்பிக்கைகளையும் பேதைமை நிறைந்த நடைமுறைகளையும் மிகக் கறாராகவும் உணர்வுபூர்வமாகவும் அம்பலப்படுத்தும் சாட்சியப் படைப்பாகும். 

பாமாவின் படைப்புலகம் என்பது வெறும் வறுமையின் சித்திரம் மட்டுமன்று; சாதியச் சமூகம் தனக்கென உருவாக்கி வைத்துள்ள பழமைவாதச் சடங்குகள் எப்படி எளிய மனிதர்களின் துயரங்களை மேலும் தீவிரப்படுத்துகின்றன என்பதைப் பேசும் உளவியல் ஆவணமாகும்.

முப்பது வயதுக்குள் பிள்ளைப் பேறின்றி இறந்துபோன பூரணி என்ற இளம் பெண்ணின் மரணத்தைச் சுற்றியும் அவளது இறுதிச் சடங்கின் பெயரால் அரங்கேறும் மனிதநேயமற்ற கொடுமைகளை மையமாகக் கொண்டும் இக்கதை விரிகிறது. 

இச்சிறுகதையைத் தனிமனித வாழ்வியல் (Individual Existentialism & Psychology) கோணத்தில் நின்று, மரணமும் சமூகத்தின் வக்கிரமான உளவியலும் குழந்தைப்பேறின்மையும் பெண் மீதான வன்முறையும் மூடநம்பிக்கைகளின் கோரமுகமும் பால்பாண்டியின் வழியே வெளிப்படும் குழந்தைமைத் தவிப்பும் ஆகிய பரிமாணங்களில் மிக விரிவாகப் பேச வழியுள்ளது.

கதையின் தொடக்கமே கண்ணாங்குடிலில் நிகழும் மரணச் செய்தியோடு தொடங்குகிறது. இளவயதில், அதுவும் குழந்தைப்பேறின்றி இறந்துபோன பூரணியின் மரணம் அந்த ஊருக்குத் துயரச் செய்தியைவிட, கிசுகிசுத்துப் பேசப்படும் ஒரு நாவல் போல மாறுகிறது.

“அவா எப்பிடிச் செத்தான்னு ஆளாளுக்கு அவுகளுக்குத் தெருஞ்சத கூடக் கொறச்சு சலிக்காமெச் சொல்லிக்கிட்டு இருந்தாக.” என்ற வரிகள், மனிதர்களின் வக்கிரமான கூத்துத்தனத்தை வெளிப்படுத்துகின்றன. இளம் பெண் இறந்து கிடக்கும்போது, அவளது துயரத்தைவிட அவளது மரணத்திற்கான காரணங்களை விதவிதமாகக் கற்பனை செய்து பேசுவதே கிராமியச் சமூகத்தின் வழக்கமாகிவிடுகிறது. லேகியம் சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுச் செத்தாள் என்றும் ரத்தப்போக்கு என்று சிலரும் பிள்ளை இல்லாத கவலையில் விஷம் குடித்துவிட்டதாக அருளாயி ரகசியமாகப் பேசுவதும் சமூகத்தின் அக வெளிப்பாடாகும்.

சொந்தக்காரர்கள் வந்தவுடன் தொடங்கும் ஒப்பாரிச் சத்தம், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை உயிர்ப்புடன் இருந்துவிட்டு, அஞ்சலப் பாட்டி “ஆம்பளைகள்ளாம் கொஞ்சம் எந்துருச்சு அப்பால போங்க” என்று அதட்டியவுடன் அனைவரும் சொல்லி வைத்தார்போல ஒரே வினாடியில் அழுகையை நிறுத்துவது சடங்குத்தனமான நாடகத்தன்மையைக் காட்டுகிறது. அங்கு் சோகம் என்பது உண்மையான துயரத்தைவிட, மரபு சார்ந்த ஒரு கடமையாகவே நிறைவேற்றப்படுகிறது.

பூரணியின் மரணத்திற்கு மூலக்காரணம் அவளுக்குக் குழந்தை இல்லை என்ற சமூகத்தின் தொடர்ச்சியான உளவியல் அழுத்தமும் அதற்காக அவள் பட்ட இன்னல்களுமாகும்.

கல்யாணமாகி ஏழெட்டு வருடங்களாகியும் குழந்தையில்லை என்றவுடன், அந்தச் சமூகம் அந்தப் பெண்ணைக்  குறைள்ளவளாகப் பார்க்கிறது. “இப்ப பிள்ளையில்லாட்டா என்ன கெட்டுப் போச்சு? பிள்ள பெத்தவளுகல்லாம் என்னத்த வாரிக்கெட்டிக்கிட்டாளுக?” என்று கருப்பாயி பேசினாலும், அந்தச் சமூகத்தில் பெண்ணின் முழுமையான அங்கீகாரம் என்பது தாய்மையில்தான் தங்கியிருக்கிறது என்ற யதார்த்தத்தை அது மாற்ற முடியாது.

குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக “மேற்க என்னமோ குருவிக்காரம்பட்டின்னு ஒரு ஊர்ல போயி எவங்கிட்டயோ என்னமோ ஒரு லேகியம் வாங்கியாந்து சாப்புட்டாளாம்” என்பதும் அந்த மருந்தின் வீரியத்தாலேயே அவளது உடல்நலம் குலைந்து இறந்தாள் என்பதும், எளிய மக்களின் அறியாமையைச் சாதகமாக்கிச் சூது செய்யும் மருத்துவ முறைகளின் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சமுதாயத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயன்று இளம் பெண் தனது உயிரையே பலிகொடுக்க நேரிடுகிறது.

இக்கதையின் ஆகச்சிறந்த அதிர்ச்சியான பகுதி எதுவென்றால், சாமிக்கண்ணு தாத்தா போன்ற பெரியவர்கள் சொல்லும் பிற்போக்குத்தனமான சடங்குகளும் அவை நடைமுறைப்படுத்தப்படும் விதமுமாகும்.

சனிக்கிழமை அன்று பிணம் விழுந்தால், ஆவி தொணப்பெண்டும் கேட்டு ஊருக்குள்ள வந்துவிடும் என்பதால், இடுகாடு வரை செல்லும் வழியில் கடுகு அள்ளித் தெளித்துக்கொண்டே போக வேண்டுமாம். அந்த ஆவி கடுகைப் பொறுக்கி முடிப்பதற்குள் நேரம் ஆகிவிடும் என்பதால் மீண்டும் இடுகாட்டுக்கே திரும்பிப் போய்விடுமாம்! இது மனித மனங்களை எத்தனை பெரிய பயத்திலும் மூடநம்பிக்கையிலும் சமூகம் ஆழ்த்தி வைத்திருக்கிறது என்பதற்குச் சான்றாகும்.

கதையின் உச்சகட்ட வன்முறை என்பது குழந்தை இல்லாமல் செத்தவளுக்குப் “பிள்ளை ஏக்கம்” இருக்கும் என்பதால், அந்த ஆவி ஊருக்குள் வந்து இன்னொரு மரணத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக, பாடையின் ஓரத்தில் ஒரு நாட்டுக்கோழிக்குஞ்சைக் கட்டித் தொங்கவிட்டு, கடைசியில் அந்தப் பிணத்துடன் சேர்த்து அந்தப் பச்சைக் கோழிக்குஞ்சையும் உயிரோடு குழியில் போட்டு மூடுவது என்ற சடங்காகும்.

வெட்டியான் குழியை மூடிய பிறகுதான் கோழிக்குஞ்சை வைக்க மறந்துவிட்டதை உணர்ந்து, மீண்டும் குழியைத் தோண்டி, அந்த உயிரற்ற உடலுக்கு நடுவே உயிரோடு தவிக்கும் கோழிக்குஞ்சைப் போட்டு மூடும் அந்தச் செயல், நாகரிகம் பேசும் சமூகத்தின் முகமூடியைக் கிழித்து எறிகிறது. “கியா கியான்னு பரிதாபமா அலறுச்சு” என்ற அந்தச் சத்தம், மூடநம்பிக்கைகளின் பெயரால் உயிர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையின் குறியீடாகும்.

இந்தக் கொடூரமான சடங்குகளின் சாட்சியாகவும், பாதிக்கப்பட்ட மற்றொரு உளவியல் குறியீடாகவும் சிறுவன் பால்பாண்டி விளங்குகிறான்.

கணேசன் வாங்கிவந்த கோழிக்குஞ்சைப் பார்த்து அவனது நாலு வயது மகன் பால்பாண்டிக்கு சந்தோஷம் ஏற்படுகிறது. அதுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து அரிசி போட்டு, தண்ணீர் வச்சு, அது கொத்தித் திங்கிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

தன் கண்முன்னே தான் பாசமாய் வளர்த்த அந்தக் கோழிக்குஞ்சு பாடையோடு கட்டப்பட்டு, இடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லப்படுவதையும் இறுதியில் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டு அது அலறுவதையும் பார்த்த அந்தச் சிறுவனின் மனம் எத்தகைய அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும்? ஊர் சனங்கள் அனைவரும் அழுதுகொண்டிருந்தாலும் பால்பாண்டிக்கு அந்தக் குஞ்சுக்காகத்தான் அழுகை வருகிறது. பெரியவர்களின் கொடூரமான சடங்குகளுக்கு நடுவில் நசுக்கப்படும் அப்பாவிக் குழந்தைமையின் குறியீடாகவும், எதிர்காலத்தின் மௌனச் சாட்சியாகவும் அந்தச் சிறுவன் நிற்கிறான்.

எழுத்தாளர் பாமாவின் ‘வலி’ சிறுகதை, தமிழ் இலக்கியத்தில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை வெறும் அனுதாபத்தோடு அணுகாமல், அவர்களின் மூடநம்பிக்கைகளையும் அறியாமைகளையும் எவ்வளவு கறாராக விமர்சிக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த சான்றாகும்.

பூரணியின் மரணம் உடலின் மரணம் மட்டுமன்று; அது ஒரு சமூகத்தின் அறிவுசார்ந்த, மனிதநேயமற்ற மரணமாகும். குழந்தைப்பேறின்மை என்ற சமூக அழுத்தத்தில் தொடங்கும் கதை, மூடநம்பிக்கையின் பெயரால்  உயிரோடு தவிக்கும் கோழிக்குஞ்சைக் கொன்று புதைப்பதில் வந்துநிற்பது மனிதர்களின் வக்கிரமான உளவியலை அப்பட்டமாகக் காட்டுகிறது. 

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *