முந்நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 185.மௌன எதிர்ப்பு  (ச. பாலமுருகன் எழுதிய ‘ஒரு கடல், இரு கரைகள்!’ சிறுகதையை முன்வைத்து…)

 

எழுத்தாளர் ச. பாலமுருகனின் ‘ஒரு கடல், இரு கரைகள்!’ சிறுகதை, ஈழத்துப் போரின் நேரடி வன்முறைகளிலிருந்து தப்பியோடி, இந்தியாவின் மண்டபம் மற்றும் செங்கல்பட்டு முகாம்களில் அடைக்கலமாகும் தாய் (மலர்) மற்றும் மகனின் (திலகன்) வாழ்வை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. 

இது வெறும் அகதிகளின் புள்ளிவிவரக் கணக்கன்று; அரசியல் அகதிகளாக மாற்றப்படும் மனிதர்களின் ஆன்மா மீது நிகழ்த்தப்படும் உளவியல் ரீதியான வதை, தனிமனித தன்னாட்சியின் சிதைவு மற்றும் இருத்தலியல் நெருக்கடிகளைப் பேசும் சிறந்த சிறுகதை.

கதையின் தொடக்கத்திலேயே எழுத்தாளர் ச. பாலமுருகன் வாசகரை மண்டபம் அகதிகள் முகாமின் வறண்ட, புழுக்கம் நிறைந்த வெளிக்கு அழைத்துச் செல்கிறார். ‘கடல்’ என்பது ஈழத்து மக்களுக்கும் தமிழகத்திற்கும் இடையேயான இயற்கை இணைப்பாக இருக்க வேண்டும்; ஆனால், இக்கதையில் அது அகதிகளின் சுதந்திரத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இடையேயான எல்லையாகச் சுருங்குகிறது.

மலர் படுத்திருக்கும் பத்தடி சதுர அறை, அவளது முடங்கிப்போன வாழ்வின் குறியீடு. நைலான் நாடா கட்டிலுக்குக் கீழே படிந்துள்ள காய்ந்த சிறுநீரின் உப்புப் படிவம், அவளது உடல் சார்ந்த சிதைவை மட்டுமல்லாமல், அவளது சுயமரியாதையின் அழிவையும் அடையாளப்படுத்துகிறது.

மலரின் கண்கள் எப்போதும் கடலையே பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த அலைகளின் ஓசை அவளுக்குப் பழைய மன்னார் கடற்கரை வீட்டையும், தன் கணவன் கதிரேசனையும், மகன் திலகனின் மழலை நாள்களையும் நினைவூட்டுகிறது. ஆனால், அதே கடல் இன்று அவளது மகனைச் சிறைப்படுத்தியிருக்கும் செங்கல்பட்டு சிறப்பு முகாமையும் அவளது மரணத்தையும்தான் நினைவூட்டுகிறது.

தனிமனித வாழ்வியலின் (Individualism and Human Dignity) அடிப்படையே ஒருவனின் உடல் மற்றும் மனதின் மீதான அவனது சுயக் கட்டுப்பாடுதான். ஆனால், போரும் அகதி முகாம்களும் அந்தச் சுயக்கட்டுப்பாட்டைப் பிடுங்கி எறிகின்றன.

மலர் தன் உடலின் மீது கட்டுப்பாட்டை இழந்து பக்கவாதத்தால் படுக்கையில் கிடக்கிறாள். அடுத்தவர்களின் உதவியுடன் மலம் கழிக்க வேண்டிய அவலம் அவளது தாய்மைக்கும் வயதுக்கும் விடப்பட்ட சாபமாகும். “சாப்பிட்டா மலம் கழிக்கணும்… மத்தவங்களுக்கு சிரமம் எதுக்குன்னு நினைக்கிறயா?” என்ற பிலோமினாவின் கேள்வி, அகதி முகாம்களில் மனிதர்கள் எத்தகைய விலக்கப்பட்ட பொருட்களாக நடத்தப்படுகிறார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது. பிறருக்குச் சுமையாகிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியே மலரைச் சாப்பிட மறுக்கச் செய்கிறது. அவளது பட்டினி என்பது தற்கொலை முயற்சி அன்று; அது தன் எஞ்சிய மாண்பைக் காப்பாற்றிக்கொள்ளும் தீவிரமான மௌன எதிர்ப்பாகும்.

திலகனின் உடல், போரின் வன்முறையைச் சும ஆவணப் பத்திரம். அவனது நெஞ்சிலும் கையிலும் உள்ள குண்டுச் சிதறல் தழும்புகளும், காப்புக் காய்த்த விரல்களும் அவன் ஒரு போராளி என்பதைச் சட்டம் நிறுவ முற்படுகிறது. ஆனால், அவனோ ஒரு ‘சிவிலியன்’ (Civillian). தன் தாய் மண்ணில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிவந்த எளிய மனிதன். உடலின் மீது விழுந்த வெடிச்சீவல்களும், அரசின் மீது விழுந்த சந்தேகக் கண்களும் அவனது மனித உரிமையை முற்றிலுமாக மறுக்கின்றன.

தனுஷ்கோடி சோதனைச் சாவடியிலும் மண்டபம் முகாமிலும் காவல் துறையினரும் உளவுத்துறை அதிகாரிகளும் நடத்தும் விசாரணைகள், அகதிகளின் மீதான தீராத அவநம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன.

“நீ விடுதலைப் புலியா?” என்ற கேள்வி, அகதி முகாம்களுக்கு வரும் ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் நெற்றியில் குத்தப்படும் முத்திரை. அங்கு மனிதர்களின் அகவலியோ, அகவை முதிர்ச்சியோ மதிக்கப்படுவதில்லை. ரத்தமும் சதையுமான மனிதர்கள் வெறும் ‘கோப்புகள்’ மற்றும் ‘பதிவேடுகள்’ மட்டுமே.

“மன்னார்லேயே செத்துப் போயிருந்தா சரியாயிருக்கும். உயிர் பிழைக்க ஓடி வர்றது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரிஞ்சுக்கிட்டோம் ஐயா!” என்று மலர் கதறும் இடத்தில், சொந்த நாட்டைவிட்டு அகதியாக ஓடிவருவதுதான் மனிதன் செய்யும் மிகப்பெரிய குற்றம் என்ற கசப்பான உண்மை வெளிப்படுகிறது. தன் தாயைக் காப்பாற்றத் தாலியையோ, சேமிப்பையோ விற்க முடியாத, தன் தாய்க்கு ஒருவாய்க் கஞ்சி ஊட்டிவிட முடியாத மகனின் கையறுநிலை, குடும்ப அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பையே உடைத்தெறிகிறது.

இக்கதையின் உச்சக்கட்ட உளவியல் திருப்பம், செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து திலகன் தன் தாய்க்கு எழுதும் கடிதமும் அதற்குப் பதிலளிக்கும் விதமாக மலரின் இறுதிக் கனவும் அமைகின்றன.

மகன் தன் தாயை நோக்கி, “என் பாசமிக்க அம்மாவே, நீ சீக்கிரம் செத்துப்போக வேண்டும் என்று! நீயும் எனக்காக அப்படியே வேண்டிக்கொள்!” என்று எழுதுவது தமிழ் இலக்கியத்தின் மிகக் கூர்மையான, அதேநேரத்தில் குலைநடுங்க வைக்கும் வரிகள். இந்த உலகத்தில் உயிரோடு இருப்பதைவிட இறப்பதே தன்மானத்திற்குரியது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்களின் இறுதித் தஞ்சம் மரணம் மட்டுமே.

கதையின் இறுதியில் மலருக்கு வரும் கனவு ஒரு முரண்நகை. நிஜத்தில் சிறுநீரும் மலமும் தேங்கிய, பினாயில் வாசனை அடித்த பத்தடி அறைக்குள்தான் அவள் கிடக்கிறாள். ஆனால், அவளது கனவில் குழந்தை திலகன் பிஞ்சுப் பாதங்கள் பதிக்கிறான்; தங்கத் துகள்களும் ரத்தினங்களும் சிதறுகின்றன. வாழும்காலத்தில் மறுக்கப்பட்ட அழகு, மரணத்தின் வாசலில் அவளுக்குச் சொந்தமாகிறது.

எழுத்தாளர் ச.பாலமுருகன் ‘ஒரு கடல், இரு கரைகள்!’ சிறுகதையின் வழியே, அகதிகள் பிரச்சினை என்பது வெறும் அரசியல் கட்சிகளின் வாக்கு அரசியலோ அல்லது நிவாரணப் பொருட்களின் விநியோகமோ அல்ல என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்துள்ளார். அது ஒரு மனிதனின் அடையாளம், அவனது உடல், அவனது குடும்பம் மற்றும் அவனது தனிமனிதத் தன்னாட்சி ஆகியவற்றைத் துண்டு துண்டாக வெட்டி எறியும் வன்முறை இயந்திரம்.

இலங்கை மற்றும் தமிழகம் என்ற இரண்டு கரைகளுக்கு நடுவே கிடக்கும் அந்த அகதிக் கடலின் அலைகள், என்றைக்கும் ஓயப்போவதில்லை; அவை மனிதகுலத்தின் மனசாட்சியை ஓயாமல் அடித்துக்கொண்டே இருக்கும் என்ற ஆழமான உண்மையை இக்கதை நேர்மையாக உணர்த்துகிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *