நவீனத் தமிழ்ச் சிறுகதை வெளியில் சமகால சமூகத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள், விவசாயிகளின் வாழ்வியல் துயரங்கள், நடுத்தர வர்க்கத்தின் அக முரண்கள் மற்றும் மனிதர்களின் முரண்பட்ட உணர்வுகளை மிக இயல்பாகவும் ஆழமாகவும் பதிவுசெய்துவரும் எழுத்தாளர்களில் ‘ரவி அல்லது’ குறிப்பிடத்தக்கவர்.
அவர் எழுதிய ‘இதய ருசி’ என்ற சிறுகதை, தந்தையும் மகளும் மோட்டார் சைக்கிளில் மேற்கொள்ளும் சாதாரணமான பயணத்தின் ஊடாக, விவசாயத்தின் அழிவு, குடும்ப உறவுகளின் சிக்கல்கள், மனிதர்களின் இரக்கமற்ற மனநிலை மற்றும் தனிமனிதனின் அகத் தத்தளிப்புகள் ஆகியவற்றை விரிவாகப் பேசுகிறது.
கதையின் தொடக்கத்திலேயே விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் ஊடாகச் சமகால விவசாயத்தின் அவலநிலை வெளிப்படுகிறது. நெல் ஈரப்பத அளவைக் கூட்டிக் கேட்பதற்காக விவசாயிகள் போராடுவதும், மத்திய அரசின் விதிகளுக்கு முன்பு மாநில அரசின் கைகள் கட்டப்பட்டிருப்பதும் இன்றைய விவசாயிகளின் எதார்த்த நிலையாகும். ஆனால், இந்தக் கதையின் மையக் கதாபாத்திரமான மாரிமுத்துவின் பின்னணி இதைவிட ஆழமான வரலாற்றுத் துயரத்தைக் கொண்டுள்ளது.
மாரிமுத்து கடந்த காலத்தில் விவசாயத்தில் பட்ட தோல்வியும் அதனால் அவன் அடைந்த உளவியல் சிதைவும் அவனது நிகழ்காலத்தை நிழலாகத் தொடர்கின்றன. முந்தைய வருடத்தில் நல்ல விளைச்சல் வந்தும் தொடர்ச்சியாகப் பெய்த மழையால் அறுவடை தாமதமாகி நெல் அழுகிப்போனதும் ‘பொடச வாடை’ அடித்த அந்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் மறுத்துவிட்டதும் மாரிமுத்துவின் முதுகெலும்பை உடைத்துவிடுகிறது.
“தன் கண் முன்னால் வாழ்க்கையை இயற்கை வஞ்சித்தது. இங்கு ஒரு அரசியல் யாவையும் தீர்மானித்தது. அதோடு அவர் விவசாயத்தை விட்டு வந்தவர்தான். ஊரில் உள்ள இடங்களை வித்துவிட்டார்.”
தனது உழைப்புக்கு விலை கிடைக்காமல், கண் முன்னால் நெல் வீணாவதைப் பார்த்து கேவிக் கேவி அழுத மாரிமுத்து, அந்த அவமானத்திலிருந்து தப்பிக்கவே விவசாயத்தை விட்டு வெளியேறிவிடுகிறான். நவீனச் சந்தைப் பொருளாதாரமும் அரசின் கொள்கைகளும் சேர்ந்து உழைப்பாளி விவசாயியை எப்படி அகதியாக மாற்றுகின்றன என்பதற்கு மாரிமுத்துவின் வாழ்க்கை ஒரு சான்றாகும்.
தர்ப்பூசணி ஜூஸ் குடிப்பதும் அதன் பிறகு சாலையில் விரிவாக்கப் பணிகள் நடப்பதும் மனிதர்களின் குறுகிய காலத் திட்டமிடல் இன்மையை உணர்த்துகிறது. மரங்களை வெட்டிவிட்டுப் பிறகு மீண்டும் மரங்களை நடும் முட்டாள்தனமான அரசு இயந்திரத்தின் மீது மாரிமுத்து கோபம் கொள்வது நவீன காலத்தின் அவலங்களைப் பிரதிபலிக்கிறது.
இதற்கிடையில், நண்பன் சிதம்பரத்தின் மகன் அசோக் காணாமல் போய்விட்டான் என்ற செய்தி மாரிமுத்துவை உலுக்கியெடுக்கிறது. தன் சொந்த மகளின் மீதுள்ள பாசமும், நண்பனின் குடும்பம் படும் வேதனையைப் பார்த்துக் கலங்கும் மாரிமுத்துவின் மனநிலை ஒரு நல்ல மனிதனின் இயல்பான இரக்கத்தைக் காட்டுகிறது. நவீனப் பெருநகர வாழ்க்கையின் இயந்திரத்தனத்திற்கு நடுவே, இன்னும் மனிதநேயம் முழுமையாகச் செத்துவிடவில்லை என்பதை மாரிமுத்துவின் கதாபாத்திரம் உணர்த்துகிறது.
கதையின் திருப்புமுனை சாலைப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சிக்கியிருக்கும் வாலிப உடும்பு ஆகும். அடிபட்டு, இடுப்பில் கயிறு கட்டித் தொங்கவிடப்பட்ட அந்த உடும்பு மாரிமுத்துவையும் அவனது மகளையும் பார்த்துக் கொண்டே இருப்பது ஒரு சக்திவாய்ந்த குறியீடாகும்.
“அது நின்னதுலேர்ந்து, கிளம்புகிற வரைக்கும் அது என்னையேப் பார்த்துக் கொண்டு இருந்தது. அப்படியே காட்சியா இருக்கும்மா. அதோட இடுப்புல கயிறு கட்டி அந்த ஆள் பிடித்து இருக்கிறார். அதுக்குப் பின்னால் நாம் நிற்கிறோம். அது தலையை மட்டும் திருப்பி கடைசிவரை என்னைய பார்த்துக்கிட்டு இருந்துச்சு.”
மாரிமுத்து ஆரம்பத்தில் உடும்புக் கறி உடம்புக்கு நல்லது என்று மற்றவர்களைப் போலத் சாதாரணமான ஒரு நுகர்வு மனநிலையோடுதான் அதைப் பார்க்கிறான். ஆனால், அந்த உடும்பு அவனைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் விதம் அவனது ஆழ்மனதில் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. தான் அதைச் சமைத்துச் சாப்பிடுவதைவிட, அந்தச் சித்திரவதையிலிருந்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் மேலோங்குகிறது.
தன் மகளிடம் பணம் வாங்கி, அந்தத் தொழிலாளர்களிடம் பேசி, உடும்பை மீட்டுச் சென்று காட்டில் விடுவது மாரிமுத்துவின் அகத்தில் நிகழும் ஒரு ஆன்மீக விடுதலையாகும். அவன் அந்த உடும்பை விடுவிக்கும்போது அடைந்த நிம்மதி, தன் காலத்தில் விவசாயத்தை இழந்த குற்றவுணர்ச்சியிலிருந்தும் இயற்கையைத் தன் சுயநலத்திற்காகச் சூறையாடியதிலிருந்தும் தற்காலிகமாக விடுவித்துக் கொள்ளும் முயற்சியாகவே அமைகிறது.
மாரிமுத்துவிற்கும் அவரது மகளுக்கும் இடையிலான உறவு மிகவும் தோழமை வாய்ந்தது. மகளின் குறும்புத்தனமும் தந்தையைச் சீண்டிக் கொண்டே இருக்கும் அவளது இயல்பும் கதையின் இறுக்கமான சூழலை இலகுவாக்குகின்றன. உடும்பைக் காப்பாற்றிய பிறகு மகள் முதுகில் குத்துவதும், பைக் பிரேக் அடிக்கும்போது ஏற்படும் சின்னச் சின்னச் சண்டைகளும் ஒரு தந்தையின் மீதான மகளின் எல்லையற்ற அன்பைக் காட்டுகின்றன.
மாரிமுத்து தன் மகளிடம் வெளிப்படையாகப் பேசத் தயங்கினாலும் அவளது சிறிய உதவியும் (ஐந்நூறு ரூபாய் தருவது) புரிதலும் மாரிமுத்துவுக்குப் பெரும் பலத்தைக் கொடுக்கின்றன. தன் மகளின் முன்னால் தான் பலவீனமானவனாகத் தோன்றிவிடக் கூடாது என்று அவர் நினைத்தாலும் அவரது இயல்பான இரக்கமும் பதட்டமும் மகளுக்குப் புரிந்துவிடுகிறது.
எழுத்தாளர் ரவி அல்லது எழுதிய ‘இதய ருசி’ சிறுகதை, ஒருநாளின் நிகழ்வுகளின் ஊடாக மனித வாழ்வியலின் பல அடுக்குகளை மிக நேர்த்தியாகத் தொட்டுச் செல்கிறது. விவசாயத்தின் அழிவு, நண்பனின் குடும்பத் துயரம், உடும்பு மீட்பு மற்றும் சாலைப் பயணங்கள் என யாவும் மனிதனின் அக உலகை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இக்கதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இறுதியில் மாரிமுத்து அந்த உடும்பைக் காட்டில் கொண்டு போய் விடுவித்தவுடன் அடையும் மன அமைதி, மனிதன் இயற்கையோடு கொண்டிருந்த உறவை மீட்டெடுப்பதற்கான ஒரு சிறிய அடையாளமாகும். சுருக்கமாகக் கூறின், இக்கதை பெருநகரமயமாக்கலின் வறட்சிக்கு நடுவே இன்னும் மனிதநேயத்தையும் இரக்கத்தையும் சுமந்து திரியும் மனிதனின் தவிப்புகளையும் அக எழுச்சியையும் பேசும் உன்னதப் படைப்பாகும்.
– – –
