முந்நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 195.வழமைகளின் சிறை  (ராம்பிரசாத் எழுதிய ‘ கோலங்கள்’ சிறுகதையை முன்வைத்து…)

தனிமனித மனத்தின் அசைவுகளையும் மரபுவழிப்பட்ட சமூகக் கட்டமைப்புகளையும் நுட்பமாக ஆராயும் எழுத்தாளர்களில் ராம்பிரசாத் குறிப்பிடத்தக்கவர். அவர் எழுதிய ‘கோலங்கள்’ என்ற சிறுகதை,  குடும்பத்தின் வதிவிடப் பின்னணியில் இயங்கும் வழமைகள், தலைமுறைகளின் சிந்தனை மோதல்கள், மற்றும் கணிக்கப்பட்ட வாழ்க்கையின் சலிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட அசல் வாழ்வியல் ஆவணமாகும். 

தலைமுறை சொத்துக்களின் பாதுகாப்பில் சோம்பேறித்தனமான இளைய தலைமுறையின் பார்வைக்கும் சம்பிரதாயங்களை ஒருபோதும் மாற்ற விரும்பாத மூத்த தலைமுறையின் (ஜோதி அத்தை) உலகத்திற்கும் இடையிலான மோதலை இக்கதை பேசுகிறது.

கதையின் கதையாசிரியர் எந்தவிதமான பொருளாதாரச் சுமையோ அல்லது உழைப்புச் சுமையோ இல்லாத வசதியான குடும்பத்தின் நான்காம் தலைமுறை வாரிசு. “அப்பன் தாத்தன் சொத்துக்கள் ஏக்கர் கணக்கில் வானக்கூரையின் கீழ்ப் படர்ந்து கிடக்கின்றன” என்று பெருமிதத்துடன் தொடங்கும் அவனது வாழ்க்கை, எந்தவொரு இலக்கும் இல்லாமல் காலத்தை நகர்த்தும் தனிமனிதனின் இருப்பியல் நெருக்கடியைக் காட்டுகிறது. ராத்திரி பன்னிரண்டு மணி வரை விழித்திருந்துவிட்டு காலை எட்டு மணிக்கு மேல் எழும் அவனது வாழ்க்கை முறை, அவனது சமூகச் சூழலிலிருந்து அவனைத் தனிமைப்படுத்துகிறது.

அவன் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கிக்கிடப்பதற்குக் கூறும் காரணங்கள் அவனது அகச் சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடாகும். ஆனால், அவன் தன் வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்க்கும் உலகத்தை மிகக் கூர்ந்து கவனிக்கிறான். பக்கத்து வீட்டு ஜோதி அத்தையின் கோலங்களை அவன் ஒரு கலையாகப் பார்ப்பதைவிட, அது சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட வழமைச் சடங்கு என்று விமர்சனப் பார்வையோடு அணுகுகிறான். அவனது இந்தச் சுயம் மற்றும் தனிமை, அவனுக்குச் சமூகத்தின் மீதான விசித்திரமான பார்வையைக் கொடுக்கிறது.

ஜோதி அத்தை தெருவில் பிரியமானவளாகவும் நேர்த்தியானவளாகவும் அறியப்படுவதற்கு அவளது கோலங்களே காரணம். கதையாசிரியர் கூறுவது போல், கோலம் என்பது வெறும் அழகுணர்ச்சி மட்டுமன்று; அது பாதுகாவல் அரண்.

“ஜோதி அத்தையின் வீட்டுக்கோலம் ஒருவகையில் பாதுகாவல் அரண். அழகாக இருக்குமென்பதால் எல்லோர் பார்வையும் அதன் மீதே படிவதால் சாலையோரம் இருக்கும் ரோஜாச்செடிகள் தப்பிவிடும். யாரும் அதன் பூக்களை கிள்ள மாட்டார்கள்.”

சமூகத்தின் வன்முறையிலிருந்தும் அத்துமீறல்களிலிருந்தும் வீட்டைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் குறியீட்டுச் சடங்குதான் கோலம். ஜோதி அத்தை ஒவ்வொரு நாளும் எந்தெந்தக் கிழமைகளில் என்னென்ன கோலங்களைப் போட வேண்டும் என்பதைத் துல்லியமாக வரையறுத்து வைத்துள்ளாள். புள்ளி வைப்பதில் தொடங்கி, கோடுகளை இணைப்பது வரை அவளிடம் இயந்திரத்தனமான ஒழுங்கு உள்ளது. இந்த ஒழுங்கு அவளுக்கு மனநிறைவைத் தந்தாலும், கதையாசிரியனின் பார்வையில் அது சலிப்பூட்டும் வழமையாகும்.

கதையின் மைய விவாதம் கோலங்களைப் பற்றிய உரையாடலில்தான் நுழைகிறது. திங்கள் கிழமைகளில் பதினாறு புள்ளி கோலம் போடும் ஜோதி அத்தையிடம் கதையாசிரியர் வைக்கும் வாதம் வாழ்வியலின் ஆழமான தத்துவத்தைக் கொண்டுள்ளது. ஒரேகோலத்தை வாரம்தோறும் திரும்ப திரும்பப் போடுவதில் என்ன சவால் இருக்கிறது? எந்தப் புள்ளியுடன் எந்தப் புள்ளியை இணைக்க வேண்டும் என்ற முன்தீர்மானம் வந்துவிட்டால், அங்கு வாழ்வின் எதிர்பாராத தன்மை செத்துவிடுகிறது என்பது அவனது வாதம்.

ஆனால், ஜோதி அத்தையோ பழக்கத்தையும் மரபையும் மீறத் தயாராக இல்லை. அவளுக்குப் பார்வையாளர்களின் அங்கீகாரமும் சமூகத்தின் பொதுவான அழகியல் விதிமுறைகளுமே முக்கியம்.

“ஊருன்னா நீ ஒருத்தன் மட்டும் தானா? எத்தனை பேரு? எல்லாருக்கும் பொதுவா புடிச்சிருக்கணும்ல? நேர் கோடுதான் சரி இந்த இடத்துக்கு” என்று அவள் கூறுவது, தனிமனிதனின் ரசனையைவிடச் சமூகத்தின் பொதுப்புத்தி எப்படிக் கோலங்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டுகிறது. 

ஜோதி அத்தை தன் வாழ்நாளின் ஒவ்வொரு செயலையும் ஒரு வாய்ப்பாடு போல வடிவமைத்துக் கொண்டுள்ளாள். ஞாயிற்றுக்கிழமை வேலைப்பளுவைத் தவிர்க்க திங்கள் கிழமை பதினாறு புள்ளி கோலம் போடும் அவள், அந்த நடைமுறையை ஒருபோதும் கேள்விக்குள்ளாக்குவதில்லை.

ஜோதி அத்தையின் மகளான மீனா, பொறியியல் படித்து மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவள். அவளது வாழ்க்கை முறை ஜோதி அத்தையின் பாரம்பரிய உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மீனா தன் காதலைத் தன் சுய விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கிறாள்; ஆனால் ஜோதி அத்தையோ சாதி, அரசு உத்தியோகம் அல்லது பாரம்பரியமான கட்டமைப்பிற்குள் மாப்பிள்ளை தேடுகிறாள்.

இங்குத் தலைமுறைகளுக்கு இடையிலான மோதல் வெளிப்படுகிறது. ஜோதி அத்தை மின்கட்டணம் செலுத்த வெயிலில் வரிசையில் நிற்பவள்; ஆனால் அவளது வீட்டிலோ வைஃபை மற்றும் மடிக்கணினிகள் உள்ளன. நவீன தொழில்நுட்பம் வீட்டுக்குள் நுழைந்துவிட்டாலும், அக அளவில் மரபுச் சிந்தனைகளும் பழைய கட்டமைப்புகளும் மாறவில்லை என்பதை இது காட்டுகிறது. மீனா தனது வாழ்வின் கோலத்தைத் தன் இஷ்டப்படி வளைத்துக்கொள்ள முயல்கிறாள்; ஜோதி அத்தையோ தன் மூதாதையர் வரைந்த நேர்கோடுகளையே தன் வாழ்வின் விதியாக நம்புகிறாள்.

சிறுகதையின் இறுதியில் கதையாசிரியர் ஜோதி அத்தையுடன் நடத்திய உரையாடலைத் தொகுத்துப் பார்க்கும்போது, மனிதர்களின் வாழ்க்கை என்பதும் புள்ளிகளையும் கோடுகளையும் போன்றதுதான் என்பதை உணர்கிறான்.

“புள்ளிகளும், அவைகளை இணைக்கும் கோடுகளும் என் மனக்கண் முன் ஒரு சிலந்தி வலையைப்போல் பின்னிக்கிடந்தன. அதன் மீது சிலந்திக்கு பதிலாய் ஒரு பட்டாம்பூச்சி அலைபாய்ந்துகொண்டிருந்தது.”

‘சிலந்தி வலை’ என்பது சமூகத்தால் மனிதர்களின் மீது திணிக்கப்படும் இறுக்கமான விதிகளும் வழமைகளும் ஆகும்; பட்டாம்பூச்சி என்பது அந்தச் சட்டகங்களை மீறிப் பறக்கத் துடிக்கும் தனிமனிதனின் சுதந்திரமான ஆன்மா. ஜோதி அத்தையைப் போன்றவர்கள் அந்தச் சிலந்தி வலையையே பாதுகாப்பாக நம்பி வாழ்கிறார்கள்; ஆனால் கதையாசிரியனைப் போன்றோரும் மீனாவைப் போன்றோரும் அந்த வலையைத் தாண்டிப் பறக்க விரும்புகிறார்கள்.

எழுத்தாளர் ராம்பிரசாத்தின் ‘கோலங்கள்’ சிறுகதை, நம் அன்றாட வாழ்வில் நாம் பின்பற்றும் சம்பிரதாயங்களும் வழமைகளும் எப்படி நம்மை ஒரு வட்டத்திற்குள் முடக்குகின்றன என்பதைக் கூர்மையாகவும் அழகியலோடும் விவரிக்கும் படைப்பாகும்.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *