
நவீன ஈழத்துச் சூழலின் அரசியல் யதார்த்தங்களையும் அதிகாரவெறி பிடித்த ஆட்சியாளர்களின் அக உலகையும் தம் படைப்புகளில் துல்லியமாகக் காட்டிய எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்ஸின் ‘அச்சக்காடு’ என்ற சிறுகதை முக்கியமான படைப்பாகும்.
இக்கதை, இலங்கையின் போர்க்காலச் சூழலில் நாட்டின் உயமட்ட அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் மகிந்த ராஜபக்சவையும் படுகொலை செய்யப்பட்ட பிரபல பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவையும் மையமாகக் கொண்டு, தனிமனித வாழ்வியல், மனசாட்சி மற்றும் அதிகாரத்தின் அடிப்படையிலான அச்சத்தை உளவியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் ஆராந்துள்ளது.
கதை தொடங்கும்போதே கொழும்பு நகரத்தின் பிரமாண்டமான மாளிகையில், பலத்த பாதுகாப்பு வளையங்களுக்கு நடுவே தவிக்கும் மகிந்தவின் அக உலகை வெளிப்படுத்துகிறது. ஆட்சிக் கட்டிலின் உச்சியில் அமர்ந்திருக்கும் தலைவன், தான் செய்யும் மனிதப் படுகொலைகளுக்கும் போரின் வன்முறைக்கும் அகச்சாட்சியாக எத்தகைய மன உளைச்சலைச் சந்திக்கிறான் என்பதை இக்கதை காட்டுகிறது.
“இப்போதெல்லாம் தூக்க தேவதை அவரிடம் கொஞ்சமும் கருணை காட்டுவதில்லை. அவர் நிம்மதியாகத் தூங்கிப் பல காலம் ஆகிவிட்டது. கண்ணை மூடினால், குண்டடி பட்டுக்கிடக்கும் பிணங்கள் முன்னே எழுந்து வந்து தொந்தரவுபடுத்தும்.”
இது வெறும் அரசியல் விமர்சனம் அன்று; தனிமனித வாழ்வியலின் அடிப்படையான நிம்மதியை அதிகார வெறி எப்படிப் பறித்துக்கொள்கிறது என்பதன் உளவியல் வெளிப்பாடு. பகலில் வெற்றிக் கொடிகளை நாட்டுபவனும், போரை நியாயப்படுத்துபவனும் இரவில் தன் சொந்த மனசாட்சியின் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்கிறான் என்பதை மகிந்தாவின் தூக்கமற்ற இரவுகள் உணர்த்துகின்றன.
அதிகாரத்தின் நிழலில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் அமானுஷ்ய வருகை, கதையின் தத்துவார்த்தத் திருப்புமுனையாக அமைகிறது. புகை வடிவத்தில் தோன்றும் லசந்த, மகிந்தாவின் பழைய நண்பன்; பிற்காலத்தில் எதிரியாக மாற்றப்பட்டவன்.
லசந்தவின் கேள்விகள் மகிந்தாவை நிலைகுலையச் செய்கின்றன. “உயிரோடு இருக்கும் மனிதர்கள்தான் சக மனிதர்களின் உயிர்களைப் பருகுகிறார்கள்” என்ற லசந்தவின் வரி, அரசியலில் நட்பு, துரோகம் மற்றும் கொலைகளின் கொடூரத் தன்மையை நையாண்டி செய்கிறது.
ஈழ மண்ணில் கொல்லப்பட்ட எத்தனையோ ஊடகவியலாளர்களின் பெயர்களை லசந்த பட்டியல் இடும்போது, அங்குச் சுதந்திரமான சிந்தனை எப்படி ஒடுக்கப்பட்டது என்பது வெளிப்படுகிறது.
மகிந்தா தனது அதிகாரத்தையும் “வெற்றி” என்ற மாயையையும் கொண்டு எல்லாவற்றையும் நியாயப்படுத்த முயன்றாலும் லசந்தவின் அமைதியான புன்னகையும் உறுதியான வாதங்களும் ஆட்சியாளனின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
போரில் எதிரிகளை அழித்துவிட்டோம், பயங்கரவாதத்தை ஒடுக்கிவிட்டோம் என்று மகிந்தா மார்தட்டிக்கொள்வதைப் பார்த்த லசந்த, கறாரான உண்மையை முன்வைக்கிறான்:- “குண்டு போட்டு, குண்டு போட்டு மக்களை அழித்தால், புதிய போராளிகளை உருவாக்கத்தான் முடியுமே தவிர, அமைதியைக் கொண்டுவர முடியுமா?”
இங்கு எழுத்தாளர் மிக முக்கியமானதொரு வாழ்வியல் உண்மையைச் சுட்டிக் காட்டுகிறார். வன்முறையால் ஒருபோதும் நிரந்தரமான அமைதியை உருவாக்க முடியாது. மாறாக, அது தலைமுறை தலைமுறையாக வெறுப்பையும் பயத்தையும் மட்டுமே மீதம் வைக்கும். மகிந்தா தனக்குக் கிடைத்த இராணுவ வெற்றியைப் பெருமையாகப் பேசினாலும், அந்த வெற்றியின் பின்னணியில் லட்சக்கணக்கான மக்களின் ரத்தமும் கண்ணீரும் இருப்பதை அவர் வசதியாக மறந்துவிடுகிறாரோ அல்லது மறைக்க முயல்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது.
கதையின் தலைப்பிற்கான விளக்கம் அதன் இறுதிக் காட்சியில் முழுமை பெறுகிறது. மகிந்தாவும் அவரது அரசும் ஒட்டுமொத்த சமூகத்தின் மனங்களிலும் விதைத்தது எதை? வெள்ளை வான் கலாச்சாரம், சித்ரவதை, மரண பயம் ஆகியவையே அவை. ஆனால், அந்தப் பயத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் ஆட்சியாளர்களின் மனங்களுக்குள்ளும் அதே பயம் பெரும் பூதாகரமாக வளர்ந்துள்ளது என்பதை லசந்த எச்சரிக்கிறான்.
“ஒவ்வொரு நொடியும் பயம்… எந்த நேரத்தில்… எது நேருமோ என்கிற பயம்தான் நீங்கள் விட்டுச் செல்லப்போவது. அது இன்றைக்குப் பெரும் காடாக வளர்ந்திருக்கிறது மகிந்தா. அந்த அச்சக் காட்டில் நீங்கள் எல்லோரும் காணாமல் போவீர்கள்!”
கதையின் இறுதியில் மின்சாரம் தடைபட்டு, ஆபத்துக் கால சைரன் ஒலிக்க, சோபாவின் அடியில் சென்று பதுங்கும் மகிந்தாவின் காட்சியோடு கதை முடிகிறது. எவ்வளவு பெரிய ராணுவப் பாதுகாப்பும், அதிகார பலமும் கொண்டிருந்தாலும், தன் சொந்த நாட்டு மக்களின் சாபத்திற்கும் அகச்சாட்சியின் பயத்திற்கும் முன்னால் அந்த ஆட்சியாளன் எவ்வளவு பலவீனமானவன் என்பதை இந்த இறுதிச் சித்திரம் அப்பட்டமாகக் காட்டுகிறது. இருட்டு அவனது பயத்தை மூடிக்கொண்டாலும் அந்த அச்சத்தின் நிழல் அவனது ஆன்மாவை என்றென்றும் துரத்திக்கொண்டே இருக்கும்.
எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்ஸின் ‘அச்சக்காடு’ சிறுகதை, அரசியல் புனைகதை என்ற எல்லையைத் தாண்டி, மனித மனத்தின் இருண்ட பகுதிகளை ஆராயும் உளவியல் ஆவணமாகும்.
அதிகார வெறிபிடித்த தனிமனிதன் ஒருவன் இறுதியில் எத்தகைய தனிமைக்கும் பயத்திற்கும் ஆளாகிறான் என்பதைக் கறாராகவும் சமரசமின்றியும் இக்கதை விவரிக்கிறது. அடக்குமுறை எப்போதுமே தனக்கான விலையைத் தந்துகொண்டே இருக்கும் என்ற வரலாற்று உண்மையைச் சொல்லும் இப்படைப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெறுகிறது.
– – –
