
குடும்ப உறவுகளுக்குள் செயல்படும் உளவியல் சிக்கல்களைக் கதையாக்குவதில் கைத்தேர்ந்தவர் எழுத்தாளர் மலர்விழி மணியம். தனிமை அல்லது தனித்து விடப்படுதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரியான மனவுணர்வுகளைத் தருவதில்லை.
பெண்ணுக்குத் தனிமை வெளியடையாளமாகத் தெரிந்துவிடும். ஆனால், ஆணுக்கு அது அக அடையாளமாக உறைந்திருக்கும். பெண்கள் தனிமையில் உழன்று, தனக்குள்ளோ அல்லது நம்பகமானவர்களிடமோ புலம்பிப் புலம்பி பின்பு கரையேறிவிடுவர். ஆனால், ஆணுக்குத் தன் தனிமையை முழுமையாக உணர்வதற்கே சிலகாலம் தேவைப்படும்.
தன் தனிமையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத இறுமாப்பே ஆணை மேலும் மேலும் தனிமைக்குழியில் ஆழப்புதைக்கும். அதிலிருந்து மீளத்தெரியாமலும் அதனைத் தனக்குள்ளிருந்து புலம்பி வெளியேற்ற அறியாமலும் ஆண் திண்டாடுவான்.
இந்தச் சிறுகதையில் தீரன் என்ற கதைமாந்தரும் அவ்வாறுதான். விவாகரத்தாகிப் பத்தாண்டு உருண்டுவிடுகின்றன. அதன் பின்னரே அவன் தான் எங்குப் பிழையிழைத்தோம் என்று உணரத் தொடங்குகிறான்.
சங்கடம் தீர்க்கும் ‘கந்த சஷ்டி கவசப் பாடல்’ இந்தச் சிறுகதைக்கு ஆழமான பின்னணியாகவும் குறியீடாகவும் திகழ்கிறது. தீரன் தன்னுடைய மனைவி சந்தியா, தன்னுடைய குழந்தை நிலா ஆகியோருடன் இனிது வாழ்ந்த காலத்தின் பசுமைமாறாத காட்சியாக அந்தப் பாடல் அவனைத் தொட்டுத் தீண்டுகிறது.
தனித்துவிடப்பட்ட தீரன் அல்லது தானே தனியனாகிப்போன தீரன் 10 மாடிக்கட்டடத்தில் பத்தாவது மாடியில் தனித்துக்கிடக்கிறான். அவனுக்குத் துணை மீன்தொட்டி. அந்தத் தொட்டி மீனைப்போலத்தான் இவனுடைய வாழ்வும். நான்கு சுவருக்குள் சுழன்றுவரும் தொட்டிமீனைப்போல அவன் அந்த நான்கறைச் சிறுவீட்டுக்குள் அடைந்துகிடக்கிறான்.
பெரும்பான்மையான குடும்பங்கள் சீரழிவதற்கு முதன்மைக்காரணமே ஆணாதிக்கம்தான் என்ற தொனியில்தான் இந்தச் சிறுகதை நகர்கிறது. தீரனுக்கு மிகப் பெரிய ஆயுதம் மெளனம். அவன் தன் மனைவியிடம் சண்டையிட்டு அவளை வெல்வதற்காக வெளிப்படையாகப் பேச மறுக்கிறான். ஆனால், அவன் அவனுக்குள் ஓயாமல் பேசிக்கொண்டேதான் இருக்கிறான் என்றுதான் எண்ண நேர்கிறது. அவனுடைய தோல்வியே மௌனம்தான். இது அவனுக்குப் புரிய பத்தாண்டுகளாகிறது.
வேலைக்குச் செல்லாத மனைவி கொத்தடிமை. வேலைக்குச் செல்லும் மனைவி அடிமை. ஆகமொத்தம் மனைவி அடிமைதான். அவளை அடிபணிய வைப்பதே, தனக்கு அடிமையாக்குவதே தன்னுடைய சுதந்திரம் என்று தவறான புரிதல்கொண்ட தீரனைப் போன்றோருடன் இனிய இல்லறம் எந்தப் பெண்ணுக்கும் வாய்க்காது.
இதனைத் தீரனின் ரத்தஉறவுப் பெண்களுக்கும் தெரியுந்தான். ஆனாலும் அவனுக்கே அவர்கள் தன்னுடைய முழுக்குரலையும் கொடுக்கின்றனர். அவனைத் தவறாக வழிநடத்துகின்றனர்.
இறுதியில் அவர்கள் எல்லோரும் கரையேறிவிடுகின்றனர். தீரன் மட்டுமே நடுஆற்றில் சிக்கிக்கொள்கிறான்.
குடும்பம் என்பதே கணவனும் மனைவியும் இணைந்து வாழ்வதுதான். ஆனால், குடும்ப நிறுவத்தில் ஆண் பெண்ணிடம் அடங்கிப்போவதா அல்லது பெண் ஆணிடம் அடங்கிப்போவதா என வாழ்நாள் நெடுக மாறி மாறி எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டே வாழ்வதால் அவர்கள் ஒருநாளும் இணைந்து வாழ முடிவதே இல்லை. இதுவே இந்தக் கதையின் மையமாக இருக்கிறது.
தீரன் இறுதிவரை தன்னை மையப்படுத்தியே சிந்தித்துக்கொண்டே சுருங்கிப்போகிறான். ஆனால், அவன் மனைவி சந்தியாவோ தன்னைச் சுற்றிச் சிந்தித்துக்கொண்டே விரிந்து செல்கிறாள். அவள் எண்டிசையிலும் தன் திறன்களைப் பெருக்கிக்கொள்கிறாள். தீரனோ எத்திசையும் இன்றித் திசையழிகிறான். அவன் மேலும் மேலும் தனக்குள் மூழ்கி மூழ்கி உளப் பிறழ்வுக்கு ஆட்பட்டு பின்னர் உளச்சிகிழ்ச்சையைப் பெறும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
அவன் தன்னுடைய பிழையை உணரும் போது காலம் வெகுதூரத்திற்கு அவனை நகர்த்தி வந்துவிடுகிறது. காலம்தவறித் திருந்தினால்தான் என்ன, திருந்தாவிட்டால்தான் என்ன? அவனுக்கோ அவனைச் சார்ந்தவருக்கோ அதனால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. அவன் இழந்த இனிய வாழ்வு இனி என்றைக்கும் அவனுக்குக் கைவசப்படப் போவதில்லை. அந்த நல்வாழ்வு இனி அவனுக்கு எந்நாளும் நினைவுகளில் மட்டுமே சுழலும் நற்கனவுமட்டுமே. இனி அவன் கனவில் வாழலாம். நிஜத்தில் அதை எண்ணி எண்ணி ஏங்கலாம். இது இரண்டுமே அவனுக்கு அவனால் கிடைக்கப்பெற்ற சாபங்களே!
ஏன், இதே நிலை பெண்ணுக்கு ஏற்படுவதில்லை? காரணம், ஆண்சார்ந்த உளவியல் அவ்வாறுதான் உள்ளது. பெண்களின் உளநிலை முற்றிலும் வேறானது. ஆண் தனக்குள் அழுங்குவதும் பெண் தனக்கு வெளியே பொங்குவதும் தான் இந்த உளவியலில் உள்ள மிக முக்கியமான முரண்கள், வேறுபாடுகள். ஆண் உள்நோக்கிப் பாய்கிறான். பெண் வெளிநோக்கிப் பாய்கிறாள். வெளியே எண்டிசையிருக்கிறது. உள்ளே ஒரே திசைதான் உள்ளது. அது அவன் வந்த திசை. மீண்டும் மீண்டும் அவன் அந்தத் திசையிலேயேதான் பயணித்துக்கொண்டிருக்க இயலும். அதனால்தான் இதே நிலை பெண்ணுக்கு ஏற்படுவதில்லை.
இங்கு ‘வெற்றிடம்’ என்பது ஏதும் இல்லாத இடம் அன்று. தீரன் மட்டுமே இருக்கும் இடம். தீரன் மட்டுமே எங்கிருந்தாலும் அது வெற்றிடம்தான். தீரன் என்று கூறாமல் ஆண் என்று சொன்னாலும்கூட இது பொருத்தமாகத்தான் இருக்கும். ஆண் மட்டுமே இருக்கும் இடம் வெற்றிடம்தான். ஆனால், பெண் மட்டுமே இருக்கும் இடம் வெற்றிடமாகாது. இதைப் புரியவைக்கவே இந்தச் சிறுகதை வாசகரிடம் மன்றாடுகிறது. ஆண்களின் உளவியலை வெளிப்படுத்துகிறது என்ற வகையில் இந்தச் சிறுகதை வாசகர் மத்தியில் மனத்தில் பதியும் கதையாகவே இருக்கும்.
– – –
