
காலம் எவ்வாறு அனைவருக்கும் அனைத்துக்கும் பொதுவானதோ அதே போன்றதே அனைத்துயிர்களுக்கும் பொதுவானது மரணம். அதன் கணிக்கமுடியாத வருகையே அதன் பேரழகு. ஒவ்வொரு குடும்பத்திலும் பெருஉடைப்பு என்பது பெரும்பாலும் அக்குடும்பத்தின் மூத்த உறுப்பினரின் மரணத்திலேயே ஏற்படுகிறது.
மரணத்திற்குப் பின்னர் அவரது உடமைகள் மீதான உரிமைக்கொண்டாட்டமே அத்தனை மனக்கசப்புகளுக்கும் நிரந்தரப் பிரிவுக்கும் வழிவகுக்கிறது. இந்தக் கதையில் தாயின் மரணத்தின் தொடர்ச்சியாக நிகழக்கூடிய அன்றாடங்கள் சார்ந்த சிக்கல்கள் அலசப்படுகின்றன.
நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் நீண்டநாள் இருந்த அந்தத் தாய் இறந்தபின்னர் மருத்துவமனையில் இருந்தமைக்காகவே உடலை எரியூட்ட விழைகின்றனர். ஒருவிதத்தில் இது நடைமுறைச் சடங்குகளிலிருந்து விலகுவதாகவும் அதனால் ஏற்படும் பணம், உடல் உழைப்பு சார்ந்தவற்றைக் குறைத்துக் கொள்வதற்காகவும்கூட இருக்கலாம். மரபார்ந்த இறுதிச்சடங்குமுறைகளிலிருந்து நவீனக்காலத்து, தொழில்நுட்பம் சார்ந்த இறுதிமரியாதைச் சடங்குகள் அனைவருக்குமே வசதியாகவும் செலவுகள் குறைந்ததாகவும் உள்ளன.
தாயின் பெயரில் இருக்கும் சொத்துக்கள், பணம் மற்றும் நகைகளைப் பிள்ளைகள் பங்கிட்டுக் கொள்வதில்தான் ரத்த உறவுகளின் உண்மைமுகம் வெளிப்படுகிறது. அச்சூழலில்தான் அவர்களின் சுயநலத்திரை கிழிபடுகிறது. தாயின் அஸ்தியைக் கரைப்பது பற்றிய பேச்சினைவிடச் சொத்துப்பங்கீடு சார்ந்த பேச்சே உச்சம் பெறுகிறது.
ஒவ்வொருவரும் சொத்தில், பணத்தில், நகைகளில் தமக்கு முழுஉரிமையிருப்பதாக நம்புவதே முரண்தான். தாம்கோருவதுகிடைக்காதபோது தமக்கென சிறுபகுதியாவது கிடைக்கப்பெற வேண்டும், அதனையும் அத்தனைபேரும் தமக்கென விட்டுக்கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர்.
தாயின் சொத்தின் மீது இவ்வளவு உரிமைபாராட்டும் இவர்கள் அந்தத்தாயினை எவ்வாறு கவனித்துக்கொண்டார்கள்? குறிப்பாக, அந்தத் தாயின் இறுதிக்காலத்திலாவது? இவை தார்மீக வினாக்கள்தாமே! தாயைப்பேண விரும்பாதவர்கள், அது தமது உரிமை, கடமை அன்று என்று கருதுபவர்கள் தாயின் சொத்தின் மீது மட்டும் உரிமைபாராட்டுவது சுயநலமின்றி வேறு என்ன? இந்த நிலை பெருநகரங்களில் மட்டுமன்று கிராமங்களிலும் நிலவத்தொடங்கிவிட்டது என்பதைத்தான் இந்தச் சிறுகதை காட்டுகிறது.
கிராமத்துக்காரர்களின் பேச்சுவழக்கில் அமைந்த உரையாடல்கள் வாசகரை இந்தக் கதையுடன் எளிதில் இணைத்துவிடுகின்றன. தாய் இல்லை. அவரின் சொத்து இருக்கிறது. ஆனாலும் அந்தத் தாய் வாழ்ந்த வீடு ஏதுமற்ற வெற்றிடமாகவே மாறிவிடுகிறது.
ஒரு நபரின் இருப்பு – இன்மை ஆகியனவற்றுக்கு இடையில் இருப்பது பௌதீக வெறுமையும் வெற்றிடமும்தானோ? அல்லது மாயைசார்ந்த அமானுஷ்யமான வெறுமையும் வெற்றிடமும்தானோ? இனி, அந்த வீட்டை அவர்கள் தன் தாயின் நினைவுகளால் மட்டுமே நிரப்ப இயலும். நினைவுகளின் அடர்த்தி பெருக பெருக அந்த வீடு தாயின் நினைவுச்சுவடுகளால் நிறையக்கூடும். அதன் வழியாக மன வெறுமையும் வீட்டின் வெற்றிடமும் நீங்கக்கூடும்.
சமகால மனிதர்கள் தங்களின் இயல்பான உணர்ச்சிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தைவிடச் சொத்துரிமைசார்ந்த லௌகீகங்களுக்கே மிகுதியாக முதன்மைத்தன்மையை அளிக்கின்றனர். பாசத்தைவிடப் பணமே இங்கு மேலோங்கிவிடுகிறது.
பொதுவாக, பெரும்பாலான வீடுகளில் பணக்கார முதியவர் மரணப்படுக்கையில் இருந்தால் அவரின் பணத்தைத் தாமே அடைந்துவிடவேண்டும் என்ற நோக்கோடு அந்த முதியவரை விழுந்து விழுந்து பேணுவர். அதற்கு நேர்எதிராக அந்த முதியவரைச் சற்றும் பேணாமல் அப்படியே விட்டுவிட்டு, அவர் இறந்த பின்னர் அவரின் மொத்தச் சொத்தையும் தமக்குரியதாக்கிக் கொள்வதும் பல வீடுகளில் நிகழ்வதுண்டு.
இந்த இரண்டுமே சுயநலம்தானே? மரணப்படுக்கையில் இருக்கும் உயிரைப் பேணவேண்டும் என்ற தார்மீகக் கடமை யாருக்கும் இருப்பதில்லை. அந்த உயிர் தம் வாழ்நாளெல்லாம் உழைத்துத் தேடிச் சேர்த்த சொத்தைக் கொண்டு தமது உயிரைப் பேணிக்கொள்ளும் சுயநலமே இக்காலத்தில் அனைவரிடத்திலும் வலுத்துவிட்டது.
பணம்தான் முதன்மைபெறுகிறது. மனிதன் பின்னுக்குத் தள்ளப்படுகிறான். மனிதநேயக் குறைவே இதற்கு முதன்மைக் காரணம். இப்படிச் சொத்துக்களை அள்ளி அள்ளிச் சேர்க்கும் ஒரு நபர் தன்னுடைய இறுதிக்காலத்திலும் இதுபோன்ற நிலையினைத்தானே அடைய முடியும். அவரின் ரத்த உறவுகளும் அவரிடம் இதேபோன்றுதானே நடந்துகொள்வர்? அதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
தனக்கு இளமை இருக்கும்போது தனக்கு வரவுள்ள முதுமையைப் பற்றி அவர்கள் துளியும் கவலைப்படுவதில்லை. அவ்வாறு சிந்திக்கத் தொடங்கிவிட்டால் இயல்பாகவே மனிதநேயம் அனைவரிடத்திலும் துளிர்விட்டுவிடும். அத்தகைய சிந்தனை இல்லாத மனிதர்களால் இதே நிலைதான் தலைமுறை தலைமுறையாகத் தொடரும்.
‘எரிகிற வீட்டில் பிடுங்குவது வரை லாபம்’ என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு மரணத்தை முன்வைத்து, அதுசார்ந்து தமக்குக் கிடைக்கப்பெறும் லாபங்களைப் பற்றிக் கணக்கீடு செய்யும் சுயநலம் மிகுந்த மனிதர்களைக் குறிப்பாக ரத்த உறவுகளைப் பற்றி இந்தச் சிறுகதை விரித்துரைக்கிறது.
மரணம் பின்னுக்குத் தள்ளப்பட்டு வாரிசுவழிச் சொத்தே முதன்மைபெறுகிறது. மனிதன் ஒருபொருட்டே அல்லன். அவன் தேடிச் சேர்த்த சொத்தே பெருமதிப்புக்கொள்கிறது. இதுதான் லௌகீக சாமர்த்தியம் என்றால், மனிதநேயம் என்பதும் ரத்த உறவுகளின் பாசம் என்பது வெறும் கானல்நீர்தானோ, மாயநதிதானோ? என்ற வினாவினை இந்தச் சிறுகதை வாசகரின் எண்ணங்களில் எழுப்பிச்செல்கிறது.
– – –
