
பாரத கதை ஏன் மீண்டும் எழுதிப் பார்க்கப்படுகிறது, ஏற்கனவே பாரதக் கதை சொல்லப்பட்டு விட்டதே? என்ற கேள்வி உண்டு. ஆனால் அப்படி மீண்டும் எழுதிப் பார்க்கப்பட்ட நல்ல நாவல்களை, படித்துப் பார்க்கும் போது, அந்தக் கதையை நாம் புதிய கோணத்தில், அந்த ஆசிரியன் அந்த கதையை, கதைமாந்தர்களை, நிகழ்வுகளை காணும் கோணத்தை, புதிய புரிதல்களை, புது அறிதல்களை நம்மால் கண்டுகொள்ள முடிகிறது. அப்படியான ஒரு நாவல்தான் ‘இனி நான் உறங்கட்டும் ‘. மலையாளத்தில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நாவல் இது .
இந்நாவல் கர்ணனை மட்டும் எடுத்து அவனது கதையைப் பிரதானமாகப் பேசி அவனை ஆராய்கிறது. கூடவே திரௌபதியின் வாழ் நிலையையும் பேசி அவளது மனநிலையைச் சொல்கிறது .
நிறைய நாயகர்கள் இருந்தும் கர்ணனை மட்டும் ஏன் நாவலாசிரியர் எடுத்து பேசுகிறார் என்று நாவலை வாசித்த பின்பு யோசிக்கும் போது, அவனது வாழ்க்கைதான் மற்றவர்களை விட புதிர் நிறைந்ததாக, விதி விளையாடியதாக, விதியால் வஞ்சிக்க்கபட்டதாக இருக்கிறது. நாவலில் இரு கேள்விகள் பிரதானமாக இருக்கின்றன . ஒன்று கர்ணனின் வாழ்வு , மற்றும் சில இடங்களில் மட்டுமே வந்தாலும் காந்தாரியின் வாழ்வு. விதி ஏன் நல்லவர்களாக இருந்தும் அவர்களுக்கு துன்பம் தருகிறது? நன்மை செய்தாலும், நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்குத் துன்பம் மட்டுமே கிடைக்கும் எனில் வாழ்வின் அர்த்தம்தான் என்ன? நல்லது செய்தால் நன்மை கிடைக்கும் என்று சொல்லப்படுவதில் எல்லாம் ஒரு அர்த்தமும் இல்லையே என்ற கேள்விகளை முன்வைத்து விரிவாக விவாதிக்கிறது. இன்னொரு கேள்வி திரௌபதி வாழ்வு வழியாக. வெண்முரசு நாவல் போல் அல்லாது, இதில் வரும் திரௌபதி சாதாரண பெண்தான். ஒருவனை விரும்புகிறாள், ஆனால் அவனோடு சேர்ந்து அவளுக்கு ஐவர் கிடைகிறார்கள். தர்மனின் தவறால் பொது அவையில் அனைவர் முன்னும் அவமதிக்கப் படுகிறாள். அது தரும் துன்பம் காரணமாக நிம்மதியற்று, தூக்கம் அற்று வாழ்கிறாள். பிறகு போர் வெற்றியால் அவளுக்கு நிம்மதி கிடைக்கிறது. ஆனால் அது சில மணிநேரம் கூட நீடிக்காமல் அஸ்வத்மன் அவளது பிள்ளைகளை, சகோதரனை, தந்தையை எரித்து விடுகிறான். இவ்வளவு துன்பமும் அடைந்தது மட்டும் இல்லாது, சபையில் அவமானம் ஏற்படுத்திய காரணங்களில் ஒருவனான கர்ணன் தன் சகோதரன் என்று தெரிந்த பிறகு, தர்மன் அவன் மீது இருந்த எதிர்ப்பைக் கைவிடுகிறான். அவன் தனக்கு கெடுதி செய்தது ஏன் தர்மனை கர்ணன் தன் சகோதரன் என்று தெரிந்த பிறகு பாதிக்க வில்லை என்று எண்ணுகிறாள். தான் மட்டும் தனிமையானவள் என்ற மனநிலையை வந்தடைகிறாள். நாவல் மெல்ல மெல்ல கர்ணனின் மனநிலையை, அவனது துக்க வாழ்வை, அவ்வளவு துக்கங்கள், எதிர்ப்புகள் இருந்தும் அவனளால் கைவிடப்படாத நேர்மை, நற்பண்புகளை திரௌபதிக்கு காட்டுகிறது . அவள் சபையில் அவமதிக்கப்படும் இடத்தில் தான் இருந்ததை, தனது தவறை நினைத்து கர்ணன் வருந்துவதை எல்லாம் அவளுக்குக் காட்டுகிறது . அவள் விதி வசப்பட்ட தன் வாழ்வை நொந்து கொள்கிறாள். கடைசியில் அவள் வேண்டுவது சற்று நிம்மதியான உறக்கத்தை மட்டுமே .
கர்ணன், திரௌபதி இருவரைத் தாண்டி இந்த நாவலில் அதிகம் வருவது தர்மனின் மனநிலை. 13 ஆண்டுகள் தன் விரோதியாக , அவன் அழிந்தால்தான் தன் தம்பிக்கு ( அர்ஜூனன்) பாதுகாப்பு , தனக்கு வெற்றி என்பதை மனதில் கொண்டு அவன் அழிய வேண்டும் என்பதை மனச் சங்கல்பமாக கொண்டு வாழ்கிறான். அவன் வீழ்ந்த பிறகு அவனுக்கு அவன் சகோதரன் என்று தெரிந்த பிறகு தனது சகோதரன் மீதா இவ்வளவு வஞ்சம் கொண்டிருந்தேன் என்று புழுங்குகிறான். மேலும் கர்ணனுக்கு முன்பு பாண்டவர்கள் சகோதரர்கள் என்பது தெரிந்து போரில் அர்ஜுனனைத் தவிர மற்ற நான்கு பேரையும் வாய்ப்பு இருந்தும் கொள்ளாமல் விட்டதை தர்மன் உணர்ந்து தங்கள் நால்வரின் வாழ்வு அவன் அளித்தது என்பதை உணர்ந்து, அறியாமையால் தான் செய்த பிழை என்று எண்ணி கிட்டத்தட்ட அரசர் பதவி தவிர்த்து தபோவனம் செல்லும் மனநிலைக்குச் செல்கிறான் . அவனுக்கு பிரச்சினையாக இருந்தவை 1. தனது 13 ஆண்டு கால கர்ணன் மீது இருந்த வஞ்சம் ,பயம் முற்றிலும் பிழையான ஒன்றாக ஆனது . 2. போரில் தங்கள் நால்வருக்கும் வாய்ப்பு இருந்தும் கொல்லாமல் கர்ணன் விட்டது, அதாவது இப்போது இருக்கும் வாழ்வு என்பது கர்ணன் அளித்த பிச்சை எனும் கோணம் . 3. சகோதரனை அழிக்க முயன்று, அழித்த பாவம் . இதில் மூன்றாவது தர்மனை மிக பாதித்தது .
இதில் ஒரு சுவாரஸ்யம் , கர்ணனை சாந்தப்படுத்த , புரிதலை தர நாரதர் வருகிறார் . நாவலில் மிக நீண்ட விவாதம் அது . நாரதர் தர்மனுக்கு பல புரிதல்களை அளிக்கிறார் . அதில் முக்கியமானது . தர்மன் நிகழ்வுகளை தனது செயலால் விளைந்தது என்று துக்கம் கொள்கிறான் . ஆனால் அப்படி எண்ணுவதே ஒரு அகந்தை மனநிலை என்பதை நாரதர் உணர்த்துகிறார் . செயல்கள் , நிகழ்வுகள் எல்லாம் நாம் அறியாத , நமது புரிதலுக்கு அப்பாற்பட்ட வலைப்பின்னலில் நிகழ்வது , அதன் காரண காரியங்களை நம் எல்லைக்குள் வைத்துப் பார்க்கக் கூடாது எனச் சொல்கிறார் , இன்னும் விரிவாக சொல்கிறார், உண்மையில் இந்த நிகழ்வில் நாரதர் பேசும் பகுதி நாவலில் முக்கியமான விவாதப் பகுதி . ஒரு செயல் நாம்தான் செய்தோம் என என்னும் இறுமாப்பு மனநிலை எந்த பகுதி வாசித்த பிறகு நமக்கு இல்லாமல் ஆகும் .
நாவல் வாசிக்கும் போது நமக்கு நிறைய சஞ்சலங்கள் உண்டாகும், முக்கியமாக கர்ணன் பிறகு பின்னணி காரணமாக ( சூதன் ) அவமதிக்க படுவது , அதுவும் பீஷ்மர் இதைச் சொல்லி அவமதிக்கறார் என்பதை நாவலில் காணும் போது வருத்தம் படிக்கும் நமக்கு ஏற்படுகிறது , இன்னொன்று கர்ணனின் கொடை வெறும் பிராமணர்களுக்கு என நாவல் காட்டும் நிலை வருத்தம் தந்தது . வெண்முரசு நாவலில் இப்படி இருக்காது அவனது கொடைத் தன்மை அனைவரிடமும் வெளிப்படும் .
இந்த நாவல் வழியாக எனக்கு துரியோதனன் பிடித்தவனாக ஆனான் , ஏனெனில் அவன் மட்டுமே பிறப்பு பின்னணி பார்க்காமல் , பொருட்படுத்தாமல் கர்ணனை ஏற்றான் , மற்றவர்களுக்கு அவன் குந்தி மகன் என்று தெரிந்த பிறகுதான் அவன் மீது அன்பு வந்தது , ஆனால் துரியனுக்கு மட்டுமே அவனது பின்னணி தேவைப் பட வில்லை !
நாவலில் பீஷ்மர் மற்றும் கர்ணன் இடையே இருக்கும் மோதல் போக்கு முக்கியமானது . தொடர்ந்து கர்ணனை தாழ்குலத்தான் , திறன் குறைந்தவன் , அர்ஜுனனை விட திறன் குறைந்த்வன் , மந்த புத்தியன் என்றெல்லாம் விமர்சிக்கிறார் . பதிலுக்கு கர்ணனும் பீஷ்மரை தூற்றுகிறான், ஆனால் பீஷ்மரின் அம்புபடுக்கைக்கு பிறகு யாரும் காணாது இரவில் பீஷ்மரை காண கர்ணன் செல்கிறான் . தான் தூற்றியதற்கு வருத்தம் சொல்லி மன்னிப்பு கேட்கிறான் . ஆச்சிர்யமாக பீஷ்மர் கர்ணனை தன் மகத்தான எதிரி நீ என்கிறார், தான் தூற்றியதற்கு காரணம் துரியோதனன் உனது திறன் மீது வைத்த நம்பிக்கை காரணமாகத்தான் போர் நோக்கி செல்கிறான், எனவே உன்னை அவமதிப்பது, மட்டம் தட்டுவது வழியாக அவனை பின்வாங்க வைக்க அப்படி பேசியதாகச் சொல்கிறார் !
நாவலில் போர்க் காட்சிகள், உரையாடல்கள் எல்லாம் வாசிக்கிறோம் என்ற எண்ணம் தாண்டி அந்த நிகழ்வுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை உருவாக்கின. வருணனைகள் மட்டும் வாசிக்க , புரிந்து கொள்ள எனக்கு சற்று கடினமாக இருந்தன. மேலும் மொழிபெயர்ப்பாளர் தன் சமஸ் கிருத மொழித் திறனை வாசிக்கும் நமக்கு காட்ட முயன்றதும் வாசிக்க மேலும் சற்று திணறலை அளித்தது. நாவலின் நல்ல பலன்களில் ஒன்று நாவலில் வரும் சமஸ்கிருத வார்த்தைகளுக்கு பொருள் தேடி நிறைய சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு பொருள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது !
நாவலில் அபார உருவகங்களும் உண்டு , ஒரு உருவகம் ஒரு விராட கழுகு பறந்து வந்து குந்தியை கொத்தி அவள் குடலை உருவி அதை எடுத்து பறந்து வந்து திரௌபதி கழுத்தில் போட்டதாக திரௌபதி மனப்பிரமை கொள்வது . இன்னொரு உருவகம் உண்மைகள் புழுக்கள் போல வந்து ஒரு கற்சிலையை தின்று சிதைக்கும் காட்சி .இரண்டும் அபார காட்சி அனுபவத்தை அளித்தன. நாவலில் வரும் காட்சி வருணனையில் உவமையும், பலவை எளிமையும் ,அதேநேரம் அது சிறப்பான உவமையகவும் இருந்தன. உதாரணத்திற்கு கர்ணனை பற்றிச் சொல்லும் போது மதிய நேர சூரியன் போல ஜொலித்தான் என்று வரும் . எளிய உவமை என்று படிக்கும் போது தோன்றும் , ஆனால் இதை கொண்டு யோசிக்கும் போது அதன் ஆழம் , உணர்த்தும் குறிப்பு பிரமாதமாக இருக்கும் . இது போல பல உவமைகள் நாவலில் உண்டு .
நாவலில் எனக்கு கடினமாக இருந்தது , திரௌபதியின் மன ஓட்டங்கள் தான் , சில பகுதிகள் இரண்டு முறை வாசித்தும் உள்வாங்க இயல வில்லை , திரும்பவும் வாசித்து பார்க்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன் . வருணனைகள் மட்டும் கடின மொழியில் இருந்தாலும் இந்த நாவல் மொழிபெயர்ப்பு நாவல் என்று தோன்ற வில்லை , தமிழ் நாவல் ஒன்றை வாசிக்கிறோம் என்ற உணர்வுதான் இருந்தது .
கர்ணனின் வாழ்வின் முக்கிய பகுதி வரிசையாக இந்நாவலில் அடுக்க பட்டிருந்ததை போல இருந்தது .1. வீரர்கள் தங்கள் திறனை வெளிக்காட்டும் நிகழ்ச்சியில் அர்ஜுனனுக்கு எதிராக தன் திறன் காட்டி கர்ணன் தன்னை அறிமுகம் செய்து கொள்வது , அதையொட்டி கிடைக்கும் துரியோதனன் நட்பு , அங்கதேச அரசன் ஆவது . 2. பாஞ்சாலி சபை அவமதிப்பில் கர்ணன் நடந்து கொள்ளும் விதம் 3. கிருஷ்ணன் கர்ணன் சந்திப்பு 4 .குந்தி பாஞ்சாலி சந்திப்பு 5. கவச குண்டலங்களை இந்திரன் வாங்க வருவதை சூரியன் கர்ணனிடம் முன்னறிவித்தல் ,பிறகு இந்திரன் வாங்க வருதல். 6 பீஷ்மர் கர்ணன் சந்திப்பு. 7. முடிவாக போர் அதில் வாய்ப்பு இருந்தும் அர்ஜூனன் அல்லாத பிற பாண்டவர்களை கொல்லாது விடுதல் , அர்ஜூனன் உடனான போர் ,அதன் நிகழ்வுகள் ,கர்ணன் மரணம் என .. இந்த பகுதிகள் எல்லாம் கர்ணன் பற்றிய முழு சித்திரத்தை நமக்கு அளிக்கின்றன. காட்சிகளும் அற்புதமாக இருக்கும் . குந்தி கர்ணன் சந்திக்கும் காட்சி ஒரு உதாரணம் , கர்ணன் அப்போது ஆற்றின் ஓரத்தில் நடுமதிய நேரத்தில் சூரியனை தியானித்து கொண்டு இருப்பான் , அங்கு வந்த குந்தி வெயில் தாளாமல் வேறு ஒதுங்கிடம் இல்லாது கர்ணனின் பின்புலம் விழுந்திருக்கும் அவனது நிழலில் வந்து நின்று கொள்வாள் . கர்ணன் தியானம்/ வேண்டுதல் முடிந்து திரும்பும் போது தன் அருகில் தன் நிழலில் அண்டி நிற்கும் இந்த ராஜ களையுள்ள பெண்மணி யாரென்று எண்ணுவான் !
போர்க் காட்சிகளும் தத்ரூபமாக வாசிக்கும் போது நமக்கு இருக்கும், பீமன் – கர்ணன் மோதும் காட்சி , அதில் கர்ணனின் வில்லால் பீமன் வில், தேர் அனைத்தும் இழந்து தரையில் நிற்பான். பின் தன்னை தற்காத்து கொல்ல இறந்த யானையை எடுத்து மறைத்துக் கொள்வான் , கர்ணனின் அம்புகளால் அந்த யானை பிய்ந்து துகள் துகளாக விழும்.
நாவல் கர்ணன் வாழ்வு வழியாக ஒருவனில் விதி விளையாடும் விசயங்களை பேசுகிறது . பயிற்சி வழங்கும் குருவே சாபமும் வழங்குதல் , உயர் குலத்தில் பிறந்தும் சூதனாக பார்க்கக்ப்படுதல் ( இந்த உயர் தாழ் பார்வையில் எனக்கு உடன்பாடில்லை , நாவல் பேசும் விசயத்தை சொல்வதற்காக சொல்கிறேன்) , திறன் இருந்தும் விரும்பிய பெண்ணை அடைய போட்டியில் பிறப்பு காரணமாக பங்கேற்க முடியாமல் போதல் , கவச பாதுகாப்பு இருந்தும் வள்ளல் குணம் காரணமாக அதை இழத்தல் , சகோதரர்கள் என்று தெரிந்தும் நண்பனுக்காக போர் செய்ய வேண்டிய நிலை வருதல் என இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றின் பின்னிருக்கும் கர்ணனின் துர்விதி சார்ந்து விரிவாக நாவல் பேசுகிறது . அதாவது இந்த விதி எதனால் , அப்படி விதி இருக்கும் எனில் இந்த வாழ்வின் அர்த்தம்தான் என்ன என்பதை பற்றி எல்லாம் கர்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கேட்டு தர்மன் அடைந்த மனக் குழப்பங்கள் வழியாக நாவல் விவாதிக்கிறது . இரு தர்கங்களை சொல்கிறது , ஒன்று விதி நம் அன்றாட பார்வைகள் தாண்டி , நம் பார்வைகள் தாண்டி மேலதிக நாம் அறியாத நோக்கங்கள் கொண்டு , அந்த நோக்கங்களின் போக்கிற்காக அமைவதே மானுட வாழ்க்கை என்கிறது. இரண்டு இந்த விதியின் போக்கை எதிர்த்து போரிடும் , தன் விதியை எதிர்த்து போரிடும் மகத்தான மானுடர்கள் பிறக்கிறார்கள் , அவர்கள் விதியை தன் பலத்தால் , தன் மகத்தான உள்ளத்தால் எதிர்த்து நிற்கிறார்கள் என்கிறது .
நாவலில் திரௌபதி தன்னை ஒப்புநோக்கி பார்ப்பது குந்தியை வைத்து. எந்தளவுக்கு எனில் தனக்கு ஐந்து கணவன்கள் போல குந்தி ஐந்து பேரிடம் தன் ஐந்து பிள்ளைகளை பெற்றாள் என்பது போல ! தனக்கு இருக்கும் வருத்தம் போல குந்திக்கு இருக்கும் வருத்ததையும் எண்ணி கொள்கிறாள் .இந்த இரு பெண்களும் தங்களை சக்ரவர்த்தினியாக ஆக வேண்டும் என்று விரும்பி உருவானவர்கள் அல்ல இந்த நாவலில் , வெண்முரசு இதற்கு எதிரான ஒரு சித்திரத்தை அளிக்கிறது , அதில் இவர்களின் கனவே இந்த பாரதவர்சத்தின் சக்ரவர்த்தினி ஆவது ! இந்த நாவலில் குந்தி தன்னை பெற்றெடுத்த சூரசேனரிடம் இருந்து குந்திபோஜரின் மகளாக போவது தந்தையின் விருப்பம் என்பது போல இருக்கும் , ஆனால் வென்முரசில் குந்தியின் விருப்பமாக இருக்கும் . வெண்முரசில் இயல்பாகவே சக்ரவர்த்தினியின் தைரியத்துடனும் அந்த இயல்பும் கொண்டு இருப்பார்கள் . இந்த நாவலில் இந்த இரு பெண்களும் சாதாரண பெண்களாக வருகிறார்கள் , அதுவும் திரௌபதி விதி வசத்தில் சிக்கி தன் விதியை நொந்தவளாக வருகிறாள் .
குந்தியை வைத்து மனித விருப்பத்தின், போக்கின் விசித்திரத்தை பேசும் முக்கியமான இடம் ஒன்று உண்டு. கர்ணனுக்குப் பதிலாக அந்த இடத்தில் அர்ஜூனன் இருந்தால் தனது குழந்தையை மறைத்து இருப்பாளா என்ற ஒரு கேள்வி நாவலில் வரும். மறைத்திருக்க மாட்டாள் என்று வரும். எண்ண ஓட்டங்களாக வந்து செல்லும் வரிகளில் ஒன்றில் இப்படி வந்திருக்கும், என்ன இருந்தாலும், தனது பிள்ளைகள் என்றாலும் வித்தியாசம் இருக்கிறது என்பதை இதில் உணர்ந்தேன் .
இந்நாவல் வழியாக நம் மரபின் இதிகாசத்தின் நாயகர்களின் வாழ்வை நமக்கு தன் எழுத்தின் வழியாக காட்டிய, புரிதல்களை அளித்த இந்நாவலில் ஆசிரியர் பி.கே பாலகிருஷ்ணன் வணக்கத்திற்குரியவர்.
