3.அசோகமித்திரனின் ஆண்கள் பெண்கள் குழந்தைகள்- செல்வி.சரோஜினி

மணல் குறுநாவலில் வரும் சரோஜினி கதாப்பாத்திரம் அசோகமித்திரனின் பெண்களில் என்றுமே மறக்க முடியாத ஒன்று. பற்களில் கருப்புக்கறை படிந்த, தன் நண்பியால் பொறுக்கி என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு போட்டோக்கடைக்காரனை நம்பி சரோஜினி அவசரம் வெளித்தெரியாத வண்ணம் நிதானமாக நடந்து, சுந்தரம் பார்க்கைச் சென்றடையும் தருணம் மனம் அதிர்ச்சியில் உறைந்து விடுகிறது. சரோஜினிக்கு என்ன ஆனது? அவள் படித்த பெண்தானே. போயும் போயும் ஒரு பொறுக்கியைத் தேடியா அவள் வீட்டை விட்டுக்கிளம்ப வேண்டும் என்கிற அங்கலாய்ப்பு. அது அளித்த சஞ்சலம் நீண்ட நாள்கள் மனதிற்குள் ரீங்கரித்துக்கொண்டேதான் இருக்கிறது. இன்று மறுவாசிப்பு செய்யும்போது அது ஆங்காரமாக உரத்துக் கேட்கத்தான் செய்திற்று. என் ப்ரிய சரோஜினி ஏன் அப்படிச் செய்தாய்?

மொத்தக் கதையில் எங்குமே சரோஜினியைக் குற்றம் குறை கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் தன் படிப்பிலும், அதற்கு பிறகான குடும்பக் கடமைகளிலும் கண்ணும் கருத்துமாகத்தான் இருக்கிறாள். அண்ணன்களும் அக்காக்களும் சுயநலம் கொண்டு உலர்ந்திருக்கும் போது அவள் அம்மாவின் இடத்தினை அன்பால் எடுத்துக்கொள்கிறாள். பெருங்கருணையும் பேரன்பும் கொண்டவளாகத்தான் வலம் வருகிறாள். வனஜாவின் பேறுகால கடமைகளை வாஞ்சையோடு செய்து முடிக்கிறாள். அண்ணன்களின் தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்கிறாள். அப்பாவை எதிர்பார்க்காமல் வீட்டுச்சாமான்களை வாங்கி வந்து சமைத்துப் போடுகிறாள். எனில் எது அவளை அந்த துன்பியல் முடிவினை எடுக்கத் துாண்டியது?

பி.யூ.சி.யில்  – இரண்டாம் பிரிவு- அறிவியல் பிரிவினை எடுத்து முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றவள் சரோஜினி. பரீட்சை நாட்களில்தான் அம்மாவிற்கு தள்ளாமல் வந்து இறந்து போய்விடுகிறாள். மறுநாள் பரீட்சை என்ற நிலையிலும் அவள் அமர்ந்து படிக்கத் தோதான ஒரு இடம் அவளுக்கு வாய்க்கவில்லை. இறப்புச் சடங்குகள் நடந்துகொண்ருந்த துக்கமான நாட்களில்தான் அவள் பரீட்சையை எழுதித்  தேர்ச்சி பெறுகிறாள். அப்பா மருத்துவக் கல்லுாரியில் சேர்த்துவிடலாம் என்று ஆசையை ஊட்டுகிறார். அவளும் மருத்துவர் ஆகும் கனவோடுதான் தன் பள்ளிப்படிப்பை முடித்திருக்கக்கூடும். கரப்பான் பூச்சியை உடற்கூராய்வு செய்துவிட்டு, அதன் தீட்டினை வீட்டிற்குள் கொண்டுவந்து விடக் கூடாது என்கிற முன்ஜாக்கிரதை உணர்வோடு அவள் வீடு திரும்பும் காட்சியில் தான் கதை ஆரம்பம் ஆகிறது.

நடுத்தர உயர் சாதிக்குடும்பம். நான்கு பெண்களும் மூன்று ஆண்களும் உள்ள சூழல். அம்மாவிற்கு இக்கதையிலும் தனித்த அடையாளம் ஏதுமில்லை. அவளுக்கென்று ஒரு  பெயரைக்கூட அசோகமித்திரன் வழங்கவில்லை. அப்பாவும் அப்படித்தான்.  அப்பாவை ஓரிடத்தில் பொம்மை போலத்தான் இருக்கிறார் என்று சரோஜினி நினைத்துக்கொள்கிறாள். பிராமண வகுப்பைச் சேர்ந்த ஓர் ஆணின் குணவார்ப்பு துல்லியப்படுத்தப்பட்டுள்ளது. மகள் முதல் வகுப்பில் டிஸ்டிங்சன் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவளுக்கு மருத்துவக்கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று தான் அணிந்திருந்த பூ நுாலை எடுத்துக்காட்டி ஆதங்கப்படக் கூடியவராகத்தான் அப்பா வெளிப்படுகிறார்.

அசோகமித்திரனின் கதைகளில் வரக்கூடிய அம்மாக்கள் அனைவருக்கும் ஒரே முகந்தான். அவர்கள் குடும்பங்களால், குடும்ப உறவுகளால் தளைப்படுத்தப்பட்டவர்கள். குடும்பங்களின் அன்றாடப் பாடுகளினால் சீரழிக்கப்படுபவர்கள். அவர்களின் கனவுகள் எதுவும் நிறைவேறக்கூடியவை அல்ல. ஒரு நடன நிகழ்ச்சிக்கு சென்று வர விரும்புவதும், ஒரு சினிமாவை மாலை  நேரக்காட்சியில் பார்த்துவிட்டு வரும் ஆசையும் கூட தன் மகன்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விருப்பங்களாகத்தான் இருக்கிறது. அம்மா என்கிற தனி மனுஷியின் அபிலாஷைகளை எந்த மகனும் புரிந்து கொள்ளவில்லை.  குடும்பம் என்கிற தொல் அமைப்பிற்காக அம்மாக்களைப் பலியிடக் கோரும் உறவுகளாகத்தான் மகன்கள் இருக்கிறார்கள். மகள்களுக்கும் அம்மாவை உண்டு செரிக்கும் கண்ணோட்டந்தான் முதன்மையாக இருக்கிறது. இக்கோணத்தில்தான் இக்கதையில் வருகிற முனியம்மாவையும் பார்க்க வேண்டும். முனியம்மா என்கிற  பெயரில் வீட்டு வேலைகள் செய்யும் விளிம்புநிலை பெண்மணியும் கதையில்  ஒரு தாய் மனநிலை கொண்டவளாகத்தான் வந்து போகிறாள். வேலைக்காரிக்கும் சரோஜினிக்கும் இடையேயான உறவு நட்பும் ஆத்மார்த்தமும் கலந்ததாகத்தான் இருக்கிறது. வீட்டைச்சுற்றி வந்து கிணற்றில் தண்ணீர் கோரி தலையில் ஊற்ற உதவும் வேலைக்காரி சரோஜினியைப் பார்த்து கிண்டல் தொனியில் ”என்ன ஒக்காந்துட்டயா?” என்று கேட்பதில் அது வெளிப்படுகிறது.

கதையில் பின் பகுதியில் சரோஜினியின் அம்மா இறந்து, மொத்த குடும்பப் பாடுகளையும் சரோஜினியே இழுத்துப்போட்டு பார்த்து முடித்துவிட்டு வீட்டின் முன் பின் கதவுகளை தாளிட்டுவிட்டு தனித்திருக்கும் நிலையை ஊகித்து முனியம்மாள் அவளைக் கண்டிக்கிறாள். வயதுக்கு வந்த கன்னி, யாருமற்ற தனிமை. எங்கே கொண்டுபோய் சேர்க்கும் என்பதை  அவளும் அறிந்தவள்தானே?

“நீ மட்டும் ஏன் தனியா வீட்டுலே குமிஞ்சு குமிஞ்சு கிடக்கே?” என்று ஆதங்கம் தாளாமல் கேட்கிறாள் முனியம்மா. “நீ..இப்படி தனியா இருக்கறது நல்லால்லே கண்ணு” என்று தாய்மை கொள்கிறாள். இத்தனைக்கும் அவர்களுக்குள் இருப்பது ஆண்டான் அடிமை உறவுதான். சரோஜினி அவளை ஒருமையில்தான் அழைக்கிறாள். ஒருமையில் அழைத்து உத்தரவுகள் இட்டு வேலைகள் ஏவுகிறாள். முனியம்மா சொல்லும் அறிவுரைகளை சட்டாம்பிள்ளை மனநிலையில் மறுக்கிறாள். முனியம்மா சரோஜினி மீது கொள்ளும் அக்கறை பெண்களின் உலகத்தை மேலும் கருணை கொண்டதாகக் காட்டுகிறது.

குடும்பம் என்கிற தொன்மையான அமைப்பின் ஆணிவேராக பெண்கள்தான் இருக்கிறார்கள் என்பதை இக்கதையின் குடும்பச் சித்திரங்கள் வழியாக அசோகமித்திரன் தெள்ளத் தெளிவாகக் சுட்டிவிடுகிறார். அம்மாவின் இறப்பிற்கு பிறகு நுால் அறுந்த பாசியைப் போல தனித்தனியாக இரத்த உறவுகள் பிரிந்து சிதறி ஓடுவதைப் பார்க்க முடிகிறது. அதுவரை குடும்பத்தின் அதிகார மையமாக இருந்து அப்பா, அம்மாவின் இறப்பிற்கு பிறகு சரோஜினியின் அதிகாரத்திற்கு கூட பணிந்து போகிறவராக மாறிவிடுகிறார். அவரின் மிடுக்க காணாமல் போகிறது. அண்ணாக்கள் சரோஜினியைக் கண்டு அஞ்சுகிறார்கள். அவளின் ஆற்றாமையின் முன் தலைகுனிந்து நிற்கிறார்கள்.

கதையில் அம்மா வரும் காட்சிகளில் எல்லாம்  அவள் சமையல் அறையில் எரியும் அடுப்பிற்கு முன் வெந்து தணிந்து இருப்பவளாகத்தான் காணப்படுகிறாள். சமைப்பதும்  பொரிப்பதும் ஆக்கிப் பரிமாறுவதுந்தான் அவளின் அன்றாடங்கள். அவளுக்கும் தள்ளாமை வருகிறது. தள்ளாமையால் அவளால் அன்றைய மாலைச்சிற்றுண்டியைச் செய்ய முடியாமல் போகிறது. ஆனால் மகனால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. “டான்ஸ்னா உடம்பு தள்ளும். டிபன் பண்ண மட்டும் உடம்பு தள்ளாது” என்று மணி சினங் கொள்கிறான்.

அம்மா இரத்த அழுத்தமும் இதய வலியும் கொண்டுள்ள நோயாளி. மருத்துவர் அவளை அடுப்படியில் சதா நேரமும் எரிந்து கொண்டிருக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். அதே போல  வெளியே அலைந்து  திரிவதும் அம்மாவின் உடம்பிற்கு ஆபத்து. இதையெல்லாம் பலமுறை மருத்துவர் அறிவுறுத்தியும் அம்மாவிற்கு வேறு வழிவகைகள் இல்லாமல் போகிறது. அவள்தான் –உடம்பு ஒத்துழைக்காத போதும்- ஆறு பேருக்கும் சமைத்துப் போடுகிறாள். குடும்பத்தின் தேவைகளை திட்டங்கள் தீட்டி நிறைவேற்றித்தருகிறாள். தன் உடல் நிலையை நன்கு அறிந்தும் அம்மா மேற்கொள்ளும் யத்தனங்கள்தான் அவளை அற்பாயுளில் இறந்து போகச் செய்கிறது.

பெண்கள் பெண்களைக் காணும் கண்ணோட்டம் என தனித்த அவதானிப்பு ஒன்று பெண்களின் இயல்பாக உள்ளது. அதை அசோகமித்திரன் இக்கதையில் இரண்டு இடங்களில் நுட்பமாகச் சுட்டி உள்ளார்.  கதையில் ஆரம்பத்தில் சரோஜினியைத் தேடி வீட்டிற்கு வந்து அவளிடம் புத்தகம் ஒன்றைத் தந்துவிட்டு உடனே கிளம்பிச்செல்லும் ரேணுகாவைக்குறித்து வனஜாவும் சரோஜினியும் பேசிக்கொள்ளும் காட்சிகள்.

” அந்த ரேணுகாவா இவ? எப்படிக் குதிரையா உசந்துட்டா? என்றவள் அவள் புடவை கட்டியிருக்கும் விதத்தையும் கவனிக்கத் தவறுவதில்லை. “அவள் தலைப்பைக் குட்டையா வைச்சுண்டுதானே கட்டிண்டிருக்கா?

மணிக்குப் பெண் பார்த்துவிட்டு வரும் அம்மா பெண்ணைப் பார்த்த உடன் கணித்துவிடுகிறாள் . அவள் அவர்கள் குடும்பத்திற்கு சரிப்பட்டு வரமாட்டாள் என்று. பெண்ணின் உள்ளுணர்வு பிறரை மிகச் சரியாகவே அவதானிக்கிறது. கணிக்கிறது.

கதை ஏழு பகுதிகளாகச் சொல்லப்பட்டுள்ளது. கதை கொண்டுள்ள கால அளவு கிட்டத்தட்ட ஓராண்டு. தன் கணவனுடன் சண்டை போட்டுவிட்டு பிறந்தகம் திரும்பும் வனஜா இரண்டு மாதங்கள் தங்கிவிடுகிறாள். அவளின் மூன்று குழந்தைகளும் சரோஜினியின் அன்றாடங்களை கலைத்துப் போடுகின்றன. ஒரு குளியலறையில் அதிகாலை அவசரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வனஜாவிற்கு பிறந்த வீடுதான் ஆசுவாசம் தரும் இடம். வந்த வெக்கை தணிவதற்குள்ளாகவே தன் தம்பியோடு அன்றைய மாலைக்காட்சி சினிமாவிற்கு குட்டையாக சேலை முந்தானையைக் கட்டிக்கொண்டு கிளம்ப முடிகிறது. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பினை சரோஜினியிடம் ஒப்படைத்து விடுகிறாள். சினிமா தமிழ்ச் சமூகத்தில் வகித்த இடத்தை ஒரு கணம் திறந்து காட்டிவிடுகிறார் அசோகமித்திரன். கதையில் இரண்டு மூன்று இடங்களில் சரோஜினியும் அண்ணன் மணியும் ஓய்வு நேரத்தில் மூன்றாம் தர கதைப்புத்தகங்களை கையில் எடுத்துக்கொண்டு வாசிப்பதையும் சித்திரிக்கத் தவறவில்லை.

அம்மாவின் மறைவுதான் சரோஜினியின் வாழ்க்கையை சூறையாடுகிறது. அவளுடைய கனவுகள் பொசுக்கப்படுகின்றன. அவள் படிப்பை பாதியில் கைவிட வேண்டியதாகிறது. அவள் விரும்பம் என்ன என்பது குறித்து குடும்ப ஆண்கள் ஒருவருக்கும் அக்கறை இல்லாமல் போய்விடுகிறது. அவள்தான் வீட்டில் மூன்று ஆண்கள் இருந்த போதும் அரப்பு பொடி வாங்கி வர கடைவீதிக்கு சென்றுவர வேண்டியுள்ளது. அவ்வாறு தினந்தோறும் சென்று வரும் தருணங்களில்தான் அந்த  மோகன் போட்டாக்கடைக்காரனால் ஆபாச சைகைகள் செய்து அவளை வழிக்கு கொண்டுவர முடிகிறது. நெருக்கடிகள் மிகுந்த இருளிற்கு மத்தியில் அவன்தான் வெளிச்சமாக சரோஜினிக்கு தோன்ற ஆரம்பிக்கிறான்.

மனித முகங்கள் வருத்தம் கொண்டு சோர்ந்து போகும் தருணங்களை ஒரே சித்திரத்தைக் கொண்டு அசோகமித்திரன் இக்கதையில் வரைந்து காட்டியுள்ளார். தள்ளாமையால் சோர்ந்து சமையல்கட்டில் இருந்து  வெளியே வரும் அம்மாவைப் பார்க்கும் சரோஜினிக்கு அம்மாவின் முகம் தளர்ந்து கறுத்துவிட்டதாக எண்ணத் தோன்றுகிறது. அதே போன்று அம்மா இறந்த பிறகு அண்ணன்களையும் அப்பாவையும் பார்க்கும்போதெல்லாம் அவர்களின் முகம் கறுத்து இளைத்து விட்டதைப் போல இருந்ததாக எண்ணச் செய்கிறார். நெருங்கி வந்து “நான் ஆறு மணிக்கு சுந்தரம் பார்க்காண்ட நின்னிட்டுருப்பேன்“ என்று பஸ் நிறுத்தத்தில் அந்த மோகன் போட்டாக் கடைக்காரன்  ரேணுகாவோடு பேசிக்கொண்டிருக்கும் போது சொல்லிச் செல்கிறான். அப்போது சரோஜினிக்குத் தன் முகம் கறுத்துப் போனதை உணர முடிகிறது என்று வர்ணிக்கிறார்.

 

தாய்மையின், பெண்மையின் சுய நலத்தையும் அசோகமித்திரனால் சுட்டிக்காட்டாமல் இருக்க முடிவதில்லை. இக்கதையில் மூத்த மகன் மணிக்கு வரன் பார்த்து ஜாதகம் பொருத்தம் பார்த்து அதுவும் அமைந்து விடுகிறது. குடும்பத்தோடு பெண் பார்க்கச் சென்று பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிட்டு வந்த பின்னரும் வேறு சிறந்த பெண் கிடைத்து விட மாட்டாளா என்ற பேராசையால் அம்மாவும் அப்பாவும் மகனுக்குப் பிடித்திருந்த போதும் வரனை உறுதி செய்யாமல் காலம் கடத்துகிறார்கள். அப்பாவிற்கு வரதட்சணை சார்ந்த எதிர்பார்ப்பு எனில் அம்மா ஏன் அதற்கு உடன்படுகிறாள். அவளும் அதே எண்ணத்தைத்தான் கொண்டிருந்தாளா? பெண் வீட்டிலிருந்து பெண்ணின் அம்மா –மாமி இவர்களின் முடிவினைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வீட்டிற்கு வருகிறாள். அப்போது அம்மாவும் அக்கா வனஜாவும் போடும் நாடகங்கள் மணியை எரிச்சல் கொள்ளச் செய்கின்றன. மணியின் விருப்பத்தை மீறி அப்பா வேறு ஒரு இடத்தில் பெண் பார்க்க ஜாதகத்தை வாங்கி நீட்டும் தருணத்தில் அவர் மீது கோபம்  கொள்ளத் துாண்டவும் செய்கிறது. பெற்றோர்களின் பேராசையால்தான் அந்த வரனும் தள்ளிப்போகிறது. அம்மாவின் இறப்பிற்கு பிறகு அதுவரை தேடி வந்த வரன்கள் கூட இல்லாமல்  போகின்றன. மணி சரோஜினியை சுரண்டி தின்று வரும் நிலைமைக்கு ஆளாகிறான். அழுக்கு வேட்டியுடன் அலுவலகம் சென்று திரும்புகிறான். இரண்டாவது அண்ணன் அம்மாவின் நீத்தார் கடன்களை செய்ய வேண்டிய நாளிலும் குடும்ப உறவுகளின் சம்மதத்தை மீறி வேறு ஜாதிப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான்.

அம்மா இறந்த வீட்டிற்குள் சரோஜினி அழுதுகொண்டே இருக்கிறாள். பின்கட்டில் ஒருமுறை பெரியம்மாவைத் தேடிச்சென்று அவள் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டு அழுகிறாள். பெரியம்மாவை “நீங்க தனியாத்தானே இருக்கேள் பெரியம்மா.இங்கே வந்து இருந்துடுங்களேன். அம்மா இல்லாததுக்கு நீங்க அம்மாவா இருந்துடுங்களேன்?” என்று கேட்டு திகைக்க வைக்கிறாள். பெரியம்மா ஒருகணம் மலைத்துவிட்டு அதை மறுக்கிறாள். அவளுக்கு பிள்ளைகள் இல்லை. கணவனும் இல்லை. ஆனால் அவளுடைய வீடுகளும் அதில் வாடகைக்கு இருப்பவர்களும் அவளுக்கு நினைவிற்கு வருகின்றனர். சரோஜினியின் கையறு நிலைய ஆறுதல் காட்டி மாற்றிவிடும் மனநிலை தோன்றவில்லை. இங்கேயும் கண்ணு கண்ணு என்று அன்பு காட்டி தாய்மை பொங்கினாலும் பெரியம்மாவும் சுயநலத்தால் நிறைந்த பெண்தான்.

இக்கதையின் கடைசிப் பகுதியில்தான் பெண் மனதின் வளர்சிதை மாற்றங்களை உள்ளுறைக் காட்சிகளாக அசோகமித்திரனால் உணர்த்த முடிகிறது. மீட்சியாக கருதி பார்க்கைத் தேடி சரோஜினி போக என்ன காரணம்? எது அவளை உந்தித்தள்ளியிருக்கக்கூடும்? என்ற கேள்விகளுக்கு விடைகள் அளிப்பதாக இருக்கிறது.

அந்த மோகன் போட்டாக்கடைக்காரன் பார்க்கும் விதத்தில் அவள் பதற்றம் அடைந்து ரோட்டைக் கடக்க முயலும்போதுதான் அவளின் பள்ளித் தோழி – தற்போது கல்லுாரிக்கு கிளம்புபவள்- ரேணுகா சரோஜினியை வழி மறிக்கிறாள். அவர்கள் இருவரும் கூட்டம் நிறைந்த பஸ் நிறுத்தத்தின் அருகிலேயே நின்று  பேசுகிறார்கள். பள்ளியில் அவளுடன் படித்த பதினேழு பேர்களில் பத்துப்பேர்கள் கல்லுாரியில் பி.எஸ்.சி.யில் ஒன்றாகப் படிக்கிறார்கள். அவளால்தான் படிப்பைத் தொடர முடியாமல் போகிறது. அதன் வருத்தம் அவளை உள்ளே சுருங்கிப் போகச் செய்திருக்கிறது. அதுதான் ரேணுகாவை சந்திப்பதில் இருந்து தப்பித்து ஓட வைக்கிறது. அவள் வீடு தேடி வந்து காத்திருந்த போதும் பாலுக்கு கூப்பன் வாங்கச் சென்றதை ஒரு சாக்காக வைத்து தவிர்த்துவிடத் துாண்டுகிறது.

ரேணுகாவிற்கும் சரோஜினிக்கும் இடையே நடக்கும்உரையாடல்கள் சரோஜினியை உள்ளுர நெக்குருகச் செய்கின்றன. சரோஜினியும் மீறல்களைத் தன் இயல்பாகக்  கொண்டிருந்த ஆசிரியைப் பற்றித்தான் கேட்கிறாள்.

“மிஸ்.பிரேமாவதி ரிசைன் பண்ணிட்டாளா?

ஒரு கணநேர திகைப்பிற்கு பிறகு ரேணுகா பதில் சொல்கிறாள்.

”நான் சொல்லறதுக்கென்ன, ஊரே சிரிச்சுப் போச்சே, நீ இருந்தாயோல்லியோ, அப்பவே அவ ஏதேதோ லாட்ஜீக்கெல்லாம் போயிட்டு வந்திண்டிருந்திருக்கா. அவ இருந்த லட்சணத்துக்கு ஹாஸ்டல் ஹெட் குக் மேலே இல்லாத கம்ப்ளெயிண்ட் கொடுத்து அவனை சஸ்பெண்டு பண்ண வச்சுட்டா..”

மீறலுக்கான முதல் விதை விழும் விதம் இதுதான். அந்த நேரத்தில்தான் அந்த மோகன் போட்டாக்கடைக்காரன் அவர்கள் அருகிலே வந்து மாலையில் தான் பார்க் அருகில் அவளுக்காக காத்திருப்பதை பயம் ஏதுமின்றி சொல்லிவிட்டு இயல்பாக நடந்து  செல்கிறான். அப்போது ரேணுகாவிற்கு அவனைத் தெரிந்திருக்கிறது. இவன் போட்டோகிராபர்தானே?” என்று அவளிடம் கேட்கிறாள். அவளே அவன் மீது ஒரு மதிப்பீட்டை வைக்கிறாள்.

“மிஸ்.பிரேமாவதிக்குச் சரியான ஜோடி”

பேச்சு சரோஜினியின் சங்கடங்களைப் பற்றிப் போகிறது. கரி மூட்டை வாங்கி வருவதற்காக அவள் போகவேண்டும் என்று விடைபெற முயற்சிக்கிறாள். அப்போது அவளின் அண்ணன் மணியின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வருகிறது. இளைய அண்ணனாவது எவளையோ கல்யாணம் பண்ணிக்கொண்டு எங்கோயாவது இருக்கிறான். அவனுக்கு அந்த சாமர்த்தியம் இருக்கிறது. அவளின் மூத்த அண்ணனுக்கு அதுவும் இல்லை.அப்படி காதலித்து திருமணம் செய்துகொள்ளத் தைரியமும் இல்லை என்பதை ரேணுகா குத்திக்காட்டுகிறாள்.

அவள் ரேணுகாவை பஸ் ஏற்றிவிட்டு வாங்கிய கடைச் சாமான்களைத் துாக்கியபடி வீட்டிற்குத் திரும்புகிறாள். அப்பா வேலைக்காரி கழுவி வைத்துவிட்டுப்  போன பாத்திரங்களை தண்ணீரில் அலசி மீண்டும் கழுவி அடுக்கிவைக்கிறார். அலுவலகம் செல்வதற்கான நேரம் வந்துவிடுகிறது. மகளிடம் இலையைப்  போடுகிறாயா நாழியாகிறது? என்று கேட்கிறாள். “நாழியானா என்ன? என்று எதிர் கேள்வி கேட்டு அப்பாவை ஒரு கணம் தலையைத் துாக்கி திரும்பி பார்க்க வைக்கிறாள் சரோஜினி. இக்கணத்தில்தான் அவள் மீறலுக்கான தைரியத்தை அடைகிறாள். அப்பா “தான் இன்னும் ஒரு மாதத்தில் பணி ஓய்வு பெற்றுவிடுவேன் அதற்கு பிறகு நாழியாறது குறித்த பதற்றம் இருக்காது என்று அவளுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கிறார். அப்போது பாத்திரம் தோய்க்க அரப்பு பொடி இல்லை என்று வேலைக்காரி கேட்டதைக் குறித்து மகளிடம்  பகிர்ந்து கொள்கிறார். சரோஜினி அதையும் எதிர்க்கேள்வி கேட்டு மடக்குகிறாள். “அரப்புப் பொடி கூட நான்தான் பாத்து வாங்கணுமா? நீங்க யாராவது வாங்கிண்டு வரக்கூடாதா? இனிமே நான்மளிகைக்கடைப் பக்கமே போக மாட்டேன்? என்கிற ஆத்திரத்தில் அவள் உள் மனதின் ஆசை அப்பட்டமாக  வெளிப்படுகிறது. அப்போதே அவள் மனமானது எதிர்நிலைக்கு சென்றுவிட்டது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

அன்று பகல் முழுக்க அவள் எரிச்சல் அடைந்தவளாகத்தான் காட்சி தருகிறாள். அப்பாவையும் அண்ணாவையும் உயிரற்ற பொம்மைகள் என்று விமர்சனம் செய்கிறாள். இவர்களால் யாருக்குத்தான் என்னதான் செய்ய முடியும் ? என்று கேட்டு பெருமூச்சு விடுகிறாள்.

அரப்பு பொடி கேட்கும் வேலைக்காரியிடமும் அவள் எரிந்து விழத்தான் செய்கிறாள்.  அவளுடைய மனதின் பிளவுண்ட இருவேறு மனோலயங்கள் எதிரும் புதிருமாக அலைவுறுகின்றன. தத்தளிப்பின் சங்கடம் அவளுடைய கோபமாக பொங்கி வழிகிறது. அவளால் எது சரிய என்கிற ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. தன்னிச்சையை பின்தொடர்ந்து செல்லும் மிஸ்.பிரேமாவதியினால் அவளுக்குள் விழுந்த பொத்தல் நாளும்பொழுதும் பெரிதாகிக்கொண்டே செல்கிறது. அதுதான் சாயந்திரம் பார்க்காண்ட காத்திருப்பேன் என்று சொன்னவனை பொருட்படுத்தும் நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இப்போது அவள் எதைப் பின்பற்றுவது? கட்டற்று அலையும் மனதின் குரலையா? மரபின் சுமையால் கட்டிப்போடவைக்கும் சமூக வலைப்பின்னல்களையா?.

வேலைகள் முடிந்து யாருமற்ற தனிமையில் அவள் வாசல்களைத் தாளிட்டு தனிமையில் படுத்திருக்கிறாள். தனிமையின் வசீகரக் கரங்கள் அவள் உணர்ச்சிகளோடு பகடையாட ஆரம்பிக்கின்றன. அவளே அவளை புதிதாக உணர ஆரம்பிக்கிறாள். மனம் பற்களின் கருப்புகறைகள் படிந்த அவனை நோக்கி சாய்ந்தாடுகிறது. அது அளித்த குற்ற உணர்ச்சிதான் தன்னை மறக்கும் முயற்சியாக அதுநாள் வரை அடைந்து கிடந்த துாசி துப்பட்டைகளைத் துாற்று வீட்டை ஒட்டடை அடிக்கச் செய்து கடும் உழைப்பினில் ஈடுபடச் செய்கிறது. புறத்தை துாய்மைப்படுத்துவதன் மூலம்அவளின் அகக்குப்பையை அள்ளிக்கடாச முயலச் செய்கிறது.

அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய மணியை அவள் ஒருகணம் அசையாமல் அமர்ந்திருந்தபடி எதிர்கொள்கிறாள். அவளுக்குத் தெரிந்தாலும் ஒரு கணம் அவள் தன் எதிர்ப்பை தெரிவிக்கிறாள். அதன்பிறகு குளிர்ந்து அவனுக்குக் காப்பி போட்டுக்கொண்டுவந்து அருந்தக் கொடுக்கிறாள். குடித்து முடித்ததும் அவன் வெளியே கிளம்ப தயார் ஆகிறான். அவள் அவனை வீட்டில் இருக்கச் செய்துவிட்டு தான் வெளியே கிளம்ப இருப்பதைச் சொல்கிறான்.அப்போது அவன் காய்கறி வாங்க கடைக்குச் செல்கிறாயா? என்று வெளியே  செல்வதற்கான காரணத்தை கேட்கிறான்.

“வெளியே போகிறதுன்னாக்கூட உங்களுக்கு உழைக்கத்தான் நான் போகணுமா? என்று கேட்டு மீறலை நிச்சயம் செய்துகொள்ள வைக்கிறது. கோபத்தின் நிழலாக இச்சையின் நீர்மை சுரந்து சரோஜினியை மூழ்கச் செய்கிறது.

ஆண் பெண் உறவின் விளிம்புகளைக் குறித்த போதமும் அசோகமித்திரனில் துல்லியம் கூடியதாக உள்ளது. முப்பதாண்டுகளுக்கு மேற்பட்ட தாம்பத்யம், பரஸ்பர எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் அளித்த வெறுப்பும்  வெறுமையும் ஒருவரை ஒருவர் எக்கணத்திலும் குத்திக்கிழிக்க தயங்காத மூர்க்க நிலையாக கணவன் மனைவிக்கு இடையே இருப்பதை ஒரு கண நேரக்காட்சியின் மூலம் –ஐஸ் பெர்க்கின் நீர்மட்ட மேல் நீட்டம் போல- பேருருவின் இருப்பினை அடையாளம் காட்டிவிட முடிகிறது. மணிக்கு வரன் பார்க்க வரும் ஒருவரை அப்பா எதிர்கொண்டு சரோஜினியிடம் மணியின் ஜாதகத்தை எழுதிக்கேட்கும் ஒரு தருணம் கதையில் உண்டு. அப்போது சமையல் கட்டில் இருந்து அறைக்கு வரும் அம்மா அப்பாவை எதிர்கொண்டு ” யாரது?” என்றுதான் சாதாரணமாக கேட்கிறாள். அதற்கு அப்பா பல்லைக் கடித்துக்கொண்டு “வந்து சொல்கிறேன்” என்று ஒரு கணத்தில் கோபத்தின் உச்சத்தைக் கண்முன் காட்டிவிட்டு வெளியே பேசச் செல்கிறார். அக்கணத்தில் திறக்கிறது அவர்களின் முப்பது வருடத் தாம்பத்ய வாழ்வின் தாத்பரியங்கள்.

அதே போல மணியை மாப்பிள்ளையாக உறுதி செய்து கொள்ள வீடு தேடி வருகிறாள் மாமி ஒருத்தி. சரோஜினி குடும்பத்தினர் மொத்தமாகச் சென்று பெண் பார்த்து திருப்தி கொண்டு வீட்டிற்குப் போய் கலந்து விட்டுச்  சொல்கிறோம் என்று சென்றவர்களிடம் இருந்து பதில் வரவில்லை என்பதால் அதைக் கேட்டுவிட்டுச் செல்ல வருகிறார் அந்த மாமி. அவளும் சரோஜினியும் யதேட்சையாக ஒரே பஸ்சில் வீடு  திரும்புகிறார்கள். மாமியை வீட்டிற்குள் அழைத்து அமர வைத்து அம்மாவும் அக்காவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அண்ணா மணி வந்துவிடுகிறான். மணியைப் முன் உணர்ந்த உடன் எதிர்கால மாமியார் ஆகிற வாய்ப்பிப்பதால் ஏற்பட்ட ஜாக்கிரதை உணர்வினால் அந்த மாமி அவன் வேகமாக அறைக்குள் வரும்போது தானாக மரியாதையுடன் எழுந்து நிற்கிறாள்.

உறவுகள் ஈரம்பதம் இழந்து சுய நலம் பீடித்து விலகிச்செல்லும் கணங்களையும் இக்கதையில் அசோகமித்திரன் குறிப்பிட்டுள்ளார். அம்மாவின் இறப்பிற்கு பிறகு அக்காக்கள் இருவரும் அம்மாவின் நகைகளை பங்கு பிரிப்பதற்காக வாக்குவாதங்கள் செய்கிறார்கள். அருகில் அமர்ந்திருந்த பெரியம்மாதான் அது தவறு என்று அவர்களை எச்சரிக்கை செய்கிறாள். இன்னும் கல்யாணம் ஆக வேண்டிய ஒரு தங்கை அவர்களுக்கு இருக்கிறாள் என்பதையும், ஆண்கள் இருவருக்கும் இனிமேல்தான் திருமணம் நடக்க வேண்டும்என்பதையும் அவள் நினைவுப்படுத்துகிறாள். மகள்களுக்கு தங்களின் ஆசைகள்தான் கண்முன்னே நிற்கின்றன. அவர்களால் தங்களின் உடன் பிறப்புகளின் இருப்பு குறித்து அக்கறை காட்ட இயலாமல் ஆகிவிடுகிறது.

மணல் தனியானது. தனித்தனி நுண் துகள்களாக பிளவு பட்டது. எத்தனைக் குவியலாக சேர்ந்து, அம்பாரமாகக் கிடந்தாலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாதது. மனித உறவுகளின் குறியீடாக அசோகமித்திரன் இக்கதையின் தலைப்பைத் தேர்வு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *