
திலீப்குமாரின் சிறுகதையில் ஜி.நாகராஜன் தோழர் கே. என்ற கதாப்பாத்திரமாக வருகிறார். அக்கதையும் சென்னையில்தான் நடக்கிறது. சுந்தர ராமசாமியின் நினைவோடை நுாலில் சொல்லியிருப்பதை வைத்துப் பார்த்தால் அக்கதை நடக்கும் அலுவலகம் க்ரியா ராமகிருஷ்ணனின் பதிப்பகமாக இருக்கலாம். அங்கே வேலை பார்த்து வந்தார் திலீப்குமார். கைச் செலவிற்கு காசு வாங்க தன் நண்பரைத் தேடிச் சென்றிருக்கிறார் ஜி.என்.
கதை ஒரு மாலையில் நடக்கிறது. அலுவலகம் முடிந்து செல்லும் அவசரத்தில் இருக்கிறார் கதைசொல்லி. அப்போது மாடிப்படியில் ஒருவர் வருவதைப் பார்க்கிறார். அவர் காலில் செருப்பு அணிந்திருக்கவில்லை. வந்தவரை அறைக்குள் அழைத்து அமரச் செய்கிறார். முதல் முதலில் கதைசொல்லி தோழர் கே.யை அறிமுகம் செய்துகொள்கிறார். கதைசொல்லிக்கு தோழர் கே.யைப் பற்றி ஏற்கனவே நிறையத் தெரியும். தோழர் கே.யின் ஒரு நாவலையும் சில சிறுகதைகளையும் அவர் வாசித்திருக்கிறார். தோழர் கே.யை அடையாளம் கண்டு கொண்டு ”நீங்கள் தோழர் கே.தானே?” என்று கேட்கிறார் கதை சொல்லி. கம்யூனிச இயக்கத்திலிருந்து தான் விலகிப் பல ஆண்டுகள் ஆகியும் எல்லோரும் தன்னை அப்படித்தான் அழைக்கிறார்கள் என்று சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறார் தோழர் கே. அவர் சொல்லிவிட்டு உரக்கச் சிரிக்கிறார். அவரின் சிரிப்பு கதை சொல்லியை துணுக்குறச் செய்கிறது.
கதை சொல்லி தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். தானும் சிறுகதைகள் எழுதியிருப்பதாகவும், தோழர் கே.வின் திருமணத்தில் கோவையில் கலந்து கொண்டதாகவும், தோழர் கே.விற்கு கடிதங்கள் எழுதியிருப்பதாகவும் பேச்சு நீள்கிறது. கதையின் பெரும்பகுதி ஒரு வாசகன் தன்னுடைய ஆதர்ச எழுத்தாளரைக் கண்டு வியந்து பேசும் மனநிலையில் விரிகிறது. தோழர் கே.யுடன் இலக்கிய அரட்டை நடக்கிறது.
தோழர் கே. தனக்கும் மார்க்சியக் கட்சித் தோழர்களுக்கும் இருந்த நட்பினைப் பற்றி விவரிக்கிறார். “மார்க்சியத்தில் தன்னை ரொம்பவம் கவர்ந்தது அதன் தர்க்க நுட்பமும். பரந்த அணுகலும்தான். குறிப்பாக மார்க்சியத்தின் இயங்கியல் கோட்பாடு தன்னை ரொம்பவும் ஈடுபடவைத்து என்று தோழர் கே. விளக்குகிறார்.
தோழர் கே. மௌனமாக சிகரெட் புகைக்கிறார். மேலும் தன்னிலை விளக்கமாக “மனம் எப்போதும் உழைப்பில் பயனையே யாசிக்கிறது. உடலோ உழைப்பை அறவே மறுக்கிறது. மதிப்பீடுகள், நம்பிக்கைகள், செயல், லட்சியம் எல்லாவற்றையும் நான் கைவிட்டுவிட்டேன். இப்போது உலகத்தின் கண்களில் நான் ஒரு முறிந்து போன மனிதன். உண்மையில் என்னைப்போன்றே உள்ளுக்குள் எல்லோரும் முறிந்துதான் கிடக்கிறார்கள். ஆனால் அவர்கள் சாமர்த்தியசாலிகள். தங்கள் முறிவுகளை அவர்கள் மறைத்துக்கொண்டிருக்கிறார்கள். மிகையாகச் சிரிக்கிறார்கள். மிகையாக அழுகிறார்கள். நான் மட்டும் வெகுளியாகி எல்லோராலும் வெறுக்கப்படுகிறேன். என் மனைவி என்னை வெறுத்தாள். என் மகள் என்னை வெறுக்கிறாள். என் மகன் என்னை வெறுக்கிறான். என் சகோதரர்கள். உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். என் வயதான தாய்கூட என்னை வெறுக்கிறாள். இன்று திடிரென்று, ரொம்பவும் திடீரென்று எவருடைய அன்புக்கும் நான் தகுதியற்றவன் என்று உணர்த்தப்படுகிறேன். இது கொடுமையானது. வெறுக்கப்படுவதை விடவும் இது கொடூரமானது.
எனக்கு வியப்பற்றுப் போய்விட்டது எல்லாம். நான் குடிக்கிறேன்.வேசிகளிடம் போகிறேன். ஏன்? ஒரு கொலையைக் கூடச் செய்துவிட்டேன் என்று என் நண்பர்களே கூறுகிறார்கள். நான் குரூரமானவன் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அது உண்மையாகக்கூட இருக்கலாம். எனக்குத் தெரியாது. மனிதன் எப்போதும் குரூரத்திற்கும் அன்புக்கும் இடையே திகைத்துக்கொண்டே நிற்கிறான். ஒரு கொலையை, தற்கொலையை, சாவை, பெண்ணை, அவளது நிர்வாணத்தை, குழந்தையை, ஒரு மலரை எல்லாவற்றையும் அவனால் ஏற்கவும் ரசிக்கவும் முடிகிறது. மனிதன் தீயாலும் பனிக்கட்டியாலும் ஆனவனாக இருக்க வேண்டும். இந்தத் தீக்கும் பனிக்குமிடையே அறிவு வதைபட்டுப் பிளிறுகிறது.ஒன்றுக்குள் மற்றதை இழைத்து விடத் துடிக்கிறது. ஆனால் என்றுமே அதனால் அப்படிச் செய்ய முடிந்ததில்ல. அறிவின் இந்த தரகு அப்பதமானது. நல்லது கெட்டது என்ற மரபான இரு நிலைகளை முதலில் மறுப்பது போல் தோன்றினாலும் முடிவாக அவற்றிடமே சரணடைந்து சுருங்கிப் போகிறது. மேலும் மேலும் நுட்பமான சோகங்களை வருவித்துக்கொள்வதைத் தவிர வேறெதையும் அதனால் சாதிக்க முடியாது. இன்று என் நண்பர்களின்அறிவு இன்று என் கைகளுக்குச் செம்மை பூசி மகிழ்கிறது. நான் அவர்களை மறுக்க விரும்பவில்லை. நான் ரொம்பவும் சோர்ந்துவிட்டேன்.இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. இனி எனக்காக மரணம் மட்டுமே காத்திருக்கிறது. மனிதனுக்கு நிச்சயமானது மரணம் ஒன்றுதான்” என்று கூறியபடி தோழர் கே. நாற்காலியில் இருந்து சரிந்து தலையில் அமர்ந்து, தரையில் அ றைந்த படி அழுகிறார். கதை சொல்லி திகைத்துப்போய் அருகில் நிற்கிறார்.
கதைசொல்லி சிறிது நேரம் சமீபத்தில் தான் வாசித்த வேறு சில புத்தகங்களைப் பற்றி பேச வைக்கிறார். முடிவாக கிளம்புகிறார்கள். அப்போது தோழர் கே. மிகவும் தயங்கியபடி தன்னிடம் பணம் இல்லை என்றும் தனக்கு இருபத்தைந்து ரூபாய் தேவை என்றும் கதைசொல்லியிடம் கேட்கிறார். கதை சொல்லி தன் நிலையை விளக்குகிறார். மாதக் கடைசி என்பதால் தன்னிடமும் பணம் இல்லை என்கிறார். தோழர் கே. கதைசொல்லியின் முதலாளியைத் தனக்கு நன்கு தெரியும் என்றும், அவரின் கணக்கில் தனக்கு பணம் தருமாறு வற்புறுத்துகிறார். தோழர் கே.யின் பிடிவதம் கதை சொல்லிக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணுகிறது. தன்னுடைய நிலையில் தோழர் கே. இருந்தால் என்ன பண்ணுவார் என்று அவரிடமே திருப்பிக் கேட்கிறார். தன்னால் பணம் த ர முடியாது.வேண்டுமானால் தோழர் கே. அவருக்கு கணக்கு இருக்கும் மெஸ்ஸிசில் வந்து அன்று சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று அழைக்கிறார். தோழர் கே. பணம் தந்தால்தான் அங்கிருந்து நகர முடியும் என்று வீம்பு பிடிக்கிறார்.
கதை சொல்லி சன்னல் கதவுகளை சாத்திவிட்டு கிளம்புகிறார். தோழர் கே. முறைத்துப் பார்க்கிறார். “தாயோளி. இப்போ நீ பணம் தர்றயா இல்லையா? என்று கத்துகிறார். அதிர்ச்சி அடைந்த கதை சொல்லி “என்ன ஆகிவிட்டது உங்களுக்கு? ஏன் இப்படி பிதற்றுகிறீர்கள்.? நீங்கள் ரொம்பவும் அநாகரிமாக நடந்து கொள்கிறீர்கள். இவ்வாறு பேசினால் உங்களை வெளியே தள்ளுவேன்” என்று எச்சரிக்கிறார். தோழர் கே. அதைப் பொருட்படுத்தவில்லை. மீண்டும் அதே வசை. கதைசொல்லி அவரைக் கைபிடித்து வெளியே இழுக்கிறார். தோழர் கே. கதை சொல்லியின் கன்னத்தில் அறைகிறார்.கதை சொல்லியும் கோபம் அடைந்து தோழர் கே.யின் மார்பில் ஒரு குத்துவிடுகிறார். சண்டை நடந்துமுடிந்து கதை சொல்லி தோழர் கே.யை அறையை விட்டு வெளியே தள்ளிப் பூட்டுகிறார். காவலாளியை அழைத்து தோழர் கே.யை வெளியே அனுப்பக் கோருகிறார். தோழர் கே.அவராகவே எழுந்து படியிறங்கி வருகிறார். சட்டை கிழிந்து விடுகிறது.
வெளியே மழை பெய்கிறது. கதைசொல்லி உணவு விடுதிக்குச் சென்று சாப்பிடுகிறார். திரும்பினால் உணவு விடுதியின் வாசலில் தோழர் கே. நின்று கொண்டிருக்கிறார். கதைசொல்லியின் இரு கைகளையும் பிடித்தபடி “உன்னிடம் அப்படிப் பேசியதற்காக மன்னிப்புக் கேட்கிறேன். நான் போக வேண்டும், இரண்டு ரூபாய் தர முடியுமா? என்று கேட்கிறார். அப்போதே கதைசொல்லியின் முதல் சிறுகதைத் தொகுப்பு எப்போது வெளியாகிறது.அதை படிக்கத் தர முடியுமா என்றும் அக்கறை காட்டுகிறார். கதை சொல்லி சட்டைப்பையில் இருந்து இரண்டு ரூபாயைத் தேடி எடுத்து நீட்டுகிறார். நன்றி சொல்லி வாங்கிக்கொண்டு விடைபெறுகிறார் தோழர் கே. துாறிக்கொண்டிருந்த மழையில் தலையைக் குனிந்தபடி தோழர் கே. நடந்து சென்று இருளுக்குள் மறைகிறார். இரண்டு மாதங்கள் கழித்து தோழர் கே. இறந்துவிட்ட செய்தி கதைசொல்லியை வந்தடைகிறது. அப்போது அவர் அந்த இரவினை நினைவுப்படுத்திக்கொள்கிறார். தோழர் கே அழுததும், கோபத்துடன் கதைசொல்லியைத் தாக்கியதும். அவரிடம் இருந்து வீசிய நெடியையும் அவருடைய புன்னகையையும் மீண்டும் கதைசொல்லி மீட்டிப்பார்த்துக்கொள்கிறார். கதை முடிகிறது.

3.
சி.மோகன் எழுதிய விலகிய கால்கள் சிறுகதையில் புனைவம்சம் மிகக்குறைவு. கடைசி நாட்களில் ஜி.நாகராஜனை அருகில் இருந்து கவனித்துக்கொண்ட நணபர்களின் கோணத்தில் கதை சொல்லப்படுகிறது. சி.மோகன் ஜி.நாகராஜனின் கடைசிதினம் என்று அக்கதை நிகழ்ந்த நாளினை கட்டுரையாகவும் பதிவு செய்திருக்கிறார்.
ஜி.நாகராஜன் இறப்பதற்கு முன்தினம் கதை தொடங்குகிறது. சிகிச்சைக்காக ஜி.நாகராஜனை அழைத்துப்போக சிவராமனும் மோகன கிருஷ்ணனும் வண்டியில் வருகிறார்கள். அன்றைய நாளின் அதிகாலைக்கனவில் ஜி.நாகராஜனின் உடலை காகங்கள் கொத்திக் கிழிக்கின்றன. நண்பர் ஏற்பாட்டில் அந்த அறையில் அவர் தற்காலிகமாக தங்கியிருக்கிறார். கிழிந்த பாயும் பாயைச் சுற்றிச் சிதறிக்கிடக்கும் சார்மினார் சிகரெட்டுத்துண்டுகளும் விவரிக்கப்படுகின்றன.
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ரிக்ஷா கொண்டு வரப்படுகிறது. ரிக்ஷாக்காரருக்கு ஜி.நாகராஜனை நன்கு அறிமுகம் இருக்கிறது.“ சாமிய நல்லாத் தெரியுமே..ஏறிக்கங்க சாமி ” என்று ரிக்ஷாக்காரர் வண்டியை நிறுத்துகிறார். ஜி.நாகராஜனால் ஆட்டோவில் ஏற முடியவில்லை. நண்பர்கள் இருவரும் கைத்தாங்கலாக ஏற்றி விடுகிறார்கள். மருத்துவமனையில் சேர்த்து பரி சோதனைகள் நடக்கிறது. மருத்துவர் ஜி.நாகராஜனை அறிந்து வைத்திருக்கிறார். அவரின் சீரழிந்த நிலை அவரையும் வருத்தம் அடையச் செய்கிறது. சோதனை முடிவுகள் மறுநாள் காலை வரும் வரை சிகிச்சை ஒன்றும் அளிக்க முடியாது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சொல்கிறார்.
நண்பர்கள் இருவரும் ஜி.நாகராஜனைச் சுற்றி அமர்ந்து கொள்கிறார்கள். அப்போதும் ஜி.நாகராஜன் தீவரமாக பேசுகிறார். ஆஸ்பத்திரியில் ஏதும் அசம்பாவிதங்கள் செய்துவிட வேண்டாம் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். ஜி.நாகராஜனும் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக்கொள்கிறார். இரவில் வரும்போது கொண்டு வந்து தருவதாக நாகராஜன் தன் பயன்பாட்டிற்கு வைத்திருந்த சார்மினார் சிகரெட்டையும் கஞ்சாப் பொட்டலத்தையும் வாங்கிக்கொண்டு கிளம்புகிறார்கள்.
மாலையில் நண்பர்கள் இருவரும் திரும்பி வருகிறார்கள். டிரிப்ஸ் ஏற்றியதால் ஜி.நாகராஜன் தெம்பாக காணப்படுகிறார். அப்போதும் அவர் தீவிரமாக பேச ஆரம்பிக்கிறார்.
நம்பிக்கை என்பது தன்னளவில் போற்றுவதற்குரிய ஒன்றல்ல. மனித இன வரலாற்றில் நம்பிக்கையின் பேரால் நடந்திருக்கும் படுகொலைகள். வேறெந்த வகை மரணத்தை விடவும் அதிகம். மத நம்பிக்கையின் பேரால் நடந்து கொண்டிருக்கும் இஸ்ரெல்- அரபு நாடுகளுக்கிடையிலான யுத்தங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுந்தானே. யூதர்கள். கிறித்துவர்கள், முஸ்லிம்கள் என மும்மதத்து மக்களும் பல நுாற்றாண்டுகளாக இந்த நம்பிக்கையில் சிக்குகுண்டு மடிந்து கொண்டே இருக்கிறார்கள். மோசஸ், ஏசு, முகம்மது போன்ற இறைத்துாதர்களிடம் வெளிப்பட்ட ஞானத் தெறிப்புகளிலிருந்துதான் மதங்கள் உருவாகின. ஜெருசலேம் இம்மூன்று மதங்களின் புனித பூமியாக இருந்து கொண்டிருக்கிறது. இறுதித் தீர்ப்பு நாளுக்கான நிகழ்விடமாகவும் அது புனைவு பெற்றிருக்கிறது. வாழ்வை அல்ல மரணத்தை நினைவூட்டியபடி சலனம் கொள்ளும் நகரம் அது. இறுதித் தீர்ப்பு நாளை முன்னிறுத்தி இயங்கும் நகரம் அது. அதைக்கைப்பற்றி தனது சொந்தமாக்கிக்கொள்ள மதஙங்கள் மேற்கொள்ளும் வெறியாட்டத்தில் அந்நகரம் காலம் காலாக ஒரு படுகொலைக்களமாக இருந்து வருகிறது.யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படைவாதம் நம்காலத்தில் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது.” ஜி.நாகராஜனுக்கு மூச்சு வாங்கியது. இருமல் வந்தது. ஒரு கையால் நெஞ்சையும் மறுகையால் வயிற்றையும் பிடித்துக்கொண்டு இருமுகிறார். அவரை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு நண்பர்கள் இருவரும் கிளம்புகிறார்கள்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தால் அவரைப் படுக்கையில் காண முடியவில்லை. அருகில் இருந்த பிற நோயாளிகளின் உறவினர்கள் இவர்களைக் கடிந்து கொள்கிறார்கள். நேற்றிரவே அவர் இறந்து போன தகவலைக் சொல்கிறார்கள். பிணவறையில் கிடத்தப்பட்டிருந்த உடலைச் சென்று பார்க்கிறார்கள். ஜி.நாகராஜனின் மனைவியைத் தேடிச்சென்று தகவல் சொல்லி அழைத்து வருகிறார்கள்.மறுநாள் காலை ஏழுமணிக்கு மருத்துவமனையில் இருந்து நேரடியாக இடுகாட்டிற்கு ஜி.நாகராஜனின் உடல் கொண்டு செல்லப்பட்டு அவரின் உறவினர்களால் இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.
மகத்தான் எழத்தாளர் ஒருவரின் இறுதிச்சடங்கு நிகழ்ந்த விதத்தைக் கேட்டால் நெஞ்சம் பதறுகிறது. கதையை வாசித்து முடித்த போது என்னால் அழாமல் இருக்க முடியவில்லை.
இலக்கிய வாசிப்பு மனிதர்களை நல்வழிப்படுத்தும் என்பதெல்லாம் வெறும் கற்பனையா? ஏன் மகத்தான படைப்பாளிகளாக இருந்தும் ஜி.நாகராஜன், பிரமிள் போன்றவர்கள் மனிதர்களை தொடர்ந்து வதைப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். படைப்பிற்கும் படைப்பாளிக்கும் இடையே உள்ள பாரதுாரமான தொலைவு ஏன் இந்தளவிற்கு உள்ளது? ஒரு வாசகனாக நான் அடைந்த ஏமாற்றம் கொஞ்சமல்ல.
தமிழ் மொழி மீதான வெறி இன்றும் உரத்துக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. தமிழை நம்பி எழுதி உயிர் வா ழ முடியாத சூழல்தான் இன்றும் உள்ளது.
சாவும் அதை எதிர்கொள்ள மனிதன் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும்போதே வரும் என்று ஒருமுறை ஜி.நாகராஜன் சொன்னதாக சி.மோகன் எழுதியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதையும் அந்தக் கணத்திற்காக அர்ப்பணித்தவர்தான் ஜி.நாகராஜன் என்று இன்று எண்ணத் தோன்றுகிறது.
மறுபிரசுரம்.
நன்றி – இனிய உதயம் ஆகஸ்ட் 2026 இதழ்
