ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்க வேண்டும்? என்பது இலக்கிய விமர்சனத்தின் அடிப்படைத் தேடல்களில் ஒன்றாகும். இதற்கான ஒரே ஒரு நுண்ணிய செய்தி பிரதிகள் தயாரிப்பது ‘சொல்லிக்கொடுக்கக்கூடிய’ வடிவம் இல்லை, ஆனால் சிறுகதை என்ற கலைவடிவம் நன்கு செயல்பட, சில உள் நுணுக்கங்கள் அவசியம்.
ஒரு நல்ல சிறுகதை முதலில் சுருக்கமான ஒரு அனுபவத்தை முழுமையாகச் சொல்ல வேண்டும்.
அதாவது, சிறுகதை ஒரு பெரிய சம்பவத்தைப் பற்றி அல்ல ஒரு சிறிய நிகழ்வு, ஒரு நொடி, ஒரு உணர்ச்சி ஆனால் அந்த நொடியிலே ஒரு முழு வாழ்க்கையை உணர வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஒரு நல்ல சிறுகதை வாசகனை இது தான் வாழ்க்கை என்று நினைக்க வைக்காது, ஆனால் இதுவும் வாழ்க்கைதான் என்று உணர வைக்கும்.
மைய அனுபவம் (Core Experience):
ஒரு சிறுகதைக்கு ஒரு மைய உணர்வு இருக்க வேண்டும். அது ஒரு சம்பவமோ, ஒரு எண்ணமோ, ஒரு காட்சியோ, ஒரு நொடிப்போ எதுவாக இருந்தாலும் அது கதையின் உள்ளத்தைத் தாங்கும். அந்த மைய உணர்வைச் சுற்றியே கதை கட்டப்பட வேண்டும். சிறுகதை ஒரு ‘கதை சொல்லல்’ அல்ல அது ஒரு அனுபவத்தைச் சுருக்கி வடிக்கும் முயற்சி என நான் சொல்ல விரும்புகிறேன்.
குறைந்த சொற்களில் ஆழம்
நல்ல சிறுகதை அதிகமான விளக்கங்களால் அல்ல குறைவான சொற்களால் ஆழத்தை உருவாக்கும். சிறுகதை வாசகனை நிறுத்தாமல் சிந்திக்க வைக்கும். அதில் சொல்லப்படாதவை முக்கியமானவை. உண்மையில், சிறுகதை பேசும் அளவுக்கு மௌனமாக இருக்கவேண்டும். வாசகனின் மனம் கதையின் வெற்றிடங்களை நிரப்பும் இடமாக இருக்க வேண்டும்.
மொழி பொருள் அல்ல, உணர்ச்சி
சிறுகதையின் மொழி வெளிப்பாட்டுக்காக அல்ல அனுபவத்துக்காகச் செயல்பட வேண்டும். சொற்கள் காட்சிகளை மட்டும் உருவாக்காமல், மனநிலைகளையும் உருவாக்க வேண்டும். எளிமையான மொழி, ஆனால் அதில் யதார்த்தம் அல்லது மாயை இருக்க வேண்டும். மொழி வாசகனின் செவியில் ஒரு ஒலியை உருவாக்கும் அளவுக்கு நுணுக்கமாக இருக்க வேண்டும்.
பாத்திரங்கள் வாழும் மனிதர்கள்
ஒரு நல்ல சிறுகதையில் கதாபாத்திரங்கள் மனிதர்கள் போல இருக்க வேண்டும் சின்னங்களாக அல்லது கருத்துக்களாக அல்ல. அவர்களது உள் வலிமையும் பலவீனமும் இயல்பாகப் பிரதிபலிக்க வேண்டும். அவர்கள் பேசும்போது அது எழுத்தாளரின் குரல் அல்ல அவர்களது சொந்த குரல் போல இருக்க வேண்டும்.
கதை முடிவு திறந்த புதிய வாசலை வாசகனுக்கு தரவேண்டும்.
சிறுகதையின் முடிவு ஒரு விளக்கம் அல்ல ஒரு மாற்றம். வாசகன் அந்த முடிவுக்குப் பிறகும் சில நொடிகள் அந்த கதையின் உலகத்திலேயே தங்க வேண்டும். நல்ல சிறுகதை வாசித்த பிறகு ஒரு மெளன உணர்வு உண்டாகும் கதை முடிந்துவிட்டது என்கின்ற விடயத்திற்கு அப்பால் கதை இன்னும் தொடர்கிறது என்ற உணர்வை வாசகனுக்கு தரவேண்டும்.
சிறுகதை ஒரு பழக்கமான விஷயத்தை புதிதாகக் காட்ட வேண்டும். நம்மால் அன்றாடம் பார்த்து மறந்து போன ஒரு சிறு சம்பவத்தை அதிசயமாக உணர வைக்கும் திறன் அதில் இருக்க வேண்டும். ஒரு நல்ல கதை, நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயத்தை ஒரு புதிய பார்வையில் காட்டும்.
சிறுகதையின் உண்மை அதன் நிகழ்வுகளில் இல்லை அதன் உணர்வில் உள்ளது. கதை கற்பனையாக இருந்தாலும் அதன் உள்ளே மனித மனத்தின் உண்மையான நடத்தை அல்லது மாயை இருக்க வேண்டும். வாசகன் இது நடந்திருக்கலாம் என்று உணர்ந்தால் அது சிறுகதை வெற்றியடைந்தது என்பதற்கான அடையாளம்.
சிறுகதை என்பது கட்டமைப்பும் (form) அமைதியும் இணைந்த கலை. அது ஒரே நேரத்தில் வடிவமைக்கப்பட்டதும் இயல்பாக ஓடியதும் போல இருக்க வேண்டும். ஒரு நல்ல கதை எப்போதும் அமைதியாக முடிகிறது, ஆனால் அந்த அமைதியில் ஓர் ஆழ்ந்த அலை வாசகனுக்குள் ஒலிக்கிறது.
ஙதை சொல்லி கதையின் பின்னணியில் மறைந்திருக்க வேண்டும். கதைதான் பேச வேண்டும். கதை சொல்லி நம்மிடம் கருத்துரையிடக்கூடாது கதையின் மொழியே கருத்தை வெளிப்படுத்த வேண்டும்.
நல்ல சிறுகதை வாசகனுக்கு ஒரு பகுதியை வழங்கும். வாசகன் அந்தக் கதையை முடித்து வைப்பான் தனது நினைவுகள், அனுபவங்கள், உணர்வுகள் வழியாக. சிறுகதை வாசிக்கும் போது வாசகன் கதை சொல்லியுடன் இணைந்து உருவாக்கும் அனுபவமே ஒரு நல்ல கதைக்கான அடையாளமாகும்
குறிப்பாக சிறுகதை என்பது ஒரு நொடியின் உள் அதிர்வை முழு வாழ்க்கையின் பிரதிநிதியாக மாற்றும் கலை.
அது வாசகனை வெளி உலகத்திலிருந்து உள் உலகத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு சிறிய ஆனால் ஆழமான பயணம் என்பது எனது புரிதல்.
டீன் கபூரின் சிறுகதைகள் வாசகனுக்கு ஒரு உள் தேடலை உருவாக்கும் வகையில் நிம்மதியாகவும் மெல்லிய பிம்பங்களாகவும் இயங்குகின்றன. அவை வாசகனிடம் எந்த பெரிய கதைக் கட்டமைப்பையும் வற்புறுத்துவதில்லை மாறாக ஒரு உள் அனுபவத்தை, மனத்தின் நிழலை, நினைவின் ஒசையைக் கேட்கும் நிலையை உருவாக்குகின்றன. அவரது கதைகள் வெளிப்புறச் சம்பவங்களைச் சொல்லுவதில்லை. அவை வெளியில் நடந்தவற்றைப் பற்றி அல்ல, உள்ளே நடந்தவற்றைப் பற்றியே பேசுகின்றன. இதில் சத்தம், காற்று, மழை, மரம், நதி போன்ற இயற்கைச் சின்னங்கள் மனித மனத்தின் இடமாகவும், அதில் எழும் ஆழ்ந்த கேள்விகளின் பிரதிபலிப்பாகவும் செயல்படுகின்றன. கபூரின் கதைகள் நவீன தமிழ் சிறுகதையின் ஒரு புதிய திசையை வெளிப்படுத்துகின்றன. அவை பரபரப்போ, வியப்போ இல்லாத ஒரு மெல்லிய காட்சித் தொடராகத் தோன்றினாலும், அந்த தயாரிப்பில் தான் ஒரு வாழ்வின் உண்மையான புலம் திகழ்கிறது.
டீன் கபூரின் பல கதைகளும் ஒரே உள்மையைக் கொண்டவை. அவற்றின் குரல் தனிமையும், நினைவுகளும், பார்வையுமாக இணைந்த ஒன்று. வாழ்க்கையின் எளிய தருணங்களை, அதில் மறைந்திருக்கும் மனநிலைகளையும், ஒரு தத்துவம் போல கபூர் வாசகனின் மனத்தில் வாழ்வியல் சூழலை தயாரித்திருக்கிறார். அவருடைய கதைகள் நேரத்தைப் பற்றி பேசும்போது, அது கடிகார நேரமல்ல அது உணர்ச்சி நேரம் ஒரு நினைவு எழுந்து மறையும் நேரம், ஒரு குரல் வந்து கரையும் நேரம். இதனால் கதைகள் மெதுவாகச் சிந்திக்க வைக்கும் ஒரு மனப்பயணமாக மாறுகின்றன.
கபூர் தனது கதைகளில் மனிதனின் உள் உலகை வெளிப்படுத்தும்போது அதனை வெளியில் இருந்து விளக்கவில்லை. அவன் எப்போதும் வாசகனை அந்த உலகுக்குள் நுழையவைக்கிறார். ஒரு காற்றின் ஓசை, ஒரு குளவிக்கூடு, ஒரு மழைநேரம், ஒரு குடம் போன்ற பொருட்கள் அவரிடம் சின்னங்கள் அல்ல அவை நினைவுகளின் உயிராக்கங்களாகவே தோன்றுகின்றன. இந்த சின்னங்கள் மனிதனின் உணர்வுகளுக்குள் நுழைந்து அவனது தனிமையையும் தேடலையும் வெளிப்படுத்துகின்றன.
இந்தக் கதைகளின் வாழ்வியல் சிந்தனை ஒரு மையக் கோட்டில் இயங்குகிறது. வாழ்வின் பொருள் வெளியில் இல்லாமல் உள்ளே இருக்கிறது. உலகம் எதையும் அளிக்கவில்லை என்றாலும், மனம் அந்த வெறுமையை ஒரு ஒலியாக, ஒரு நினைவாக மாற்றும் திறனைக் கொண்டது என்பதே இந்தக் கதைகளின் அடிப்படை நம்பிக்கை .
டீன் கபூரின் கதைகள் மனிதனின் அமைதியான விரக்தியை, அவனது தனிமையை, அவனது இயற்கையுடன் உள்ள நெருங்கிய உறவை வெளிப்படுத்துகின்றன. அந்த உறவு வெறும் வெளி இயற்கையோடு அல்ல, அவனது நினைவுகளுடனும் அவனது உள் குரலுடனும் உள்ளது. இதுவே கபூரின் நவீன வாழ்வியல் அரசியலாகும் மனிதன் தான் கேட்க மறந்த குரலை மீண்டும் கேட்பதற்கான முயற்சி என சொல்ல முடியும்.
காற்றில் கரைந்த நதியின் ஓசை என்ற கதை மனத்தின் உள் தேடலை நதியின் ஒசை வழியாகச் சொல்லுகிறது. சூரியன் என்ற மனிதன் நதியைப் பார்க்கவில்லை, கேட்கிறான். அதாவது, கபூர் நதியை ஒரு வெளிப்பொருளாக அல்ல, மனதின் ஓர் குரலாக மாற்றுகிறார். அந்த நதி நினைவின் வடிவம், மறந்த வாழ்க்கையின் பிரதிநிதி. அவன் கேட்கும் ஒசை உண்மையில் அவனுடைய உள்ளத்தில் மறைந்து கிடக்கும் நினைவுகள் தானாகும். அவன் அந்த நதியைத் தேடிக்கொண்டே இருக்கிறான் ஆனால் அது எப்போதும் காற்றில் கரைந்து போகிறது. இது மனிதனின் ஆன்மீக தேடலின் ஒரு உவமையாகும். நாம் அடைய நினைப்பது எப்போதும் ஒரு காற்றின் இசையாய் நம்மிடமிருந்து விலகிக் கொண்டே இருக்கும். இந்தக் கதை ஒரு நேர்மையான வாழ்க்கை காட்சியைச் சொல்லவில்லை, மாறாக ‘இல்லை’ என்பதிலேயே ‘அமைதியை’த் தேடும் மனத்தின் இயக்கத்தைப் பேசுகிறது.
இறுதிப் பக்கம் என்ற சிறுகதை வாசிப்பும் எழுதுதலும் ஒரே அனுபவம் என்பதைச் சொல்கிறது. ஒரு பெண் தனது வலிகளை நினைத்து ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, அவள் அதனுள் தன்னைப் பிரதிபலிக்கிறாள். புத்தகமும் அவளும் ஒரே பக்கம் ஆகின்றனர். “நான் உன்னை வாசித்தேன், நீயும் என்னை வாசித்தாயா?” என்ற இரண்டு வரிகள் இந்தக் கதையின் முழுச் சாரம். இது வாசிப்பின் அனுபவத்தைப் பற்றிய ஒரு தத்துவக் கேள்வி நாம் வாசிக்கும் போது, புத்தகம் நம்மை வாசிக்கிறதா? இந்தச் சிறுகதை மனிதனின் சுயம் மற்றும் உரை இடையே நிகழும் பரஸ்பரக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. அதேசமயம், இது ஒரு பெண்ணின் மனநிலையின் மென்மையான விளக்கம் அவள் எழுதத் தொடங்கும்போது அவள் தன்னுடைய வலிகளைப் புதிதாய் உருவாக்குகிறாள். கபூரின் கவிதை நயத்துடன் கூடிய மொழி இந்தக் கதையை ஒரு மெளன உரையாடலாக மாற்றுகிறது.
கவிதைகளைக் குடிக்கும் காகம் என்பது கபூரின் படைப்பாற்றல் கண்ணோட்டத்தின் உச்சம். இது ஒரு காகத்தின் கதையாய் தொடங்கினாலும், அதன் உள்ளே மனிதனின் கலைநோக்கம் மறைந்து கிடக்கிறது. தண்ணீருக்காக துடிக்கும் காகம், கற்கள் வீசாமல் கவிதைகளை வீசுகிறது. அவற்றின் வழியாக நீர் உயர்கிறது. இது மனிதனின் படைப்பாற்றல் உயிர் தரும் சக்தியைப் பேசும் ஒரு புதுமையான உவமை. கவிதை தண்ணீராக மாறுகிறது சொற்கள் உயிர் கொடுக்கின்றன. இது கலைக்கும் வாழ்வுக்கும் இடையே உள்ள நெருங்கிய உறவைப் பிரதிபலிக்கிறது. கபூர் இங்கே நவீன உலகில் சமூக ஊடகங்கள் கலைக்கு வழங்கும் புதிய முகத்தைப் பற்றிய நையாண்டியையும் சிந்தனையையும் இணைத்துள்ளார். காகம் தனது கவிதைகளை பகிரும் போது, அது மனிதனின் எழுத்து மீதான வினோதமான நம்பிக்கையையும், புனிதத்தையும் சுட்டுகிறது.
அந்த இரவில் நாங்கள் ஒன்பது பேர் என்பது கபூரின் சமூக மற்றும் உணர்ச்சி உலகத்தை ஒருங்கிணைக்கும் சிறுகதை. மழை, இருள், மின்னல், குழந்தைகள், உம்மா இவை அனைத்தும் ஒரே குடும்ப நினைவின் பிம்பங்களாகக் கதைநடையில் ஒளிர்கின்றன. மழை என்பது இங்கே ஒரு இயற்கை நிகழ்வு மட்டுமல்ல அது குடும்பத்தின் உணர்வுகளைக் கலக்கி விடும் ஒரு நினைவுக் காற்று. மின்னலின் ஒளி ஒரு நொடி உலகை வெளிச்சம் கொடுக்கிறது அந்த வெளிச்சத்தில் நாம் அனைவரும் ஒரே குடும்பம், ஒரே நினைவு என்று உணர்த்துகிறது. பின்னர் இருள் மீண்டும் வந்து நம்மை மறைக்கிறது. இது மனித வாழ்வின் சுழற்சி வெளிச்சம் மற்றும் இருள் மாறி வரும். உம்மாவின் குரல் “நாளையும் மழைதான்” என்று சொல்லும்போது அது ஒரு எளிய வாக்கியம் அல்ல அது நிலைத்த வாழ்வின் நம்பிக்கையைச் சொல்கிறது. இக்கதையின் வலிமை அதன் மொழியிலும் அதன் மெல்லிய நெருக்கத்திலும் இருக்கிறது.
கூடு கலைந்த பின்னரும் என்ற கதை மனிதனும் இயற்கையும் இடையிலான உறவை வெளிப்படுத்துகிறது. ஒரு மரத்தில் குளவிக்கூடு உருவாகி, அதை மனிதன் ஒரு பிம்பமாகக் காண்கிறான். ஆரம்பத்தில் அந்தக் கூடு பயத்தை உண்டாக்குகிறது பின்னர் அது ஒரு உயிர்வாழும் சின்னமாக மாறுகிறது. ஆனால் ஒரு நாள் அது காலியாகி விடுகிறது. கபூர் இங்கே ஒரு மிகச் சின்ன நிகழ்வை எடுத்துக் கொண்டு அதில் உள்ள மனவியல் ஆழத்தை வெளிப்படுத்துகிறார். அந்த கூடு மனிதனின் வாழ்க்கையே அது பெரிதாக வளர்ந்து ஒரு கட்டத்தில் வெறுமையாய் மாறுகிறது. ஆனால் அந்த வெறுமை ஒரு மர்மம் கொண்டது. குளவிகள் இல்லாவிட்டாலும் கூடின் உருவம் மனத்தில் நிலைத்து நிற்கிறது. இது மனிதனின் நினைவின் இயல்பை வெளிப்படுத்தும் ஒரு மெல்லிய கதை.
கதைகளின் மையத்தில் கபூரின் வாழ்வியல் சிந்தனை தான் நிற்கிறது. வாழ்க்கை என்பது நிகழ்வுகளின் தொடரல்ல அது ஒலிகளின், நிழல்களின், காற்றின் இயக்கம். மனிதன் வாழ்வின் அர்த்தத்தைச் சொல்ல முடியாதபோது, அவன் கேட்க ஆரம்பிக்கிறான். கபூரின் கதைகள் அந்தக் கேட்கும் நிலையை உருவாக்குகின்றன. அவன் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அமைதியில் வாழ்கின்றனர் ஆனால் அந்த அமைதி ஒரு ஆழமான பேச்சு. அவர்கள் வெளியில் பேசுவதில்லை ஆனால் அவர்களின் உள்ளே எண்ணற்ற உரைகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இது தான் கபூரின் கதைப்பாணியின் மைய நுண்ணிய அரசியல். வெளிப்படையாகப் பேசாமல் உள் குரல்களை உயிர்ப்பிப்பது அதுவே அவரது எழுத்தின் உழைப்பு.
இந்தக் கதைகள் தமிழ் சிறுகதையின் புதிய திசையை உருவாக்குகின்றன. அவற்றில் வெளி சம்பவங்களைக் காட்டிலும் உள் அனுபவம் முக்கியம். அவற்றின் அரசியல் வெளிப்படையான கருத்துரைகள் அல்ல, அனுபவத்தின் உரிமையை மீட்டெடுக்கும் அரசியல். மனிதன் தனிமையில் இருந்தாலும் அவன் இன்னும் உலகத்தை உணர முடியும் நினைவுகளிலும் ஒசைகளிலும் அவன் வாழ்க்கையைப் புதிதாய் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையே இந்தக் கதைகளின் அடிப்படைச் சாரம்.
இதனால், டீன் கபூரின் இச்சிறுகதைகள் ஒவ்வொன்றும் தனித்தனியான நாவு கொண்டிருந்தாலும், அவை ஒன்றாகச் சேரும்போது ஒரு பெரிய உள் உலகத்தை உருவாக்குகின்றன. அந்த உலகம் வெளியில் காணப்படும் ஒன்றல்ல அது நம் செவிகளில் ஒலிக்கும் காற்றின் நதிபோல் நம்முள் கரைந்திருக்கிறது. டீன் கபூரின் சொற்களின் மெல்லிய சலசலப்பில் மனித வாழ்க்கையின் உள் பிம்பம் நிதர்சனமாக அசைகிறது.
