சென்னை புத்தகத் திருவிழா -2023 – 6.ஜோல்னா பை – சி. சரவணகார்த்திகேயன்

 

இப்புத்தகத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளும் குறிப்பிட்ட படைப்பு, படைப்பாளியின் குறுக்குவெட்டுச் சித்திரத்தைத் நமக்கு அளிக்கிறது . இப்புத்தகத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளுக்கும் ஒரு உருவ ஒற்றுமை உள்ளது . ஒரு படைப்பை எடுத்துக்கொண்டு அதை தனது ரசனையின் மதிப்பீட்டில் ஆசிரியர் மதிப்பிடுகிறார் , அதன் பின் தர்க்கரீதியான வரையறுப்புக்கு உள்ளாக்குகிறார்.

முதல் கட்டுரை ஆசிரியர் ஜெயமோகனுக்கு ஏன் ஞானபீடம் தர வேண்டும் என்பதை குறித்தது,அதை அவர் எடுத்துரைக்கும் இந்த கட்டுரையை மொழி பெயர்த்து விருது வழங்குங்குபவர்களுக்கு அனுப்பினாலே போதும் என்ற அளவுக்கு விளக்கங்களும் ,நியாயங்களும் முன்வைக்கப்படுகிறது.

இரண்டாவது கட்டுரை ஆசிரியர் ஜெயமோகன் எழுதிய வெற்றி சிறுகதையை முன்வைத்து , இந்த நூலில் அவர் எடுத்துக்கொண்ட படைப்புகளில் அனைத்தும் நாவல்கள், அதை அவர் விரிவாக எடுத்துரைப்பது போல ஒரு சிறுகதையையும் அலசி ஆராய்ந்து வாசகனின் எல்லையை நமக்கு சுட்டி காட்டுகிறார். இந்த கதையின் உண்மையான வெற்றி எது என்பதையும்,லதா என்ற பெண் எப்படி ஒட்டுமொத்த பெண்களின் பிரதிபலிப்பாக திகழ்கிறாள் என்பதையும் எடுத்துரைக்கிறார் .இந்த கட்டுரை ஜெ தளத்திலும் பிரசுரமாகியுள்ளது.

பெருமாள் முருகனின் ஒரு தொடர் நாவலான மாதொருபாகன் ,ஆலவாயான் ,அர்த்தநாரி மற்றும் சமகால நிகழ்வுகளை வைத்து அவர் புனைந்த பூக்குழி நாவலின் விமர்சனக்குறிப்பும் நன்றாக இருந்தன.நான் மாதொருபாகனை மட்டுமே வாசித்திருந்தாலும் மூன்று தொடர் நாவல்களின் உள்ளடக்கத்தையும்  தெளிவாக எடுத்துரைத்து அதன் பேசுபொருள் என்ன , அதில் ஆசிரியர் கூற வருவது என்ன என்பதை தெளிவாக விளக்கியுள்ளார். பூக்குழி நாவலுக்கும்  சமகால சம்பவங்களுக்கும் உண்டான தொடர்பை எடுத்துரைத்துள்ளார் .

கலைஞரின் படைப்புலகத்தை பற்றிய கட்டுரைகளும் அவரின் படைப்புக்களை பற்றிய என்னுடைய அபிமானத்தை மாற்றின, நான் அவரை வெகுஜன எழுத்தாளர் என்ற வகையில் நினைத்திருந்தேன் , ஆனால் இந்த கட்டுரையில் அவர் கொடுத்திருக்கும் சில உதாரணங்களை வைத்து அவர் எப்படி வெகுஜன எழுத்தாளர்களில் இருந்து வேறுபடுகிறார் என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறார்,அவரை வாசிக்க தூண்டுகிறார்.

வெகுஜன எழுத்தாளர்களான ரமணி சந்திரன் மற்றும் ராஜேஷ்குமார் படைப்புக்களை பற்றிய கட்டுரைகள் அவர்களுக்கு தீவிர இலக்கியத்தில் ஏன் இடம் கிடையாது என்பதையும் ,அவர்களுடைய எழுத்தில் உள்ள போதாமைகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இறுதி கட்டுரையில் ஷான் எழுதிய வெட்டாட்டம் நாவல் வெகுஜன எழுத்தில் இப்போது இருக்கும் வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புகிறது என்றும் ,ஷான் எவ்வாறு ரமணி சந்திரன் மற்றும் ராஜேஷ்குமார் போன்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார் என்றும் எடுத்துரைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *