சென்னை புத்தகத் திருவிழா 2023-7. ஓநாய் குலச்சின்னம்-ஜியாங் ரோங்

ஓநாய் குலச்சின்னம் – ஜியாங் ரோங்

ஒரு மனிதன் அல்லது இனம், சரணடைவதற்கு முன்பாக மரணத்தை தேர்வு செய்யும் ஆன்ம பலத்தைக் கொண்டிருக்காவிட்டால், அடிமையாவது தான் தவிர்க்கமுடியாத விளைவாக இருக்கும். ஓநாய்களின் தற்கொலையெனும் ஆன்மபலத்தை முன்மாதிரியாக கொள்ளும் எவரும் ஆளுமைமிக்க நாயகனாகலாம், பாடல்களாலும் கண்ணீராலும் அவனது புகழ் பாடப்படும்.

நாவலிலிருந்து

சிருஷ்டி எதையும் குறைவாகவோ வீணாகவோ படைக்கவில்லை ஒவ்வொரு அணுவும் அதனதன் தகுதியில் பணியில் தத்ரூபமாக நியமிக்கப்பட்டிருக்கின்றன, நம்மை சுற்றியுள்ள அனைத்தும் ஒரு வகை ஒழுங்குமுறையால் பேணப்படுகின்றன ஏன் நம்முடைய உடல் உள்ளுறுப்புகள் கூட நமது விருப்பத்தில் இயங்காமல் இயற்கைக்கு கட்டுப்பட்டு நடக்கின்றன. உடல் இயக்கத்தின் சமநிலை குலைக்கப்படும்பொழுது நோய் உண்டாகிறது, அதேபோல நம் சுற்றுச்சூழலில் உண்டாகும் சமநிலையின்மை இயற்கை சீற்றங்களை கொண்டுவருகின்றன அதிகப்படியான கடல்சீற்றங்கள் கடலுக்குள் நாம் அனுப்பும் கழிவுகளாலும், புயல்கள் காற்றை சுத்தப்படுத்துவதற்காக மாசு அதிகம் உள்ள இடங்களிலும் தோன்றுவதுபோல தன்னை சமநிலையில் வைத்துக்கொள்ள இயற்கை தனக்கென்று தனித்துவமான வழியை மேற்கொள்கிறது. இந்த பேரியக்கத்தை வெறும் வறட்டு தர்க்கத்தின் மூலமாக அறிந்து கொள்வது இயலாது, அதற்கு தேவை உள்ளுணர்வும் கற்பனையும் கடைசியாக இவற்றை இணைக்கும் சரடாக உள்ள தர்க்கமும் அவசியமாகும். பழங்குடி மக்களின் வாழ்வு இயற்கைக்கு பணிந்து வாழும் வாழ்வாக இருந்ததால் இயற்கை அவர்களுக்கு தன்னை தன்னுடைய இரகசியங்களை வெளிப்படுத்தியது, அதைக்கொண்டு இசைவுடன் வாழ்ந்த பல்வேறு பழங்குடி மக்களின் மரபில் மேய்ச்சல் இன நாடோடி வாழ்க்கையை அவர்களது பாதுகாவலர்களான ஒநாய்களை பற்றிய கதை தான் ஒநாய்குலச்சின்னம்.

இன்றைய சீனாவை உருவாக்கிய மாவோ என்னும் கம்யூனிசபுரட்சிக்காரர் கன்பூசியஸின் வழியான ஒன்றுபட்டகலாச்சாரத்தை அதாவது முழுநாட்டுக்குமான ஒரே கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக சீனா முழுவதுமுள்ள மக்களின் பழக்கவழக்கங்களை, வாழ்க்கைமுறைகளை, நம்பிக்கைகளை உடைத்தெறியமுற்பட்டார், இதற்காக 1966ல் கலாசாரப்புரட்சி என்ற பெயரில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கையை நிறுவினார், இதை எதிர்க்கும் அனைவரையும் சாகும் வரை அடித்துக்கொன்றும் சிறையில் அடைத்தும் தனது கொள்கையை நிலைநாட்ட முயற்சித்தார், இதனால் ஏற்பட்ட உள்நாட்டு கலவரங்களில் கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள் மேலும் பலர் நிரந்தரமான உடல் ஊனத்திற்காளானார்கள். கொல்லப்பட்டவர்கள் கணக்கே லட்சத்திற்கு மேலே போகிறதென்றால் இந்த கொள்கையை எதிர்த்து குரல்கொடுத்தவர்கள் எண்ணிக்கையை நினைத்துப்பாருங்கள். இந்த சர்வாதிகார ஒடுக்குமுறையினால் அதிகம் பாதிக்கப்பட்டது சிறுபான்மையினர்தான் அவர்களது ஞானங்கள் நம்பிக்கைகள் மூடபழக்கங்கள் என முத்திரையிடப்பட்டு சிதைக்கப்பட்டன.

தன்னுடைய புரட்சி கையைமீறிச் செல்வதை உணர்ந்த மாவோ புதிய திட்டங்களை வகுத்தார் அதன்படி நகரங்களிலிருக்கும் அனைத்து மாணவர்களையும் நாட்டுப் புறங்களுக்கு சென்று வெவ்வேறு பழங்குடி மக்களிடமும் வெவ்வேறு நிலங்களிலும் சென்று தங்கி அவர்களின் வாழ்க்கையை கற்றுக்கொள்ளுமாறு அனுப்ப்பட்டனர். அதுவரை அந்த மாணவர்களுக்கு மாவோ போதித்ததெல்லாம் “பழைய பழக்கங்களை பழைய வாழ்க்கை முறையை பழைய கலாச்சாரத்தை பழைய சிந்தனையை” ஒழிப்போம் என்பதே,  இதன்மூலம் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம் உருவாகும் பின்னர் படிப்படியாக மையப்படுத்தப்பட்ட கலாச்சாரம் உருவாகும் என்பதே அவரது திட்டம் இதனால் மிக எளிதாக மாவோவால் சர்வாதிகாரத்தை நிலைநாட்டமுடிந்தது. இவ்வாறு மேய்ச்சல் நிலத்தை பற்றி அறிந்துகொள்ள மேய்ச்சல் நில மக்களுடன் தங்கி நாடோடி வாழ்க்கையை வாழ்வதற்காக அங்கு அனுப்பப்படும் ஜியாங் ரோங், தான் அங்கு கற்றுக்கொண்டதை ஓநாய் குலச்சின்னமாக பதிவு செய்திருக்கிறார்.

மேய்ச்சல் நிலமக்கள் நாடோடிகளாய் வாழும் மங்கோலிய இனத்தவர்கள், அவர்களுடைய வாழ்வு இயற்கைக்கு பணிந்து வாழும் வாழ்க்கை முறையாக இருக்கிறது டெஞ்ஞர் எனும் இயற்கை தெய்வத்தால் மேய்ச்சல் நிலம் காக்கப்படுவதாக நம்பிக்கை கொண்டவர்கள். ஜென்சென் அங்கு தங்கி வாழும் ஒவ்வொரு நாளும் மங்கோலிய வாழ்க்கை முறைகளினால் ஈர்க்கப்படுகிறான் மேய்ச்சல் நிலத்தைப்பற்றியும் ஒநாய்களைப்பற்றியும் முதியவர் பில்ஜி மூலமாகவும் அவரது குடும்பத்தினர் மூலமாகவும் அறிந்துகொள்கிறான், ஒநாய்களை கெட்டசகுணமாகவும் தீயசக்தியாகவும் நினைக்கும் ஹேன் சீன விவசாய நாகரிகத்தில் பிறந்து வளர்ந்த ஜென்சென் ஓநாய்களின் பண்புகளால் வசியத்திற்குள்ளாகிறான், வேட்டைகளில் ஒநாய்களை பற்றி பல விஷயங்களை அறிந்துகொள்ளும் அவன் ஒரு ஒநாய்குட்டியை வளர்த்து அதன்மூலம் மேலும் ஒநாய்களின் வாழ்க்கையை தெரிந்துகொள்ள முயற்சிக்கிறான் இதன் பொருட்டு அவனுக்கு மேய்ச்சல் நிலம் அளிக்கும் ஞானமே இந்த புதினம்.

விவசாய நிலத்தவர்களான சீனர்களால் மேய்ச்சல் நிலத்தை புரிந்துகொள்ள முடியாமல் அவர்கள் அதிகப்படியான ஆட்டிறைச்சிக்காகவும் தோல்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் மேய்ச்சல் நிலத்தையே காவுவாங்க்கப்பார்க்கிறார்கள், முன்னர் மேய்ச்சல் நிலமக்களுக்காக மட்டும் உணவு, தோல் முதலியவற்றை அளித்துவந்த மேய்ச்சல் இனம் தற்போது கலாச்சாரப்புரட்சியால் மொத்த சீனாவிற்க்கும் இறைச்சியையும் தோலையும் உற்பத்தி செய்வதற்காக உந்தப்படுகிறது, ஒநாய்கள் சீன இராணுவத்தினரால் பெருமளவில் வேட்டையாடப்படுகின்றனஇதனால் உணவுச்சங்கிலியில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்து மேய்ச்சல் நிலமே அழியத்துவங்குகிறது. புல்லை அதிகமாக மான்களோ, மர்மோட்டுகளொ, குதிரைகளோ தின்றுவிடாமல் ஒநாய்கள் அவ்வப்போது அவைகளை வேட்டையாடி உணவுசங்கிலியில் சமநிலையை பேணிவந்தது, இதனால் புல்லை அதிகப்படியாக இழக்காமல் மேய்ச்சல் நிலம் பாதுகாக்கப்பட்டது, பில்ஜி சொல்வது போல “இங்கு புல் தான் பெரிய உயிர் மற்றவை எல்லாம் சிறிய உயிர்கள், அனைத்து உயிர்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு பெரிய உயிரையே சார்ந்திருக்கின்றன இதனால் ஒரே இடத்தில் தங்கள் ஆடுகளை குதிரைகளை மேய்த்து அந்நிலத்திலுள்ள புற்களை அதிகப்படியாக அழித்துவிடாமல் நாடோடிகளாக ஒவ்வொரு பருவத்திலும் தங்களது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு மங்கோலியர் வாழ்கிறார்கள், இங்கு புல்தான் பிரதான உயிர் என்ற கோட்பாட்டினால் மனிதர்களும் ஒநாய்களும் அவற்றை சார்ந்து வாழ்வதால் இயற்கை சமநிலையில் இருந்துகொண்டிருந்தது, ஆனால் மாவோவின் “மனிதனே பிரதானம்” என்ற புதிய கொள்கையால் மொத்த மேய்ச்சல் நிலமும் புல்லை இழந்து பாலைவனமாக மாறத்துவங்கியது.

ஒநாய்கள் தான் மங்கோலிய இனத்தின் பாதுகாவலன் என பில்ஜி கூறுகிறார், அவர்களுடைய குதிரைகள் ஒநாய்களுடன் சண்டைபோடும் அளவிற்கு தீரமாக இருப்பதற்கு காரணம் பல வருடங்களாக அவை ஒநாய்களுடன் சண்டையிட்டதன் விளைவே, வேட்டைநாய்களை பயிற்றுவிப்பது எப்படி தங்கள் மந்த்தையை ஒநாய்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்வது என ஒநாய்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். மங்கோலிய இனத்தவர்க்கு எப்படி வேட்டையாடுவதென கற்பித்ததே ஒநாய்கள்தான் மேலும் அவை வானிலை, நிலவியல், சந்தர்ப்பம் பனிக்காலத்திற்காக உணவை எப்படி சேமிப்பது, எப்படி ஒரு யுத்தத்தை துவங்குவது, அவற்றினுடைய மற்றும் எதிரியினுடைய பலம் பலவீனம், கொரில்லா தாக்குதல், பதுங்கியிருந்து தாக்குதல், மின்னல்வேகத்தில் தாக்குதல், தற்கொலைத்தாக்குதல், நீண்டதூரம் தாக்குதல், தந்திரங்கள், இராணுவ உபாயங்கள் மேலும் எதிரியை கொல்வதற்காக தனது முழுபலத்தை சார்ந்திருப்பது என அவை பெரிய யுத்தப்பாடத்தையே கற்பிக்கின்றன. இதைக்கொண்டே சன் ட்சூ தனது போர்வியூகங்களை வகுத்தார், ஜெங்கிஸ்கான் ஒநாய்களிடமிருந்து பெற்ற இந்த போர்ஞானத்தால் மொத்த மங்கோலியாவையும் சீனாவையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார், ஒநாய்குலச்சின்னம் என்பது மேய்ச்சல் நிலத்தின் ஆன்மாவாகும் அதுவே மேய்ச்சல் நிலமக்களின் சுதந்திரமான எதற்கும் பணிந்துபோகாத உத்வேகத்தின் குறியீடு என பில்ஜி ஜென்சென்னிற்கு போதிக்கிறார், ஒநாய்கள் எதற்கும் பணிந்து போகாததற்கு காரணம் கருணையற்ற சூழ்நிலையானது தகுதியற்றவற்றை களைந்தெரிந்துவிடும் என்பதுதான். கலாச்சார ரீதியாக மங்கோலிய இனம் பிற்படுத்தப்பட்டிருப்பதால் அவர்களை பற்றி எந்த சீனனுக்கும் எதுவும் தெரிவதில்லை அவர்களை பற்றி எந்த புத்தகமும் வெளிப்படையாக எழுதப்படுவதில்லை எனவும் ஜென்சென் தெரிந்து கொள்கிறான்.

மங்கோலியர்கள் ஒநாய்களை புனிதமாக நினைப்பதற்கான காரணங்களை அவர்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து உணர்ந்து கொள்கிறான் ஜென்சென். பிற கலாச்சாரங்களை மேய்ச்சல் நிலம் தாங்காது, கசகஸ்தான் மேய்ச்சல் நிலவாழ்க்கையை அழித்து குருச்சேவ் ரஷ்ய விவசாய கலாச்சாரத்தை புகுத்த முயற்சித்ததால் அந்த மகத்தான் மேய்ச்சல் நிலம் பாலைவனமாக மாறியது, இதே கதிதான் தற்போது அணுகுண்டு சோதனை நடத்திமுடித்திருக்கும் சீனா மங்கோலிய மக்களுக்கு அளிக்கப்போகிறது என்பதையும் நாவல் விவரிக்கிறது. மனிதனின் பேராசைக்கு முன் இயற்கை வளங்கள் அழிந்து போகத்தான் வேண்டும் இதை இயற்கை அறிந்துவைத்திருப்பதால் தான் ஒநாய்களைக்கொண்டு மேய்ச்சல் நிலத்தை காப்பாற்றி வருகிறது இந்த பேராசைக்கார முட்டாள்களை சமாளிப்பதற்குத்தான் இயற்கை சீற்றங்களையும் வேட்டை விலங்குகளையும் இயற்கை உண்டாக்கிவைத்திருக்கிறது என மேய்ச்சல் நிலம் ஜென்சென்னிற்கு கற்றுக்கொடுக்கிறது.

தங்கள் கண்முன்னே தாங்கள் காதலிக்கும் மேய்ச்சல் நிலமும் ஒநாய்களும் வெறும் அதிக உற்பத்திக்காக அழிக்கப்படுவதை மேய்ச்சல் மங்கோலிய இனத்தின் கடைசி ஆசானான பில்ஜியும், மாணவனான ஜென்சென்னும் பார்த்து வேதனைக்குள்ளாகிறார்கள். 1966 முதல் 1972 வரை நீடித்த இந்த கலாச்சாரப்புரட்சி மங்கோலிய மேய்ச்சல் நிலத்தை வெறும் பாலைவனமாக மாற்றி பீஜிங் நகரத்தின்மீது புழுதியை கண்ணீராக வடித்தது. பதினோரு வருடங்கள் மேய்ச்சல் நில மக்களோடு வாழ்ந்த ஜியாங் ரோங் இருபது வருடங்கள் கழித்து தன் அனுபவத்தை கனத்த மனதுடன் ஒநாய்குலச்சின்னமாக வடித்திருக்கிறார்.

இந்தபுத்தகத்தை பற்றி எழுத்துவங்கினால் எழுதிக்கொண்டே இருக்கலாம் என்ற அளவிற்கு சின்ன சின்ன ஞானங்களால் நிரம்பியிருக்கிறது, எந்த் சொல்லும் இந்த நாவலில் வீணாக்கபடவில்லை செறிவான உரையாடல்கள் மற்றும் எளிமையான் மொழி இந்நாவலை ஒரு செவ்வியல் நாவலாக மாற்றிவிட்டிருக்கிறது, நாவல் என்பது புனைவுடன் இணைந்து தகவல்களை தர்க்கங்களாக அடுக்கும் கலை, இந்த நாவல் அதை சிறப்பாக செய்திருப்பதாக என் வாசிப்பில் உணர்ந்தேன்.

இந்த நாவல் பற்றிய எனது கவனம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் இயக்குநரும் இந்த புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளருமான வெற்றி மாறனாலும் ஏற்பட்டது, தன் துறையான சினிமாவை தவிர்த்து நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற தன்முனைப்புடன் இயக்குனர் வெற்றி மாறன் இத்தகைய ஆக்கத்தை கொண்டு வந்திருப்பது வரவேற்க்கத்தக்கது. மொழியாக்கத்தை சி.மோகன் இந்நூலின் இணையாசிரியரைப்போல சிறப்பாக தமிழ்ப்படுத்தியிருக்கிறார். அவரது மொழி இந்த நாவலின் மீது அவருக்கு உள்ள காதலை வெளிப்படுத்தியிருக்கிறது. சீனாவில் இந்த நாவல் வெளியான இரண்டு வாரங்களில் ஐம்பதினாயிரம் பிரதிகள் விற்றிருக்கின்றன மேலும் ஐந்து நாட்களுக்குள் கள்ளத்தனமாக பிரதிகள் அச்சிடப்பட்டு பலரின் புத்தக அலமாரிகளுக்குள் புகுந்துவிட்டிருக்கின்றது. அந்த அளவுக்கு இந்த நாவல் மக்களிடையே வரவேற்ப்பை பெற்றது. பல எழுத்தாளர்களால் கடந்த 10 ஆண்டுகளில் சீனாவில் வெளியான நாவல்களுள் மிகச்சிறந்த நாவல் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

வெறும் மேய்ச்சல் நில வாழ்க்கையல்ல இந்த புத்தகம் இது நம்முடைய வாழ்க்கையும்தான், விவசாயம்தான் மனிதனின் பேராசையை தூண்டியது நிலத்தை கையகப்படுத்துவதற்காக மனிதன் இயற்கை மீது தொடுத்த முதல் மிகப்பெரும்போர் விவசாயம் என சேப்பியன்ஸ் நூலில் யுவால் நோவா ஹராரி விவரிக்கிறார், எதிலும் கட்டற்ற தன்மையை மனிதன் தன் பேராசையில் இருந்து பெற்றுக்கொண்டான் அவனது கர்வத்தால் எத்தனை செழிப்பான காடுகள் நீர்நிலைகள் நிலங்கள், ஜீவராசிகள் அழிக்கப்பட்டுள்ளன என வரலாறை மீள்பார்வை செய்தாலே தெரிந்துகொள்ள முடியும். இப்போது நாம் வாழும் ஒற்றைப்படையான கலாச்சாரம் பல கலாச்சாரப்புரட்சிகளால் பாரம்பரிய ஞானங்களை இழந்து நாம் பெற்றிருப்பதே, இந்த வகையான கன்பூசிய கலாச்சாரம் மனிதர்களை ஆட்டுமந்தைகளாக மட்டுமே மாற்றும் என ஒநாய்குலச்சின்னம் எனும் மகத்தான படைப்பு வெளிப்படுத்துகிறது. ஒநாய்குலச்சின்னம் வெறும் நாவலல்ல நம் வாழ்வுக்கான சுடர்; ஞான ஒளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *