சென்னை புத்தகத் திருவிழா -2023 -12.நட்சத்திரவாசிகள் -கார்த்திக் பாலசுப்பிரமணியன்

 

  நட்சத்திரவாசிகள் நாவலைப் படித்து முடித்ததில் இருந்து ‘கல்பொருசிறுநுரை’ என்ற வார்த்தை மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. எத்தனை பிரம்மாண்டமாக, செல்வ செழிப்பு மிக்க ஒரு நகராக துவாரகையை கட்டியிருப்பான் யாதவன். ஆனால் அந்த கனவு நகரம் ஒரு தலைமுறை கூட வாழ்ந்திருக்காது, நீரில் உருவான குமிழ் போல்  துளியும் எஞ்சாமல் அவன் கண்முன்னே அழிந்து போகும்.

  நான் கருத்தறிந்து முதல் குமிழி என engineering படிப்பை சொல்வேன். Engineering படித்து விட்டால் கைநிறைய சம்பளம், உடனடியாக வாழ்வு செட்டில் ஆகிவிடும் என்று சாரை சாரையாக மக்கள் அதில் விழுந்தார்கள். மூலைக்கு மூலை அதற்கான கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதிகம் வருமானம் மிக்க தொழிலாக மாறிப் போனது. ஆண்டுகள் கடந்து இன்று சிலரைத் தவிர பெரும்பாலான மாணவர்கள் தகுந்த வேலையின்றி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.  engineering படிப்பே நீர்த்துப் போன ஒன்றாக மாறிவிட்டது. அதன் பின் இன்று மருத்துவப் படிப்பும், IT படிப்பும்.  மற்றதை ஒப்பிட IT மிக அசுரத்தனமான வளர்ச்சி.

IT துறையை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதன் பிரம்மாண்டமான கட்டிடம், ஆடம்பரமான வாழ்க்கை, மேற்கத்திய பண்பாடுகளுக்கு ஒத்த ஆண் பெண் உறவு, கேளிக்கை, வெளிநாட்டு பயணம் என ஒவ்வொன்றும் எங்கோ நட்சத்திரங்கள் நடுவில் இருக்கும் சொர்க்கத்தின் வாழ்க்கையாக தெரியும். ஆனால் அது உண்மையிலே அப்படித்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

வேறு எந்த துறையை விடவும் IT துறையில் இருப்பவர்கள் தங்களை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. சற்றே பின்தங்கினால் கூட உங்கள் இடத்தை பிடிக்க ஒரு இளைஞன் வந்து நிற்கிறான். வேணு என்ற சீனியர் அந்த கம்பெனி துவக்கப்பட்ட காலத்தில் இருந்து பணியாற்றும், அந்த நிறுவனத்தை உருவாக்கிய மிக முக்கியமான ஒரு உழைப்பாளி. Y2K பிரச்சினையின் போது கம்பெனியை சரிவில் இருந்து மீட்ட தொழில்நுட்ப வல்லுநர். அவர் செய்த சிறு பிழையால் இரு  ப்ராஜெக்ட்கள் கைவிட்டுப் போக, அடுத்த நாளே அவர் வேலையில் இருந்து தூக்கப் படுகிறார். தன் வீட்டு லோனையும், குழந்தை படிப்பையும் சொல்லி பாதி தொகைக்கு வேலை கேட்டும் முடியாது என்கிறது நிர்வாகம். தனக்கு கீழ் இருந்த பல பணியாளர்களை இதே போல் இரக்கம் இன்றி பணியில் இருந்து நீக்கியவர் தான் வேணுவும். ஒருவரை நுண்மையாக அவமானப் படுத்த தெரிந்தவர். நுட்பமான அவமானம் மூலம் ஒரு பெண்ணை பித்துப்பிடிக்க வைத்து வேலையை விட்டு வெளியேறச் செய்தவர். (IT  மிக உயர்வான பண்பட்ட மனிதர்கள் இருக்கும் இடம் என்று நினைத்திருந்தேன் 😥).

 கிராமத்தின் பண்பாட்டில் வளர்ந்த ஒருவன், உயர்குடி போல் சட்டையும் காரும் பொருட்களும் வாங்கி தன்னைப் பண்பட்ட மனிதனாக காட்டிக் கொண்டாலும், அவன் இங்கிருந்து எடுத்து சென்ற சில பழக்கங்களை மாற்றிக்கொள்ள முடிவதில்லை. அது ஆண் பெண் உறவில் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்குகிறது. இங்கு கணவனிடமே பேசப் பயந்து நிற்கும் அம்மாவை பார்த்த அவனுக்கு அனைவரிடமும் இயல்பாகப் பேசும் பெண்னை புரிந்து கொள்ள முடியவில்லை. தனக்கு இணையாக சம்பாதிக்கும் பெண்ணை மணந்து கொண்டவன் அவளுடன் வீட்டு வேலையை பகிர்ந்து கொள்ள மறுக்கிறான். அவள் குழந்தையை பெற்றுக் கொள்வதைக் தள்ளிப் போடுவதை இவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இணையான படிப்பும், வேலையும், சுதந்திரமும், அறிவும்  சம வலிமையுள்ள இரு மிருகங்கள் சண்டையிட்டுக் கொள்வது போல் ஆகிவிடுகிறது.

பெருமையாக வெளிநாட்டு வேலை என்று சொல்லிக் கொண்டு, அங்கு ஒவ்வொரு டாலரையும் எண்ணி எண்ணி செலவிடும் அபத்தம், மனைவி குழந்தையைப் பிரிந்து வாடும் உளநிலை. Party கொண்டாட ஒரு மாத சம்பளத்தை முழுவதும் இழக்கும் கொடுமை. அதீத நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி முழிக்கும் மனிதர்கள் என IT துறை ஊழியர்களின் நாம் காணாத மறுபக்கத்தை காட்டுகிறது இந்நாவல்.

 அதற்கென்று IT துறையே ஒரு சுரண்டல் தான் என்றால் இல்லை. இன்று இந்தியாவின் முக்கியமான பொருளாதார மூலத்தின் ஒரு துறை. Engineering அலைக்கு பின்னாக உருவாக இருந்த மிகப் பெரிய வேலையில்லா திண்டாட்டத்தில் இருந்து  IT துறை தான் காப்பாற்றியது. கிராமத்தின் ஏதோ ஒரு மூலையில் இருப்பவன் கூட வெளி நாடுகள் சென்று, வேலை செய்து தன் குடும்பத்தை மீட்டு எடுக்க பெரிதும் உதவியிருக்கிறது. IT வாழ்வின் அனைத்து முகங்களையும் சிறப்பாக பதிவு செய்திருக்கும் நாவல்.

2021ல் யுவ புரஸ்கார் விருது பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *