சென்னை புத்தகத் திருவிழா -2023-16. நிலவு தேயாத தேசம் (துருக்கி பயணக் கட்டுரை) -சாரு நிவேதிதா

 

 

 

‘நிலவு தேயாத தேசம்’ என்ற கவித்துவமான தலைப்பிற்காகவே புத்தகத்தை வாங்கினேன்.  இந்த பயண நூல் ஒரு மீஉரை எழுத்து (hypertext) வடிவில் உள்ளது. இதை இணையத்தில் படித்தால் மீ ஊடக (hypermedia) எழுத்து வடிவில் அமைந்திருக்கும்.

ஒரு குறிப்பை படித்துக் கொண்டிருக்கும் போதே அதிலிருந்து இன்னொரு தகவலுக்குள் சென்று மீண்டும் பழைய தகவலுக்கே வருகிறது. வேறு சில எழுத்தாளர்களின் பயணக்கட்டுரைகளின் சுருக்கம், கடிதங்கள், சினிமாவின் கதைச்சுருக்கம், வேறு நாடுகள் பற்றிய சித்திரம், அரபி இலக்கிய பத்திகள்  என தாவித் தாவி சென்று கொண்டிருக்கிறது.

எனினும் அவர் கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் முழுமையாகவே உள்ளன. துருக்கி நிலத்தின் அரசியல், நிலவியல், வரலாறு, மதம், சமகாலம், கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம், எழுத்தாளர்கள், மக்கள், இசை, உணவு என அனைத்தையும் தரவுகள் மற்றும் நேரடி அனுபவங்கள் மூலம் பதிவு செய்கிறார். மேலும் பல்வேறு தேசங்கள் பற்றிய கதைகளும், குறிப்புகளும் அவர் சந்திக்கும் மனிதர்களுக்கு ஏற்றாற்போல் வந்து செல்கிறது. ஒவ்வொரு தகவலுக்கும் அது சார்ந்த யூடிப் லிங்குகள், படங்கள், டாக்குமெண்ட்ரிகள், புத்தக சிபாரிசுகள், மேப்ஸ் என சுட்டிகளையும், படங்களையும் அளித்துள்ளார். அதனாலேயே இதை மீஊடக எழுத்து என்றேன்.

துருக்கி ஐரோப்பா மற்றும் ஆசியாவில் தனது நிலப்பரப்பை பகிர்ந்திருக்கும் நாடு. இஸ்தான்பூலை தலைநகராக கொண்டுள்ளது.

கிரேக்க,  ரோமானிய, ஒட்டோமன் கட்டுபாட்டிற்குள் இருந்த நிலம். Neolithic (புதிய கற்காலம்) முதலே இந்த நகரம் இருந்து வந்துள்ளதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. இது தொடர்ந்து பல்வேறு ஆட்சியாளர்கள், மதம், பண்பாடுகளுக்குள் பயணித்து வந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது. ஒட்டோமன்களின் ஆட்சியில் 600 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து குடியரசாக மாறியுள்ளது. ஒட்டோமன்கள், சுல்தான்கள் என நீண்ட காலம் இஸ்லாம் பண்பாட்டிற்குள் இருந்ததால் இன்றைய மைய பண்பாடு அதுவே.   கிரேக்க தொன்ம கடவுள் ஆர்டெமிஸ், கிறிஸ்தவம் பின்பு இஸ்லாம் என்ற பல பண்பாட்டு வேர்கள் கொண்டது. எனவே பலலட்சம்  பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. ஐரோப்பிய யூனியனில் இடம்பெற முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் குர்துகளுக்கும் அவர்களுக்கும் நடக்கும் போர், தேசியவாதம் போன்ற ஐரோப்பா கடந்து வந்த விழுமியங்களை இன்னும் தக்கவைத்து கொண்டுள்ளதால் அதில் இடம்பெற சாத்தியக்கூறு இல்லை என்று சாரு கூறுகிறார்.

இஸ்லாமை  ஒற்றை தன்மையும், மாறாப்போக்கும் கொண்ட மதமாக சித்தரிப்பது அமெரிக்க, ஐரோப்ப ஊடகங்களின் சதிவேலை. இஸ்லாம்  மதம் பல்வேறு தனிதனி கூறுகளும், ஒவ்வொறு தேசத்திற்கும் இஸ்லாமிய பண்பாடு மாறுபடும்  என்பதை சாரு இந்த பயண கட்டுரையின் வழியே நேரடி அனுபவங்கள் மற்றும் அரேபிய இலக்கியங்களின் துணைகொண்டு விளக்குகிறார்.இந்த பயண நூலில் எனக்கு ஏற்பட்ட முக்கியமான கண்டடைதல்களில்  ஒன்று இது. இப்படி பல ஊடக பொய் பரப்புரைகளை எழுத்தாளர்களின் பயண நூல்கள் முறியடித்திருக்கின்றன. செய்திகளுக்கும், உண்மை நிலவரத்திற்கும் சம்மந்தமே இருக்காது. அந்த வகையில் சாருவின் இந்த நேரடி அனுபவ பதிவுகள் இஸ்லாம் ஒரு இரும்புச் சட்டகம் என்று புகுத்தபடும் மனப்பதிவை மாற்றியமைக்கிறது.

மேலும் சாரு “ஜெரார் தே நெர்வால் என்ற பிரெஞ் பயணி  தனது புத்தகத்தில் தில்ருபா என்ற துருக்கிய அடிமை பெண் பற்றியும் துருக்கிய கலாச்சாரம் பற்றி எழுதியுள்ளதை வைத்தும்,  சேனாப் ஹனூப்பின் ‘A Turkish woman’s European impressions’  கடிதங்கள் மூலமும், மேரி என்ற இங்கிலாந்து பெண் துருக்கியில் தூதராக இருந்து 1716-18 வரை நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் வாயிலாக இஸ்லாமிய பண்பாடும், அதில் பெண்களின் நிலையும் ஐரோப்பிய கலாச்சாரத்தை விட மேம்பட்டதாக இருந்துள்ளது என்று கூறுகிறார். குறிப்பாக தற்போதும் துருக்கியில் ஆண்களைவிட பெண்களே சுதந்திரமாக இருப்பதாக பதிவு செய்கிறார். இதைவைத்தே இஸ்லாம் என்பது இங்கே ஊடகங்களில் சொல்வது போல ஒற்றை தன்மையானது அல்ல என்கிறார்.

துருக்கிய எழுத்தாளர்கள் நாஸிம் ஹிக்மத், ஓரான் கமால், ஓரான் பாமுக் வரை சொல்லப்பட்டுள்ள பதிவுகள் துருக்கி ஒரு தேசமாக இன்னும் ஜனநாயக விழுமியங்களை கைகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. நாஸிம் ஹிக்மத்ன் வாழ்க்கை பதிவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. கலைஞனாக வெளிப்படுவதனாலேயே அவன் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறான். நிஜ கலைஞன் தன்னை எரித்து மட்டுமே அந்த பண்பாட்டுக்கு பங்களிப்பாற்ற முடிகிறது.

இது உலகம் முழுவதும் ஒன்று தான் என்று தோன்றுகிறது. இங்கே புதுமைபித்தன் அங்கே ஹிஸ்மத். ஆனால் இன்று ஓரான் பாமுக்கை அவரது கலை வெளிப்பாட்டை அரசாங்கத்தால் நாஸிம் ஹிக்மத்தை போல் ஒடுக்க முடியவில்லை அதற்கு துருக்கியின் படித்த வர்க்கம் அவரை பேணி, உலகிற்கு முன் எடுத்து சென்று நிறுத்தியிருக்கிறது. ஒரு தமிழ் அல்லது இந்திய எழுத்தாளனை நம் சமூகம் அப்படி செய்யுமா என்று சாரு சாடுகிறார். அரபிய இலக்கியத்தின் செழுமையை, தரத்தை எடுத்து கூறுகிறார்.

குர்துகளுக்கும், துருக்கியர்களுக்கும் நடக்கும் பிரச்சனை, லெபனான், சிரியா பிரச்சனை இடையில் மொராகோ பயணியின் வழியே அந்த நாட்டை பற்றிய சித்திரத்தை அளிப்பது என சாருவின் கண்களும், மனமும் சென்று தொடும் அனைத்தையும் இப்பயணக் கட்டுரைக்குள் எழுதியிருக்கிறார். ஆனால் ஒரு இலக்கிய வாசகனாக பல்வேறு வாழ்க்கைகளை, பண்பாட்டை, மனிதர்களை, நிலங்களை எப்போதும் பெறும் பித்துடன் அறிய விழையும் எனக்கு இப்பயணகட்டுரை வாசிப்பிற்கு பெறும் விருந்தாக இருந்தது.

எழுத்தாளனின் கண்கள் வழியே ஒரு நாட்டை, மக்களை, பண்பாட்டை பார்ப்பதென்பது ஒரு  உச்ச அனுபவம். ஏனென்றால் அவன் மட்டுமே அதை மானுட பண்பாட்டில் நிறுத்தி என்றென்றைக்குமான, சாரமான சில புள்ளிகளை தொட்டெழுப்பி காட்டுவான். அத்தனை பேதங்களுக்குமிடையிலும் நம்மை ஒரே மானுடத்திரள் என உணரச்செய்து விடுவான். சாருவின்  புத்தகம் என்னை அப்படி உணரச்செய்தது.

“ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளை கேட்க வரும் யாரோ ஒருவருக்காக காத்துக்கொண்டிருக்கின்றன”

“சாரு அவரது எழுத்தின் வழியே அனுகப்பட வேண்டிய ஆளுமை மாறாக அவரை நாம் அவரது தனிப்பட்ட பண்புகளின் வழியே அனுகிக்கொண்டிருக்கிறோம் அதன்வழியே நாம் நம் சமகாலத்தின் முக்கியமான கலைஞனை நிராகரிக்கிறோம் என்றே நினைக்கிறேன்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *