சென்னை புத்தகத் திருவிழா -2023 – 18.தேகம்- சாரு நிவேதிதா

சாரு நிவேதிதாவின் ஸிரோ டிகிரி நாவலை வாசிக்க ஆரம்பித்து பாதியிலேயே நிறுத்திவிட்டேன். அந்த நாவலை ஒரு நாவலாக கட்டமைக்க வேண்டிய பொறுப்பும் வாசகனிடமே இருப்பதாக உணர்ந்ததால் வாசிக்க முடியவில்லை. சாருவை வாசிக்க தொடங்குபவர்கள் தேகத்தில் இருந்து தொடங்கலாம். நாவலின் மையமாக இருப்பதே தேகம் தான். தர்மா என்ற மைய கதாபாத்திரத்தின் தேகம் வெவ்வேறு தேகங்களுடன் கொள்ளும் உறவாக இந்த நாவலை வாசிக்கலாம்.

தேகத்தின் வெளிப்பாடாக அமையக்கூடிய வன்முறை, காமம் மற்றும் காதல், இம்மூன்றும் அதன் உச்சங்களை அடைவதையும் அதற்கான காரணத்தை விசாரணை செய்வதாகவும் இந்நாவலை வாசிக்கலாம். இங்கு காதல் என்பதை மனம் சார்ந்த முழுவதும் சூட்சமமான ஒன்றாக சொல்லிவிட முடியாது என்றெண்ணுகிறேன். காமத்தின் மீது மனம் படிய படிய காதலாக மாறுவதாக எடுத்துக்கொள்ளலாம். பதின்ம வயதில் இருந்தே இந்த மூன்றின் கூறுகளும் ஒருவனுக்குள் செயல்பட ஆரம்பித்திருக்கும். இந்த மூன்றையும் தர்மா என்பவன் அதன் உச்ச சாத்தியங்களில் சந்திக்கும் நிகழ்வே தேகம்.

மேற்சொன்ன மூன்றும் ஒருவன் உடல், மனம்  சமநிலை இல்லாதபோது  தொடங்குவதுதான். அந்த சமனின்மையை இந்த மூன்று வெளிப்பாடுகளாலும் சமன் செய்ய முடியுமா என்பதை விசாரிப்பதாக தேகத்தை காண்கிறேன். இந்த மூன்றிலும்  அலைக்கழிவதுற்கு  காரணமாக நான் காண்பது தர்மாவின் பாலியல் அடையாளம் சார்ந்த தத்தளிப்பே. தன் பதின்ம வயதிலையே ஒரு 70 வயது கிழவியுடன் உறவு கொள்ள முயன்று அதில் முழுமையாக ஈடுபட முடியாமல் தன் பாலியல் அடையாளத்தை பற்றிய சந்தேகத்தை அடைகிறான். நாவலில் தர்மா தன் பாலியல் ஈர்ப்பு சார்ந்து தன்னை முழுமையாக ஆணாக அடையாளங்கொள்ளவில்லை. பெரும்பாலும் காமத்திற்காக பெண்களை நாடிச்சென்றாலும் அதில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. சில காலம் ஓரினச்சேர்க்கையாளனாக இருந்திருக்கிறான். அதிலும் பணத்திற்காக சிலகாலம் கேடோமைட் என்று சொல்லக்கூடிய receiving end ஆக இருந்திருக்கிறான். இப்படி தன் பலியால் சார்ந்து ஒரு நிலைத்தன்மை இல்லாத அந்த வெற்றிடத்தை வன்முறை மூலம் சமன் செய்து கொள்வதாக எடுத்துக்கொள்ளலாம். இதை பொதுப்படுத்தி பார்க்க வேண்டியதில்லை. ஒருவனின் காம வறட்சியே அவனை வன்முறைக்கு இட்டுச்செல்லலாம்  என்பது அடிப்படை.

வன்முறை:

மேற்சொன்னவற்றிற்கு உதாரணமாக நாவலில் வரும் ஒரு காட்சி. தர்மா ஒருவனை அவன் செய்த குற்றத்திற்காக டார்ச்சர் செய்யும் போது தர்மாவின் உடல் காமத்தால் தூண்டப்படுகிறது. அவ்வேளையில் opera கேட்டுக்கொண்டே அந்த டார்ச்சரை செய்கிறான். கலவியில் நிகழும் இன்பத்தை நிறைவை வன்முறையின் மூலம் அடைந்துவிடுகிறான்.

காமம்:

பதின்ம வயது சிறுமிகள் முதல் வெவ்வேறு வயதுள்ள பெண்களிடம் தன் காமத்திற்காக சென்றுகொண்டேயிருக்கிறான். காமம் சார்ந்து எழுதப்பட்ட அத்தியாயங்களை வாசிக்கும்போது ஒரு சராசரி ஆணுக்கு ஒவ்வாமையும் அதிர்ச்சியும் உண்டாகலாம். ஆனால் தர்மா சிறிதும் குற்றவுணர்வு இல்லாமல் அதை செய்து செல்கிறான். அவன் பேருந்தில் பெண்களுடன் ஈடுபடும் சல்லாபத்தில் சில பெண்கள் அதை ஏற்றுக்கொள்வதும் துணுக்குற்றச்செய்யும் ஒன்றுதான். ஆனால் இது அனைத்தும் நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டதாகவும் இல்லை. தர்மாவிடம் வெளிப்படும் இவற்றில்  சிறிதளவேனும் தன் உள்ளத்தில் இல்லாத ஆண்கள் குறைவாக இருக்கவே வாய்ப்பு.

காமம் சார்ந்த அத்தியாயங்களில் ஒன்று, ஒரு சிறுமி அவளின் வயதிற்கேற்றதை விட தேக வளர்ச்சியுடையவளாக இருப்பதும் அதனால் ஆண்களால், நெருங்கிய உறவினர்கள் உட்பட அனைவராலும் பாலியல் சீண்டலுக்கு உட்படுவது . இந்த அத்தியாயம் தொடங்கும்போது ஆதிசங்கரரின் சௌந்தர்யலஹரியில் இருந்து ஒரு சுலோகம் இடம் பெற்றிருக்கும். அது முலைகளை அமிர்த்த குடுக்கைகளாக கொண்டிருக்கும் அன்னை என்ற வர்ணனை. ஆனால் அதேபோன்ற பெரியமுலைகளை கொண்ட சிறுமி போகப்பொருளாக பயன்படுத்தப்படும் முரண். ஒரு ஆண் இந்த இரண்டிற்கும் இடையில்தான் அலைக்கழிக்கப்படுகிறான் எனலாம். ஒன்று கீழ்மையாகவும் மற்றொன்று ஆன்மிகமான தளத்திலும் நிகழ்கிறது.

காதல்:

மேற்சொன்ன வன்முறை, காமம் என்ற இரண்டிலும் அதன் அதீத நிலையில் இருக்கும் தர்மாதான்  காதலின் உச்சத்திலும் இருக்கிறான். ஒரு ஆணின் குறியில் கோணி ஊசியால் துளையிடும் ஒருவன், பேருந்தில் பெண்களின் பிட்டத்தில் உரசி சுகம் காணும் ஒருவனே

” உன்னை நினைக்கும் போது

ஒரு பாடல்

ஒரு நடனம்

முடிவில்லா கொண்டாட்டம்”

போன்ற கொண்டாட்டமான காதல் கவிதையையும் எழுதுகிறான்.

நாவலில் தர்மாவிற்கு இரண்டு காதல்கள். ஒன்று ஏனென்று தெரியாமலே முடிந்துவிடுகிறது. மற்றொன்றில் காதலி தன் காதலின் பித்துநிலையில் எழுதும் கடிதங்களுக்கு எந்த பதிலும் எழுதாமல் இருப்பதால் தற்கொலை செய்துகொள்கிறாள். ஆனால் தர்மா உள்ளூர ஏங்கிக்கொண்டிருப்பது ஒரு பெண்ணின் நிரந்தர உறவிற்க்காக. அவள் காதலின் தீவிரத்தை அறிந்தும் அதை நிராகரித்தது ஏன்? உள்ளுக்குள் அவன் அடையமுடியாத காமத்தை அவள் இறப்பின் மூலம் சமன்செய்து கொண்டானா?

நாவலின் இறுதியில் ஒரு middle class பெண்ணை திருமணம் செய்துகொண்டு settle ஆகிவிடுகிறான். ஒரு வகையில் அவன் தேகம் settle ஆகிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு மனிதனின் இருப்பாக ஐந்து நிலைகளை சொல்வார்கள். அன்னமயகோசம் , மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசம். இவற்றின் அடிநிலையில் இருப்பது அன்னமய கோசம் (தேகம்). தேகத்தை உதாசீனப்படுத்திவிட்டு அதன் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட முடியாது. நம் தேகத்தை அறிந்து அதன் தேவைகளை நிறைவேற்றிய பின்புதான் அதன் அடுத்த நிலைக்கு செல்லமுடியும். இல்லையேல் காமமும், குரோதமும் நம்மை மூழ்கடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *