சென்னை புத்தகத் திருவிழா -2023-21.நூறு நிலங்களின் மலை – ஜெயமோகன்

 

 

ஜெ தனது நண்பர்கள் மற்றும் தேவதேவன், அஜிதனுடன் சேர்ந்து காஷ்மீர் – லடாக் – லே நிலங்களின் இமயமலை பகுதிகளில் செய்த சாகச பயணங்களின் கட்டுரைகள் அடங்கிய நூல்.

இந்த பயணத்தில் ஜெ ஒரு தந்தையாக அஜிதனுக்காகவும், சக படைப்பாளி தேவதேவனுக்காகவும் பதட்டபடுவதும், மூச்சுதினறலால் திண்டாடுவதையெல்லாம் தாண்டி அவர் இவ்வாறு உணர்ந்தாக பக்கம் 52,53-ல் குறிப்பிட்டுகிறார்.

“மிக மெல்ல ஒரு தியானநிலை கைகூடி வந்தது. நானும் காலமற்றவானேன். என் சிந்தனை கரைந்தழிய கண் மட்டும் உயிருடன் எஞ்சியது. பசுக்களும், குதிரையும் மேயும் பசும்புல்வெளியை அப்பால் எழுந்த மலைகளில் மெல்ல நிறம் மாறிக்கொண்டிருந்த மாலைவெயிலை அபாரமான ரத்தினநீல நிறத்தில் மேகமில்லாத துல்லியத்துடன் இருந்த வானை பார்த்துக்கொண்டிருந்தேன். பின்பு அவை மட்டும் அங்கே இருந்தன. பார்ப்பவன் மறைந்துவிட்டிருந்தான்” (பக்கம் – 52)

“ஏதோ ஒன்று நிகழ்ந்து மெல்ல மெல்ல மறைந்தது. அது நிகழ்ந்ததை பார்த்தவன் இல்லாமலிருந்தான். கதவு கிரீச்சிட அஜிதன் உள்ளே வந்தபோது நான்கு பக்கமும் எல்லையற்று திறந்த வெளியில் இருந்து தன்னை திரட்டிக்கொண்டான். சிதறிய பாதரசப்பிசிறுகளை பெரிய பாதரசத்தால் தொட்டு உருட்டித் திரட்டுவதுபோல இருக்கிறேன் என்ற சொல்லைக்கொண்டு அனைத்தையும் மீண்டும் ஒன்றாக்கிக் கொண்டான்” (பக்கம் – 53)

அவரது அத்தனை பதட்டங்களையும் தாண்டி பயணத்தில் ஒரு தனி மனிதனாக அவர் அடையும் மேற்படி நிலை. தானும், இயற்கையும் ஒன்றென ஆகும் ஆன்மீக நிலை. அங்கே உலகியல், உறவுகள், பதட்டங்கள் எதுவும் இல்லை. சில கனங்களுக்காவது அனைத்தும் ஒன்றென உணரும் நிலை. பயணங்களின் அடிப்படையான நோக்கம் அதுவாகவே இருக்க முடியும் என்று தோன்றுகிறது.  மனிதன் இங்கே ஏற்படுத்தியிருக்கும் அத்தனையும் சிறிது தான் என்று பயணங்கள் வழியே தான் உணரமுடியும் போல!

இந்த சிறு நூலை இமயமலை பயணத்திற்கான கையேடாக பயன்படுத்திகொள்ளும் அளவுக்கு சாலைகள், அதன் உயரம், நீளம், உணவு விடுதிகள், வாகணங்கள், அதற்கான கட்டணங்கள், தங்குமிடங்கள், ஓட்டல்கள் என பல அடிப்படை தகவல்களை கொண்டுள்ளது. ஆனால் இவர்கள் பயணம் செய்த சில பகுதிகள் அதிகாரிகளின் தொடர்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று நூலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நிலமோ, மலையோ, நதியோ, மக்களோ, வழிபாட்டு தளமோ, சிலையோ அவர் பார்த்து நின்ற அத்தனையையும் அதன் வரலாறு, பன்பாடு, அரசியல், வாழ்வியல் என அதன் ஒட்டுமொத்தத்தையும் இனைத்தே கூறியுள்ளார்.

இந்த மூன்று நிலங்களிலும் இருக்கும் உள்ளூர் அரசியலிலிருந்து, இந்தியா-பாக்கிஸ்தான் இடையில் நடக்கும் காஷ்மீர் அரசியல் என இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சனையை அதன் வரலாற்று காரணங்களுடன், அதில் கலந்திருக்கும் உலக அரசியலுடனும் விவரிக்கிறார். அதனை இந்திய ஊடகங்கள் சித்தரிக்கும் விதத்திற்கும் கள யதார்தத்திற்கும் சம்மந்தமேயில்லாததை சுட்டி காட்டுகிறார்.

 அந்த நிலங்களில் வாழும்  சாதாரன மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு சிக்கல்களின்றி, அமைதியாக வாழவே ஆசைப்படுகின்றனர். அரசியல் அவர்கள் மீது சுமத்தபட்டு சிலரது நன்மைக்காக பெரிதாக்கப்படுகிறது. அதையே ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன. மேலும் இஸ்லாமிய தீவிரவாதம் அமெரிக்காவால் நீர் ஊற்றி வளர்க்கப்பட்டு பின் அது அவர்களுக்கே அழிவை ஏற்படுத்தியதையும் தற்போது அதனுடன் அனைத்து நாடுகளும் போராடிக்கொண்டிருப்பதை ஒரு பயண நூலில் தெரிந்து கொள்வது என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

மேலும் அனைத்து அரசியல் சிக்கல்களையும் தாண்டி, அந்த நிலங்களில் வரலாறாக மாறி ஓங்கி நின்றிருக்கும் மைத்ரேய புத்தரின் சிலைகள், பாறை செதுக்குகள். அங்கே நிலை கொண்டிருக்கும் பெளத்த மடாலயங்கள், அங்கு வாழும் பிட்சுக்கள். அவற்றை லடாக் நிலத்திற்கு பெள்த்தமே பொருத்தம், அந்த நிலத்தை போலவே  பெளத்தமும் ஒரு ஓசையற்ற மதம் என்று ஜெ குறிப்பிடுகிறார்.

உலகில் உள்ள அனைத்து விதமான நில அமைப்புகளின் மாதிரியை இமையத்தில் கண்டு கொள்ளலாம் என்கிறார். அதன் அத்தனை

வண்ண பேதங்கள் குறித்த விவரனைகள் மற்றும் அவை ஏற்படுத்தும் உள நிலைகளை அவரது கூறிய மொழியால் வடித்திருக்கிறார். அவர் கானும் அத்தனை மனிதர்களிலும் உள்ள சிறு தனித்துவத்தை தொட்டு காட்டி அவர்களை நாம் என்றுமே மறக்காதபடி மனதில் பதித்து விடுகிறார்.

ஜெ எழுதும் பயண கட்டுரைகளின் சிறப்பு என்பது, அவர் ஒரு நிலத்தை நூறு கண்கள் கொண்டு பார்க்கிறார் என்று தோன்ற வைக்கிறது. அந்த நிலத்தின் அமைப்பு, வரலாறு, பண்பாடு, அரசியல், வாழ்வியல் என அனைத்தையும்  உடலுக்குள் உடுருவும் எக்ஸ்ரே கதிர்களை போல, அவர் செல்லும் இடங்களுக்குள் எல்லாம் ஊடுருவி தன் மொழியில் கவித்துவமாகவும், கூர்மையாகவும், செறிவாகவும் பதிவிட்டுவிடுகிறார். அது நமக்குள் பெறும் விரிவை ஏற்படுத்தி, அந்த நிலங்களை, மனிதர்களை, வாழ்க்கையை கற்பனையில் காணச் செய்துவிடுகிறது.

காஷ்மீர் – லடாக் – லே பகுதியை குறித்த முழுமையான சித்திரத்தை அளிக்கும் பயண நூல் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *