
தாவரவியல் பேராசிரியரான அ. லோகமாதேவி அவர்கள் எழுதி அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்தியாவின் சொந்த மரங்கள் என்ற நூல் நம் நாட்டிற்கே உரித்தான 20 மரங்களை அறிமுகப்படுத்துகிறது. மரங்களின் மீது நமக்கு நேசம் இருந்தாலும் தாவரவியல் சார்ந்த நூல்களை படிப்பதில் ஒரு தயக்கம் இருக்கும் – எனக்கு இருந்தது. அவற்றின் பழைய பாட புத்தகத்தன்மை மற்றும் இலத்தீன் பெயர்கள் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் இந்த நூல் வாசித்த போது எனக்கு மிகவும் பிடித்தமானதாக ஆகிவிட்டது. மரங்களின் தாவரவியல் சார்ந்த தகவல்கள் மட்டுமல்லாமல் அவற்றின் பண்பாட்டுத் தொடர்பு, அவற்றுடன் இணைந்த தொன்மங்கள், பழங்குடி சடங்குகளில் அவற்றின் இடம், வரலாற்று முக்கியத்துவம் என பலவற்றையும் தெரிவிக்கிறது.
கூறப்படும் ஒவ்வொரு மரம் சார்ந்தும் ஏதாவது ஒரு புதிய தகவல் கிடைக்கிறது. அது சுவாரசியமானதும் கூட. புனைவு எழுத விரும்புபவர்களுக்கும் இந்த நூல் பயன்படும்.
உதாரணமாக சில:
சங்ககாலத்தில் மன்னர்கள் போர்வெற்றியை காட்டும் விதமாக வாகை மரத்தின் மலர்களை சூடுவார்கள் என்பது நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் மகாபாரதம் அர்ஜுனனின் காண்டீபம் வாகை மரத்தால் செய்யப்பட்டது என்று குறிப்பிடப்படுவது இந்திய தொன்மங்களில் இம்மரம் வளமையின் அடையாளமாக கருதப்படுவது தென்கிழக்கு ஆசிய சிறார் கதைகளில் இம்மரம் முக்கிய இடம் பெறுவது போன்ற விஷயங்கள் புதியதாக இருக்கும். யானை இந்த மரத்தின் இலைகளை விரும்பி உண்கிறது.
அழகிய மந்தாரை மரம் கிளிகளுக்கு புகலிடம் அளிக்கிறது. இதன் விதை பரவல் பற்றி குறிப்பிடப்படும் போது இந்த மரத்தின் கனிகள் வெடித்து மிகுந்த விசை உடன் துப்பாக்கி குண்டுகள் போல விதைகள் 50 மீட்டர் தூரம் வரை செல்லும். பின் காற்றில் அல்லது பறவைகள் மூலம் பரவும் என குறிப்பிடப்படுகிறது. இதன் மர கட்டைகளில் இருந்து விவசாய கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. ராமாயணத்தில் பரதனின் தேர் கொடியில் மந்தாரை மலர் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
ஏழிலைப்பாலை மரம் யட்சிகளின் வசிப்பிடமாக கருதப்படுகிறது. அழகிய, நறுமணம் மிக்க மலர்களை கொண்ட மரம். ஆனால் நச்சு மரம். இதன் மரப்பட்டையும் அதில் வடியும் பாலும் அதிக நஞ்சு கொண்டவை. (இம்மரம் பாரம்பரிய மருத்துவ பயன்கள் கொண்டது).
அழகும் நறுமணமும் என ஈர்ப்பும் அதே சமயம் நஞ்சும் இதை யட்சியுடன் பொருத்திப் பார்க்க முடியும். பண்டைய இந்தியாவில் பட்டமளிப்பு விழாவின் போது சான்றிதழுடன் ஏழிலைப்பாலை மரத்தின் சிறு கிளை ஒன்றும் தரப்பட்டது. ஏனென்றால் இந்த மரம் அறிவு மரம் என்று கருதப்பட்டது. இதன் மரக்கட்டைகளில் இருந்து சிலேட்டுகளும் கரும்பலகைகளும் செய்யப்பட்டதால் அந்தப் பெயர் பெற்றது. இந்த ஒரு மரம் மட்டுமே பல ஒன்றுக்கொன்று மாறுபட்ட விஷயங்களுடன் தொடர்பு பெற்றிருக்கிறது. அழகு, அறிவு, நஞ்சு.
இப்படி இந்த நூல் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு மரத்திற்கும் பல விஷயங்களை தருகிறது. அவை வெறும் தகவல்கள், அல்லது புதிய தகவல்கள் என்ற அளவில் அல்லாமல் நாம் கற்பனையில் விரித்துச் செல்லத்தக்க கலை அம்சமும் வியப்பும் தருவனவாக உள்ளன.
வில்வம், மஞ்சாடி, வாகை, உசில், ஏழிலைப்பாலை, மந்தாரை, ஆத்தி, இருவாட்சி, புளிமா, பனை, புரசு, புன்னை, சரக்கொன்றை, செங்கொன்றை, பொறிஞ்சான், நறுவல்லி, மாவிலங்கம், கருங்காலி, வாகனை, கல்லிச்சி என்ற இருபது மரங்களைக் குறித்தும் எல்லா கோணங்களிலும் முழுமையான ஒரு தோற்றத்தை வரைந்து காட்டுகிறது இந்த நூல்.
அறிவியல் துறையை சேர்ந்த ஒருவர் கலை ரசனையும் நுண்ணுணர்வும் உள்ளவராக இருந்தால் அறிவியல் சார்ந்த ஒரு நூலை எப்படி ரசித்து படிக்க தக்கதாக மாற்ற முடியும் என்பதற்கு இந்த நூல் ஒரு சான்று.
