தேவி விலாசம் –  ஒரு நல்ல நாவல்

இரண்டு நாட்களுக்கு முன்னர் வாசித்து முடித்த நாவல் ப்ரியா தம்பி எழுதிய தேவிவிலாசம். எனக்குப் பிடித்திருந்தது. படித்ததில் இருந்து அந்நாவலின் கதைக்களத்தில் உலாவிக்கொண்டே இருக்கிறேன். ஜெயமோகன் புகுந்து விளையாடிய யட்சிக்கதைதான். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் ஒரு குடும்பத்து ஆண்களை மட்டும் அற்பாயுளில் சாகடித்துப் பழிவாங்கும் பேய்க்கதை.  ஆனாலும் ஒரு நல்ல நாவலுக்குரிய குணாதிசயங்களைக் கொண்டிருந்தது. வாசிக்க வாசிக்க ஆர்வம் அதிகரித்துக்கொண்டே சென்றது. இருநுாற்றுச் சொச்சத்தை ஒரே அமர்வில் முடித்ததும் சட்டென்று தரைதட்டிய  ஏமாற்றம்.

 எனக்கு இந்நாவல் ஏன் பிடித்தது என்பது குறித்து இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வாசிப்பாளனாக  இருபதாண்டுகளுக்கு மேலாக நாவல்களை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்திய நாவல்களில் மலையாள நாவல்களுக்கே என் உள்ளத்தில் முதலிடம். நீண்ட வாசிப்புப் பழக்கத்தினால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல் ல முடியும். ஒரு நல்ல நாவலுக்குரிய இயல்புகள் எவை என்பதை உள்ளுணர்வு உடனே கண்டறிந்து சொல்லிவிடுகிறது. தேவி விலாசத்தை முதல் அத்தியாயத்தை வாசித்து முடித்த போதே  இது ஒரு நல்ல நாவல் என்கிற மதிப்பீடு தோன்றிவிட்டது.

நாவல் பேசும் கதைக்கரு மிகவும் பிற்போக்கானது. நிறைவேறாத காதல், சாதிய ஏற்றத்தாழ்வினை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தையால் அழிக்கப்பட்ட  கன்னிப்பெண்ணின் ஆவேசம் என்கிற அரதப்பழசான கதைதான். நாயர் தரவாடுகளின் சீரழிவும் ஏற்கனவே  இங்கே நிறைய எழுதப்பட்டுள்ளது.

ஒரு பேய்க்கதையை இந்நுாற்றாண்டில் எழுத முயன்றதே பாராட்டுக்குரியது. அதுவும் ஒரு சாபம் பரம்பரை பரம்பரையாக நின்று பழிவாங்கும் என்கிற ஐதீகத்தை ஒரு நாவல் முழுக்க சொல்லியிருப்பது நம்ப முடியாத ஒன்று. ஒவ்வொரு தலைமுறையிலும் குடும்பங்களின் ஆண்கள் இளம் வயதில் காரணங்கள் தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது திடீரென காணாமல் போகிறார்கள். நாவலின் இறுதியில்தான் அதற்கான காரணம் என்ன என்பது சொல்லப்பட்டுள்ளது. முடிவிலே இன்பம் என்பதைப்போல ஒரு நம்பூரிக் கூட்டம் வந்து பகவதி தேவியை மீண்டும் பிரதிஷ்டை செய்து குடும்ப சாபத்தை இல்லாமல் ஆக்குகிறார்கள். தமிழ் சினிமாவில் அரண்மனை, சந்திரமுகி என்று ஏகப்பட்ட முறை கதையாக்கப்பட்டுள்ள கதைக்களந்தான்.

குறிப்பாக இந்நாவல் முழுக்க வந்து செல்லும் பெண்களின் உலகம் மிகவும் நேர்மையோடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.  மூன்று தலை முறைப் பெண்களின் கதையாக இந்நாவல் விரிந்து  செல்கிறது. இருநுாறு பக்கங்கள் என்கிற சிறிய எல்லையைக் கொண்டிருப்பதால் அத்தனை கதாப்பாத்திரங்களுக்கும் உரிய பக்கங்கள் ஒதுக்கப்படவில்லை என்பதே ஒரு குறை. கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய வாழ்வியல் தடங்களை பற்றி இந்த நாவலில் கூட கண்டறிய முடிகிறது. இன்னும் எழுதப்பட வேண்டிய நிலக்காட்சிகள் நிறைய உள்ளது. இந்நாவலின் குடும்பங்கள் சமைக்கும் உணவுவகைகள் புதிதாக இருக்கின்றன. வீடு வைக்கிறது என்பது – புதிய வீடு கட்டுதல் – போன்ற கன்னியாகுமரி மாவட்டத்தின் புழுங்கு வார்த்தையை இந்நாவலில்தான் நான் முதல் முதலாகக் வாசிக்கிறேன்.  குறிப்பாக நாயர்கள் மத்தியில் இச்சொற்கள் அன்றாடப் பயன்பாட்டில் இருக்கும் போலும்.

தேவி விலாசம் என்கிற தரவாட்டுக் குடும்பத்தில் தனிமையில் வாழும் ஒரு தாயின் தத்தளிப்பினை இந்நாவல் மைய இழையாக கொண்டுள்ளது. எங்கே தன் மகன் அவன் குடும்ப ஆண்களைப் போல தன் கணவரைப் போல அற்பாயுளிள் இறந்துவிடுவானோ என்கிற ஒரு அன்னையின் பரிதவிப்பு கலையாக எழுந்துள்ளது. அவளின் கண்ணோட்டத்தில் தேவி விலாசமும் அதன் குடும்ப உறுப்பினர்களின் கதைகளும் முன்பின்னாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு நாவலுக்குத் தேவையான விரிவும் நிதானமும் இந்நாவலில் மிகச் சிறப்பாகத் தொழில்பட்டுள்ளது. ஆண் பெண்களின் மனோ உலகம் போலி மயக்கங்கள் இன்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு கதையை நிகழ்த்திக்காட்டுதல் என்பதுதான் இன்று எழுதிக்கொண்டிருக்கும் இளம்படைப்பாளிகளுக்கு சவாலானது. நம்பத் தகுந்த நிகர் வாழ்விற்கு தேவையான ஏகப்பட்ட நுண்தகவல்களை  இந்நாவலும் கொண்டிருக்கிறது. ஒரு படைப்பாளிக்கு அதிக உழைப்பைக் கோரி நிற்கும் பெரும்பணி இது. ஒருகதைக்களன் கொண்டிருக்கும்  வரலாற்றுத் தடங்களையும் பண்பாட்டின் பாசிச் சேர்க்கையும் அப்படியே கொண்டு வரவேண்டிய கட்டாயம் ஒரு நாவலாசிரியருக்கு உண்டு. நாவலாசிரியர் ஒரு விதத்தில் புனைவின் வழியாக மனிதர்களின் வரலாறுகளை பதிவு செய்யக்கூடியவருந்தான். ஒரு குடும்பம் ஒரு இனக்குழுவின் ஒரு அங்கம்தான் என்கிற வகையில் ஒரே நிலம் என்றாலும் பண்பாட்டுத்தரவுகள் தனித்து விளங்குகின்றன. இந்நாவலில் நாயர்களின் வாழ்வியல் நுட்பங்கள் துல்லியமாக பதிவு  செய்யப்பட்டுள்ளது.

குறைவான தர்க்க நியாயங்களைக் வைத்துக்கொண்டு இந்த உலகத்தை மதிப்பிடவும், தனது தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை அனைத்தும் பிற்போக்கானவை எனவும் செம்மாந்து வாழ்ந்துவரும் கோட்பாட்டாளருக்கு, தத்துவவாதிகளுக்கு, முற்போக்கு அரசியலை மொத்த வாழ்விற்கும் முன்நிபந்தனையாக்கி வாழ்க்கையை குறைவாக மதிப்பிடும் நம்பிக்கையாளர்களுக்கு இந்நாவல் உவக்க வாய்ப்பில்லை.

இரவின் தனிமையில் பேயையும் முனியையும் எதிர்கொள்ளப்பயந்து அம்மாக்களின் முந்தானையைக் கோர்த்துப்பிடித்து, காலிடுக்கில் ஒண்டிக்கொண்டு இருட்டைக் கடந்த பால்யங்களைக் கொண்டிருப்பவர்களுக்கு விருப்பமான நாவல்.

ஒரு படைப்பாளியின் முதல் நாவல் என்பதை நம்ப முடியவில்லை. வாசித்து முடித்ததும்தான் படைப்பாளி யார் என்று தேடிப்பார்த்தேன். அவரின் முதல் படைப்பினை இப்போதுதான் வாசித்திருக்கிறேன். தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு ஒரு அசலான நாவலாசிரியர் கிடைத்திருக்கிறார்.

ப்ரியா தம்பிக்கு வாழ்த்துகள்.

சால்ட் பதிப்பக வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *