நினைவின் தீ

சென்னையில் விட்டு விட்டுப் பெய்கின்ற மழை. சிலநேரம் இரவு முழுக்க தான் கிளம்பி வந்த நிலத்திற்கே மீண்டும் விழுகிற அழகை   ஒற்றை சன்னலின் வழியாக அரைத் தூக்கத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  மிதமான வானிலை தருகிற அமைதியும்,  சூடான பாலில்லாத தே நீரும் இந்த நாட்களை பல நினைவுகளுக்கு அழைத்துச் செல்கிறது. அலுவலகத்தில் குளிர்சாதன வசதியில் உடல் குளிர்ந்து பணி செய்யும் போது புது வித அனுபவத்தை அளித்தாலும் வெளியே வெயிலில் வதங்கிக் கொண்டு அறை வந்து சேர்கிற போது உருவாகிற சோர்வை, சாளரத்தை திறந்தவுடன் கிடைக்கிற ஒரு மறு பிறப்பின் மூலம் வென்று கொண்டிருக்கிறேன். எதையாவது எழுதலாம். ஆனால் இப்போதெல்லாம் எழுதுவதை விடவும் பல நேரங்களில் வெறித்து உத்திரத்தையோ சன்னல் கம்பிகளில் அமர்ந்து நினைவுகளின் வெறுமையா?’ என்றபடி அந்த ஒற்றை நீலநிறப்புறா பார்க்கும்போது மனக் கொந்தளிப்பில் திரும்பத் திரும்ப அகம் தேடுகிற தனிமையை அடைந்து கொண்டிருக்கிறேன்.

எத்தனை அழகான பறவை. பார்க்கும்போதெல்லாம் பிடித்து கரங்களில் ஏந்திக்கொண்டு இலக்கியம்,சினிமா,தத்துவம் பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு கைகளால் ஒரு வானத்தை பிடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?  கடுகு அளவே கொண்ட கண்களை வைத்துக் கொண்டு எப்படி இப்பூமியை அளந்து திரிகிறது, எங்கு தூக்கிவிட்டாலும் வளர்த்தவனை மறக்காத ஒரு நல்ல ஜீவன். சென்னையில் அப்படி நிறைய குழுக்கள் இருக்கிறார்கள். புறாவை வளர்த்து போட்டிகளுக்கு அனுப்பி பந்தயம் வைத்து பணம் பார்க்கிற கூட்டம். சென்னையிலிருந்து சிலசமயம் மும்பை வரை கூட பறக்கவிடுகிறார்களாம். 2000 கி.மீ தொலைவை ஒரு வாரத்தில் அடைந்து விட்டு திரும்ப பறக்க தயாராகி விடும் என்கிறார்கள்.இயற்கையின் விமானம் என்று தான் படுகிறது. அப்படிப்பட்ட புறாக்கள் நம் வீட்டின் ஒரு திறப்பில் நம்மை எட்டிப் பார்க்கிறபோது மனம் துள்ளவில்லை என்றால் நாம் எத்தனை சிக்கல்களைக் கொண்ட மனிதனாக இருப்போம்? வெகுநேரம் கம்பியில் கால்மாற்றி உலகை புரட்டிப்போடும் பார்வையில் ‘இன்னாபா எதுனா துன்ன இருக்கா’ என்கிற அழகு மதராஸ் மொழியில் கேட்கும்போது’இல்லிங்களே ‘ என கொங்கு தமிழில் நாம் சொன்னால் அதுக்கு புரியவா போகிறது?

வேற்று கிரகவாசியே என அடுத்த கம்பிகளுக்குச் சென்றுவிடும் என்பதால் இருவருக்குள்ளும் பேசிக்கொள்ளாத பார்வை பரிமாற்றங்கள் மட்டுமே நிகழ்த்து கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அதன் சிறகடிப்பின் ஓசையில் மதியம் 12 மணிபோல எழுந்தேன். அதிகாலை தான் தூங்கினேன் என்பதால் நீண்டஓய்வு .

வீட்டு முதலாளியம்மாவின் கண்களில் சிக்காமல் மாடிக்குச் சென்று புறாவை தேடிக்கொண்டிருந்தேன்.  பக்கத்து அடுக்கு மாடி குடியிருப்புகளில் ஒவ்வொரு சன்னல்கள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் சன்னல் தடுப்புகளின்மீது குடும்பமாக வாழ்ந்துவரும் புறாக்களின் காட்சி ஒருகணம் நடைபாதைகளில் தங்களையும் தங்களின் அந்தரங்கங்களையும் மறைத்து வாழத்துடிக்கும் மக்களை நினைவு படுத்தியது. கோயம்பேடு பாலத்திற்கு அடியில் எப்படியும் 100 குடும்பமாவது அப்படி ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அழுக்குதலை, மாற்றலுக்கு வேறில்லை என்கிற உடல், கழிவுகளை கழிவுகளிடமே நேரடியாக கொண்டு சேர்க்கும் துர்வாழ்வு, அடுத்த வேளைக்கு இரண்டு நாட்களுக்கு முன்  செய்த ஏதோ ஒன்று இருந்தால் அதையும் அவர்கள் இல்லாத சமயம் நாய்கள் நக்கி பார்த்திருக்கும் . பின் மனிதன் செய்யக் கூடாத வேலைகளை எல்லாம் செய்து இருநூறோ முந்நூறோ சம்பாதித்துக் கொண்டு புழுதிக்கு வந்து சேர்கிறபோது இரவாகி விடுகிறது. பின்சாலை அனாதையாக நிற்கும் நேரம் வரை காத்திருந்து பரட்டைத்தலையுடன் மண்ணைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்தபடி துயில் கொள்கிற குழந்தைகளை தூக்கி வேறு இடத்தில் வைத்து விட்டு ம னைவியை தட்டி எழுப்பி உடலைத்தணித்து உறங்கச் செல்லும்போது தொடையில் சாக்கடைக் கொசு கடித்தால்  “கோத்தா’ என்கிற வார்த்தையோடு அதை தட்டி வீசி விட்டு அடுத்த நாளை வரவேற்க வேண்டும்.

யோசித்துப் பார்த்தால் ஒருபுறாவின் வாழ்விற்கும் நமக்கும் பெரிய வித்யாசங்கள் இல்லை. அதே பிறப்பு,வளரும் பருவத்தில் ஒரு கூடு, இறக்கைகள் முளைக்கத் தொடங்கியவுடன் கூட்டிலிருந்து விரட்டப்படும் கூத்து, வானத்தை பார்த்து பழகியபின் இணையைத் தேடும் காலம். பின் இனப்பெருக்கம்,பின் தன் பிள்ளைகளுக்கு கூட்டில் வைத்து சீர்செய்கிற வாழ்க்கை, அதுகளுக்கும் இறக்கை முளைத்தவுடன் கூட்டைவிட்டு வெளியே தள்ளுகிற வெறி, கிடைத்தால் நல்ல உணவு இல்லையென்றால் தேங்கிக் கிடக்கும் நீர் . அத்தனை தானே நம் வாழ்க்கையும் ?

என்ன ஓன்று நாம் இடைப்பட்ட தொலைவில் ‘மனிதன்’ என்கிற ஆணவத்தோடு இருக்கிறோம். அவற்றுக்கு அது இல்லை. ஒரு கூட்டைக் கட்டினால் வாழ்வை வென்ற மகிழ்வில் சுற்றித் திரிக்கிறோம்,  அடுத்தவன் அறையை எட்டிப் பார்த்து’ நாலு காசு சேத்துவை’ என்கிற உலக ம்வியக்கும் அறிவுரையை வழங்குகிறோம். நம்மைவிட நாலுகாசு அதிகம் வைத்திருப்பவனை ‘ பிராட்’ என்கிறோம். இல்லாதவனை ‘முட்டாள்’என்கிறோம். ஆனால் எதைப்பற்றியும் சிந்திக்காத இருசிறகுளை மட்டுமே வைத்துக் கொண்டு வாழ்நாளை முடித்துக் கொள்ளும் ஒருபறவையைப் பார்த்தால் எப்படி இருக்கிறது? எனக்கு ஏக்கமாக இருக்கிறது. என்னதான் நமக்கு கலை, வாழ்க்கை, ஞானம், விடுதலை என இருந்தாலும் ஒரு மழைக்குத் தாக்குப்பிடித்தால் போதும் என்கிற வாய்ப்பு இல்லை.ஒவ்வொரு நாளும் மழைதான் . எல்லாவற்றையும் கடக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தால் மற்ற விஷயங்களுக்கான நேரம் ?

தொடர்ந்து சிலநாட்கள் அப்புறாவின் வருகை கத்தியால் எதையோ கீறிப்பார்க்க ஆசைப்பட்டதை ஒருநாள் அதன் நொண்டிய காலின் உதறல் அடையாளப்படுத்தியது. ஒரு பறவை சிந்திக்கும் மனிதனுக்குள் ஏற்படுத்தும் அசைவு மிகப் பெரியது. பூமி நிரம்பிய காற்றின் எடைக்கும் நூறுகிராம் இல்லாத இறக்கைகளுக்கும் நடக்கிற போரில் மெல்லிசை குரலுடன் பறவை வென்றுவிடுகிறது. மறுபுறம் அது வைத்திருக்கிற சுதந்திரம் நம்மை கீழே வீழ்த்தக்கூடியது. ஒரு நொடி மின்னி மறைந்ததைப்போல சித்தப்பாவின் முகம் அத்தனை தெளிவுடன் நினைவிற்கு வந்தது. தளர்ந்து படுக்கையில்அமர்ந்தேன்.

அப்பாவைப் போல் சித்தப்பாவும் ஆட்டோதான் ஓட்டிக்கொண்டிருந்தார் . அப்பா உயிருக்கு போராடிக் கொண்டிருத்த நிலையில் சித்தப்பாவிடம் தான் முதலில் சொன்னேன். அதுவரை நாங்கள் பேசிக்கொண்டதில்லை.சொன்னபோது இரவு11 மணி திருப்பூரிலிருந்து திருச்சூருக்கு காலையில்தான் கிளம்ப முடியும் என நினைத்தேன். ஆனால் சொன்ன அரைமணி நேரத்தில் ரயில் பிடித்து அடுத்த நாள் அதிகாலை பனியில் அந்த மருத்துவமனையின் வாசலில் என்னை நோக்கி காத்திருந்தார்.  இரவு அவர் உட்கொண்ட தூக்கமாத்திரைகளின் தாக்கம் அப்போதும் அவரை வீழ்த்த துடித்துக் கொண்டிருந்தது.  உள்ளே கசப்புடன் அவரைக் கொண்டு சென்று அப்பாவிற்கு பக்கத்தில் இருந்த ஒரு படுக்கையில் படுக்க வைத்தேன். சில மணி நேரங்கள் கழித்து எங்களை வெறித்துப் பார்த்து விட்டு மருத்துவரிடம் அப்பாவின் நிலைமையை அறிந்து கொண்டு கலங்கிய விழியுடன் எனக்கு ஆறுதலைச் சொல்லி மதியம் கிளம்பினார். ஆனால் அன்றிரவே அப்பா இறந்து விட்டார். தேம்பித் தேம்பி அழுவதை தவிர வேறு ஒன்றும் தெரியாத பிள்ளை சித்தப்பாவிடம் மட்டும் ‘சித்தப்பா ..அப்பா ..வந்து..’ என தடுமாறும்போதே அவர் அங்கு உடைந்து அழுது விட்டார். அடுத்த நாள் உறவுகள் சூழ அப்பாவை அனுப்பி வைத்தோம். ஒவ்வொருவராக கிளம்பினர். சித்தப்பா என்னிடம் நான் இருக்கவா?என்றார். உடன்பிறந்த அண்ணனின் இறப்பிற்கு வந்த தம்பி நான் இருக்கவாஎன கேட்டதும் உறவுகளின் மீதான கசப்புகளை எத்தனை தூரம் இவர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள் என வேதனைப்பட்டுக் கொண்டேன்.  பின்துயரங்கள் அடங்கிக் கொண்டிருந்த இரண்டாவது நாளில் சித்தப்பாவை கள்ளுக்கடைக்கு அழைத்துச் சென்றேன். நன்றாககுடித்தார். நான் ஒரு சொல் கூட இல்லாமல் பாரதபுழாவின் கரையில் அமர்ந்து மழையால் செந்நிறம் கொண்ட நீரை பார்த்துக்கொண்டிருந்தேன். வாழ்க்கையில்’இனி அடுத்தது என்ன?’ என இளமையின் அருகில் துயரங்களின் பிடியில் இருப்பது எத்தனை கொடியவை என்பதை அனுபவித்துக்கொண்டிருந்தேன்.  மேலே குடித்துக் கொண்டிருந்த சித்தப்பாஒரு சிறிய தள்ளாட்டத்துடன் என் அருகே வந்து அமர்ந்தார். அத்தனை உறுதியான கரங்களில் என்னைப் பற்றிக்கொண்டு ‘மகனே நான் இருக்கேன்’என்றார். விழிகளில் ஈரம் பார்க்க அவரைக் கட்டிகொண்டேன்.

அடுத்தநாள் ‘எனக்கு ஒரு சின்ன வேலை இருக்குடா’ என்று திருப்பூர் கிளம்பினார். இறந்த வீட்டில் எத்தனை நாள் இருப்பார்கள் என ஒரு பக்கம் நினைந்துக்கொண்டாலும் அப்பாவின் நினைவுகளால் நான் மேற்கொண்டு அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை ஆனால் இரண்டு நாட்கள் கழித்து முகத்தில் முன் எப்போதும் இல்லாத தெளிவுடன் பாலக்காடு வந்தார். என்னைத் தனியாக அழைத்து அவ ர்வைத்திருந்த முப்பதாயிரம் பணத்தைக் காட்டினார். நூறுக்கும் இருநூறுக்கும் தள்ளிக்கொண்டிருக்கிற வாழ்வில் முழுதாக சில ஆயிரங்கள். எனக்கு தெரிந்து அவருடைய வாழ்வில் அவர் பார்க்கும் இன்னொரு பெரியதொகை. எங்கிருந்து இத்தனை பணம் உங்களுக்கு என்றேன்.  ஒன்றுமே சொல்லாமல் அவர் என்னை அழைத்துக்கொண்டு ஒருஆட்டோவை வாடகைக்குப்பிடித்துக் கொண்டார். நகருக்கு வெளியே இருந்து உள்ளே செல்லும் வழிகளில் பார்க்கிற இடங்களில் லாட்டரிகளை விற்றுக் கொண்டிருந்த கடைகளில், மாற்றுத்திறனாளிகளிடம் என தேடித்தேடி லாட்டரிகளை வாங்கினார். எதோகொஞ்சம் வாங்குகிறார் என நினைத்தால் ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டத்தின் மீதிருந்த பரவசம் வெறுப்பாகும் வரை அவர் பைகளில் வண்ணக்காகிதங்களை நிறைத்துக் கொண்டிருந்தார்.இறுதியில் ஒருமணிநேரத்திற்கு பின்   20000 ரூபாய்க்கு லாட்டரிகளை வாங்கித்தீர்த்தார் ஒருலாட்டரியின் விலை 30 ருபாய் என்றால் இருபதாயிரத்திற்கு எத்தனை கிடைத்திருக்கும் என நினைத்துக் கொள்ளுங்கள். அப்பாவிட்டுச் சென்ற சின்னச் சின்ன கடன்கள் என்னுடைய சுயமரியாதையுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் சித்தப்பா இதை செய்தது என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

பையை ஒரு பக்கமாக வைத்துக் கொண்டு கள்ளுக்கடைகுள் புகுந்து போதை ஏற்றிக்கொண்டு வெளியேவந்தவரிடம் கடுமையான வார்த்தைகளில் கேட்டபோது’ டேய் என்னால தினமும் சம்பாதிச்சு உன்ன காப்பாத்த முடியாது. அதுனால ஆட்டோவை வித்துவிட்டேன். இத்தனை டிக்கெட் இருக்குல்ல ஒன்னுல விழுந்தாக்கூட உன்ன கரை சேர்த்து விட்ருவன், வா’    என அதே இரும்புக் கரங்களில் என்னைப் பற்றிக் கொண்டு நடந்தார். அவர் மேல் வைத்திருந்த அத்தனை கீழான எண்ணங்களும் சரிய உடல் மரத்து உணர்ச்சிகளில் நடந்து கொண்டிருந்தேன்.

பின் மதிய உணவை முடித்து விட்டு லாட்டரி முடிவு வெளியான நேரத்தில் பைகளில் இருந்து லாட்டரி சீட்டுகளைக் கொட்டி ஒவ்வொன்றாக சரிபார்த்தோம். கடைசி நான்கு இலக்கம், முதல் ஆறு இலக்கம்,  சீரியல் எண் என மூன்று மணி நேரம் வியர்க்க அமர்ந்து பார்த்தால், நம்புங்கள் ஒரு ருபாய் கூட விழவில்லை. ஒருபக்கம் தொண்டை அடைத்து அமர்ந்திருந்த எனக்குகண்ணீரே வந்து விட்டது.சித்தப்பா தலையைக் கவிழ்த்துக் கொண்டார். சிலமணி நேரங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. பின் எழுந்து சென்று என்னைத்தட்டி எழுப்பி கள்ளுக்கடைக்கு அழைத்துச்சென்றார் இரண்டு பாட்டில்களை கவிழ்த்தினார். நான் திரும்ப ஆற்றில் கரையில் அமர்ந்து அருகே இருந்த தழைகளை கிள்ளி வீசிக் கொண்டிருந்தேன். சித்தப்பா அருகே அழைத்தார். ‘டேய் ..விடு இப்ப என்ன வேற ஆட்டோ வாங்கறது கஷ்டமா? பாத்துக்கலாம்  ..என்ன” என்ற வரைப ரிதாபமாக பார்த்தேன்.அந்தக் கண்கள் தூக்கத்தை தவிர வேறு எதையும்அறியாதது. பாவம் என்கிற சொல்லை அவருக்காக வைத்திருந்ததால் மனம்நொந்து கொண்டு ”  சித்தப்பா என்னை இங்கயே விட்று நான் புழுபூச்சியாக ஊர்ந்தாவது வாழ்க்கையில் வந்து விடுவேன். தூக்கிட்டு அலையாத, உனக்கும் குடும்பம்,  புள்ள இருக்கு’ என்றேன். ‘புள்ள இருக்கா? அப்ப நீ யாருடா தாயோளி” என கன்னத்தில் வைத்தார்.

நாட்கள் சென்றது ஒருவரை விட்டு ஒருவர் இல்லை என்கிற நிலைக்கு வந்தோம். இரு உயிர்கள் அன்பை மட்டுமே அனுபவிப்பதற்கு காலத்திற்கு விருப்பம் இல்லை என்பதால் வாழ்க்கை தன்னுடைய கொடூர பக்கத்தை திருப்பியது.  சித்தப்பாவின் தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரிய அடி . எழுந்து நிற்க முடியாத நடை பிணமானார். நினைத்து நினைத்து வேதனைப்பட்டார். என்னால் முடிந்த அளவிற்கு அதிலிருந்து அவர் மீள போராடிக்கொண்டிருந்தேன். தடுமாற்றம் நிறைந்த அந்தநாட்களில்குடி ஒன்றேதீர்வு என்கிற நிலைக்குச்சென்றார். தடுக்கச் செல்லும் போதெல்லாம் என்னை கடும்சொற்களால் தீண்டி அலைக்கழித்தார். பலநாட்கள் அவரைத்தேடித்சென்று என்னமனநிலையில் இருக்கிறார் எனப்பார்த்துக் கொண்டிருந்தேன். வருடக்கணக்காக அவர் உட்கொண்ட மாத்திரைகள் அவரை உடைத்துக் கொண்டிருந்தது. பார்க்கும்போதெல்லாம் தற்கொலை மனநிலையில் எந்நேரமும் இருப்பதாக சொல்லிக்கொண்டிருப்பார். போதையில் இருக்கிறார் எனநகர்ந்து கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் சித்தப்பா செய்து கொண்டிருந்த செயல்கள் முகம் சுளிக்கும் நிலைக்கு வர ஒருநாள் இனி இவரை தாங்கும் பலம் நமக்கில்லை என அவரிடமிருந்து ஒட்டு மொத்தமாக விலகிக்கொண்டேன்.சாலையில் மதுக்கடையில் என அவர் பார்க்கும் ஆட்களிடம் எல்லாம் செல்போனில் என்னை அழைத்துக்கொண்டிருந்தார்.  எத்தனை எண்களிலிருந்து அழைத்தாலும் அத்தனையும் ப்ளாக்கில் போட்டேன்.

ஒரு கட்டத்தில் இருவரின் உரையாடலும் இல்லாமல்ஆனது. நாட்களைக் கடந்து மாதங்களை நோக்கிச்சென்றது.  திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் எங்காவது அமர்ந்திருப்பார் தூரத்தில் நின்றாவது அந்த முகத்தைப் பார்த் துவிடலாம் என கல்லூரி முடிந்து இரவு அவரைத் தேடிச் சென்றேன். எங்கும் கண்ணில் சிக்கவில்லை.மறுபக்கம் எனக்கும் வாழ்க்கை என்னை மறக்காதே என அடிகளை கொடுத்துக் கொண்டே வந்தது. இறுதியாக இலக்கியம் எனும் மாபெரும் காலவெளிக்குள் நுழைந்தேன். பித்துபிடிக்க வாசித்துக்கொண்டிருந்த நாட்கள் எல்லாவற்றையும் மறக்கச் செய்தது.சித்தப்பா எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் எந்த தகவலும் இல்லை. சொந்தக் குடும்பத்தால் கைவிடப்பட்டு எங்கெங்கோ அலைந்துதிரிகிறார் என சிலர் சொல்லி கேள்விப் பட்டதோடு சரி.

அடிக்கடி அவர் இறந்து விட்டார் என்கிற செய்தி வந்து கொண்டே இருந்தது அடித்துப் பிடித்து போனால் எங்களை ஏமாற்றி சிரித்துக் கொண்டிருப்பார்.  இறுதியாக ஒருநாள் வகுப்பில் இருக்கும் போது சித்தி அழைத்து ‘சித்தப்பாசெத்துட்டார்’ என்கிற தகவலைச் சொன்னார். எந்த பதற்றமும் அடையாத அளவிற்கு மனம் பக்குவப்பட்டிருந்தது. அங்கிருந்து கிளம்பி சித்தியின் ஊரான கள்ளக்குறிச்சிக்கு சென்றேன். நீண்ட பயணத்தில் அவரின் நினைவுகள் பெரிதாக என்னை ஆட்கொள்ளவில்லை . இத்தனை நாள் வாழ்வுடன் மாரடித்துக் கொண்டிருந்தவனுக்கு ஒருவிடுதலை.இனி அவனுக்கு நேற்று இன்று நாளை எதுவும்இல்லை. இறந்தது எனக்கு ஒருபக்கம் நிறைவைதான் தந்தது. உடலை வெளியே வைத்திருந்தார்கள். 10 பேர் சுத்தி நிற்க ஈக்களை விரட்ட கூட ஒருவருக்கும் விருப்பமில்லை. அப்படி ஒரு அற்புதமான வாழக்கையை நடத்திக் கொண்டிருந்தார்.  ஆனால் அதுவரைஎ னக்கிருந்த அசட்டுத்துணிவு அவரை நெருங்கியதும் உடைய ஆரம்பித்தது. ஒரு வெட்டுக்கிளியை படுக்கவைத்திருந்ததுபோல இருந்தது அவர் உடல்.உள்ளம் துடிதுடிக்க ஆரம்பித்தது. எண்பதுகிலோ எடையைக் கொண்ட அந்த கனத்த கரங்களை என்மேல்போட்டு ‘நான்இருக்கிறேன்’ என்ற சித்தப்பாவின் உடல் 30 கிலோ கூட தேறாத இந்த எலும்புக்கூடா என் சித்தப்பா? கால்கள் நடுக்கம் கொள்ளத் தொடங்கியதும் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். எத்தனை முயற்சி செய்தும் இடுப்பிற்கு கீழ்மரத்துக்கிடந்த என்உடலை அசைக்கக்கூட முடியவில்லை. வெகுநேரம் கழித்து தூக்கிக்கொண்டு போய் நானே மகனாக நின்று எல்லா சடங்குகளையும் முடித்துவைத்து பின்னிரவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நீண்ட பயணத்தில் பெரிய தன்னிரக்கத்திற்குச் சென்றேன். வாழ்க்கைக்கு எதுதான் நிலை?சித்தப்பாவிடம் பேசி ஒரு வருடம் இருக்கும். சாகும் நாளுக்கு முன் என்னிடம் பேச ஆசைப்பட்டார்.பேசிக் கொண்டிருந்த அம்மா போனை நீட்டினார். முறைத்துப்பார்த்து விட்டு சைகையில் தங்கையிடம் இணைப்பைத் துண்டிக்கச் சொன்னேன். அந்த நினைவு பல நாள் என் தூக்கத்தைக் கெடுத்தது.இப்படிக்கூட ஒருத்தனுக்கு நடக்குமா? இந்தப்பாவத்தை எங்கு கொண்டு கழிப்பேன்?

தனித்துவிடப்பட்ட ஒருவன் அன்பிற்காக இன்னொருவனை தேடிவந்து நிற்கிறபோது உதாசீனப்படுத்துவது எவ்வளவு பெரியஅநீதி . அதை நான் செய்தேன் என நினைக்கும் போதெல்லாம் மீள முடியாத குழிக்குள் சென்று கொண்டிருந்தேன். ஒரு தகப்பன் நம்மைக் கொன்றான்பதிலுக்கு இன்னொரு தகப்பனை நாம் கொல்கிறோம். உறவுகள் எப்போதும் சிக்கல் விழுந்த வலைதான். அந்த சிக்கலை எடுக்க நமக்கு நேரமில்லை என்கிற திமிரில் அவர்களை அணுகுவதில்லை. ஆனால் யாரை விலக்கினோமோஅ வர்கள் அதைவிட பலநூறுமடங்கு விசையுடன் நினைவுகளாக எழுந்து வருகிற காலம்உண்டு. அப்போது சிக்கல் கொண்ட வலை நம்மை மூடிக்கொண்டு ‘இப்போது சிக்கல் எடு’ என்கிறது. எப்படி எடுப்பது? பின் அவரைப் பற்றி வந்த தகவல்கள் என்னை மேலும் உடைத்துக் கொண்டிருந்தது. எல்லாரிடமும் என்னை மகன் என்றிருக்கிறார்.சிலரிடம் பணத்தைக் கொடுத்து எனக்கு கொடுக்கச் சொல்லியிருக்கிறார். அவர்கள் மறுத்ததை பின்னாட்களில் சொன்னபோதும் காசநோய் தாக்கி உடல் உருகி ஒரு காலை நொண்டிக்கொண்டு அவர்பிச்சை எடுத்துக்கொண்டிருந்த செய்தி தெரியவந்ததும் என்னை மேலும் சீரழித்துக்கொண்டிருந்தது.நினைவுகளை கடப்பது மிகப்பெரிய சவால். கொஞ்சம் கொஞ்சமாக அந்தகசப்பில் இருந்து வெளி வந்தேன்.

வாழ் திரைப்படத்தில் ஒருகாட்சி. வயதான ஒருவர் நாயகியின் மகனுக்கு ஒரு கதை சொல்வார். புறாவைப்பற்றி .  அவருடைய அப்பா புறாக்களை வளர்த்து பந்தயங்களுக்கு அனுப்புவார். எந்ததுயரிலும் வளர்த்துகிற புறாவை விற்கக்கூடாது என்கிற உறுதியில்இருப்பவர். ஆனால் ஒரு கட்டத்தில் பஞ்சம் வந்து பசி குடலை உருவுகிற காலத்தில் அவற்றை விற்பார். அப்போது குழந்தையாக இருக்கும் அந்த முதியவர். தனக்கான ஒருபுறாவை மட்டும் நேசத்துடன் வளர்த்தி வருகிறார்.  அதுவும் அவர் கையைவிட்டுச் செல்கிறது. மனிதன் அன்பிற்கு சாகிறவன்இல்லையா? அதனால் சிறுவன் உருகித்துடிக்கிறான். இனி அது திரும்பி வரவாய்ப்பில்லை என்கிற நிலையில் ஒருநாள் பள்ளிமுடிந்து வருகிற வழியில் அதே புறா நடந்து வருகிறது. சிறுவன் அடங்க முடியாத மகிழ்ச்சியில் அப்புறாவை நெருங்குகிறான். எங்கோ ஐம்பது மைல்களுக்கு அப்பால் விற்கப்பட்ட புறாவை வாங்கியவன் அது பறந்து விடக்கூடாது என்பதற்காக இறக்கைகளை வெட்டி அதன் வானத்தை அதனிடம் இருந்து பிடுங்கியிருந்தநிலையில் ஆகாசத்தை கனவில் சுமந்து கொண்டு நம்பிக்கையுடன் அது கால்கள் தேய்ந்து, ரத்தம் சொட்டச் சொட்ட நடந்து வந்திருக்கிறது. அதை பார்த்த சிறுவன் அதை நினைத்து தன்னுடைய 80 வயதில் உடைந்து அழுகிறான். காலம் முழுக்க வளர்த்திய சொந்தப்பிள்ளைகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஒரு முறை கூட பார்க்க வருவதில்லை.

அந்த உறவுகளின் நேசம் இல்லாத போது சிலதானியங்கள் போட்டதற்காக தன்மேல் அளவுகடந்த பிரியத்தை வைத்து அவனுக்காக இறக்கைகள் போனபின்பும் கால்களை வைத்துக்கொண்டு வந்துசேர்ந்த அதன் அன்பு எத்தனைபெரியது? மனிதர்களிடம் நாம் இதை எதிர்பார்க்கவே முடியாது. நான் இருக்கிறேன் என்பவனே’  இவனுக்காக நாம் எதற்கு இருக்கவேண்டும்’ என்கிற மனநிலைக்கு மாற ஒருநொடி போதும் .இதோ என்சித்தப்பா இந்தப்புறாவைப் போல கால்கள் தேய என்னைத் தேடி வந்து கொண்டிருந்தார். தானியத்திற்குதான் வருகிறது என்கிற கேவலமான கணக்கைப் போட்டுவிட்டேன்.

மனிதனிடம் இருக்கும் பல கெட்ட குணங்களைவிட அவனுக்குள் இருக்கிற ‘ஆணவம்’ மகா சில்லறைத்தனமான ஓன்று. அதில் தான் என் சித்தப்பாவை இழந்தேன். கையில் 10 ருபாய் அதிகமாயிருந்தாலும் மறைத்து விட்டு நானே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என திரியும் மனிதர்களுக்கு மத்தியில் சோறு போட்ட ஆட்டோவை விற்று விட்டு உன்வாழ்க்கைக்காக என வந்து நின்றான் பார் அவன் நாளும் நினைத்து உருக வேண்டிய தெய்வம் இல்லையா? நினைவின் தீ எப்போதும் அணைவதில்லை. இந்த அறையில் இருக்கும் புறா அந்தத் தீயை இன்னும் ஊதிப்பார்க்கிறது.

அறிமுக எழுத்தாளர்.

இயற்பெயர் – சிவ சங்கர் (24)

சொந்த ஊர் – திருப்பூர்

பொறியியல் பட்டதாரி

தற்போது சென்னையில் ஊடகத்துறையில் பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *