இலக்கியம் சார்ந்து கோவை நகரை குறைத்துப் பேசக்கூடிய சில டெல்டா எழுத்தாள நண்பர்களுக்கு எதிர்வினையாகவே இதை எழுதுகிறேன். இலக்கிய வாசிப்பு, படைப்பிலக்கிய பங்களிப்பு என்பவற்றை யோசிக்கும் முன் முதலில் கம்பர் கோவையை எந்த அளவிற்கு அறிந்து வைத்திருந்தார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
கோவை இந் நகரொடு எண் குறிக்கலாத அத்
தேவர் தம் நகரியைச் செப்புகின்றது ஏன்
யாவையும் வழங்கு இடத்து இகலி இந் நகர்
ஆவணம் கண்டபின் அளகை தோற்றதே. (59 –கம்பராமாயணம், பாலகாண்டம், நகரப்படலம்)
மேற்படி கம்பரின் கூற்றைப் பாருங்கள். கம்பருக்கு கோவையின் ரியல் எஸ்டேட் மதிப்பு கூட நன்கு தெரி்ந்திருக்கிறது. அதன் ஆவணங்களை ஆயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே ஞானக் கண்ணால் பார்த்திருக்கிறார். தேவர்களின் நகரான அமராவதியும் குபேரனின் அளகையும் கூட கோவையுடன் ஒப்பிடத்தக்கது அல்ல என்கிறார். (என்னடா லாரி மாலன், மன்னாதி மன்னன், டீலர் பாக்சர் போன்ற யாராலும் மறுத்துப் பேசவே இயலாத ஒரு பேரறிஞரை இந்த கட்டுரையின் வாயிலாக எதிர்கொள்கிறோமோ என்ற அய்யம் உங்களுக்குத் தோன்றலாம். இல்லை நான் அவ்வளவு பெரிய அறிஞன் எல்லாம் இல்லை…என்னை நானே எழுத்தாளன் என நம்பத் தொடங்கிவிட்ட எளிய ஒருவன் மட்டுமே)
கோவை தொழில் நகரம், வள்ளன்மை கொண்ட பலரைத் தோற்றுவித்திருக்கிறது….சரி அதெல்லாம் கிடக்கட்டும் இலக்கியத்திற்கு என்ன? என்று கேட்டால் அதற்கு முன்பு தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.
பெருமளவில் இலக்கியங்கள் தோன்றுவதற்கு சில புவியியல் காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக பெரும் ஆறுகள் பாய்ந்து பெரிய அளவில் விவசாயம் நடக்கும் நிலப்பரப்பு மிகுந்த இலக்கியப் படைப்பிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக ஆகின்றது. நிலப் பிரபுத்துவம், உபரி என்று அதற்குள் விரிவாகச் செல்ல விரும்பவில்லை.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை விவசாயம் என்பது வரலாற்றில் சமீபத்தியது தான் (குறிப்பாக நெல் விவசாயம்). நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் நீர் ஆதாரங்கள் உள்ள இடங்கள் எல்லாம் வேளாண்மைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். சான்றாக பெரிய நாயக்கன்பாளையம், நரசிம்ம நாயக்கன் பாளையம் என்று ஏராளமான நாயக்கன் பாளையங்களாக உள்ள ஊர்கள் அல்லது கிராமங்கள் எல்லாம் பசுமையானவை. விவசாயம் நடைபெறுபவை. நாயக்கன் பாளையங்களுக்கு முன்னதாக ஊர்கள் பெரும்பாலும் பட்டிகளாகவே இருந்தன. உதாரணமாக இன்றும் காளப்பட்டி, வேடப்பட்டி, சரவணம்பட்டி. பட்டி என்று குறிப்பது இம்மாவட்டம் பெருமளவில் மேய்ச்சல் நிலமாகவே இருந்தது என்பதை காட்டுகிறது. அதிக மக்கள் தொகையில்லாத, பசுமையான மேற்குத் தொடர்ச்சி மலைகளின் கீழான பரந்த புல்வெளியாகவே இந்த நிலம் இருந்தது. நொய்யல், பவானி போன்ற ஆறுகளின் கரையில் இருக்கும் ஊர்களைத் தவிர பிற பெருமளவில் வறண்ட மேய்ச்சல் நிலங்களே தவிர விவசாய பூமி அல்ல.
நிலம் வழங்கும் வாழ்க்கையே அந்த நிலத்தின் இலக்கியத்தைத் தீர்மானிக்கிறது. மக்கள் தொகை குறைந்த, நெருக்கம் இல்லாத. சொல்லாடல்கள் குறைந்த சூழல் இங்குள்ள மனிதர்களுக்கு அக்காலம் முதல் என்ன மாதிரியான மனதைத் தந்திருக்குமோ அதற்கு தக்கவாறு தானே இலக்கியமும் இருக்க முடியும்? பழைய இலக்கியங்கள் குறிப்பாக பேரிலக்கியங்கள் எங்கு தோன்றின என்பதை கவனிக்க வேண்டும். விவசாயம் மனிதர்களை ஊர்களில் மிகுதியாக வைத்திருந்தது. தேவைப்படும் போது வயல்களில் இறங்க வேண்டும். மேய்ச்சல் மனிதர்களை சிதறிப் பரந்திருக்கச் செய்வது. வெண்முரசு நாவல்களில் இந்த புவியியில் வேறுபாடுகளும் அதன் அரசியல் பாண்பாட்டு விளைவுகளும் விரிவாக அலசப்படுகின்றன.
பண்பாட்டு, மதம் சார்ந்த அம்சங்களில் கூட எது எங்கு ஏற்கப்படுகிறது என்று கவனிக்க முடியும். மஹாவீரர் பீகாரைச் சேர்ந்தவர். ஆனால் இன்று கங்கை பாயும் பீகாரை விட வறண்ட ராஜஸ்தானும் குஜராத் பகுதிகளுமே சமணத்தைக் கைக்கொண்டிருக்கிறது. சமணத்தின் திகம்பரம் கங்கை நீர்வெளியை விட வறண்ட நிலத்திலேயே அதிக பொருத்தமும் ஏற்பும் பெறமுடியும். வெண்முரசில் இளைய யாதவன் யமுனை, கங்கை பாயும் நிலத்திற்கும் துவாரகை என்னும் கடற்புறத்திற்கும் பாலைநிலத்திற்கும் என மூன்றிற்கும் உரியவன். அது வேறு.
கோவிலும் கலை இலக்கியமும் நீரோட்டத்தைச் சார்ந்தவை. கீழைச் சிதம்பரம் என்று அழைக்கப்படும் கோவையின் பேருர் பட்டீஸ்வர் கோவிலும் நொய்யல் ஆற்றின் கரையில் தான் உள்ளது.
கங்கை சமவெளியில் கூட சமீபத்திய இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புகளை, நாவல்களை வழங்கியது வங்காளம் தான், பீகாரோ உத்திரப்பிரதேசமோ அல்ல. வங்காளம்– கங்கையின் டெல்டா – கங்கைச் சமவெளியின் பிற பகுதிகள் அல்ல. நீரின் ஆடல் இருக்க வேண்டும். எப்போதும் மிகுதியாக உணவளிக்கும் இடமும் அல்ல எப்போதும் மிகக் குறைவாக உணவளிக்கும் இடமும் அல்ல. மிகுதியாக அளிப்பதும் ஒன்றுமில்லாமல் செய்வதும் – செழிப்பையும் நம்பிக்கையையும் அதேசமயம் அச்சத்தையும் நிலையின்மையையும் – இரண்டையும் நீரே அளிக்கும் நிலங்கள். நிரந்தர வீரமும் அல்ல நிரந்தர அச்சமும் அல்ல. அப்படியான நிலம் இலக்கியச் செயல்பாட்டை பெரிது வளர்க்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. நவீன இலக்கியத்திற்கு வங்காளம் என்று சொன்னாலும் மகாபாரத்ததை உருவாக்கியது வங்கத்திற்கு முன்னதான கங்கைச் சமவெளிதான். நவீன இலக்கியத்தைப் போலல்லாமல் அதன் தத்துவக் கலவை வேறு. புத்தரும் மஹாவீரரும் பீகாரில் தான் தோன்ற முடியும்.
கோவையின் இலக்கியப் பங்களிப்பாக ஒரு பட்டியலைத் தரமுடியும். எழுத்தாளர்கள் திலீப்குமார், எம். கோபாலகிருஷ்ணன், தேவிபாரதி, சு. வேணுகோபால், சுப்ரபாரதிமணியன், மோகனரங்கன் என நீண்டு செல்லும். (அவர்களில் இன்னின்னாரெல்லாம் கோவையே அல்ல என்று நண்பர்கள் சொல்லக் கூடும். அப்படி பார்த்தால் டெல்டாவினுடைய எழுத்தாளர்கள் அனைவரும் டெல்டாவினுடையவர்கள் என்று சொல்முடியுமா? தெலுங்கு, மராத்தி என்றெல்லாம் பூர்வீகம் தேடிப் பேசமுடியுமா?
சரி பிரச்சினையை இப்போதைக்கு சுமுகமாக முடித்துக் கொள்ள விரும்புவோம். டெல்டாவும் அல்ல கோவையும் அல்ல தமிழ்நாட்டின் ஆகச் சிறந்த இலக்கிய பங்களிப்பை நல்கியது குமரி மாவட்டமே.
