நினைவோடையில் நீந்தும் மீன்கள் 8 – கார்வண்ணம்

வயது கூடக் கூட தனிமையும் கூடுகிறது. நாற்பது வயதிற்கு மேல் ஆணின் வாழ்வில் இறங்கு முகம். அடைய வேண்டியவற்றின் பட்டியல் மிகச் சுருங்கி விடுகிறது. அடைந்தவற்றின் வெறுமைகளால் நீடிக்கும் வெறிப்பு. அதீத வேகத்தில் ஓடிவந்து வென்றவை எவை என்று திரும்பிப் பார்த்தால் ஏமாற்றங்களின் முடிவிலா வரிசை. லௌகீகத்தின் சுமைகள் அழுத்த, நுகத்தடி அன்றாடத்தை இழுத்துச் செல்கிறது. கடமைகளும் பொறுப்புகளும் ஆயுளுக்கும் நீண்டு கிடக்கின்றன. நண்பர்கள் மட்டுமின்றி உறவினர்களும் அந்நியமாகிப் போகிறார்கள். அரிதாக சில விதிவிலக்குகளைத் தவிர்த்தால், பெரும்பாலும் சுயநலமே வாழ்நாள் லட்சியம் என்ற முடிவினை வந்தடைந்த ஈரமற்ற மனங்கள்.

கட்டாரி மாமா அம்மா வழியில் நெருங்கிய உறவினர். என்னைவிட நான்கு வயது மூத்தவர். அம்மா வழி உறவினர்களுக்கு பிதுரார்ஜிதமான அங்க லட்சணங்கள் உண்டு. திகைப்பை உண்டாக்கும் அடர் கறுப்புச் சேர்மானம் குடும்ப அடையாளம். உதடுகள் கூட கறுத்து நாவல் பழம் போன்று ஒளிரும். கருவறை கற்சிலையின் உறைவு. மாமாவும் அப்படித்தான். எலும்புகள் வெளித்தெரியும் மெலிந்த தேகம். கன்னங்கள் ஒட்டிய, நெஞ்செலும்பு துருத்திய பதினைந்து வயது சிறுவனாக அவரின் உருவம் மனக்குகையில் இன்னும் இருக்கிறது.

இள நரை, ஓயாத வயிற்று வலியினால் கடுமை கெட்டித்த முகம்.  வயிற்று வலி ஏன் வந்தது என்று கண்டறிய முடியவில்லை. மாதத்தில் பாதிநாள் அவரை வயிற்று வலி வதைக்கும். அந்த வலி பதின்பவருத்தின் குணக்கேடுகளாக அவரில் உருமாறிவிட்டது. அவருடன் அலையும் அரூப இருப்பு. அவரை இயக்கும் உந்துவிசையும் கூட. வேறொரு நோக்கில் உள்ளே இருந்து உடற்றும் ஒவ்வாமை. அது தான் பத்தாம் வகுப்பை பாதியில் நிறுத்திற்று. தொட்டதெற்கெல்லாம் முன்கோபம் காட்டும் நரம்பு மண்டலத்தை உண்டாக்கிற்று. அதி பயங்கர நினைவாற்றலை வழங்கிற்று. எதையும் அங்கதப் படுத்தும் சாதுர்யத்தை பழக்கிற்று.

மிகை என்றால் கூட பெரும்பகுதி உண்மை. தெருப்பையன்கள் அத்தனைப்பேரும் அவரிடம் அறைகள் வாங்கியிருக்கிறோம். வயதில் மூத்தவர்கள்  தப்பியிருக்கலாம். அவர் செட்டு பையல்கள் அனைவரையும் சிம்பன்சி கரங்களால் அறைந்திருக்கிறார். “ல்லே..கட்டாரி“ என்ற விளி அவரை ஆவேசம் கொள்ள வைக்கும். யோசிப்பதே இல்லை. உடனே கன்னத்தில் ஓங்கி ஒன்று. எல்லை மீறியதே இல்லை. ஒன்று என்றால் ஒன்றேதான். அந்த ஒன்றே சகலமும். அறையின் ஓசையும் சற்று ஓங்கியே ஒலிக்கும். காற்றில் கை சென்ற தடம் நிலைத்திருக்கும். அந்த அறைக்கு பிறகு அவரிடம் மேலும் மல்லுக்கட்டும் எண்ணம் எதிராளிக்கு ஏற்படாது. மோகினிப்பேயிடம் அடிவாங்கிய பெரும் பீதி. சூழலே ஒரு கணம் திகைத்து நிற்கும்.

இராயகிரியில் இருந்து புளியங்குடி பாட்டி வீட்டிற்கு விருந்தாடி வருவேன். பெருமிதமும் கொண்டாட்டமும் நிறைந்த நாட்கள் அவை. இரண்டொரு நாள்களே இருக்க வாய்க்கும் என்பதால் தெருப்பையன்களோடு அதிகம் பழக முடியவில்லை. நகரத்துப் பையன்கள் கிராமத்துப் பையன்களை ஒதுக்கியே வைத்தார்கள். கோமாளிகள் என்று நினைப்பு. நடை உடை பேச்சின் கொச்சை என்று அவர்களிடம் இருந்து நான் தனித்தே தெரிந்தேன். நகரத்துப் பையன்கள் அறிந்த பலவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. கிரிக்கெட், கைமுட்டி, சைட் அடித்தல், பஸ் பயணங்களில் பெண்களின் பின் நெருங்கி நின்று எர்த் போடுதல், கைலிகளுக்குள் மறைத்து வைத்து மஞ்சள் பத்திரிகைகள் வாசித்தல், வாடகைக்கு டி.வி. டெக் எடுத்து எக்ஸ் படங்கள் பார்த்தல், கூட்டாக சுய மைதுனம் செய்தல், உதடுகளின் உட்புறம் பான் மசாலாக்கள் வைத்தல், தம் அடித்தல், காதலிகளுக்காக தெருமுனை பெட்டிக்கடைகளில் ஒற்றைக்காலில் தவித்துக் கிடத்தல், சைக்கிள் ஓட்டுதல், டக் இன் செய்தல், புரோட்டா சால்னாவில் தன்னிலை மறத்தல், திருநங்கைகளை சம்போகித்தல் என பரிச்சயமற்ற பெரு மணல் வெளி. கட்டாரி மாமாதான்  அந்த பொன்னுலகத்தின் உள்ளே என்னை கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.

அந்நாட்களில் கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையே பெரிய இடைவெளி.  கண்டடைந்து பரவசம் கொள்ள நகரத்தின் சந்துகளுக்குள் பல்வேறு உலகங்கள் ஒளிந்து கிடந்தன. முதல் ஆச்சரியம். சினிமா. டூரிங் டாக்கீஸ்களின் நிதான அரவணைப்பில் கிராமங்கள் துயின்று கொண்டிருந்தன. ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளின் கூடாரம். மணல் கும்மட்ட இருக்கைகள். மரப்பெஞ்சுகளின் இரண்டாம் தர வகுப்பு. –மூட்டைப்பூச்சிகள் நிச்சயம் உண்டு – தனித்தனி சேர்களின் வரிசை மிக உயர் ரக வகுப்பு. இரண்டாகப் பகுக்கப்பட்டு இடையே மண் சுவர். தாவிக்குதிக்க தோதான அரண். கண்களால் பேசிக்கொள்ள, இரவுக்குறிகளை அனுப்பிட, இற்செறிப்பு தணிக்க அவை பயன்பட்டன. முறுக்குகளையும், முட்டைப் போண்டாக்களையும், வறுத்த நிலக்கடலைப் பொட்டலங்களையும் விநியோகிக்க வாகான உயரம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பகுதிகள். மாலைக்குப் பிறகு இரண்டு காட்சிகள். இரண்டாம் ஆட்டத்திற்கே ஆட்கள் அதிகம் வருவார்கள். வயல்வேலை, வீட்டு வேலைகள் முடிந்த பின்னர் இராச்சாப்பாட்டை உண்டு முடித்து, “மருதமலை மாமணியே முருகையா“ கூம்பு வடிவ ஒலிபெருக்கி ஒலிக்கக் காத்திருப்பார்கள். கறுப்புக்கோடுகள் அலையும் பின் நவீனத்துவப் படங்கள் பார்க்கச் சலிப்பாக இருக்கும். ஒரே டிக்கட்டில் மூன்று படங்கள் என்ற பம்பர் பரிசுகளும் உண்டு. அவ்விதம் முதல் படமாக பார்க்க நேரிட்ட வேலி தாண்டிய வெள்ளாடு என்றொரு படம் இன்றும் நினைவில் நிற்கிறது அதில் வரும் படுக்கை அறைக் காட்சிகளுக்காக. நாயகியின் திரண்டு உருண்ட தொடைகளுக்காக.

 புளியங்குடியில் அன்று அம்மையப்பா, கண்ணா என்று வடக்கேயும் தெற்கேயும் இரண்டு தியேட்டர்கள். கான்கிரீட் கட்டுமானங்கள். மலைப்பாம்பை ஒத்த, ஓராள் மட்டுமே நிற்க வாய்க்கும் ஒடுங்கிய கவுண்டர்கள். தலைக்குமேலே புறாக்கூண்டுகளை நடித்த இடைவெளிகள். அதன்வழியே காற்று பீறிட்டு உள்ளே வரும்.  அடைந்துகிடந்து நாறும் மனித உடல்களின் கவிச்சியில் இருந்து ஆறுதல் படுத்தும். கால்வைக்க கூசும் செந்நிறக் குழம்புச்சிதறல். அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் துப்பியிருப்பார்கள். காத்திருந்த வேளைகளில் சிற்பியின் கைகள் தோன்றி சுவர்களில் புடைப்புச் சிற்பங்களை உண்டாக்கும். நாணயங்கள் உளிகளாகும். ஒரு கை மட்டுமே உள்ளே சென்று வெளியே வர வாய்ப்புள்ள இரும்புக் கூண்டு. கம்பியிட்ட சன்னலுக்குப் பின்னே டிக்கெட் விற்பவர் புகை மூட்டமாகத் தென்படுவார். சில நாட்களில் ஒரு டிக்கட்டிற்கு மேல் கேட்டு வாங்க முடியாது. அவரும் அதிகாரம் மிக்க ஓராள். ஆளே இல்லாத கவுண்டர்களைக் கண்டால் கொண்டாட்டம்.

அந்நாட்களில் கட்டாரி மாமாதான் என் ஆதர்சம். நான் பத்தாம் வகுப்பு முடித்து மேற்படிப்பிற்காக பாட்டி வீட்டிற்கு வந்த பின்னர் அவரிடம் கூடுதல் நெருக்கம். அவர் பயின்ற பள்ளியில் என்னைச் சேர்த்தார்கள். அம்மா, பெரியம்மா, அக்காள் , நான் இன்று என் மருமகன் என்று மூன்று தலைமுறைகளாக தொடரும் பந்தம். கட்டாரி மாமாவின் பழைய சீருடைகளே என் உடுப்புகள். முதல் நாள் அரைக்கால் ட்ராயரோடு பதினொன்றாம் வகுப்பு சென்றேன். அப்பு என் பட்டப்பேர். அப்புவைப் போல குட்டைப்பையன். எல்லா வகுப்புகளிலும் முதல்பெஞ்ச் மாணவன். பதினொன்றாம் வகுப்பிற்கு பேண்ட் அணிந்து வரவேண்டும் என்பதே சென்ற பின்னர்தான்  தெரிந்தது. கட்டாரி மாமா பத்தைத் தாண்டவில்லை. வாத்தியாரை எதிர்த்து வாதாடி விட்டதாகக் கேள்வி. அறைந்திருந்தாலும் நம்ப வேண்டியதுதான். அவரிடம் பேண்ட் இருக்கவில்லை. அவரின் பழைய புத்தகங்கள்தான் என்னுடை பாட நுாற்கள்.

படிப்பை கைவிட்டதால் கட்டாரி மாமாவிடம் வேறு பல திறன்கள் வளர்ந்தன. அவரின் வீடே அந்நாட்களில் ஒரு தீம் பார்க். விதவிதமான விளையாட்டுப் பொருட்கள். தாயக்கட்டை, பரமபத படங்கள். பாம்புகளின் பிளவுண்ட நாவுகள் இரவுகளில் பதறி எழச் செய்தன. பொன்வண்டுகள் என்று சில பூச்சிகளைச் சிறைப்படுத்தி வந்து தீப்பெட்டி போன்ற பெட்டிகளில் அடைத்து வளர்ப்பார். அதற்கென்று விசேட இலைகளைப் பறித்து தீனியாக அளிப்பார். லாட்டரிச்சீட்டுகளை சேகரித்து செல்வம் போன்று பொதிகளாக சுமந்தலைவார். கோலிக்குண்டுகள் பவளங்களைப் போல அவரின் சேகரிப்பில் ஒளிர்ந்தன. ஆக்கர் வைத்து பம்பரங்களை தெறிக்க விடுவதில் சமர்த்தர்.

விதவிதமான சிகரெட் பாக்கெட்டுகளை அள்ளி வந்து அவற்றை செவ்வகமாக வகுந்து கிழித்து சினிமா படங்களின் பெயர்களை எழுதி வரிசையாக அடுக்கும் ஒரு விளையாட்டு. மாமா வீட்டிலே சோனி டேப் ரிக்கார்டர் இருந்தது. பெரிய மாமா ரஜினியின் தீவிர ரசிகர். நாட்டுக்கொரு நல்லவன் படத்தின் பாடல்களைக் கூட நாள்தோறும் ஒலிக்க விட்டுக் கேட்பேன். அரி மாமாவிற்கு மார்க்கெட்டில் பலசரக்குக் கடையில் வேலை. பொட்டலம் கட்ட கடைக்கு வரும் பழைய பேப்பர் புத்தகங்களில் இருந்து மாத நாவல்களை மட்டும் தனியே எடுத்து வீட்டிற்கு கொண்டு வருவார். நுாற்றுக்கணக்கான மாத நாவல்கள் சேகரிப்பில் இருந்தன. அறைக்குள் அமைக்கப்பட்ட ரகசிய கிடங்கிற்குள் அவற்றைப் பத்திரப்படுத்தி வைப்பார். அவையே ஆரம்ப கால வாசகனாக என்னை வளர்த்தெடுத்தன. அப்போதுகூட ஆர்னிகா நாசரின் எழுத்துக்கள் என்னைக் கவரவில்லை. கட்டாரி மாமாவிற்கே அவை எவையும் கவரவில்லை. பாடல்களை அவர் விரும்பிக்கேட்டதையும் நான் கண்டதில்லை.

கட்டாரி மாமா எலக்ட்ரிகல் கடையில் வேலைக்கு இருந்தார். பாய் சர்வீஸ். ஒன்றரை இஞ்ச் விட்டம் கொண்ட குழாயை சுய இன்ப கருவி என வெற்றிகரமாக எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை எனக்கும் சொல்லிக் கொடுத்தார். அவர் கற்றுக்கொடுத்தவற்றில் இன்றும் நான் தொடரும் பழக்கம் அது ஒன்றே. பத்துமணிக்கு மேல் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்புவார். பத்தில் ஆரம்பித்து பத்தில் முடியும் வேலை நேரம். மாறாத மெனுவாக தண்ணீர்விட்ட சோறும் காய்கறிகளே தென்படாத குழம்பும். பெரும்பாலும் சாம்பார். அல்லது புளிக்குளம்பு. தட்டிற்குள் விரல்களால் அலைந்து நீரலைகளை எழுப்பி ருசித்து உண்பார். உள் அறைக்குள் பாய்விரித்துப் படுப்போம். மட்டப்பா குத்திய வீடு. கோடைக்கு இதமாக இருக்கும். இரவில் மூட்டைப்பூச்சிகள் குருதி தேடி ஒளிந்து திரியும். டம்ளர் தண்ணீரில் அவற்றை மிதக்க விட்டு சாகடிப்போம். உள்ளுறை உவமம் போன்று அவை வாழும் பொந்துகளை ஒற்றறிந்து கண்டு பிடிப்பது அந்நாளைய சாகசம். மாமா அருகில் படுத்துக்கொண்டு சமீபத்தில் பார்த்த சினிமாக்களை தத்ரூபமாக விவரிப்பார். அவரின் கதைசொல்லித்திறன் அன்று என்னை மிகவும் கவர்ந்தது. நாளை மனிதன், அதிசய மனிதன் என்று ஒரு சீரியல் கில்லர் படத்தை அவரின் வாயிலிருந்து கேட்ட நினைவு என்றுமே மறைந்து விடுவதில்லை.

அவர் என்னை ஒரு சீடனைப் போல நினைத்திருக்கலாம். விசுவாசி என்று நம்பியிருக்கலாம். அவரின் சொற்களை நான் மீறக்கூடாது என்ற எதிர்பார்ப்பும் அவரிடம் இருந்திருக்கலாம். அதை ஒரு நாள் நானே தீயை மிதித்த கொந்தளிப்போடு அறிய நேரிட்டது. அது ஒரு பின்மாலைப் பொழுது. மாமாவிற்கும் விடுமுறை நாள்.. அப்போதெல்லாம் சினிமா பட விளம்பர போஸ்டர்கள் பார்த்துத்தான் தினசரி சினிமாக்களை தெரிந்துகொள்வோம். இன்றே இப்படம் கடைசி என்பது ரசிகர்களின் மீது தியேட்டர்கள் கொண்டிருந்த பெருங்கருணை. கண்ணா தியேட்டருக்கு மாஸ்கோ கடை எதிரே காந்தி பஜாருக்குள் கிளை பிரியும் பாதையின் ஆரம்பத்தில் பெரிய விளம்பர போர்ட் உண்டு. அதன் கீழே வசந்தி சைக்கிள் கடை. தென்காசி கொல்லம் தேசிய நெடுஞ்சாலைதான் அன்றும். சினிமா பட போஸ்டரை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். தெற்கே தெருவில் இருந்து இறங்கி ரோட்டின் இடது புறமாக கட்டாரி மாமா நடந்து வந்தார். என் அருகே வந்து நின்று அவரும் அன்றைய சினிமாவை எச்சில் விழுங்கி, பருகினார்.

“சாயப்பட்டறை வர போய்ட்டு வரலாம்.வா”

நான் சற்றும் யோசிக்காமல் ”வர்ல” என்று சொல்லி சினிமா போஸ்டரில் உலவிக் கொண்டிருந்தேன்.

கண்களின் முன்னே  பூச்சிகள் பறந்தன. காது மடல்களில் திடீர் கார்வை. ஜிவ்வென்று வலது கன்னத்தில் ஒரு அறை. கதறி அழுது கொண்டே தெருவைப் பார்த்து ஓடினேன். மாமா அசரவில்லை. மனம் வருந்தி, தவித்து பின்னால்  ஓடி வந்து ஆற்றுப்படுத்த வில்லை. வடக்கே வேகமாக நடக்க ஆரம்பித்தார் சிந்தாமணியை நோக்கி.

கட்டாரி மாமாவின் “அறைகொடு படலம்“ ஊருக்குள் மிகப்பிரபலம். மச்சான் முறையுள்ளவர்கள் அவரை அதற்காகவே சீண்டுவதுண்டு. அறுவை என விலகி ஓடி ஒளிய வைக்கும் சில தனித்தன்மைகள் மாமாவிடம் இருந்தன. அவரின் நினைவாற்றல் அபாரமானது. ஒன்பதாம் வகுப்பில் படித்த தாவரவியல் விலங்கியல் பெயர்களை எப்போது கேட்டாலும் மிகச்சரியாக சொல்வார். குமுதத்தில் ஒருமுறை ஜப்பானிய மொழியில் ஐ லவ் யூ என்பதை எப்படிச் சொல்ல வேண்டும் என்று தமிழில்  எழுதியிருந்தது. அதோடு கூடவே சில அறிமுக உரையாடல்களும். மாமா அதை நீண்ட நாட்கள் சொற்கள் பிசகாமல் பேச்சின் இடையே கலந்து விடுவார்.

இன்றும் அவருக்கு அந்த நினைவாற்றல் தொழில் ரீதியாக பயன்படுகிறது. மாமாவிற்கும் காதல்களும் காதலிகளும் இருந்தனர். மிகப் பின்னாட்களில் அவரை வடிவேலு என்று அழைத்துப் பெருமைப்படுத்துவோம். ஒரு விதத்தில் அவரின் வாழ்வு எனக்கு பொறாமை அளிப்பது. பிறந்ததில் இருந்து அவர் ஒரே தெருவில் ஒரே ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். புளியங்குடி நகரத்தின் நாற்பத்தைந்து வருட வரலாறு அவரையும் சேர்த்தே. என்னைப் போன்றே அவருக்கும் வீட்டை விற்க வேண்டிய நெருக்கடி பங்காளிகள் மூலம் வந்தது. அவர் தெளிவான முடிவை எடுத்து, பூர்வீக வீட்டை விற்பதற்கில்லை என்று மறுத்துவிட்டார். ஓட்டுச்சாய்ப்பும் மட்டப்பா உத்தரங்களும் கொண்ட பழைய வீட்டை இடித்து பங்கு பிரித்து, தன்பங்கில் இன்று புது வீட்டையும் கட்டிவிட்டார்.

அவரிடம் எந்தவித அக உலகச் சஞ்சலங்களும் வெளிப்பட்டதே இல்லை. முற்றாக புற உலகம் சார்ந்தவை மட்டுமே அவர் வாழ்வின் பேசுபொருட்கள். ஊர் சுற்றும் விரும்பமும், பேரழகிகளின் அருகாமையும், விதவிதமான உணவுகளும் அவரின் ஏக்கங்களாக முன்பு இருந்தன. இன்றோ குடி ஒன்றே அவரைச் சுண்டி இழுக்கும் தக்கையின் முள். புதுமைப்பித்தனின் மனித யந்திரம் மற்றும் பால்வண்ணம் பிள்ளை என்ற இரண்டு சிறுகதைகளும் அவருக்காக எழுதப்பட்டவை. முப்பதாண்டுகளாக ஒரே வழித்தடம். காலையில் எட்டு மணிக்கு குறைந்து பள்ளியெழுச்சி கொள்வதில்லை. இரவு ஒரு மணியைத்தாண்டினால் மட்டுமே படுக்கைக்குச் செல்வது. தமிழ்நாட்டிலேயே தொண்ணுாறு விழுக்காட்டு ஊர்கள் இனிமேல்தான் பார்க்க வேண்டியவை. அவரின் சொந்த ஊரையாவது முழுதாக அறிந்திருப்பாரா என்பதே ஐயந்தான். அறச்சீற்றமோ, அரசியலில் ஒரு பக்கச் சார்போ, சினிமாவின் பெரும் மயக்கமோ அவரிடம் இல்லை. இவையெல்லாம் பாதிக்காமல் ஒரு மனிதன் எப்படி உயிர் வாழ முடியும் என்று நான் அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் எண்ணி வியந்திருக்கிறேன். தீவிரமான பக்திமான். குலதெய்வங்களை ஆண்டுதோறும் வணங்கி வருகிறார். குல தெய்வத்திற்கு இடும் படையல்கள் பன்மடங்கு திரும்பி வரும் என்கிற நம்பிக்கை கொண்டவர். கை நிறைய செலவு செய்ததை பார்த்ததில்லை. அதைப் போல கை நிறைய சம்பாதித்தவரும் அல்ல.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சம்பளத்திற்கு கையாள் வேலையில் இருந்து வருகிறார். இரண்டோ மூன்றோ இடங்களுக்கே மாறியுள்ளார். விட்டு வந்த இரண்டு கடைகளும் அவரின் முன் கோபத்தால் கைவிட நேர்ந்தவை. ஒரு கடையின் முதலாளியை ரோட்டில் நின்று கற்களைக் கொண்டு எறிந்ததாக் கேள்வி. என் அம்மாவின் வீட்டை விற்க நேரிட்டபோது அவரோடு மனஸ்தாபம் ஏற்பட்டது. கொஞ்ச நாட்கள் ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்து பேசிக் கொள்வதில்லை. “நான் பார்த்து வளர்ந்த பய, என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலையே“ என்ற மனக்குறை. நானும் பல ஆண்டுகள் கரூர் வேலைக்குச் சென்று ஊர் நீங்கி அந்நியன் ஆகிவிட்டேன்.

கால்நுாற்றாண்டு வனவாசத்திற்கு பிறகு சென்ற ஆண்டு புளியங்குடிக்கு இடம் பெயர்ந்தேன். நான் வாடகைக்கு இருந்த தெருவிற்கு அருகேதான் அவர் ஒரு கடையில் வேலை பார்த்தார். பார்த்தால் தலையசைத்து புன்னகைப்பது என்ற அளவில் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. வளர்ந்து பெரிய ஆளாகி விட்டான் என்று அவர் என்னைப் பற்றி எண்ணியிருக்கலாம். நானே பெண் தேடி அந்நியத்தில் திருமணம் செய்து கொண்ட பிறகு, அப்படியே என் தாய்வழி  உறவினர்கள் என்னை ஒதுக்கி வைத்தார்கள். வீட்டை விற்றதும் எஞ்சிய பந்தங்களும் அறுந்து போயின. பாட்டியின் மறைவினைத் தொடர்ந்து உறவினர்களுக்கும் எனக்கும் இருந்த மெல்லிய கண்ணி நிரந்தரமாக அறுப்பட்டது. நான் அதற்காக என்றுமே வருந்தியதில்லை. ஒவ்வொரு ஆதரவுச் சீட்டிற்கு கீழும் விலைச்சீட்டு உள்ளது என்று எங்கோ வாசித்திருந்தேன். அனுபவப்பட்டும் இருந்தேன்.

கட்டாரி மாமா பார்க்கும் போதெல்லாம் சரக்கடிக்க கூப்பிடுவார். ஓய்வு நாட்கள் சரக்கடிப்பதற்கு உரியவையே. அதற்கு ஒத்திசைவானவர்களே அவரின் நண்பர்கள். அவரின் மகிழ்ச்சி குடி ஒன்றில் மட்டுமே நிலை கொண்டிருந்தது. சினிமா அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. ஒரு மனிதன் குடியையே தன்னுடைய வாழ்நாள் கொண்டாட்டமாக மாற்றிக்கொள்வது அத்தனை சிறந்ததுதானா? எனக்கு அது ஒழுக்கம் சார்ந்த பதற்றத்தை அளித்ததில்லை. பொருளாதாரம் மற்றும் உடல் நலம் சார்ந்த கவலைகளை எழுப்பியது. அவரோடு சேர்ந்து குடிப்பது திகில் ஊட்டும் நிகழ்வு. ஒரு ஆப் போத்தலை ஒரே நேரத்தில் உள்ளே தள்ளுவார். பருந்துப் பாய்ச்சல்தான். நாற்பதைத் தாண்டிய பின்னரும் அவரின் குடித்தேட்டம் தீவிரம் அடைந்து கொண்டேதான் வருகிறது. குடிப்பதற்கு முன்னர் முன்னேற்பாடாக சில மாத்திரைகளை போட்டுக்கொள்ள பரிந்துரைப்பார். அத்தனையும் டாஸ்மாக் வகைகள். அவர் அடுக்கும் பெயர்களை நான் அப்போதுதான் புதிதாக கேள்விப்படுவேன். எனக்கு மிகப்பிடித்த லெமன் பகார்டியில் சமீப நாட்களில் அவர் ஆர்வம் குன்றாதவராக இருக்கிறார்.

புளியங்குடியை வெறுக்க நேரிட்ட காரணங்களில் ஒன்று சிறப்பான குடிச்சூழல் அமையாமையும்தான். ஊருக்கு வெளியே இரண்டு மூன்று டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. கடைகளின் முன்னே வரிசையில் நிற்பதோ, கவுண்டர் கூட்டத்தில் முண்டியடிப்பதோ என்னால் ஆகாது. எனவே உயர் ரக பார்களை விரும்புகிறவனாக மாறியிருந்தேன். புளியங்குடியில் அதற்கான வாய்ப்பே இல்லை. கேட்ட சரக்கும் கிடைப்பதில்லை. எலைட் கடை வேண்டுமென்றால் பாளையங்கோட்டை முருகன் குறிச்சிக்கு வரவேண்டும். கட்டாரி மாமாவை இரண்டொரு முறை திருநெல்வேலி ஜங்சனில் உள்ள பார்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். ஆச்சரியம் தாளாமல் பயபக்தியோடு எல்லைகளை மீறிக்கொண்டே இருப்பார். ஒருமுறை நாகர்கோவில் செல்லும் வழியில் நெல்லையில் இறங்கினார். கலெக்டர் ஆபிஸ் அருகில் நல்ல பார் ஒன்று இருக்கிறது. அழைத்துச்சென்றேன். இரண்டுபேரும் சேர்ந்து முக்கால் புல் காலியாக்கியிருப்போம். மாமாவிற்கு எழுந்து வர மனமே இல்லை. நாகர்கோவில் சென்று அங்கேயும் தொடர்ந்திருக்கிறார்.

 நானோ மெல்ல மெல்ல குடியில் இருந்து பின்வாங்கிவரும் மனநிலைக்கு வந்தடைந்துள்ளேன். குடி நிகழ்ந்த இரவுகள் பெரும் தொல்லையாகிப் போயின. செரிமானக் கோளாறுகள் தோன்றி துாங்க முடியாமல் ஆயிற்று. விடிந்ததும் ஏற்படும் கேங் ஓவர் ஒரு முழுநாளை பலி கேட்டது. மூலம் சீறிப் பாய்ந்து ஒருவார காலத்திற்கு அவஸ்தைகளை உண்டாக்கிற்று. அவை எல்லாவற்றையும் விட வேறொரு காரணம் என்று நான் நினைப்பது. இலக்கியமே என்னுடைய பெரும் போதை என்று. அதற்கு முன்னர் பிற அனைத்தும் ஒருமட்டு கீழேதான்.

கட்டாரி மாமாவை வைத்து ஒரு நாவல் எழுதுவது மிக எளிதான காரியம். முத்து தெருவின் முப்பதாண்டுக்கால வளர்சிதை மாற்றம் கொண்டதாக அந்நாவல் இருக்கும். என் பால்யத்தில் அறிந்த முத்து தெரு அல்ல இன்றிருப்பது. தெருவிற்குள் போகவே மனம் சங்கடம் கொள்கிறது. இரண்டு லாரிகள் ஒரே நேரத்தில் சென்று வரும் விதத்தில் அகன்று விரிந்த தெரு. நடுவே இண்டர் மீடியன் போன்ற மண் மேடு. இரண்டு புறமும் தறிப் பாவாற்றியதால் உண்டான பசைப் பாட்டைகள். அவற்றின் விளிம்பில் இரண்டடி அகலம் கொண்ட ஆகாய கங்கைகள். எங்கள் தெரு நிலத்தின் கருப்பொருளில் பன்றிகளே பிரதான விலங்குகள். ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவிற்கு செல்லும் முடுக்குகள் இருந்தன. பன்றிகளின் ஏழாம் உலகம். நகராட்சியின் குடிநீர் குழாய்கள் முற்றதின் குழிகள் தோண்டப்பட்டு உள்ளே சீறிப் பாய்ந்து குடங்களை நிறைத்தன. இன்று பாதித் தெருவைக் காணவில்லை. வாசல்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கதியை அந்த தெருவின் கதையை விரிவாக எழுதினாலே அறிந்து கொள்ளலாம். ஒரு புளியமரத்தின் கதை என்பதைப் போல ஒரு தெருவின் கதை. இரண்டு தெருக்களில் நிறைந்திருந்த ஈழுவக்குடி இன்று ஒரு தெருவிற்குள் ஒரு சில வீடுகள் என குறைந்துவிட்டது.  பால்யத்தில் பிரமிப்பாகத் தென்பட்ட அத்தனையும் சிறுத்து புள்ளிகளாக மாறி சாதாரணத்துவத்தை அடைந்ததைப் போல கட்டாரி மாமாவும். முத்து தெருவைப் போலவே கட்டாரி மாமாவிற்கும் என்னை உண்டாக்கியதில் முக்கியப் பங்கு உண்டு. ஒவ்வொரு முறையும் புளியங்குடியை கடந்து செல்லும்போதெல்லாம் முத்துதெருவை எட்டிப் பார்க்காமல் செல்வதில்லை. அந்தத் தெருவில் பலநுாறு ஆசைகளோடு அழைந்த என் பால்யத்தின் பிம்பங்கள் தென்படும். அதைப்போலவே கட்டாரி மாமாவையும் நினைவுப்படுத்திக் கொள்வேன். கலைகளின் மீது காதல்களை விதைத்தவர்.

எதிர்நிலையாக அவருடைய வாழ்வில் பெரிய கொண்டாட்டங்களோ பரவசங்களோ இல்லை. இணை போல பெரிய சிக்கல்களோ, கொந்தளிப்புகளோ கிடையாது. சாதாரண வாழ்வை மிகச் சாதாரணமாக வாழ்ந்து தீர்க்கும் எண்ணற்ற மனிதர்களில் அவரும் ஒருவர். மனைவி, மகன், சொந்த வீடு என சாதாரணமாக அமைய வேண்டிய அனைத்தையும் பெற்றவர் என்ற முறையில் ஒரு நிறைவு அவரிடம். மீதி நாட்களை அந்த நிறைவோடு அவர் வாழ்ந்து தீர்த்தால் நான் மிகவும் மகிழ்வேன். தீராது அல்லறுகிறவனின் வாழ்வு சபிக்கப்பட்டது. அவை அவனை ஞானி என்று ஆக்கிய போதும்.

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  1. ஒரு நாவல் படிக்கும் அனுபவம் அமைகிறது. தொடர்ந்து எழுதுக! மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!