நினைவோடையில் நீந்தும் மீன்கள் -10.உறை உள்

            வைத்தியர் சித்தப்பாவின் வீடு விலைக்கு வருவதாகச் சொன்னார்கள். பேரத்திற்கு வந்து ஆறுமாத காலம் ஆன பிறகே என் காதிற்கு அந்த செய்தி கிடைத்தது. பிள்ளை இல்லா சொத்து. சொந்த ஊரில் சொந்த வீடு என்ற ஆசையில் எதையும் யோசிக்கவில்லை. விலையும் வாங்கும் தோதில். பன்னிரெண்டு லெட்சம். ஒரு தனிநபர் கடன் வாங்கி தவணை முறையில் கடனை அடைத்தால் முடிந்தது.

         வீடோ ஒருதலைமுறைப் பழசு. இரண்டு செண்ட் இடம். இடித்து கட்ட வேண்டும். ஊருக்குள் இடம் என்பதே அதில் லாபம். கூடுதல் ஈர்ப்பு என் பால்ய நினைவுகளின் நிலம் என்பதும். ஓயாமல் என் அம்மாவை வம்புக்கிழுத்துக் கொண்டிருந்தவர் வைத்தியர் சித்தப்பா. அதன் வழியாகவே அவர் இன்றும் நினைவில் நிற்கிறார். “என்னலே…உங்கம்மாட்ட வயிறு முட்ட பால் குடிச்சியால?“ இரண்டு கை விரல்களையும் காற்றில் உருண்டை உருட்டிக் கண்சிமிட்டி என்னைப் பார்த்துக் கேட்பார். சுற்றி நிற்பவர்கள் சில்வர் தாம்பாளம் தரையில் விழுந்ததைப் போல ஓங்கிச் சிரிப்பார்கள். இருக்க முடியாமல்  ஓடி ஒளிந்து கொள்வேன். எனக்கே அப்போது அரும்பு மீசை தோன்ற ஆரம்பித்திருந்தது.

      கிராமத்துச் சூழலில் அவை இயல்பே. மாப்பிளை மச்சான் முறை உள்ளவர்கள் பேசுவதை அப்படியே எழுத்தில் கொண்டு வர முடியாது. என் மச்சான் ஒருவர் என்னை எங்கே பார்த்தாலும் வேகமாக வந்து, என் காலிடுக்கை இடது கையால் தடவி அழுத்திவிட்ட பின்னரே “மாப்ள..“ என்று வாத்சல்யத்தோடு அழைப்பார். உள்ளாடை அணியாதிருக்கும் பழக்கம் உள்ளவன் என்பதால் வலி உயிர் போகும். சகோதரிகளைக் குறித்த பாலியல் சீண்டல்களுக்கு எல்லையென்று எதுவும் கிடையாது. பாலியல் கற்றதே அவ்விதந்தான். மயினிகளை, கொழுந்தியாக்களை வம்புக்கிழுப்பது ஈவ் டீசிங் ரகத்தில் சேராது. அவர்களும் சளைத்தவர்கள் அல்லர். இதற்கென்றே மஞ்சள் நீராட்டு என்ற பெயரில் விழா ஒன்று உண்டு. இப்போது அதைக் கடைப்பிடிக்கிறார்களா என்பது தெரியவில்லை. பங்குனிப் பொங்கல் கோவில் திருவிழாவின் கடைசி நாள் கொண்டாட்டம். மஞ்சள் கரைத்த தண்ணீரை செம்பில் கோரி எடுத்து மச்சான், மாப்பிள்ளை முறை உள்ளவர்கள் மீது விசிறி அடிப்பார்கள்.

     திருமணமாகி பத்தாண்டுகள் குழந்தையில்லாத என்னைப் பார்க்கும் போதெல்லாம், மயினி முறையுள்ள ஒருவர் ”என்ன கொழுந்தனாரே..ரயில்வே கேட் ஒழுங்கா துாக்குதா…“ என்று கேட்பார். மற்றொரு வயதான மயினி அவர்கள் வீட்டுக்கு எப்போதாவது செல்லும்போது “துாமையைக் குடிக்கிக்கு இப்பத்தான் வீட்டுக்கு வர்ற வழி தெரிஞ்சதாக்கும்” என்று செல்லமாகக் கோபித்துக் கொள்வார்.

           வைத்தியர் சித்தப்பாவின் வீடு தெரு மத்தியில் இருந்தது. வடக்குப் பார்த்த வாசல் கொண்டது. எழுபதுகளில் கட்டப்பட்டிருக்கலாம். செங்கல் கட்டிடம். செம்மண் சுவர்கள். என் பத்துவயதைப் போல அந்த வீடே கதி என்று கிடந்திருக்கிறேன். செவ்வக வடிவ இரண்டு திண்ணைகள். அதில் நான்கு அறைகள். இடையே அங்கணம். தெருவைப் பார்த்து இருக்கும் இரண்டு அறைகளில் ஒன்றில் சமையற்கட்டு. மற்றொன்று வரவேற்பறை. அங்கணத்தைத் தாண்டிய இரண்டு அறைகளில் ஒன்றில் டி.வி. .மற்றொன்றில் படுக்கை அறை. முன் பகுதியில் மட்டப்பாக் குத்தி அதற்கு மேல் வைக்கோல் கூரை. இரண்டாவது பகுதி ஓட்டுச் சாய்ப்பு. இருள் அமர்ந்திருக்கும் அறைக்குள் பெரிய நெற் குதிர். அதில் மாம்பழங்களின் உமிழ்நீர் சுரக்கச் செய்யும் வாசனை. என்னைப் பார் யோகம் வரும் என்று கழுதைப்படம் ஒன்று வாசல் நிலையில் தொங்கும். எப்போதும் ஈரம் மினுமினுக்கும் ஆட்டுரலும், அம்மிக்கல்லும். தினந்தோறும் இட்லி சாப்பிடும் பாக்கியம் பெற்றவர்கள் வாழும் வீடாக அது இருந்தது.

         நெற்குதிரை முழுக்க தானியத்தால் நிரப்பி, வண்ணார்குலத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வந்தார் என்பதற்காக வைத்தியர் சித்தப்பாவின் தங்கையை உள்ளே இறக்கி மூழ்கடித்து குடும்ப மானத்தைக் காப்பாற்றினார்கள் என்ற தொல்கதையும் அவ்வீட்டில் வாழ்ந்தது. வெள்ளி செவ்வாய்களின் நிசிகளில் நெற்குதிரில் இறந்தவள் தணியாத தாகத்தோடு தெருவிற்குள் அலைவாள். சமையற்கட்டுகளில் மூடிவைத்திருக்கும் நீர்த் தவளைகளின் மூடிகள் நலுங்கி தரையில் விழும்.  தண்ணீர் ஊற்றி வைத்திருக்கும் சோற்றுப் பானைகளில் பழைய சோற்றின் அளவு வெகுவாக குறைந்திருக்கும். சலங் சலங் என்று கொலுசுகள் ஒலிப்பதையும் அதைத் தொடர்ந்து நாய்கள் குரைத்து ஓடுவதையும் உற்றுக்கேட்டிருக்கிறேன்.

        தெருவிற்குள் முதல்முதலில் டி.வி.யும், கேபிள் கணக்செனும் வந்த வீடு வைத்தியர் சித்தப்பாவினுடையது. மதியம் மூன்று மணிக்கு புதுப்படம் ஒலி பரப்புவார்கள். சித்தி வாசலை அடைத்துக்கொண்டு நிற்பார். வாசல் அடைபடக் கூடிய விதத்தில் அகலித்த உடம்பு. எப்போதும் கடுகடுப்புதான். குழந்தைகளைக் கொஞ்சிய நினைவே இல்லை. இரண்டு தெரு சிறுவர்களும் அந்த வீட்டில்தான் மொய்த்துக்கிடப்பார்கள். இருபதாண்டுகளுக்கு மேலாக குழந்தைப் பேறு இல்லாததன் வெறுமை படிந்த முகம். அம்மைத்தளும்புகளும் கண்களைச் சுற்றிய கருவளையமும்  அச்சத்தை உண்டு பண்ணும். ஐம்பது பைசா வசூலித்த பின்னரே வீட்டிற்குள் படம் பார்க்க அனுமதி. முழுப்படத்தையும் பார்த்துவிடலாம் என்ற உத்திரவாதமும் கிடையாது. படம் ஓடும் சமயத்தில் மின்சாரம் தடைபட்டால் போச்சு. பார்க்காத சினிமாவிற்கான காசு திரும்ப வழங்கப்பட மாட்டாது. “பிள்ளையா..குட்டியா..எதுக்கு இவ இப்படி ஈவிரக்கம் இல்லாம சின்னப்பிள்ளையோகிட்ட காசைப்புடுங்குதா” என்று பெண்கள் கரித்துக்கொட்டுவார்கள். ஆனால் அவசரத் தேவைக்கு கைமாத்து வாங்க வாய்ப்புள்ள ஒருவராக அந்த சித்தியே இருந்தார். பித்தளைப் பாத்திரங்கள், ,இட்லிக்குண்டான்கள், ரேசன் அட்டைகள் சில சமயங்களில் கல்யாணப் பட்டுப்புடவைகள் கூட அடகுக்குப் போகும்.

        ஐம்பது பைசாக்கள் இன்றி, பெரும்பாலான நாட்கள் சினிமா பார்க்க வாய்ப்பிருக்காது. சித்தியைப் பார்த்தபடியே, கருணையை எதிர்பார்த்து அழத் தயாரான முகத்தோடு  எதிரில் நின்றிருப்பேன். சித்திக்கு அங்கு நான் நிற்கும் உணர்வே ஏற்படாது. பதினைந்து பேர்கள் உள்ளே போனதும் கதவை இறுக்க அடைத்து விடுவார்கள். மூடியிருக்கும் வாசலில் சென்று அமர்ந்து, அடைத்த கதவைத்தாண்டி  வெளியே கேட்கும் ஒலிச்சித்திரத்தை கேட்டபடி அமர்ந்திருப்பேன். அதுவே போதுமானது. எனக்குள் ஒரு வண்ணத்திரை விரியும். அதில் அசல் சினிமாவின் கனவுச்சாயையில் ஒரு கற்பனைச் சினிமாவை வரித்தெடுப்பேன். அதன் தாக்கத்தால் சிரிப்பேன், கண்ணீர் விடுவேன், பாடல் ஒலிக்கக்கேட்டு ஆட்டம் போடுவேன். ராமராஜனின் பாடல்கள் அப்போது என்னைப் பெரிதும் ஈர்த்தன. கதவின் சாவித்துவாரம் வழியே ஒற்றைக் கண்ணால் உள்ளே தெரியும் காட்சிகளில் லயித்து நிற்பேன். சில நாட்களில் சித்திக்கு மளிகைப் பொருட்கள் வாங்கி வர ஆள் தேவைப்படும். அன்று மட்டும் கட்டணம் ஏதும் செலுத்தாமல் பாதிப்படத்தை பார்க்க நேரிடும். நாடார் கடைக்கும் சித்தி வீட்டிற்குமான துாரம் அக்கணங்களில் மட்டும் ஏழுமலைகளாக எழு கடல்களாக விஸ்வரூபிக்கும்.

         வைத்தியர் சித்தப்பாவின் தொழில் வைத்தியம் அல்ல. அவரின் அப்பா பரம்பரை சித்த வைத்தியர். அவரின் வீட்டிற்கு வைத்தியர் வீடு என்பதே அடையாளம். தெருவையே தெக்குத் தெரு என்பதற்கு பதிலாக வைத்தியர்  தெரு என்று  சொல்லுவார்கள். வைத்தியர் சித்தப்பாவின் அப்பா சுந்தரேச பிள்ளையிடம் வைத்தியம் பார்க்க வெளியூர்களில் இருந்தெல்லாம் நோயாளிகள் தேடி வருவார்கள். ஊர்க்கோவிலில் வைத்துதான் வைத்தியம் பார்ப்பார். ஊர்க்கோவில் தென்னைகள் சூழ, புளி,வேம்பு, செம்பருத்தி, நந்தியாவட்டை அரளிச்செடிகள்,நெட்டிலிங்க மரம், துலாக்கிணறு சகிதம் மலர்ந்து கிடக்கும்.

           வைத்தியர் தாத்தாவிற்கு ஒற்றைநாடி உடம்பு. மார்பு ரோமங்களில் சிலவற்றில் மட்டுமே நரை. இடுப்பில் கைத்தறி வேட்டி. தோளில் கலர்த்துண்டு. அவரிடம் காபி கலரில்  பளபளக்கும் மரத்தால் ஆன மூக்குப்பொடி டப்பா ஒன்று இருந்தது, சிறுவர்கள் கிட்ட வந்தால் சட்டென்று மூக்குப்பொடியை நுள்ளி எடுத்து மூக்கு நுனியில் ஈசி விடுவார். அதற்குப் பயந்தே சிறுவர்கள் அவரை அஞ்சுவார்கள். மூச்சுப்பிடிப்பிற்கு மந்திரித்து கை வைத்தியம் பார்ப்பதில் வைத்தியர் தாத்தா பெயர் வாங்கியவர். ஒரு மரத்தின் கம்பினை – எந்த மரம் என்பது இன்று நினைவில் இல்லை- ஓராள் நீளத்திற்கு வெட்டி எடுத்து வருவார். பச்சை மணக்கும் இளந்தண்டு. அதை கத்தியால் இரண்டாக வகுந்து பிசிறுகள் நீக்குவார். மூச்சு விட சிரமப்பட்டு வந்தவரை எதிரே நிற்கச் செய்து அவரின் நெஞ்சிற்கும் தன்னுடைய நெஞ்சிற்கும் இடையே இருக்குமாறு அந்த கம்பினை இணை கோடாக பிடித்துக்கொள்ளச் செய்வார்.

            வாய்க்குள் மந்திரங்களின் உச்சாடனம். ஆளே மாறிப்போய்விடுவார். கண்களில் ஒரு தீவிரம் வந்தமரும். முதுகுத்தண்டு நிமிர்ந்து கொள்ளும். வாய்க்குள் நெறிபடும் சொற்கள் சன்னமாக வெளியே கேட்கும். அவர் மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இணை கோடாக நின்றிருந்த கம்புகளின் மையப்பகுதி காந்தங்களைப் போல ஒன்றுடன் ஒன்றாக ஈர்க்க ஆரம்பிக்கும். ஒருகட்டத்தில் அவை ஆங்கில எக்ஸ் எழுத்தைப் போல மாறிவிடும். சட்டென்று சிகிச்சையை நிறுத்தி அந்தக்கம்புகளை கையில் பிடித்து நான்கு துண்டுகளாக ஒடித்து தரையில் வீசிவிடுவார். வந்தவரால் இயல்பாக மூச்சுவிட முடியும். அவருக்குப் பிறகு அந்த வைத்தியத்தை யார் செய்தும் காண நேரிட்டதில்லை. சொத்துப்பிரச்சினையினால் மனம் தளர்ந்த ஓரிரவில் வீட்டு உத்தரத்தில் தொங்கினார் வைத்தியர் தாத்தா. அவரின் மறைவோடு நெற்குதிரில் மாண்டுபோன அவர் மகள் இரவுகளில் தெருக்களில் அலைந்து திரிவதும் நின்று போனதாகச் சொன்னார்கள்.

              ஒருநாள் மதியம் கார்த்திக், ராதா நடித்த படம் ஓடிக்கொண்டிருந்தது. கோடிக்குள் ஒண்ணுக்கு இருந்துவிட்டுப் போக எழுந்து வந்த சித்தி,  மாரி மயினியை காளி அண்ணன் கோடிக்குள் வைத்து கசக்கிக் கொண்டிருந்ததை திடுக்கிடலுடன் பார்த்து நின்றாள். சிவந்த கன்னமும் எச்சில் உதடுமாக இருவரையும் பிடித்தாள். மாரி மயினி வயசிற்கு வந்து இரண்டு மாதம் ஆகியிருந்தது. பதினாறு வயதில்தான் அவள் சமைஞ்சது. காளி அண்ணன் சித்தாள் வேலைக்குப் போய்வந்து கொண்டிருந்தான். மாரி மயினிக்காகவே ஐம்பது பைசா கொடுத்து டி.வி. பார்க்க வைத்தியர் சித்தப்பா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். வாடிக்கையாக வருகிறவர்களில் வயதில் மூத்தவர்கள் அவர்கள் இருவர் மட்டுமே. எப்போதுமே கடைசியாக வாசல் கல் திண்டில் அமர்ந்திருப்பார்கள். கண்கள் கிறங்க ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொள்வார்கள். எல்லாரும் டி.வி.யில் லயித்திருக்கும் நொடிப்பொழுதில் இருவரும் திடீரென்று காணாமல் போவார்கள். பல நாட்கள் இந்த விளையாட்டு நடந்துகொண்டுதான் இருந்தது. டி.வி.யை ஒட்டி நாற்காலி போட்டு சித்தி தோரணையாக அமர்ந்திருப்பார். அவருக்கு இந்த காதல் லீலைகள் நீண்ட நாட்களுக்குத் தெரியவே இல்லை.

            மறுநாள் அதிகாலையில் முற்றம்ம் துார்க்க எழுந்த சித்தி, வாசல் கதவைத்திறந்து மாடக்குழிக்குள் கோலப்பொடி டப்பாவைத் தேடினாள். ஏற்கனவே தெரு முழுக்க ஆவேசமாக துாத்துக்கொண்டிருந்த கட்டச்சி ஆச்சி காறித்துப்பி “மலட்டு முண்டை கூட்டிக்கொடுத்தும்லா சம்பாதிக்கா” என்று முணுமுணுத்தாள்.

        அதிகாலை தெருச் சண்டையால் ஊர் விழித்துக்கொண்டது. வார இறுதியில் ஊர்க் கூட்டம் கூட்டப்பட்டது. இனி குழந்தைகளை வீட்டிற்குள் அனுமதித்து, சினிமா போட்டுக் காட்டக்கூடாது என்று பஞ்சாயத்தில் தீர்ப்பாயிற்று. காளி அண்ணன் கேரளாவிற்கு கொத்த வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். ஊருக்குத் திரும்பும் போது சுவர்முட்டி குடித்து அலைபாய்ந்த நடையோடு வந்து நிற்பான். மாரி மயினி பள்ளிக்கூடம் செல்வதில் இருந்து விடுதலை பெற்று பீடித்தட்டுமுன் அமர்த்தப்பட்டாள். அந்த காதல் துண்டிப்பிற்கு பிறகுதான் அவளுக்கு அவ்வப்போது சாமி வரத் தொடங்கிற்று. மாரியம்மன் பாட்டோ, கொட்டுமேளம் ஒலிப்பதையோ கேட்டால் போதும் கண்களை உருட்டி நாக்கை உள்ளே மடித்து துருத்தி சாமி ஆடத் தொடங்குவாள். அவளுக்கும் ராமராஜன் பாடல்களின் மீது தீவிரமான பிடிப்பு இருந்தது. போஸ்ட் கார்டில் நேயர் விருப்பம் எழுதிப்போட்டு ரேடியோ முன்பு நாட்கணக்காக காத்திருப்போம். அவளை சொக்கநாதன் புதுாருக்கு இரண்டாந்தாரமாக கட்டிக்கொடுத்தார்கள். சீமெண்ணெய்க் கேனைத்திறந்து நுகர்ந்து பார்த்து பரவசம் அடையும் தினுசான ஒரு பழக்கம் அவளிடம். காலிக்கேனைக் கூட தேடிச்சென்று திறந்து மூக்கின் அருகே கொண்டு சென்று கண்களை சட்சட்டென்று கொட்டி பூரித்துப்போவாள்.

                   அஞ்சடிச்சான் முக்கு இருண்டிருந்தது. அமாவாசை இரவு என்பதைவிட பிள்ளையார் கோவில் முன்னே ஒளிர வேண்டிய தெருவிளக்கு அணைந்து கிடந்தது. அப்போது வீட்டில் கடிகாரம் கிடையாது.இரண்டாம் ஆட்டம் சினிமா முடிந்து ஊர்ச்சத்தம் ஓய்ந்தால் மணி இரண்டு. உத்தேசமாக நேரத்தைக் கணித்து எழுந்திருந்தாள் அம்மா. தளவாய்ப்புரத்தில் கிளம்பி விடியலை வழி நெடுக விதைத்துவிட்டு வரும் கணபதி பஸ் மூன்று மணிக்கு அஞ்சடிச்சான் முக்கினை வந்துசேரும். ஊர்க்கூட்டம் கூடி பஞ்சாயத்தார் நாலாவிதமான கோணங்களிலும் தீவிர ஆலோசனை செய்து இறுதித் தீர்ப்பு வழங்கினார்கள். “ஒருதலைக் காதலாக அம்மாவைச் சுற்றிக் கொண்டிருந்த பெரிய சாமிக்கே இரண்டாம் தாரமாக கட்டி வைத்து ஊர் மானத்தைக் காப்பாற்றிவிட வேண்டும்” என்று முடிவு செய்தார்கள். அன்றிரவு பெரிய சாமியை வீட்டுத்திண்ணையில் கையும் களவுமாக பிடித்து விட்டார்கள். அம்மா மறுத்திருக்கிறாள். உண்மையில் அவளுக்கு பெரிய சாமி மீது எந்தவித ஈர்ப்பும் இல்லை. அவளுக்கும் அவருக்கும் இருபது வயது வித்தியாசம். அப்போதே ஆள் கிழடுதட்டிப் போய்தான் இருந்தார். அப்பாவின் இறப்பிற்கு பிறகு எப்படியாவது அடைந்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பின்னாலே சுற்றித்திரிந்தார். ஒரு சின்ன சதித்திட்டம் தீட்டி அம்மாவை அடைய நினைத்தார். அம்மா உறுதியாக மறுத்தாள். அப்படி என்றால் இனிமேல்  அவள் இந்த ஊரில் வாழ முடியாது. ஊரைக்காலி செய்துவிட்டு, அவளின் சொந்த ஊரான புளியங்குடிக்கு கிளம்பிவிட வேண்டும் என்று பஞ்சாயத்தாரால் அறிவுறுத்தப்பட்டாள். அம்மாவிற்கு இரண்டாவது திருமணத்தை பஞ்சாயத்தார் கட்டாயப்படுத்திய போது எனக்கு வயது பதினைந்து. மங்களாபுரத்தில் படித்துக்கொண்டிருந்தேன். தங்கை என்னைவிட இரண்டு வயது சிறியவள்.

                            தங்கையை தோளில் கிடத்தியபடி இருளுக்குள் நிற்பது ஆறுதலாக இருந்தது, யாரும் அந்நேரத்தில் அடையாளம் கண்டு “எங்கே கிளம்பிவிட்டாய்?” என்று கேட்டுவிடக் கூடாது என்று ஏங்கினாள். அம்மாவிடம் என்ன சொல்வது என்பதே அவளுக்கு குழுப்பமாக இருந்தது. அப்பாவைக் கொன்றதே அம்மாதான் என்று பாட்டி திட்டித் தீர்த்தாள்.  மற்றொரு கையில் மாற்று உடைகள் அடங்கிய துணிப்பொட்டலம். அம்மா அன்றிரவு முழுக்க துாங்கவே இல்லை. கூடு திரும்பிய பறவைகளின் கும்மரிப்பினைப் போல பஞ்சாயத்தாரின் சொற்கள். இருளுக்குள் சுவரில் சாய்ந்து அப்படியே அமர்ந்திருந்தாள்.

                  இராயகிரியில் இருந்துகொண்டே இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து கரைசேர்த்துவிடுவதுதான் அவளின் விருப்பமாக இருந்தது. புதுப்பெண்ணாக அஞ்சடிச்சான் முக்கிற்கு வந்து இறங்கிய போது அவளுக்கு இந்த ஊரைப் பிடிக்கவில்லைதான். கிழக்கில் பனையோலைக் கூரைகள் வேய்ந்த இரண்டு சாயாக் கடைகள். சாக்கடையின் மேல் மரப்பலகை அமைத்து எழுப்பப்பட்ட இட்லிக்கடை. மேற்கே ஒரு மளிகைக்கடை. மிகக்குறைந்த சாமான்களுடன். வாழைத்தார்கள் நான்கு கயிற்றில் தொங்கின. சிம்னி விளக்கிற்குள் நின்றெரியும் சுடர். செய்யது பீடிப் பண்டல்கள்தான் ரேக்கு முழுக்க. பருத்திக்கொட்டை நிறைந்த சாக்குப்பை, எள்ளுப்பிண்ணாக்கு, அதையொட்டியே அழுக்குப்படிந்த மண்ணெண்ணெய் தகரக் கேன். ஓங்கி வளர்ந்து நிழல் பரப்பி நின்றிருந்த அரசமரம் மட்டுமே அவளுக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப்  போனது.

                   மாட்டுத் தொழுவை ஒட்டிய மண்குடிசை. சாக்கடையை சுவாரசியமாக அலசிக்கொண்டிருந்த சேவல்கள். முருங்கையும் முள் மரங்களும் நெருக்கிய புறவாசல். தெருவில் முக்கால்வாசி குடிசைகள். மின்சாரம் இரண்டொரு வீடுகளுக்கு மட்டுமே வந்து சேர்ந்திருந்தது. வெளிக்கிருக்க அந்தியிருட்டிய பிறகு மந்தைக்குச் செல்ல வேண்டும். வீட்டிற்கு திரும்பி கால்களை கழுவிக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணி அடிபம்பில் அடித்து துாக்கிவந்தால் உண்டு. நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கைவலிக்க அடித்து நிரப்பி இடுப்பில் ஏந்தி வரவேண்டும். கரும்புத்தட்டைகளை எரித்தும், காட்டு விறகுகளை கரியாக்கியும் புகை மண்டலம் சூழ சமையல். ஓணான்கள் உறையும் உடைமுள் மரங்களை வெட்டிக்கொண்டு வந்து வெந்நீர் வைக்க வேண்டும். புளியங்குடியில் வெகு சொகுசாக வாழ்ந்தவளுக்கு, வாக்கப்பட்டு வந்த ஊரை துப்புரவாக பிடிக்கவே இல்லை.

                 இரண்டு பிள்ளைகள் பிறந்து பிழைப்புத் தேடி இரண்டு ஊர்கள் அலைந்து லோல் பட்ட பிறகு சொந்த வீடு இதுதான் என்று உறைத்தது. அங்கே திருப்தியாக வாழ பழகிக்கொண்டாள் அம்மா. அவளுக்கான கொண்டாட்டங்களை உருவாக்கத் தெரிந்து கொண்டாள். ஊர்ப்புறணி, கோவில் திருவிழாக்கள், திருவாதிரை சப்பரம், மாசி பங்குனி பொங்கல்கள் ,கரகாட்டம், ஆடல் பாடல், திரைகட்டி காட்டப்பட்ட தமிழ் சினிமாக்கள் என்று கிராமம் அவளை உள்ளே இழுத்தது.

                பிறந்த வீட்டின் நிலைமை மிகுந்த நெருக்கடியில். அம்மாவின் அம்மா ஊரைச்சுற்றி கடன் வாங்கித்தான் அன்றாடப் பொழுதுகளை கழித்துக்கொண்டிருந்தாள். பூர்வீகச் சொத்துகள் விலைபோய்க் கொண்டிருந்தன. கடுவா அண்ணன் விற்கத் தகுதியான ஒவ்வொன்றையும் உடைத்து எடுத்து மிகக் குறைந்த பணத்திற்கு விற்றுத் தீர்த்துக் கொண்டிருந்தான். சித்தி வேறு திருமணத்திற்கு காத்திருந்தாள்.

              ஒருசில ஆண்டுகள் கழிந்த பிறகு இராயகிரி வீட்டை விற்றுவிடலாம் என்று அம்மாவின் அம்மா முடிவு செய்தார். நானும் பதினெட்டு வயதைத் தாண்டி இருந்தேன். என் பெயருக்கு தாத்தாவிடம் கிரையத் தொகை கொடுத்து எழுதி வாங்கிய நிலம். நாடார் ஒருவர் வாங்க விரும்பினார். அப்போதுதான் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஊருக்குள் சென்றேன். வீடு கட்ட மண்ணாக இடிந்து கிடந்தது. நெஞ்சை அடைக்க விம்மினேன். கூரையைக் காணவில்லை. வாசல் நிலை, கதவுகள் காணாமல் ஆகியிருந்தன. திட்டமிட்டு விரட்டியதன் பண பலனை அடைந்திருந்தார்கள். செங்கற்களைக் கூட பெயர்த்து எடுத்துச் சென்றிருந்தார்கள். அத்தனைக்கும் யாவரும் கேளிர்தான். சொந்த தெருவிற்குள்தான் நடந்திருந்தது.  கண்ணெதிரிலேயே நான் வாழ்ந்த வீடு சிதிலமாகி முள்மரங்கள் முளைத்துக்கிடந்தது, சிவகிரி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தில் கையெழுத்திட்டு மீதிப் பணத்தை வாங்கிய போது, அரைக்கிலோ அல்வாவும் கொடுத்தார்கள்.

           இராயகிரிக்கும் எனக்குமான உறவின் கடைசிக் கண்ணி உடைந்து அழிந்தது அன்றுதான். கருப்பசாமி கோவில், வடக்குப் பார்த்து அமர்ந்திருக்கும் காளியம்மாள், துலாக்கிணறு, கிணற்றின் கண்ணாடி நீர், கிணற்றிற்குள் வாழ்ந்த தண்ணீர் பாம்பு, குதிகால் தண்டி கெழுத்தி மீன், தட்டான் பூச்சிகள் பறந்து திரியும் நந்தவனம், கல்கோணா, தறிச் செட்டு, அருணாசலம் துவக்கப்பள்ளி, பள்ளித் தோழன் குமரேசன், அவனோடு மீன் பிடித்த வேப்பங்குளம், கண்மாய்க்கரை கருவேல மரங்கள், நீச்சல் பழகிய தேவர் கிணறு, மந்தைவெளி, இரவில் கால் கழுவும் ஊருணி, அஞ்சடிச்சான் முக்கு, பெரிய , சிறிய மாரியம்மன் கோவில்கள், ஆவுடையாள்புரம் நாடார் உறவின் முறை ஸ்கூல், முதலியார் மளிகைக்கடை, அச்சு முறுக்கு, அதிரசம், தேனப்பம் விற்கும் சிந்தாமணிப்பாட்டி, மேஸ்திரி தோப்பு புளியமரங்கள், அதில் குடியிருக்கும் கொக்குகள், கொக்கு முட்டைகள், சாரைப்பாம்புகள், முள் வேலியில் கசங்கிக்காயும் பாம்புச் சட்டைகள், நண்பன் நாக்குத்தள்ளி, அத்தான் கூல்பானை, வசந்தா, தங்கமயில், மாரி,கறுப்பு மயினிகள், சங்கரி அக்கா, கோமுப் பெரியம்மா, விட்டில் மாப்ள, வைரவேல் சித்தப்பா, கரையாளர் பேரன் என்கிற பட்டப்பெயர், தினந்தோறும் கொல்லைக்குப் போகும் புஞ்சைக்காடு, குந்தியிருக்கும் மஞ்சணத்தி மர நிழல், மஞ்சணத்தி மரத்தில் ஒளிந்திருக்கும் கரட்டாண்டி, பனைமரத்தில் தொங்கும் மண் கலயங்கள், அதிகாலைப் பனியில் குளிர்ந்து கிடக்கும் பனம் பழங்கள், “மருதமலை மாமணியே முருகையா“ என்று ஒலித்து அழைக்கும் டூரிங் டாக்கிஸ். முட்டைப்போண்டா, மரப்பெஞ்சில் வாழும் மூட்டைப் பூச்சிகள், இல்லத்தார் வடக்குத் தெரு, டி.வி.டெக் வாடகைக்கு கொண்டு வந்து சினிமாக்கள்  போட்டுக்காட்டி விடிய விடிய விழித்திருக்கச் செய்த இராயகிரியின் தெருக்கள். தெருக்களின் புழுதிகள், சாக்கடைகள், கொசுகள். மாடசாமி பீடம், முனியாண்டி கோவில், முனி வாழும் வேப்பமரம். குடுகுடுப்பைக்காரன், சாமக்கோடாங்கி, தெருவில் இரவெல்லாம் அமர்ந்திருக்கும் நாயக்கர் தாத்தா. பழங்கதைகள் பேசும் இராமையா பிள்ளை. நிசிகளில் மேலே விழுந்து பதறி ஓடும் பெருச்சாளிகள். அக்கக்கா குருவிகள்,

          கொஞ்சக் காலத்திற்கு இராயகிரியின் மீது தணியாத ஏக்கம். ஊர்க்காரர்களை காண நேரிட்டால் உணர்ச்சி பீறிடும். கட்டுப்படுத்த முடியாது. கண் இமைகள் கட்டுப்பாட்டை மீறித் துடிக்கும். கன்னங்கள் குதிக்கும். பேச்சு வராது.  எச்சிலை விழுங்கி அவர்களை எதிர்கொள்ள முடியாமல் தாழ்வுணர்ச்சி பெருகும். என் விருப்பம் இன்றியே பால்யத்தின் நிலம் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதன் பின்னர் எந்த ஊரும் எனக்குள் இறங்க வில்லை. அந்நியமாகி ஒட்டுறவு ஏற்படாத பாதரசத் தனிமை. பெருந்தனிமை. கொடுந்தனிமை, துளித்தனிமை.

                 வைத்தியர் சித்தப்பா வீட்டை ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிடலாம் என்று முடிவு செய்து சென்றேன். அன்று குருபூஜை. பந்தியில் சாப்பிட வந்திருந்தவர்கள் குறைவுதான். முன்பென்றால் ஐந்தாறு பந்திக்கு வரிசை நீளும். கிடைக்கிற இடத்தில் எல்லாம் இலைபோட்டு சாப்பிட அமர்ந்துவிடுவார்கள். ஓலைப்பாயில் சோற்றைக் கொட்டி வேட்டியால் மூடிவைத்திருப்பார்கள். விடிய விடிய சமையல் வேலைகள் நடக்கும். ஆணும் பெண்ணும் ஒத்தாசை செய்யத் தயங்குவதில்லை. அம்மா அன்றுமட்டும் கோயில் உள்ளே சென்று கூட்டத்தோடு அமர்ந்து காய்கறிகள் நறுக்கித் தருவாள். கேலியும் கிண்டலும் ஒலிக்க அம்மா சிரித்துக்கொண்டே இருப்பாள்.

                மண்தரையில் வரிசையில் அமர்ந்து சாப்பிடத் தோன்றவில்லை. எச்சில்கள் வழிந்து சிதறியிருந்தன. தரை எங்கும் ஈரம். சாம்பார்த்தடங்கள், சோற்றுப்பருக்கைள். பாயாசச் சிதறல்கள். கால் வைக்கவே கூசியது. தெருவிற்குள் நுழைந்த போதே குத்தாலிங்கம் என்னை அடையாளம் கண்டு கொண்டான். வீட்டிற்குள் அழைத்தான். நான் வாசலில் நின்றுகொண்டேன். என்னால் தெருவை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. இருபதாண்டுகளை கடந்து வந்து சமகாலத்தில் தரையிறங்க வேண்டிய தத்தளிப்பு. மனக்குகை நிலக்காட்சிகள் கலைந்து அடுக்கப்பட்டன. பழைய வீடுகள், குடிசைகள், வைக்கோல் போர்கள், குப்பை மேடுகள் மறைந்தன. புத்தம் புதிய கட்டிடங்களும், ஒளிர்ந்து கண்ணைப் பறிக்கும் வண்ணச் சுவர்களும் மிரட்சியை அளித்தன. குத்தாலிங்கம் புலம்பினான். ஊர்க்காரர்களுக்கும் அவனுக்கும் ஒத்துவரவில்லை. உள்குத்து வேலைகள், புறக்கணிப்பு., ஆவலாதிகள். சொந்த சாதிதான். சொந்த உறவுகள். ஆனாலும் அவன் ஊருக்குள் நிம்மதியாக வாழவில்லை.

               அரைமணி நேரப் பேச்சில் நான் இருபதாண்டுகளை கடந்து வந்திருந்தேன். குத்தாலிங்கம், கோமுட்டி  செத்த பின்னும் பட்ட பாடுகளைச் சொன்னபோது நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் விசாரித்தேன்.

               மனைவி இறந்த பின்னர் கோமுட்டி தனியாக வசித்து வந்தார். சுய நளபாகம். அவரின் மகன் காளி அண்ணன் அவரைக் கவனிப்பதில்லை. அவர்களுக்கு இடையே ஒத்துப் போகவில்லை.  கணவன் இறந்த பின்னர் பிறந்த ஊர் திரும்பிய மாரி மயினியோடு, காளி அண்ணன் பழக ஆரம்பித்தான். இளமையில் துண்டிக்கப்பட்ட காதல் மறுபடியும் துளிர்த்தது. அது கள்ளக் காதலாக முணுமுணுக்கப்பட்டது. ஊரார் காதுகளில் சென்று சேர்ந்தது.  இருவருக்கும் புத்தி மதி சொல்லிப்பார்த்தார்கள்.  ஏற்றுக்கொள்ளவில்லை. வழக்கம்போல காளி அண்ணன் மாரி மயினி மடியில் தலைவைத்துப் படுத்திருந்த போது சொல்லி வைத்து பிடித்தார்கள். கூடினார்கள். பஞ்சாயத்தில் தீர்ப்பிட்டார்கள். ஆளுக்கு பத்தாயிரம் அபராதம் விதித்தார்கள்.

      காளி அண்ணன் அபராதத் தொகையை கட்ட மறுத்துவிட்டார். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள்? என்று சவால் விட்டுள்ளார். எனவே ஊர் விலக்கம் செய்தார்கள். காளி அண்ணன் மேஸ்திரி ஆகி வேலையில் கெட்டிக்காரர் என்று பெயர் வாங்கியிருந்தார். பத்துப்பதினைந்து பேர் அவர் கட்டடக் குழுவில் இருந்தனர். ஊர் விலக்கம் அவருக்கு ஒரு பொருட்டே அன்று. ஊர் காத்திருந்தது. காளியின் அப்பா கோமுட்டி  இறந்த போதுதான் ஊர் பழி வாங்கியது. பிணத்தை எடுத்துச் செல்ல யாரும் உதவிக்கு வரவில்லை.  பிணம் நாற்றம் எடுக்க ஆரம்பித்தது. வேறு வழியே இன்றி  காளி அண்ணன் பத்தாயிரத்தை ஊருக்கு கட்ட சம்மதித்து, தொகையைக் கட்டினார். மன்னிப்பு கோரினார். நீர் மாலை எடுக்க அதன் பிறகே ஆட்கள் வந்தார்கள். ”“சுப்ரீம் கோர்ட்டே இரண்டு பேர் சம்மதிச்சு உறவு வைச்சுக்கிட்டா குற்றமில்லைனு சொன்ன பின்னாடியுமாடா நீங்க ஊர்க்கூட்டம் கூட்டி தீர்ப்பு வழங்கிகிட்டு இருக்கீங்க?” என்று கேட்டேன்.

        “பஞ்சாயத்துனா..சும்மாவா..நாலுபேரு நம்ம சாதி சனத்த பத்தி தப்பா பேச இடங்கொடுக்கலாமா..ஒழுக்கம் ரொம்ப முக்கியம்லா” என்றான் குத்தாலிங்கம்.

            குத்தாலிங்கம் சமுதாயப் பொறுப்பில் வேறு இருந்தான்.  பொருளாளர் பதவி. நியாயமான செலவுகளோடு, வீட்டிற்கும் செலவழித்து கணக்கு எழுதிக்கொள்ளும் வாய்ப்பு.  குருபூஜை விழாவிற்கு வருகை தரும் பக்த கோடிகளை வரவேற்கும் பதாகை கண்ணில் பட்டது. நாராயண குருவின் சாந்தமான முகத்தின் இருபுறமும் கர்ஜிக்கும் சிங்கங்கள். கீழே பிரபாகரனின் துப்பாக்கி ஏந்திய போட்டோ. வீர வாட்கள். கேடயங்கள். பாதிப் பேணர் முழுக்க சாதியின் பெயரும் இளைஞர் நற்பணி மன்றமும். என்ன நற்பணிகளை  செய்து வருகிறார்கள்? இளந்தாரிகள் முறைத்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் பலவித பாவனைகளில் இருக்கும் போட்டாக்கள்.

             அப்போதே முடிவு செய்தேன்.  சொந்த ஊருக்குத் திரும்புவது  என் சுதந்திரத்தை இழப்பது ஆகக்கூடும்.

உய்யடா உய்யடா உய்ய்ய்ய்ய்

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  1. Nan Unga pakkathu voorthan…anga kamarajar sila pakkathla ulla school ah padichaen.. Unga kuda sernthu nanum palaya memoriesku travel pannitaen..