
பெங்களுரைக் காண வேண்டும் என்கிற ஆசையே நிகழ்ச்சிக்கு ஒத்துக்கொள்ளக் காரணம். இதற்கு முன்பு ஒரே ஒருமுறை சென்று, அன்றே திரும்பியிருக்கிறேன். மூன்று நாட்கள் தங்கும் வாய்ப்பும், நிறைய எழுத்தாளர்களை நேரில் சந்திக்கும் மகிழ்வும் இருப்பது மேலும் உற்சாகம் கொள்ளச் செய்தது.
சனி காலையில் இறங்கி ஞாயிறு மாலையில் பஸ் ஏறிவிடும் உத்தேசத்தில் இருந்தேன். பிரயாண ஏற்பாடு செய்தவர்கள் வெள்ளி இரவில் இரயிலில் இடம் இல்லை வியாழன் இருக்கிறது என்றார்கள். ”அதனால் என்ன ? ஒருநாள் முன்னதாகவே வந்துவிடுகிறேன்” என்று ஒத்துக்கொண்டேன்.
சிறப்பான பயண ஏற்பாடுகள். விருப்பம் அறிந்து அவர்களாகவே முன்பதிவுகள் செய்து கொடுத்தனர். இருந்த இரண்டு நாட்களிலும் திருப்திகரமான உணவு. இலக்கியம் அளித்த சோறு என்பதால் கூடுதல் ருசி.
புத்தகத் திருவிழாக்களில் நாங்கள் படும் பாடுகள் எனக்கு நன்கு அறிமுகம். நிறைய குளறுபடிகள் நடக்கும். அதிலும் தங்கும் அறைகளும் பயண ஏற்பாடுகளும் பாடாய் படுத்தி எடுத்து, சொதப்பி விடுவார்கள். விருந்தினர்களின் முகம் கோணாதவிதமாகக் கிளம்பிச் செல்லும்வரை பயந்து கொண்டே இருக்க வேண்டும். வேண்டா வெறுப்பாக வேலை பார்ப்பவர்களே அதிகம்.
புக் பிரம்மாவில் அப்படி ஒரு சம்பவத்தைக் கூட என்னால் காண முடியவில்லை. அத்தனை கச்சிதம். அத்தனை துல்லியம். அத்தனை மெனக்கெடல். ஆண்களும் பெண்களும் தன்னார்வலர்களாக மிகச் சிறப்பாக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். விழா ஒருங்கிணைப்பாளர்கள், நிகழ்த்துனர்கள் என அனைவரும் ஆகச்சிறந்த உழைப்பினை வழங்கியிருந்தனர்.
மண்டபா,மதனா, அக்சரா,அங்கலா,முகாமுகி,அனவரனா,சின்னர லோகா, பொயட்ரீ, நியு ஷென் என ஒரு நாளில் எட்டு அரங்குகள். ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் மற்றும் பெங்காலி என ஆறு மொழி இலக்கியப் படைப்பாளிகள், கலாச்சார பண்பாட்டு ஆளுமைகள், இலக்கிய ஆர்வலர்கள் என ஜான்ஸ் ஆடிட்டோரிய வளாகத்திற்குள் குழுக்களாக காண முடிந்தது. ஐந்தாறு புத்தகக் கடைகள். மொழிக்கு ஒன்றென. தமிழுக்கு காலச்சுவடு கடை விரித்திருந்தது. அங்கே பேச வந்திருந்த அத்தனைப் படைப்பாளிகளின் படைப்புகளையும் வரவழைத்து காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மலையாளத்தில் டி.சி. புக்ஸ். கன்னடத்திலும் தெலுங்கிலும் யார் என்று எனக்குத் தெரியவில்லை. மலையாளம் எழுத்துக்கூட்டி வாசித்து விடுவேன் என்பதால் உள்ளே சென்று எட்டிப்பார்த்தேன். கன்னட நுால்கள் இருக்கும் பகுதிக்குள் எட்டிப் பார்க்கவில்லை. பார்த்தாலும் தெரியவா போகிறது. காலச்சுவடில் அரிசங்கரின் கரப்பான் வாங்கினேன். அதற்கு முன்னதாக சாகித்ய அகாடமி பிரிவில் கோவிலனின் தட்டகம் மற்றும் பொற்றக்காட்டின் ஒரு கிராமத்தின் கதையும் ஆங்கிலத்தில் வாங்கினேன். இரண்டும் தலையணை அளவில் வீங்கிக் கனத்தன. சுமந்து திரிய முடியாது என்பதால் அதிகம் வாங்கத் தயக்கம்.

எழுத்தாளர்கள் யுவன் சந்திரசேகர், எம்.கோபாலகிருஷ்ணன், மு.குலசேகரன், கடற்கரய், என்.ஸ்ரீராம், அரி சங்கர், ஜா.ராஜகோபாலன், கவிஞர்கள் சுகுமாரன், தேவதேவன், க.மோகனரங்கன், இலக்கிய ஆர்வலர்கள் முனவர்கான், விக்னேஷ் ஹரிகரன், சிவபிரசாத் ஆகியோருடன் இரவில் விடுதி அறையின் வரவேற்பறையில் அமர்ந்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. யுவன் சந்திரசேகரின் புன்னகை ததும்பும் பேச்சு ஆர்ப்பரித்து சிரிக்க வைத்தது, எம்.கோ.வும் , யுவனும் ஒருமையில் அழைத்து ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டதைக் காண புதுமையாக இருந்தது. ஒரு சாலை மாணக்கர் என்பதைப் போன்ற தோழமை உணர்வு. அறுபதுகளை கடந்துவிட்ட ஒரு தலைமுறை. பணி ஓய்வு என்னும் பொற்காலம். நுகத்தடியின் சுமையற்ற, பணிநெருக்கடி என்னும் பின்னந்தலையில் உராயும் கூர் முனையின் பயமுமற்ற அன்றாடம். யுவன் பிரமாதமான உரையாடல்காரர்.
திருநெல்வேலியில் ஒன்பது முப்பதிற்கு ரயில். அலுவலகம் முடிந்து வீடு திரும்பி பயணத் தேவைகளை ஒரு பேக்கில் அள்ளித் திணித்து அவசரம் அவசரமாகக் கிளம்பினேன். பிள்ளைகள் இருவருக்கும், மனைவிக்கும் வருத்தம். வாங்கள் சென்று வருவோம் என்று சொன்னாலும் , பிள்ளைகளுக்கு ஒத்துக்கொள்ளாது என்று பயந்தாள். அவர்களுக்கும் ரயிலில் நீண்ட பயணம் செய்ய வேண்டும் என்கிற ஏக்கம். நெல்லைக்கு பஸ் பிடித்து சரியான நேரத்தில் சென்றுவிட வேண்டிய பதற்றம். தென்காசியில் இப்போது வாகனங்கள் நெரிபட்டு எப்போதும் ட்ராபிக் ஜாம்தான். வாய்க்கால் பாலத்தைக் கடந்து திருநெல்வேலிக்கு கிளைபிரியும் நான்குவழிச்சாலையை தொடுவதற்குள் அரைமணி நேரம் தாண்டிவிடும். இடையில் மூன்று சிக்னல்கள் வேறு.
இரவில் ஏ.சி. பழக்கம் இல்லை. அதிகாலையில் எழுந்தபோது தலையை வலித்தது. அன்று முழுக்க தலைசுற்றலும். பெருங்குறட்டை விட்டு அருகில் படுத்திருந்தவர்களை சங்கடப்படுத்தியிருப்பேன். அவர்களை நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாக இருந்தது. மனதிற்குள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். கீழ் படுக்கையில் எனக்கு இணையாக படுத்திருந்தவர் என்னைவிட பத்துப்பதினைந்து வயது மூத்தவர். ஒரு குழந்தையைப் போல மூச்சுவிடாமல், அசையாமல் படுத்திருந்தார். பார்க்க பொறாமையாக இருந்தது.
எஸ்.எம்.வி.ட்டி. ரயில் நிலையத்தை அடையவே அரைமணி நேரத்திற்கும் மேலானது. சிக்னலுக்காக நின்று நின்று கிளம்பியது. ரயில்பாதைகள் அதிகமும் பெருநகரங்களின் பின்புறத்தை மட்டுமே ஊடறுத்துச் செல்கின்றன. புறக்கடைகளின் உலகமும் அதன் நிலக்காட்சிகளும். சன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது ஆங்காங்கே தகரக்கூரைகள் வேய்ந்த நெரிசலான குடிசைகள் தென்பட்டன. தாராவி நினைவிற்கு வந்தது. பெரு நகரங்களில் குப்பங்கள் எப்படியும் தோன்றிவிடுகின்றன. மழைக்காலமும் வெய்யில் காலமும் அவர்களைப் படுத்தி எடுத்துவிடும். ஆனாலும் வாழ்ந்தாக வேண்டும்.
எஸ்.எம்.வி.ட்டி. ரயில் நிலையம் பிரமாண்டமாக இருந்தது. நடைமேடை எங்கும் வட இந்திய முகங்கள். அதிலும் பெரும்பாலும் மெலிந்த, கன்னங்கள் ஒட்டிய, வெள்ளை நிறம் கொண்ட சிரிப்பின் தடையங்கள் அற்ற முகங்கள். இவர்களை இந்தியா எங்கும் காணலாம் போல. கோட்டயத்திலும் எர்ணாகுளத்திலும் அப்படியே அங்காங்கே ரோட்டோரங்களில் கும்பலாக நின்று கொண்டிருப்பார்கள். அல்லது ரயில்வே தண்டவாளங்கள் அருகில் கல்வெர்ட்களில் குந்தியிருந்து காலத்தை வெறிப்பார்கள். அவர்களின் நேரம் அப்படி வெறுமனே கடந்து செல்வதைக் காண ஏக்கமாக இருக்கும்.
டீ அருந்திவிட்டு, வெளியே வந்தேன். அழைத்துச் செல்ல கார் உண்டு என்றாலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் ஆர்வமும், யாரின் உதவியும் இன்றி தானாக கண்டுபிடித்துச் செல்ல வேண்டிய உற்சாகமும் உந்தித்தள்ளியது. இடது புறம் நடந்து சென்றால் மாநகரப் பேருந்துகள் வரிசை கட்டி நின்றன. முதலில் போனதும் மெசஸ்டிக் பேருந்துநிலையம் செல்லும் பேருந்து. நல்லவேளையாக அதன் ஓட்டுநரிடம் கோரமங்கலா போகுமா என்று விசாரித்தேன். அவர் அடுத்து நின்ற பேருந்தைக்காட்டி அதில் வாட்டர் டேங் என்று கேட்டு ஏறிக்கொள்ளச் சொன்னார். அவர் பேசியது கன்னடமா, இந்தியா என்பது கூட தெளிவில்லை. நன்றி சொல்லி பஸ்சில் ஏறி, சன்னலோர இருக்கையில் கை வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். கையில் ஏதோ பிசுபிசுத்தது. என்ன என்று பார்த்தால் அந்த அதிகாலையிலும் யாரோ ஒருவர் புகையிலையைப் போட்டு எச்சிலை வெளியே துப்பியிருக்கிறார். அது சன்னலின் விளிம்பில் வடிந்து தேங்கி இருந்திருக்கிறது. நான்தான் சரியாக கவனிக்க வில்லை. இந்திவாலாக்களின் வாய்த்துடுக்கை எண்ணி சிரித்துக்கொண்டேன். கன்னடம் உற்றுக்கேட்டால் புரியத் தான் செய்கிறது. திராவிட மொழிகள் அனைத்தும் பொதுவான சொற்களை அதிகம் கொண்டிருக்கின்றன போலும்.
கூகிள் மேப் அரைமணி நேரம் என்றது. டப்பா பேருந்து. அதிகம் ஆட்கள் ஏறியிருக்கவில்லை. ஆடி அசைந்து ஊர்ந்தது. சென்னைக்குள் செல்வது போலத்தான் இருந்தது. சென்னையைப் போன்ற தெருக்கள், ஜிலேபியை பிய்த்து மல்லாக்கப்போட்டது போன்ற லிபிகளில் பெயர்ப்பலகைகள். குப்பைகள் மண்டிய ரோட்டோரங்கள். இந்திய பெரு நகரங்களில் கேரளத்தின் திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம்,கோழிக்கோடு போன்ற சில நகரங்கள் மட்டுமே ஓரளவாவது பரவாயில்லை என்று சுத்தமாக காட்சிக்குத் தோன்றுகின்றன. பிற அனைத்தும் குப்பையும் துாசியும் மண்டியவைதான். பெங்களுருவின் மீதான ஈர்ப்பு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. இந்திரா நகர் தாண்டியதும் வண்டி வேகமெடுத்தது.
மிகச் சரியாக விழா நடக்கும் வளாகத்திற்கு எதிரே ஒரு சிக்னல். பஸ் தேங்கி நின்றது. இரண்டு காரியங்கள் பெங்களுருவில் புதிதாக இருந்தன. ஒன்று ஒவ்வொரு சிக்னலின் போதும் பஸ்ஸை ஓட்டுநர் அணைத்து விடுகிறார். மற்றொன்று பயணிகள் இறங்கும் தோதிற்கு ஏற்றாற்போல முன் கதவை மட்டும் திறந்து விடுகிறார். நான் வலதுபுறம் திரும்பிப் பார்த்து நிகழ்விடத்தின் அரங்க தோரணங்களை உறுதி செய்து கொண்டு உடனே இறங்கிவிட்டேன்.

வரும் வழியில் கட்டங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தபோது லா.ச.ரா. பெயரில் ஒரு விடுதி. இலக்கிய வாசகனாக இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன். விழா வளாகத்தின் உள்ளே விசாரித்து மாணவர் விடுதி இருந்த பகுதிக்குச் சென்றேன். வரவேற்பறையில் ஜெயமோகன் தன் நண்பர் ஒருவருடன் நின்றிருந்தார். வரவேற்பாளினி அவருக்கான தங்கும் அறை லா.ச.ரா.விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சொன்னார். அவருக்கு ஒரு வணக்கம் வைத்தேன். ஒரு கணம் உற்றுப் பார்த்து நினைவில் இருந்து தோண்டி எடுத்து ”நலந்தானா?” என்றார். தன் நண்பரைப் பார்த்து “ “இவர் ஒரு பயங்கரமான பெயரில் மின்னிதழ் நடத்துகிறார்” என்று அறிமுகம் செய்து வைத்தார்.
“உங்கள அழைச்சிருக்காங்களா, எந்த பிரிவில்?” என்று கேட்டார். அவரும் நானும் ஒரே ரயிலில்தான் வந்திருக்கிறோம். அது நாகர்கோவிலிருந்து கிளம்பிய வண்டி.
149 அறையை எனக்கு ஒதுக்கினார்கள். அங்கே ஏற்கனவே ஒருவர் வந்து தங்கியிருப்பதாகச் சொன்னார்கள். தஞ்சைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர். முனைவர் பட்டம் பெற்றவர். என்னை வரவேற்ற தன்னார்வலர் – அவர் இளைஞர்.- சாப்பிட்டு விட்டுவரலாமே என்று வழியைக் காட்டினார். நான் ரயில் நிலையத்தில் இறங்கி பல் துலக்கியிருந்தேன். உள்ளே சென்று சாப்பிட்டேன். கையேந்தி வரிசையில் நின்று வாங்கி அமர்ந்து உண்ணும் வகையிலான ஏற்பாடு. தன்னார்வலர் நான் எவ்வளவு ஆட்சேபித்தும் என்னுடைய சுமைகளை எடுத்து தோளில் போட்டுக்கொண்டார். லிப்டில் செல்லும் போது அவர் என்னை தெலுங்கா என்று விசாரித்தார். நான் அவருக்கு கன்னடத்தில் வாசிப்பு உண்டா என்று கேட்டேன். பைரப்பா, சிவராமகரந்த் என்று சில பெயர்களைச் சொன்னேன். அவர் கூச்சத்துடன் தனக்கு அறிமுகம் இல்லை என்று உண்மையை ஒத்துக்கொண்டார்.
குளித்து முடித்து மண்டபா அரங்கிற்குள் எட்டிப் பார்த்தேன். நடிகர் ரமேஷ் அரவிந்தின் ஒரு மணிநேர உரை Every Life is a story என்ற தலைப்பில். மேடையின் குறுக்கு நெடுக்காக கையில் மைக்கைப் பிடித்தபடி இடைவெளியே இல்லாமல் ஆங்கிலத்தில் உரையாற்றினார். மிகப் பிரமாதமான அறிமுக உரை. நல்ல சிவப்பு. இலக்கியம் என்றால் என்ன, ஏன் வாசிக்க வேண்டும் என்பதை மையக் கருவாகக் கொண்டது. அவரின் பாம்புப் பாய்ச்சல் உரையைக் கேட்க கேட்க எனக்கு அதிசயமாக இருந்தது. நம்மிடம் இப்படி ஒரு தமிழ் நடிகர் உண்டா? என்று கேட்டுக்கொண்டேன். ஒரு இலக்கிய மேடையில் ஒரு மணி நேரம் ஒற்றை ஆளாக இலக்கிய உலகம் குறித்து தெளிவான சிந்தனையோடு பேசக்கூடிய ஒரு நடிகர் இங்கே யார் இருக்கிறார்? என்கிற ஆதங்கம். பிரமாதம். பிரமாதம் என்று மனதிற்குள் அரற்றினேன். அவரைக்குறித்த – நகைச்சுவை நடிகர் என்கிற பிம்பம் உடைபட்டது. அவர் ஒரு அறிவுஜீவி என்ற எண்ணம் உடனே எழுந்தது – அரங்கம் பாதிதான் நிரம்பி இருந்தது. அவர்களும் ஆங்காங்கே சிதறி இருந்தனர். உரையின் கடைசி பத்து நிமிடங்களில் அவர் பார்வையாளர்களுடன் கலந்துரையாடினார். ஒரு மராட்டி யுவதி சரசரவென்று பேசினார். அவரைத் தொடர்ந்து மலையாளப் பெண் ஒருவரும். இருவரையும் ரமேஷ் அரவிந்த் தங்களின் தாய்மொழியிலும் பேசுமாறு கேட்டுக்கொண்டார். மராத்தியிலும் மலையாளத்திலும் அவர்கள் பேசினார்கள். மலையாளம் ஓரளவு புரிந்தது. பஷீர், தகழி என்கிற பெயர்கள் அறிமுகம் ஆனவைதானே.

ஆனால் எண்ணி எண்ணி சிரிக்கும் ஒரு நிகழ்வும் அந்த அரங்கத்தில்தான் நடந்தது. புக் பிரம்மா சாகித்ய அகாடமி விருது வழங்கிய நிகழ்ச்சியில் கே.ஆர்.மீரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் தன் உரையில் அசுரன் படத்தில் இருந்து ஒரு வசனத்தை மேடையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல்லி புகழ்ந்து பேசினார். ஒரு இலக்கிய மேடையில் எந்த ஒரு தமிழ் எழுத்தாளனும் செய்யத் தயங்கும் முன்னுதாரணம் அது. “செல்வத்தைச் சேர்த்தால் நம்மிடம் இருந்து திருடிக்கொண்டு போய்விடுவார்கள் ஆனால் கல்வியை ஒன்றும் செய்ய முடியாது ” என்பதை ஒட்டிய வசனம் அது.
வரும் வழியில் எழுத்தாளர் பாவண்ணன் அவர்களைச் சந்தித்து நன்றி சொல்லிக்கொண்டேன். அவர் நடையில் ஒரு தளர்ச்சி தென்பட்டது. அது வருத்தமாக இருந்தது.
(தொடரும்)
