2.கிரக யுத்தம் கவிதைத் தொகுப்பு முன்னுரை –

ஒரு கவிதை புனைந்து ஆயுட்காலம் வரை கவிஞனாக அறியப்படலாம். கட்டுக்கட்டாக எழுதிக் குவித்திருந்தாலும் நேற்று என்ன எழுதினான் என்பதைப் பொறுத்தே ஓர் உரைநடைக்காரன் நிலை என்பார்கள். விக்ரமாதித்யன் என்று அறியப்படும் நம்பிராஜன் நானறிந்து இருபத்தி மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து தமிழ்ச் சிறுபத்திரிகையுலகில் நிடித்திருக்கிருக்கிறார். இது என் பார்வைக்குக் கிடைக்கும் அவருடைய ஆறாவது தொகுப்பு.

மரபுக்கவிஞர்களுக்கு என்றுமே நிறுவனபலம் உண்டு. நிலம்,நீர்,ஆகாயத்தில் அவர்களுடைய கவியரங்கங்கள் நடக்கின்றன. விக்ரமாதித்யன் தொடர்ந்து பயன்படுத்தி வரும் கவிதைபாணிக்கு அத்தகைய கவனிப்புக் கிடைக்க வாய்ப்பில்லை.

சட்டென்று எடுத்துக்காட்டாகக் கூற என்னிடம் சான்றுகள் இல்லையென்றாலும், விக்ரமாதித்யனின் கவிதைகள் எனக்குக் கழிவிரக்கம், குறைகூறல் ஆகிய மனப் பான்மையையே வெவ்வேறு விதமாக எடுத்துக் கூறுபவன என்று எண்ணம் கொள்ள வைத்திருக்கின்றன. நவீன இலக்கியப் போக்கில் எவ்வித மனப்பான்மையும் கவிதைக்குரியதே என்று ஏற்கப்பட்டிருக்கின்றது. போதைப்பொருட்கள் வாங்குவதும் விற்பதும் உட்கொள்வதும் சட்ட விரோதச் செயல்களாகக் கருதப்படலாம். சில நாடுகளில் இவர்கள் மரண தண்டனை பெறுகிறார்கள். ஆனால் போதையில் இலக்கியம் புனைவதை ஆலன் கின்ஸ்பெர்க், லாரென்ஸ் ப்பெரங்கடி. வில்லியம் பெர்ரோஸ் போன்றோர் கௌரவத்துக்குரியதாக மாற்றியிருக்கிறார்கள்.

கழிவிரக்கம்,குறைகூறல் மகத்தான காவியத்துக்கு வழிவகுக்காமல் போகலாம். ஆனால் ரசிக்கத் தக்க கவிதைகள் விக்ரமாதித்யன் மூலம் தொடர்ந்து கிடைத்து வந்திருக்கின்றன. அவர் கவிதைகள் வெளியிடத் தொடங்கிய காலகட்டத்தில் தமிழ்க் கவிதையுலகில் எல்லைக்கோடுகள் அழுத்தமாகத் தெரியவந்தன. மரபு,மரபு பிறழ்ந்தது என இரு பெரிய பிரிவுகளில் இரண்டாவதில் சில உப பிரிவுகள் தெரியவந்தன. எழுத்து,நடை, கணையாழி கவிஞர்கள் ஒரு பிரிவென்றும், வானம்பாடி,தாமரை கவிஞர்கள் இன்னொரு பிரிவாகவும் அறியப்பட்டனர். கடைசியில் கூறப்பட்ட பிரிவினர் மக்கள் கவிஞர்கள், முற்போக்குக் கவிஞர்கள் என்ற சிறப்புப்பெயர் பெற்றார்கள். சுமார் பத்தாண்டுகளுக்கு இந்த மக்கள்-முற்போக்குக்குழு,எழுத்து-நடை குழுவைப் பிறவி விரோதிபோலப் பகையாகப் பாவித்துச் செயல்பட்டது. அன்று ஒருவர் கவிஞராகத் தனித்து இயங்குவது அசாத்தியம் என்பது போல இப்பகைமைச் சூழ்நிலை படர்ந்திருந்தது. விக்ரமாதித்யன்,கல்யாண்ஜி,ந.ஜயபாஸ்கரன், கலாப்ரியா ஆகிய நான்கு கவிஞர்கள் (நானறிந்து), “என் கட்சியில் இல்லாதவர்கள் எல்லோரும் எதிரிகள்” என்ற நியதி துாக்கலாக இருந்த காலத்திலும் சிதைந்துபோகாமல் தனித்து நின்றார்கள். இன்றும் தமிழில் நல்ல கவிஞர்கள் எனப் பட்டியலிட்டால் முதல் இருபதுக்குள் இவர்கள் இருப்பார்கள். மகத்தான கவிதை சாத்தியமில்லாத நிலையில் நல்ல கவிஞர்கள் நிறையவே இருக்க முடியும்.

இதுவரை நான் கண்ட விக்ரமாதித்யனின் தொகுப்புகளிலேயே இதுவே விரிவானதும் பல்வேறு இலக்கியப் பரிசோதனைகள் கொண்டிருப்பதும் ஆகும். இதிலுள்ள கவிதைகள் பலவற்றில் நகுலன் அவர்களின் பாதிப்புத் தெரிகிறது. ஓர் உதாரணம்

கொள்ளுதல் தள்ளுதல்

அள்ளுதல் கிள்ளுதல்

இங்கு ஆக்கு

பொங்கு போடு

பொய் மெய்

பொய்மை

எந்த ஊரு

சொந்த ஊரு

இந்த ஊரு

எந்த ஊரு

இது “கிரக யுத்தம்” என்று தலைப்பிட்ட பகுதியில் காணப்படும் ஒரு கவிதை. இப்பகுதிக்கு விக்ரமாதித்யனே ஒரு முன்னுரை தந்திருக்கிறார். ஒரு கிரகமும் மற்றொரு கிரகமும் ஒரே ராசி இல்லத்தில் இணையும்போது இரண்டுக்கும் இடையே ஏற்படும் பலப்பரீட்சையைத்தான் ஜோதிடத்தில் கிரகயுத்தம் என்று சொல்வார்கள். “இந்த கிரக யுத்தம்” பகுதியை அடுத்துள்ளதில் 104 கவிதைகள் உள்ளன. இவற்றில் பல இரண்டே வரிகள் கொண்டவை. சில நீண்ட கவிதைகளுக்குத் தலைப்பு உண்டு.

விக்ரமாதித்யனின் எழுத்து ஈடுபாடு தீவிரமானதும் தடைப்படாததுமாகும். கவிதைகள் தவிர அவர் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். பல கட்டுரைகள் சந்தரப்பத்தின் நிர்ப்பந்தத்தில் எழுதப்பட்டன என்பது தெளிவு. ஆனால் எல்லாம் எழுத்து சம்பந்தப்பட்டவை. கவிஞன் என்பவன் அராஜகப் போக்குடையவனாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு சாரார் நம்புகிறார்கள். விக்ரமாதித்யனின் சுதந்திரப்  போக்கும் எழுத்தும் சில தருணங்களில் அக்கவிஞர்களை நினைப்பட்டக்கூடும். தமிழ் மரபுச் சிந்தனைகளும் அவரிடம் வலுவாக இருப்பதையும் காணத்தவற முடியாது. இதெல்லாம் அவருடைய கவிதையோட்டத்தை அவருக்கேயுரியதாகச் செய்கின்றன. கவிதையுணர்வேற்றவன் என்று அனைவரும் நன்கறிந்த என்னை இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதப்பணித்தது தமிழ் எழுத்துத் துறையில் நானும் தொடர்ந்து இருந்து வருகிறேன் என்ற காரணத்துக்கேயாகும். கவித்திறனை எடையிட எனக்குத் தேர்ச்சியும் பரிச்சயமும் கிடையாது. ஆனால் விக்ரமாதித்யனின் கவிதை இயக்கம்  என்னை எப்போதும் கவனித்துப் பார்க்கச் செய்திருக்கிறது. இத் தொகுப்பிலுள்ள கவிதைகளை அணுகும் விதத்தை நன்கு விளக்கும் முறையானதொரு முன்னுரையைத் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் பெற்று அல்லது கவிஞரே ஒரு முன்னுரை எழுதி வெளியிடவேண்டும் என்பது என்  வேண்டுகோள்.

சென்னை , 11.07.1993

நன்றி-

 அசோகமித்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *