நுாறு தமிழ்ச்சிறுகதைகள் -1.சிலையெழுக! (ஜெயமோகனின் ‘மன்மதன்’ சிறுகதையை முன்வைத்து…)

 

தொன்மங்கள் வெறும் ஏட்டுச் சுவடிகளிலும் பாட்டி சொன்ன கதைகளிலும் சுருங்கிவிடாமல் உயிர்ப்பெற்று நம் கண்முன் நடமாடத் தொடங்கினால் மனித மனம் அடையும் திகைப்பு எத்தகையதாக இருக்கும்? அதுவும் நம்பமுடியாத மாயங்களைத் தாங்கி வரும் ‘மாந்திரிக எதார்த்தவாதமாக’ (Magical Realism) இல்லாமல், நம் அன்றாட வாழ்வின் தர்க்கங்களுக்குள் கச்சிதமாகப் பொருந்தும் தூய எதார்த்தவாதமாகவே (Realism) நிகழத் தொடங்கினால் நாம் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான மனக்குழப்பமும் வியப்பும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. 

இந்தக் நுட்பமான கேள்விகளுக்கு விடைதேடும் ஒரு மிகச்சிறந்த கலைப்படைப்புதான் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘மன்மதன்’ என்னும் சிறுகதை. இறந்தகாலத்தின் எச்சங்களாகக் கருதப்படும் நேற்றில் தனது வேர்களை ஆழமாக ஊன்றி இன்று நிகழ்காலத்தின் மனிதர்களிடம் மிகத் தீவிரமாக உரையாற்றும்  காலக் கண்ணாடியாக இக்கதை மிளிர்கிறது.

பழமை வாய்ந்த, இருள் கவிழ்ந்த பழங்காலக் கோவிலின் சிற்பங்களைப் பார்வையிடுவதற்காக வெளியூரில் இருந்து வரும் ஓர் இளைஞன் எதிர்கொள்ளும் முற்றிலும் எதிர்பாராத அனுபவம்தான் இந்தச் சிறுகதையின் மைய அச்சாகச் சுழல்கிறது. 

நூற்றாண்டுகளைக் கடந்த கோவில் சிற்பத்தூணில் உறைந்துள்ள மன்மதனும் ரதியும் வெறும் கருங்கற் சிலைகள் அல்லர்; அவர்கள் நிஜ மனிதர்களாக உருமாறி, மிக யதார்த்தமாக அந்த இளைஞனின் முன்னே தோன்றி அவனுடன் பேசுவதும் அவனுக்கு அக்கோவில் சிற்பங்களின் நுட்பங்களைப் பற்றி விரிவாக விளக்கிக் கூறுவதுமாக இக்கதையின் புனைவுவெளி மிக நேர்த்தியாக நகர்த்தப்பட்டுள்ளது.

இக்கதையின் ஆகப் பெரிய முரணாகவும் அதேசமயம் மிகச் சிறப்பான ஒரு கூறாகவும் அமைவது அதன் கதாபாத்திரப் படைப்புதான். ‘பார்வை என்றால் என்ன, ஒளியின் தன்மை என்றால் என்ன’ என்பதையே தன் வாழ்நாளில் ஒருபோதும் அறிந்திராத பிறவிப் பார்வையற்ற ஒருவன், கல்லில் வடிக்கப்பட்ட சிற்பங்களின் அளப்பரிய நேர்த்தியைப் பற்றிப் பார்வை கொண்ட ஒருவனுக்கு விளக்கிக் கூறுவதுதான் இக்கதையின் உச்சகட்டச் செவ்வியல் தன்மை. 

‘கண்கள்’ என்னும் உறுப்பால் உலகை அளக்க முடியாத அவன், தான் செவிவழியாகக் கேட்டுப் பெற்ற ஞானத்தாலும் கற்பனை வளத்தாலும் தனது தீராத அகக்கண் பார்வையாலும் பிறருக்குச் சிற்பங்களின் சிறப்புகளைப் புல்லரிக்கும்படி எடுத்துரைக்கிறான். 

‘கலை’ என்பது புறக்கண்களால் பார்க்கப்படுவது மட்டுமன்று, அது அகத்தால் உணரப்படுவது என்னும் ஆழமான தத்துவத்தை இந்தப் பார்வையற்ற கதாபாத்திரம் நமக்களிக்கிறது.

பரந்துபட்ட இந்தச் சிறுகதையின் திரைச்சீலையில் பிரதானமாக மூன்று இழைகள் மிகக் கவனமாகப் பின்னப்பட்டுள்ளன. முதலாவது – தமிழர்களின் பெருமைக்குரிய நாயக்கர்காலச் சிற்பக்கலையும் அதன் நுட்பங்களும். இரண்டாவது – கலையிலும் வாழ்விலும் தேடப்படும் ‘முழுமையழகு’ (Perfect Beauty) என்னும் கருத்தியல். மூன்றாவது – மனித உறவுகளின் உன்னதத்தைச் சொல்லும் ‘மனிதநேயம்’.

எழுத்தாளர் ஜெயமோகன் தான் பல ஆண்டுகளாகப் பயணம் செய்து, பார்த்து, ஆராய்ந்து அறிந்த சிற்பக்கலை, சிற்ப சாஸ்திர அறிவினை எவ்விதக் குறையுமின்றி, ஒரு துளிகூடச் சிதறாமல் முழுமையாக இந்தக் கதையில் வெளிப்படுத்தியுள்ளார். எளிய பார்வையாளன் ஒரு கல்லை எப்படிப் பார்க்கிறான் என்பதற்கும் கலையுள்ளம் கொண்டவன் அச்சிற்பத்தை எவ்வாறு அணுக வேண்டும் அதன் கோணங்களை, வளைவுகளை, நரம்புப் புடைப்புகளை எவ்வாறு ரசிக்க வேண்டும் என்பதற்குமான மிகச்சிறந்த வழிகாட்டுதலாகவும் கலை சார்ந்த அறிவுறுத்தலாகவும் இக்கதை பரிணமிக்கிறது.

சிற்பங்களில் ஆண், பெண் உருவங்களின் உடலமைப்பில் வெளிப்படும் முழுமை அழகின் தன்மையைக் கதை விவரிக்கும் விதம் அலாதியானது. குறிப்பாக ‘ரதி’ சிற்பத்தில் குடிகொண்டுள்ள, எவ்விதக் குறையுமற்ற அந்த நிறையழகு சார்ந்த எழுத்தாளரின் நுட்பமான வர்ணனைகள் வாசகரை வியப்பில் ஆழ்த்தி மதியிழக்கச் செய்கின்றன. 

இந்த அழகியல் வர்ணனைகளுக்கு நேர்மாறாக, கதையின் பின்னணியில் ஓடும் பூக்கட்டும் பெண்ணுக்கும் பார்வையிழந்த அந்த ஆணுக்கும் இடையிலான திருமண உறவு சார்ந்த முன்கதைச்சுருக்கம் மனித வாழ்வின் அசலான நேயத்தைக் காட்டுகிறது. இந்தச் சமூகத்தில் ஆதரவற்றவளாக நிற்கும் பேரழகி ஒருத்தியை, உலகைக் காணும் பார்வையற்ற ஓர் அழகன் மணம்புரிந்துகொள்வது மேலோட்டமாகப் பார்க்கையில் பெரும் வாழ்க்கை முரணாகத் தோன்றலாம். ஆனால் எந்தவிதப் ஒப்பனைகளுமற்ற யதார்த்தம் அவ்வாறே பலசமயங்களில் அமையப்பெற்று விடுகிறது என்பதை இக்கதை ஆணித்தரமாகச் சுட்டுகிறது.

கல்லில் வடிக்கப்பட்ட பெண் சிற்பத்தில், குறிப்பாக அந்த ‘ரதி’ சிற்பத்தில் கூடியுள்ள அந்த முழுமை அழகு என்பது, லௌகீக வாழ்வில் எந்தவொரு சாதாரணப் பெண்ணுக்கும் எளிதில் வாய்த்துவிடாத பேரழகுதான். ஆனால் வாசகனையும் அந்த இளைஞனையும் ஒருசேரத் திகைக்க வைக்கும்படி அந்த ரதியே சிற்பத்தூணில் இருந்து உயிர் பெற்று இறங்கி வந்ததுபோல அச்சு அசலாக ஒரு பெண் அங்கே வருகிறாள். அவள் அந்தச் சிலைகளைக் காணவந்த இளைஞனுடன் இயல்பாக உரையாடுகிறாள். அந்த இளைஞன் அவளுடைய பேரழகைப் பார்த்து, ரதிச் சிற்பத்துக்கும் அவளுக்குமான ஒற்றுமையைக் கண்டு பேதலித்து நிற்கும்போது, அவளுடைய பார்வையற்ற கணவன் இவனுக்குச் சிற்ப வழிகாட்டியாக அறிமுகமாகிறான். புறப் பார்வையில் அவன் குறைபாடுடையவனாக இருந்தாலும் அந்தப் பெண்ணின் வாழ்வில் அவன் பேரழகுடைய மன்மதனின் மாற்றுருவாகவே வீற்றிருக்கிறான்.

கதையின் மிக ஆழமான கவித்துவத் தருணம் அதன் தொன்மப் படிமத்தில் அடங்கியுள்ளது. ‘உலகில் உள்ளோர் எல்லோரும் ரதியின் அழகை வியந்து ரசிக்க, ரதியோ தன் காதல் கணவனான மன்மதனை மட்டுமே கண் கொட்டாமல் ரசிக்கிறாள்’ என்ற பழங்காலத் தொன்மம், இக்கதையின் மையத்தில் மீண்டும் ஒருமுறை நவீன வடிவில் உயிர்ப்பிக்கப்படுகிறது. 

கண்கள் இல்லாத தன் கணவனை மட்டுமே தன் உலகமாகக் கருதி, அவனை மட்டுமே அன்போடு நோக்குபவளாக அவனின் மனைவியான அந்தப் பூக்கட்டும் அழகி இருக்கிறாள். அவளது கண்கள் வேறு எதையும் எவரையும் தேடுவதில்லை. இந்த இடத்தில் மாபெரும் கலையின் அழகைவிட, மானுடக் காதலின் அழகு பலமடங்கு மேலோங்கி நிற்கிறது.

இந்தச் சிறுகதையின் மொழிநடை மிகவும் நுட்பமானது மட்டுமன்றிச் செவ்வியல் தன்மை வாய்ந்தது. உளி கொண்டு கடினமான பாறையில் மெல்ல மெல்ல, பல்லாயிரம் முறை தட்டி தட்டிச் செதுக்கல் செய்து பேரழகுச் சிற்பத்தை உருவாக்குவது போல இந்தச் சிறுகதையில் ஒவ்வொரு வர்ணனை வரியும் செதுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, சிற்பங்களை விவரிக்கும் இடங்களில் கோத்து வரும் ஒவ்வொரு பெரும்பொருட்சொல்லும் செம்பொருட்சொல்லும் அளந்து, செதுக்கி, நிதானமாக எழுதப்பட்டுள்ளன. வாசிக்கும் போதே அந்தப் பழங்காலக் கோவிலின் குளிர்ந்த இருளும் கற்பூர வாசனையும் சிற்பங்களின் பிரம்மாண்டமும் வாசகன் மனத்தில் எழுவதற்குக் காரணம் இந்தச் செதுக்கப்பட்ட மொழிநடைதான்.

இக்கதை நமக்குள் ஒரு பெரும் குற்றவுணர்ச்சியையும் சமூக விமர்சனத்தையும் விதைத்துச் செல்கிறது. எவ்விதக் குறையுமின்றிக் கொட்டிக்கிடக்கும் பேரழகுடன் திகழும் நம்முடைய பாரம்பரியக் கோவில் சிற்பத்தூண்கள் அவற்றின் அருமை பெருமை அறியும் காண்போர் யாருமின்றிக் கைவிடப்பட்ட நிலையில், தூசு படிந்து கிடக்கின்றன. 

‘நம் மரபின் சிற்பங்களைப் பற்றிச் சிற்பங்களே மனித உருவில் நேரில் வந்து விளக்கிக் கூறினால்தான், கலையுணர்வு மழுங்கிப்போன நம்மவர்களுக்கு அவற்றின் உண்மையான நேர்த்தியும் மதிப்பும் தெரியவரும்’ என்று எழுத்தாளர் இச் சிறுகதையின் வழியாக மிக நுட்பமாக, ஆனால் சாட்டையடியாக ஒரு குறிப்பை உணர்த்துகிறார்.

இந்த ‘மன்மதன்’ சிறுகதை வெறும் மனிதர்களுக்கிடையேயான கதை மட்டுமல்ல; அது கலையற்ற நிகழ்காலத்தைப் பெருமைவாய்ந்த கடந்தகாலத்தோடு வலுவாக இழுத்து இணைக்கும் மாபெரும் பெருங்கண்ணி. மனித மனத்தின் ஆழங்களை, கலையின் உச்சங்களை, காதலின் உன்னதங்களைத் தொட்டுச் செல்லும் இந்தப் படைப்பு ஐயத்துக்கு இடமின்றி எழுத்தாளர் ஜெயமோகனின் ஆகச்சிறந்த கதைகளுள் ஒன்றெனத் தமிழ் இலக்கியப் பரப்பில் என்றென்றும் எண்ணி வைக்கத் தக்கது; ஒவ்வொரு தலைமுறையினரும் மீண்டும் மீண்டும் படித்து வியக்கத் தக்கது.

– – –

       

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *