நுாறு தமிழ்ச் சிறுகதைகள் – 7.அகவிசை  (ஜெயமோகனின் ‘விசை’ சிறுகதையை முன்வைத்து…)

 

நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் மனித மனங்களின் அடுக்குகளையும் அவற்றின் உளவியல் ஆழங்களையும், காலத்தின் கோரப் பிடியில் சிக்குண்டு தவிக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலையும் தம் படைப்புகளால் செதுக்கி வருபவர்களில் எழுத்தாளர் ஜெயமோகன் முதன்மையானவர். 

‘விசை’ சிறுகதை, வெறுமனே தனிமனிதனின் வாழ்வியலைப் பேசும் கதையன்று; முழுச் சமூகத்தின் பரிணாம மாற்றத்தையும் நவீனமயமாக்கலின் பெயரால் நாம் இழந்துவிட்ட பாரம்பரிய விழுமியங்களையும் ஆவணப்படுத்தும் மகத்தான படைப்பு. இயந்திரமயமான இன்றைய பெருநகர, கிராமத்துச் சூழலில், உழைப்பின் உன்னதமும் அதன் மீதான மனிதக் கரிசனமும் எவ்வாறு காணாமல் போய்விடுகின்றன என்பதனை இந்தச் சிறுகதை மிக ஆழமாகப் பேசுகிறது.

இச்சிறுகதையின் அச்சாணி எலிசாம்மாளின் விறைப்புக்கொண்ட அகம்தான். ஊராரால் ‘ஒலைக்காளி’ என்று பரவலாக அறியப்பட்ட இவருடைய ஒட்டுமொத்த வாழ்வுமே தென்னை ஓலைகளுடனும் ஓய்வற்ற கடுமையான உழைப்புடனும் பின்னிப் பிணைந்திருந்தது. பேச்சிப்பாறை எஸ்டேட்டில் பண்ணை அடிமையாகத் துயருற்ற இவரை, நேசையனின் தந்தை பணம் செலுத்தி மீட்டு வந்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், விதி இவர்களை நெடுநாள் வாழவிடவில்லை. நேசையனுக்கு வெறும் மூன்று வயது மட்டுமே இருக்கும்போது, அவனுடைய தந்தை பனைமரத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருந்தபோது தவறிக்கீழே விழுந்து பரிதாபமாக இறந்துபோகிறார்.

இந்தப் பெருந்துயரமும் அதிர்ச்சியும் எலிசாம்மாளின் இளம் மனத்தைச் சிதைத்து, அவளது மொத்த மனநிலையைப் பிறழச் செய்துவிடுகிறது. அன்றுமுதல் அவள் யாரிடமும் பேசாதவளாக, சிரிப்பு முற்றிலுமாக மறந்துபோன இயந்திரப் பெண்ணாக மாறுகிறாள். 

அவள் சமையல் பற்றி எதுவுமறியாதவள்; சோறாக்கித் தேங்காய்த் துவையல் மட்டுமே அரைத்துத் தானும் உண்டு தன் மகனுக்கும் கொடுத்து அவனையும் வளர்த்து ஆளாக்கித் தன் வாழ்நாள்களைக் கழித்தவள். 

அவளுக்குத் தெரிந்த ஒரேயொரு உலகமும் தொழிலும் தென்னை ஓலை முடைவது மட்டுமே. காலை முதல் மாலை வரை குன்றாத விசையுடன் ஓலைகளை முடையும் அவளது கரங்கள் வெறும் பிழைப்புக்காக மட்டும் இயங்கவில்லை; அது அவளது ஆழ்மனத்தின் ஒடுங்குதலையும் மீள முடியாத விறைப்பையும் வெளிப்படுத்தும் குறியீடாகத் திகழ்கிறது.

இச்சிறுகதை கடந்த இருபது ஆண்டுகளில் நமது சமூகத்தில் நிகழ்ந்துவிட்ட மாபெரும் தொழில்நுட்ப மாற்றங்களையும் அதன் விளைவாக ஏற்பட்ட பண்பாட்டுச் சிதைவுகளையும் மிகத் துல்லியமாகப் பதிவுசெய்கிறது. ஒருகாலத்தில் கிராமப்புறங்களின் பிரிக்க முடியாத அடையாளங்களாக விளங்கிய பனை ஓலை மற்றும் தென்னை ஓலைக்கூரைகள் இன்று முற்றிலுமாக மறைந்துவிட்டன. விறகு அடுப்புக்குப் பதிலாகச் சமையல் எரிவாயுவாக கேஸ் சிலிண்டர்கள் புழக்கத்திற்கு வந்து கேஸ் அடுப்புகள் எங்கு நோக்கினும் பெருகிவிட்டன.

இதன் காரணமாக, தேங்காய் நார்களுக்கும் தென்னை ஓலைகளுக்கும் சந்தையில் துளியும் மதிப்பில்லாமல் போய்விட்டது. தென்னந்தோப்பு உரிமையாளர்கள் அவற்றை விற்று லாபம் ஈட்டுவதைவிட, குழிகளில் போட்டு மூடித் தீர்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்று உருவாகியுள்ளது. 

நைலான் கயிறுகளின் வருகை பாரம்பரிய தேங்காய் நார் தொழிலை எப்படி நசுக்கியதோ, அதேபோன்று நவீனமயமாக்கல் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வாதாரங்களை அடியோடு சாய்த்துவிட்டது. எலிசாம்மாள் வாழ்ந்த காலத்தில் பெரும் மதிப்புடன் பார்க்கப்பட்ட ஓலை முடையும் தொழில், இன்று எதற்கும் பயன்படாத பொருளாக மாறிவிட்டதை ஆசிரியர் குறியீட்டு ரீதியாகச் சுட்டிக் காட்டுகிறார்.

எலிசாம்மாள் முடையும் ஓலைகள் எளிய பொருட்களல்ல; அவளது கைவிரல்களின் வழியே இறங்கும் அகவேதனையும் அடங்காத ஆவேசமும்தான் அந்த ஓலைகளை அவ்வளவு நெருக்கமாக முடைய வைக்கின்றன. அவள் வாயை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, கழுத்துத் தசைகள் புடைக்க, நாணிடப்பட்ட பறை போல ஓலையைச் சொடுக்கி சொடுக்கி இழுத்து முடையும் விதம் அவளது வாழ்நாள் வாதைகளின் வெளிப்பாடாகும்.

அவள் இறந்த பின்னரும் கூட, அவளது இறுதிச் சடங்கின்போது அவளது உடலைக் கிடத்துவதற்குச் சாதாரணப் பாய்கூடக் கிடைக்காமல், அவள் முடைந்த ஓலைத் தட்டிகளையே பயன்படுத்தினர். பின்னர் அந்த ஓலைகளைச் சேர்த்து எரிக்க முயன்றபோது, தீயில் எரிந்து கரியாக மாறிய பின்னரும்கூட, அந்த ஓலைகள் தன் வடிவத்திலிருந்து சற்றும் மாறாமல், படுகடினமான அந்தப் பின்னல் வடிவத்துடனேயே எரிந்திருந்த காட்சியைக் காணமுடிகிறது. இது எலிசாம்மாளின் வாழ்நாள் முழுவதுமான போராட்டத்தையும் அவளது ஆன்மாவின் அழியாத விறைப்பையும் உலகுக்கு உரக்கச் சொல்கிறது.

தாயின் மறைவுக்குப் பிறகும், அவள் இறந்து இருபது ஆண்டுகள் கடந்த பின்னருங்கூட, தெருவோரத்தில் கிடக்கும் தென்னை ஓலைகளைச் சேகரித்துத் தன் வண்டியில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை நேசையன் கைவிடவே இல்லை. அவனால் அந்த ஓலைகளை வைத்து விறகு எரிக்கவோ அல்லது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தவோ முடியாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், தன் அம்மாவின் ஞாபகார்த்தமாக, அவளது உழைப்பின் மீதான நிபந்தனையற்ற பற்றாக, ஒரு தூய நினைவேந்தலாக அந்த ஓலைகளை அவன் தொடர்ந்து பாதுகாத்துக்கொள்கிறான். ஊரார் எளனமாகப் பேசினாலும், “நான் ஓலைக்காரியின் மகன் அல்லவா?” என்று பெருமிதத்தோடு சொல்லும் அவனது வார்த்தைகளில் தாய் மீதான மாறாத பாசம் வெளிப்படுகிறது.   

ஜெயமோகனின் ‘விசை’ சிறுகதை, நவீனமயமாக்கலின் வேகத்தில் நாம் தொலைத்துவிட்ட மனித உறவுகள், உழைப்பின் பெறுமதி மற்றும் பாரம்பரிய அடையாளங்கள் பற்றிய ஆழ்ந்த வாசிப்பை நமக்கு வழங்குகிறது. எலிசாம்மாளின் இறுக்கமான கைவிரல்களும் அவள் முடைந்த கருகிய ஓலைகளும் காலத்தை வென்று நிற்கும் மனித ஆன்மாவின் நித்ய சாட்சிகளாக நம் மனத்தில் நிலைத்து நிற்கின்றன.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *