
நவீனத் தமிழ் இலக்கிய உலகில் தத்துவார்த்தச் சிந்தனைகளையும் மனித வாழ்வியலின் சிக்கல்களையும் தனது எழுத்துகளின் வழியாக ஆழமாகப் பதிவு செய்து வருபவர் எழுத்தாளர் ஜெயமோகன். ‘சாவி’ சிறுகதை எளிய விலங்கின் ஊடாகப் பிரபஞ்சத்தின் விதிகளையும் மனித நாகரிகத்தின் முரண்களையும் பேசும் முக்கியமான புனைவு.
இருசக்கர வாகனப் பழுதுநீக்கும் கடையும் அங்குத் தற்செயலாக வந்து சேரும் காட்டுக்குரங்கும் அதனைச் சுற்றியுள்ள மனிதர்களும் இக்கதையின் களமாக அமைகின்றனர். வெறும் கதை மாந்தர்களின் உரையாடல்களோடு நின்றுவிடாமல், அறிவின் தோற்றம், அதன் மூலம் மனிதன் அடையும் துயரம், அடிமைத்தனம் மற்றும் விடுதலை போன்ற உயர்த் தத்துவங்களை இச்சிறுகதை வெளிப்படுத்துகிறது.
இக்கதையின் நாயகனாகிய அரிகிருஷ்ணன், இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறான். அவனுக்கு உதவியாக மணிகண்டன் என்பவன் வேலை செய்கிறான். வீட்டில் அவனது தாயும் மனைவியான மகாலட்சுமியும் இருக்கிறார்கள். அன்றாடப் பிழைப்புக்காகப் போராடும் எளிய வர்க்கத்தின் பிரதிநிதியாக விளங்கும் அரிகிருஷ்ணனின் வாழ்க்கை இயந்திரத்தனமான லௌகீகத் துயரங்களால் சூழப்பட்டுள்ளது.
அவன் கடையில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, எதிரே அமர்ந்திருக்கும் குரங்கைக் கவனிக்காமல் ஆரம்பத்தில் மனிதனாக (தன்னுடைய உதவியாளர் மணிகண்டன் என்று) நினைத்துப் பேசுகிறான் விலங்குக்கும் மனிதனுக்கும் இடையிலான மெல்லிய எல்லைக்கோட்டை இந்தத் தொடக்கக் காட்சி கலைத்துவிடுகிறது. குரங்கு என்பது வெறும் விலங்கு மட்டுமன்று; அது அறிவின் திறப்பைத் தேடி அலையும் ஆன்மாவின் குறியீடாகவும் மாறுகிறது.
இக்கதையில் சேலம் மாவட்டத்தில் எட்டுவழிச் சாலை அமைக்கப்படும் விவகாரம் பின்னணியாகக் பேசப்படுகிறது. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் காடுகளும் விவசாய பூமிகளும் அழிக்கப்பட்டு, பின்னர் வீட்டு மனைகளாக மாறுவதை இக்கதை சுட்டிக்காட்டுகிறது.
வானத்தில் மரங்களின் மீது தன் கூட்டத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த குரங்கு, மனிதனின் பேராசை காரணமாக நிலப்பரப்பிற்குத் தரையில் வந்து வாழப் பழகுகிறது. மனிதர்கள் விலங்குகளின் இருப்பிடங்களை அபகரிப்பதால், விலங்குகள் வேறு வழியின்றி மனிதர்களின் வாழிடங்களை நோக்கி வர நேரிடுகிறது.
அரிகிருஷ்ணனின் தாயின் கூற்றுப்படி, “மரமும் வானமும் என மகிழ்ச்சியாக வாழும் குரங்கை ஏன் தரையில் புழுதியில் துக்கத்தோடு வாழச் செய்யவேண்டும்?” என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அரிகிருஷ்ணன் அந்தக் குரங்கினைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்புகிறான். தரையில் துக்கம் இருந்தாலும் மனிதனுடன் பழகும்போது அது பெறும் புதிய அனுபவங்களையும் அறிவையும் அது தவிர்க்க முடியாது போகிறது.
இச்சிறுகதையின் மையத் தத்துவமே அறிவின் இரு பரிமாணங்களைப் பற்றியதுதான்.
ஒன்று – உள்நுழையும் அறிவு. இது அறியாமையையும், உலகியலின் மாயவலைக்குள் சிக்கி அடிமைப்படுவதையும் குறிக்கிறது. பெரும்பான்மையான மனிதர்கள் இந்த அடிமைப்படுத்தும் அறிவை மட்டுமே பயன்படுத்தித் தங்களைச் சுற்றிப் பல சிக்கல்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.
இரண்டு – வெளியே செல்லும் அறிவு. இது விடுதலையைக் குறிப்புணர்த்தும் உயர்ந்த அறிவு நிலையாகும். விலங்குகளுக்கு இயல்பாக ஒற்றை அறிவு மட்டுமே உண்டு (உள்ளே செல்வது). ஆனால், இந்தக் கதையில் வரும் குரங்கு, தன் இயல்பான எல்லையை மீறி இரண்டாவது அறிவான வெளிச்செல்லும் அறிவைப் (உயர்ச்சுயசிந்தனை, தொழில்நுட்பப் புரிதலை அனுபவமாக்குதல்) பெற்று மனித உலகிற்குள் நுழைகிறது.
இக்கதையின் தலைப்பான ‘சாவி’ என்பது வெறும் பூட்டினைத் திறக்கும் கருவியைக் குறிப்பது மட்டுமன்று; அது மனித ஆன்மாவின் விடுதலைக்கான சாவி ஆகும். குரங்கு தன் அறிவின் எல்லையை விரிவாக்கி, ‘ஸ்க்ரூ’ டிரைவரைப் பயன்படுத்தித் திருகாணியை இறுக்குவதைக் கற்றுக்கொள்வது, அதன் அகவிடுதலையையும் களியாட்டத்தையுமே குறிக்கிறது.
அரிகிருஷ்ணனின் தாயும் மனைவியும் குரங்கை வளர்ப்பதை எதிர்க்கின்றனர். அந்தத் தாயின் பார்வையில் மனிதனின் அறிவு என்பது ஒரு சாபக்கேடு. “மனுசனுக்கு சாமி அறிவை குடுத்திருக்கு. ரெண்டு அறிவு. எல்லாத்துக்கும் உள்ள போறதுக்கு ஓர் அறிவு, வெளியே வாறதுக்கு இன்னொரு அறிவு. பலபேரு அந்த ரெண்டாவது அறிவைப் பயன்படுத்துறதில்லை… ஆனால் மிருகங்களுக்கு அப்பிடி இல்லை.”
‘லௌகீகத் துக்கம்’ என்பது இல்லாததை எதிர்பார்த்துத் துடிப்பதும் ‘ஞானத் துக்கம்’ என்பது எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முயல்வதும் ஆகும். அரிகிருஷ்ணன் அறியாமையிலிருந்து விடுபட முயலும்போது, அவனுக்குள் எழும் அழுகையும் தத்தளிப்பும் மனிதகுலத்தின் பொதுவான துயரத்தின் வெளிப்பாடுகளே!
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘சாவி’ சிறுகதை, எளிய விலங்கின் பரிணாம வளர்ச்சியைப் பேசுவது போலத் தொடங்கி, மனித நாகரிகம் இயற்கையை எவ்வாறு சிதைக்கிறது என்பதையும் அறிவு மனிதனுக்கு வரமாகவும் சாபமாகவும் எப்படி அமைகிறது என்பதையும் ஆழமாகப் பேசுகிறது.
இறுதியில் குரங்கு ‘ஸ்க்ரூ டிரைவரை’ வெற்றிகரமாகப் பயன்படுத்தி அடைந்த மகிழ்ச்சி, சாதாரணக் கடிகாரப் பிழைப்புக்குள் சிக்கித் தவிக்கும் மனிதனுக்குக் கிடைக்காத ஓர் அசல் விடுதலையாக மிளிர்கிறது. இக்கதை மனிதன் மற்றும் விலங்கு என்ற இருவேறு உலகங்களுக்கு இடையிலான பாலமாகவும் தத்துவார்த்த விழிப்புணர்வுக்கான சிறந்த திறவுகோலாகவும் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
– – –
