
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘மலைபூத்தபோது’ சிறுகதை, நிலம்வாழ் மனிதர்களுக்கும் மலைவாழ் இனக்குழு மக்களுக்கும் இடையேயான பண்பாட்டு மோதலை, நன்றிக்கடன் சார்ந்த ஆன்மிகப் பிணைப்பை மற்றும் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய மாறும் உலகியலை மிக ஆழமாகவும் கறாராகவும் பேசும் படைப்பாகும்.
இயந்திரத்தனமான விவசாயமும் லாபநோக்கிலான நாகரிகமும் இயற்கையோடு இயைந்திருந்த பூர்வகுடிகளின் வாழ்வியலைச் சிதைத்துள்ளன. கதையில் மலைவாழ் மக்களை “பறக்கும் மனிதர்கள்” என்றும், தாழ்நில ஊர் மக்களை “கல்லால் ஆனவர்கள், எடைமிகுந்தவர்கள்” என்றும் ஆசிரியர் உருவகப்படுத்துகிறார்.
இயற்கையின் சுதந்திரக் காற்றோடு இணைந்து, சுமை ஏதுமின்றி வாழ்பவர்கள். இவர்களின் வாழ்க்கை எளிமையானது; இயற்கையின் சுழற்சியோடு இரண்டறக் கலந்தது.
மண்ணை உழுது, விதைகளை விதைத்து, லாபத்தையும் சேமிப்பையும் மையமாகக் கொண்டு வாழ்பவர்கள். காலப்போக்கில் இவர்கள் இயந்திரத்தனமான விவசாய முறைக்கு மாறிவிட்டனர்.
தொழிற்புரட்சியும் நவீன விவசாயமும் மனிதர்களை இயற்கையிடமிருந்து பிரித்துவிட்டன. நிலம்வாழ் மக்கள் முன்பு அறுவடையின் போது காடுகாக்கும் தெய்வங்களுக்கும் எலிகளுக்கும் பறவைகளுக்கும் தங்களது வயல்வரப்புகளில் உணவுப் பங்களிப்பை வழங்கினர். ஆனால், நவீன காலத்தில் அந்த நன்றிக்கடன் அறம் கைவிடப்பட்டுவிட்டது. மனித மனங்களில் ‘நாம், நமக்கு’ என்ற கூட்டுணர்வு மறைந்து ‘நான், எனக்கு’ என்ற சுயநலம் வேரூன்றியுள்ளதைச் சிறுகதை யதார்த்தமாகப் பதிவுசெய்கிறது.
இச்சிறுகதையின் ‘ஆன்மிகம்’ என்பது கோவில் சிலைகளோடும் ஆகம விதிகளோடும் தொடர்புடையதன்று; அது இயற்கையுடனான உறவு மற்றும் நன்றிக்கடன் சார்ந்த ஆன்மிகம்.
மலையக மக்கள் கரடிமலையையும் கைதையாற்றையும் பாறைகளையும் தங்களது மூதாதையரின் சாட்சியாகக் கருதுகின்றனர். பெண் கருவுறுதல், குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு என வாழ்வின் அனைத்துச் சடங்குகளிலும் இயற்கையை வணங்கி “ஆமாம், அதுதான், ஆகட்டும், தெய்வங்களே!” என்ற உறுதிமொழியைச் சொல்கிறார்கள்.
கடுத்தா, பிறுத்தா, சிறுத்தா ஆகிய மூன்றும் காடுகாக்கும் தெய்வங்களாகக் காட்டப்பெறுகின்றன. இவை புலி மற்றும் சிறுத்தைகளின் வடிவங்களாக மலைவாழ் மக்களால் வழிபடப்படுகின்றன.
தாழ்நிலத்து மனிதர்களின் மையக்கோயில்களில் உள்ள காவல் தெய்வங்களுக்கும் (ஆனைச்சாத்தன், வரிச்சாத்தன், நாகயட்சி, வடயட்சி) மலைவாழ் மக்களின் தெய்வங்களுக்கும் இடையே எல்லை வேறுபாடு உள்ளது. ஆயினும், மலைவாழ் மக்கள் தாழ்நில மக்களுக்காகவும் சேர்த்து மழைவளம் வேண்டியும் தாங்கள் விளைவித்த பொன்னை (நெல்லை) ஏற்று அருளும்படியும் வேண்டுகின்றனர். ஆன்மிகம் என்பது இங்கு அதிகாரமோ மதச் சடங்கோ அன்று; அகத்தூய்மையும் சமநிலையும்தான்.
இனக்குழு மக்களின் பண்பாடும் வாழ்வியலும் அவர்களின் புழங்கு பொருட்கள் மூலமாகச் சிறுகதையில் மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மாட்டுத்தோல் பை, இரும்பாலான கொக்கறை என்ற இசைக் கருவி, மீட்டுக் கம்பிகள், கரிய ஆடை, கரிய கல்மணிமாலைகள், தலையில் சூடும் கரிய இறகுகள் ஆகியவை மலைவாழ் மனிதனின் தொன்மையான அடையாளங்களாகும்.
கொக்கறையை மீட்டிப் பாடப்படும் பாடல்கள் வெறும் ஒலிகள் அல்ல; அவை காடுடன் பேசும் மொழிகள். “கொத்தோடு குலையோடு வாரித்தா மாதாவே…” என்ற வரிகள் நிலம் செழிக்கவும் மக்கள் வாழவும் செய்யும் வாழ்த்தின் வெளிப்பாடாகும்.
எலிகளையும் பூச்சிகளையும் காட்டு விலங்குகளையும் இயற்கையின் ஒரு பகுதியாகக் கருதும் பண்பாடு மலைவாழ் மக்களிடம் உள்ளது. ஆனால், நவீன ஊர் மக்கள் தங்களது சுயநலத்தால் அந்த இணைப்புக் கண்ணியை அறுத்துவிட்டனர்.
ஜெமோகனின் எழுத்துக்களில் உள்ள கறாரான யதார்த்தம் இக்கதையின் இறுதிக் கட்டத்தில் உச்சம் பெறுகிறது.
தாழ்நில ஊருக்குச் செல்லும் மலைவாசி, முந்தைய காலங்களைப்போல அங்கே வீடுகளின் பின்புறம் விளக்குகளோ, புதுநெல் காணிக்கையோ வைக்கப்படவில்லை என்பதைக் காண்கிறான். நவீன நாகரிகத்தின் நுகர்வு வெறி, தாழ்நில மனிதர்களை நன்றியற்றவர்களாக மாற்றிவிட்டது. வரப்புகளில் நெல்மணிகள் உதிர்ந்து கிடந்தாலும் அவற்றை நன்றியுடன் தெய்வங்களுக்குப் படைக்கவோ அல்லது பிற உயிர்களுடன் பகிர்ந்துகொள்ளவோ அவர்கள் தயாராக இல்லை.
தாழ்நிலம் ஒருமணிநெல்லைக்கூட அளிக்காத நிலையில், மலைவாழ் மக்கள் தங்களது மூதாதையரிடம் திரும்பிச் சென்று முறையிடுகிறார்கள். இறுதியில், இயற்கையின் தெய்வங்களான கடுத்தா, பிறுத்தா, சிறுத்தா ஆகிய புலிகள் சீறி எழும் காட்சியும், மலைமேல் இருந்து பாறை உருண்டு வருவது போன்ற பேரொலியும் எதை உணர்த்துகின்றன?
மனிதர்கள் இயற்கையுடனான நெறிமுறைகளையும் நன்றிக்கடனையும் மீறும்போது, இயற்கை தனது உக்கிரமான கோபத்தை வெளிப்படுத்தும் என்ற எச்சரிக்கையை இச்சிறுகதை கறாராக முன்வைக்கிறது. முனிந்த தெய்வங்களின் கோபத்திற்கு முன் மானுடத்தின் பலவீனம் என்ன என்ற கேள்வியோடு கதை நிறைவடைகிறது.
‘மலைபூத்தபோது’ சிறுகதை வெறும் புனைவு மட்டுமல்ல; அது மானுட வரலாற்றின் பண்பாட்டுத் தத்துவமாகும். நிலம்வாழ் மனிதர்களின் இயந்திரத்தனமான சுயநல வாழ்வியலையும் இயற்கையைத் தாயாக மதிக்கும் மலைவாழ் மக்களின் ஆன்மிக விழுமியங்களையும் எழுத்தாளர் ஜெயமோகன் மிக நேர்த்தியாக எதிர்வைத்துள்ளார். இருவேறு உலகங்களுக்கு இடையேயான மோதலை அழகியலோடும் தத்துவார்த்த ஆழத்தோடும் இப்படைப்பு நம் கண்முன்னே நிறுத்துகிறது.
– – –
