
சமகாலத் தமிழ்ச் சிறுகதை உலகில் தனித்துவமான குரலால் இயங்கும் எழுத்தாளர் ரம்யாவின் ‘தூசி’ சிறுகதை, அரசு அலுவலகக் கோப்புகளின் வாசனையையும் காலத்தின் கரடுமுரடான போக்கையும் நசிந்துபோன நாட்டுப்புறக் கலைகளின் வேதனையையும் ஒருங்கே பேசும் கலைப் படைப்பாகும்.
ஓய்வுபெறுகின்ற தருவாயில் இருக்கும் அரசு ஊழியன் மோகன் என்பவனின் அக உலகத்தையும் அவனது வாழ்க்கைச் சூழலையும் மையமாகக் கொண்டு விரியும் இக்கதை, மனிதனின் இயந்திரத்தனமான வாழ்வியல், இழப்புக்குப் பின் தேடும் ஆன்மத் தேடல் ஆகியவற்றை மிகக் கறாராகவும் அதே சமயம் ஆழமான ஈரத்தோடும் முன்வைக்கிறது.
இச்சிறுகதை தனிமனித வாழ்வியலின் உளவியல் சிக்கல்கள், அதிகார வர்க்கத்தின் வறட்டுத்தனம், கலைக்கும் அரசு இயந்திரத்திற்குமான மோதல் மற்றும் அகவிடுதலை ஆகிய பரிமாணங்களின் வழியாக விரிவாக விவாதிக்கிறது.
கதையின் நாயகனான மோகன், முப்பது ஆண்டுகளாக அரசுப் பணி ஆவணக் காப்பகத்தில் (Record Room) கோப்புகளுக்கு நடுவே தன் வாழ்நாளைக் கழித்தவன். அவனது தந்தை மரகதக் கூத்து, நாடகக் கலையை நம்பி நடுத்தெருவில் நின்று மாண்டுபோனவர். அந்த ஏழ்மையின் வடு மோகனின் அடிமனத்தில் ஆழமான வன்மத்தையும், கலையின் மீதான கடும் கோபத்தையும் விதைத்துள்ளது.
“உங்க அப்பா மட்டுமில்ல. பலரும் இந்த மாற்றத்த எதிர்பாராம, நொடிஞ்சு மாண்டு போனாங்க”
என்ற சுப்ரமணியம் ஐயாவின் கூற்று, பாரம்பரியக் கலைகளை நம்பி வாழ்ந்த ஒரு சந்ததியினரின் பெரும் துயரத்தைக் காட்டுகிறது. ஆனால், மோகனோ அந்தத் துயரத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல், அரசாங்க உத்தியோகத்தின் கறார் தன்மையையும் சிடுசிடுப்பையும் தன் முகமூடியாக மாற்றிக்கொள்கிறான். அவனுக்கு ‘அலுவலகம்’ என்பது வெறும் சம்பளத்துக்கான இடம் மட்டுமன்று; சமூகத்தின் மீது தான் கொண்ட கோபத்தைக் காட்டும் களம்.
இங்குத் தனிமனித வாழ்வியல் என்பது ‘எந்திரத்தனமான சுழற்சி’யாகச் சுருங்கிவிடுகிறது. பணி ஓய்வுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் கிடைக்கும் ‘சஸ்பென்ஷன் ஆர்டர்’ அவனது ஒட்டுமொத்த இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. அவனது கைநழுவிப்போன கோப்புகளும் அவன் இழந்த ஆவணங்களும் வெறும் தாள்கள் அல்ல; அவனது முப்பது வருட ஏமாற்றங்களின் குவியல்.
கதையின் தலைப்பு (‘தூசி’) முக்கியமான குறியீடாகும். ‘தூசி’ என்பது அலட்சியப்படுத்தப்பட்டதன் அடையாளம்; கைவிடப்பட்ட கலைகளின் எச்சம். மோகன் தனது அலுவலக அறையில் படிந்திருக்கும் தூசியைச் சுவைத்தே வாழ்ந்தவன். ஆனால், காலப்போக்கில் அதே தூசியே அவனது நுரையீரலில் நீராகக் கோர்த்து, அவனது உடல்நிலையைப் பாதிக்கிறது. மறுபுறம், சுப்ரமணியம் ஐயாவும் அவரது சீடர்களும் பாதுகாக்கும் நாடகக் கலைக்களஞ்சியத்தின் மீது படிந்திருக்கும் தூசியோ, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட அறிவின் மௌனச் சாட்சி.
மோகன் தன் தந்தையின் பெயரைக் கடைசி நாளாக ‘ரெக்கார்ட் ரூம்’ அலமாரியில் எழுதிவிட்டு வரும் தருணம் மிக நெகிழ்ச்சியானது.
“நான் மீண்டும் செல்லாவிட்டால் மறுபடியும் தூசிகள் படிந்து பெயரை மூடிக்கொள்ளும் என்ற பயம் தொற்றிக் கொண்டது. தூசிகள் பனிச்சரிவுகளைப் போல. ஒவ்வொரு நாளும் படிந்து புதிய புதிய தோற்றங்களை அவைகளே உருவாக்கிக் கொள்ளும்”
என்ற வரிகள் மனித வாழ்வின் நிலையாமையையும், காலத்தின் அரவமில்லாத அழித்தொழிப்பையும் மிகச்சரியாகப் படம்பிடிக்கின்றன.
அரசு அலுவலகங்களின் கீழ்மட்ட ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான மோதல்கள் கதையில் யதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோகன் தனது அலுவலகத்தில் சக ஊழியர்களான ‘டைப்பிஸ்ட்’ முத்துலட்சுமி, ஓ.ஏ. அப்பாதுரை மற்றும் லட்சுமணன் வாத்தியார் ஆகியோரிடம் காட்டும் அதிகாரத் திமிரும், அதற்கு அவர்கள் காட்டும் மௌனப் பழிவாங்கலும் சமகால அலுவலக வாழ்வியலின் அப்பட்டமான கண்ணாடி.
தனது சிறுபிள்ளைத்தனமான கோபங்களாலும் அதிகாரத் திமிரினாலும் தான் இழந்த நாடகக் கலைக்களஞ்சியத்தின் குறியீட்டுத் தொகுப்பை மோகன் தேடும்போது, அவனது கர்வங்கள் உடைந்து சாதாரணமாகிறான். சிறிய தவறு அவனது முப்பது வருட உழைப்பைச் சுட்டுப் பஸ்பமாக்கிவிடுகிறது. இது தனிமனிதன் தான் கட்டமைத்த பாதுகாப்பான கோட்டை எப்படி நொடியில் சரிந்து விழுகிறது என்பதை உணர்த்தும் உளவியல் தருணமாகும்.
கதையின் ஆன்மாவாக விளங்குபவர் சுப்ரமணியம் ஐயா. சினிமா மோகத்தால் நாடகக் கலை நசிந்துவிட்ட காலத்திலும் அதற்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த கலைஞன். அவனிடம் எந்தவிதமான வணிக நோக்கோ, புகழோ, எதிர்பார்ப்போ இல்லை.
“கலை சாகறதில்ல தம்பி. என்னைக்காவது அது தனக்கானவனுக்காகக் காத்துக் கெடந்து மீள எழுந்து வரும்”
என்ற ஐயாவின் வார்த்தைகள் மோகனின் அகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
சுடலையின் சிரிப்பும் அவனது யமன் வேடமும் மோகனின் நினைவுகளில் புதைந்து கிடந்த அவனது தந்தையின் உருவத்தோடு பொருந்திப் போகின்றன. கலையை வெறுத்து ஒதுக்கிய மோகன், இறுதியில் அதே கலையின் பிரதிநிதியான சுப்ரமணியம் ஐயாவின் காலடியில் சரணடைவது தனிமனிதனின் அக விடுதலையைக் குறிக்கிறது.
இழந்துவிட்டதாக நினைத்த நாடகக் கலைக்களஞ்சியத்தின் பொருளடக்கம் சுடலையிடமும் ஐயாவிற்கும் பாதுகாப்பாகக் கிடைத்ததும் மோகன் அடையும் கண்ணீரும் அவனது குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமன்று; அது அவனது ஆன்மாவின் சுத்திகரிப்பு ஆகும்.
கதையின் இறுதியில் மோகன் கூறுகிறான், “ஐயா. இனி நானும் இருக்கேன் உங்கக்கூட…
உடனே சுப்ரமணியம் ஐயா, “அப்டீன்னா ஐஞ்சு வருஷம் போதுமே” என்கிறார்.
இந்த முடிவு மிக ஆழமான வாழ்வியல் தத்துவத்தை உணர்த்துகிறது.
அரசுப் பணியின் ஒடுக்குமுறையிலிருந்தும் கோப்புகளின் மரணத்திலிருந்தும் விடுபட்டு, உண்மையான கலையின் மீட்சியோடு தன்னை இணைத்துக் கொள்ளும் மோகனின் முடிவு அவனது தனிமனித வாழ்வியலுக்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசாகும்.
எழுத்தாளர் ரம்யா, வறண்ட அலுவல் உலகத்தையும் உணர்ச்சிகரமான கலை உலகத்தையும் இணைத்து, மனித மனத்தின் உடைந்த பகுதிகளை மிகக் கறாராகவும் நேர்த்தியாகவும் இச்சிறுகதையில் மீட்டுள்ளார்.
– – –
