நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 37  அடையாளத் தேடல்   (ஹரன் பிரசன்னாவின் ‘தொலைதல்’ சிறுகதையை முன்வைத்து…)

நவீனத் தமிழ்ச் சிறுகதை உலகில் தனிமனித மனத்தின் விளிம்புநிலைத் தத்தளிப்புகள், குடும்ப உறவுகளின் சிக்கல்கள், ஆன்மிகத் தேடலின் பெயரால் நிகழும் விலகல்கள் ஆகியவற்றைத் தன் எழுத்தின் வழியே தொடர்ந்து பதிவு செய்து வருபவர் எழுத்தாளர் ஹரன் பிரசன்னா. 

அவர் எழுதியுள்ள ‘தொலைதல்’ என்ற சிறுகதை, ஒரு குடும்பத்தின் நீண்டகாலக் காத்திருப்பு, ஏமாற்றம், விவரிக்க முடியாத மனிதமனங்களின் வெளிப்பாடுகளை மிகக் கறாராகவும் ஆழமாகவும் விவரிக்கிறது. இக்கதை வெறும் குடும்ப உறவுகளின் கதையன்று; சமகால மனிதனின் அடையாளத் தேடல், பற்றின்மை பற்றிய தீவிரமான உளவியல் சாட்சியாகும்.

கதையின் தொடக்கத்திலேயே எழுத்தாளர் வாசகரைப் பதற்றமான சூழலுக்கு அழைத்துச் செல்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்பத்தைப் பார்க்கச் செல்லும் கதைசொல்லி நரேன் மற்றும் அவனது மனைவியின் பார்வையின் வழியாகவே கதையின் களம் விரிகிறது. பதினோரு வயதில் திருமணம், ஏழு குழந்தைகள், கணவனை இழப்பு எனத் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைத் துயரங்களிலேயே தொலைத்த அவ்வா (பாட்டி), தன் மகன்களின் வீடுகளில் மாறி மாறி வசிக்கும் நிர்கதியான நிலையில் இருக்கிறாள்.

இச்சூழலில், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடிப்போன இளைய மகன் சிவபாஸ்கரன் திடீரென்று பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருவதை ஒட்டிய விவரிக்க முடியாத மௌனம் கதை முழுவதும் படர்ந்துள்ளது.

பெத்த வயிறு படும் வேதனையை அவ்வாவின் கலங்கிய கண்களும் தரையைத் தடவும் அவளது கரங்களும் மௌனமாகப் பேசுகின்றன.

சிவபாஸ்கரன் ஏன் ஓடிப்போனான் என்பதற்கு லக்ஷ்மி அக்கா சொல்லும் முரண்பட்ட காரணங்கள், குடும்பம் எதிர்கொள்ளும் சமூக அவமானத்தையும் அதிலிருந்து தப்பிக்கப் புனையப்படும் உளவியல் தற்காப்புத் கதைகளையும் அப்பட்டமாகக் காட்டுகின்றன.

சிவபாஸ்கரனின் வருகை சாதாரணமானதன்று. அவன் தன் இளமையை, அழகைத் தொலைத்துவிட்டு, தோல்நோய் (சோரியாசிஸ் போன்ற அறிகுறிகள்) மற்றும் ஒருவிதத் தத்துவார்த்த மயக்கத்துடன் திரும்புகிறான். அவனுடைய பேச்சுகளும் செயல்களும் அவனைக் குடும்பத்திலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தியுள்ளன.

ஆரம்பத்தில் தன் குடும்பத்தார் மீதும் சுற்றத்தார் மீதும் இருந்த ஆழ்ந்த ‘வெறுப்பே’ தன்னைத் துறவறம் நோக்கித் தள்ளியதாக அவன் ஒப்புக்கொள்வது குறிப்பிடத் தக்கது. ஆனால், அந்தத் துறவறம் அவனுக்கு அமைதியைத் தரவில்லை; உலகியல் நிஜங்களிலிருந்து தப்பியோடும்  மனநிலையையே தந்துள்ளது.

அவன் விவரிக்கும் ஹரித்துவாரப் பயணமும் சீனிவாசன் என்ற சமையல்காரரின் சாவையும் சப்த கன்னியர்களின் தரிசனத்தையும் விவரிக்கும் விதமும் அவனது மனம் யதார்த்த உலகத்திலிருந்து விலகி, ஏதோ  கற்பனை மாய உலகத்தில் சஞ்சரிக்கிறது என்பதை உணர்த்துகிறது. சமஸ்கிருத வேதங்களையும் ஆச்சார்யார்களின் வாக்கியங்களையும் மேற்கோள் காட்டும் அவனது சொற்கள், அவனுக்குள் நடக்கும் அகப்போராட்டத்தின் வெளிப்பாடே தவிர, உண்மையான ஞானத்தின் விளைவன்று.

இக்கதையின் மையக்கருத்து ‘தனிமனிதனின் சுதந்திரமும் சமூகக் கடமைகளும்’ என்ற முரண்பாட்டின் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

சிவபாஸ்கரன் உலகியல் பற்றுகளைத் துறந்துவிட்டதாகக் கூறினாலும் அவனால் முற்றிலும் இயற்கையான பசியையோ அல்லது பழங்களின் மீதான காதையோ கடந்து செல்ல முடியவில்லை. “பழத்தைவிட முடியலையே என்னால” என்ற அவனது வரி, ஆன்மிகம் பேசும் மனிதர்கள்கூட அடிப்படை இயற்கையின் விதிகளுக்கு எப்படி அடிபணிகிறார்கள் என்பதை நக்கல் கலந்த கறாரான பார்வையுடன் வெளிப்படுத்துகிறது.

மறுபுறம், குடும்ப உறுப்பினர்களின் எதிர்வினைகள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. லக்ஷ்மி அக்கா அவனது காதல் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம் அவனது ஆன்மிகப் போர்வையைக் கிழித்தெறிகிறாள். ராஜபாஸ்கரன் அண்ணாவின் மௌனமும் ‘மொட்டை’ப் பாட்டியின் நேரடியான குத்தல் பேச்சுகளும் இந்தச் சமூகத்தின் வறண்ட யதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கின்றன.

கதையின் தலைப்பான ‘தொலைதல்’ பல அடுக்குகளில் அர்த்தப் படுத்தப்படுகிறது. 1. சிவபாஸ்கரன் தன் குடும்பத்தை விட்டுத் தொலைந்தான். 2. தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்துவிட்டு விசித்திரமான ஆன்மிக மாயையில் அவன் மீண்டும் தொலைகிறான். 3. இறுதியில், அவன் மீண்டும் யாரிடமும் சொல்லாமல் நைசாகத் தப்பியோடும்போது, குடும்பத்தின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் உழைப்பும் மீண்டும் ஒருமுறை விலை மதிப்பில்லாமல் தொலைகின்றன.

கதையின் இறுதியில் சுஜியின் தாலிக்கொடியும் அவ்வாவின் தோடும் காணாமல் போவதும், “படவா திரும்ப ஓட்டான் போல்ருக்கு” என்ற ‘மொட்டை’ப் பாட்டியின் வரிகளும் இந்தத் தனிமனிதனின் பொறுப்பற்ற தனியுடைமை, ஓட்டம்பிடிக்கும் தன்மை ஆகியன குடும்பத்தின் மீது திணிக்கும் நிரந்தரச் சுமையைத் துல்லியமாக அம்பலப்படுத்துகிறது.

எழுத்தாளர் ஹரன் பிரசன்னாவின் ‘தொலைதல்’ சிறுகதை, உறவுகளின் ஆழத்தையும் மனித மனத்தின் விசித்திரமான உளவியல் சிக்கல்களையும் சமரசமின்றி ஆராய்கிறது. ஆன்மிகம், துறவறம், பற்றின்மை என்ற பெயரில் குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்லும் மனிதர்களைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றாமல், அவர்களின் அகச்சிக்கல்களையும் அதனால் பாதிக்கப்படும் எளிய மனிதர்கள் அடையும் துயரங்களையும் துல்லியமான நடையில் எழுதியுள்ளார். ‘தனிமனித சுதந்திரம்’ என்ற போர்வையில் உறவுகளைச் சிதைக்கும் நவீன மனிதனின் மனோநிலைக்குச் சிறந்த ஆவணமாக இக்கதை திகழ்கிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *