
தமிழ்ச் சிறுகதை இலக்கியப் பெரு வெளியில் தனித்த குரலாக ஒலிப்பவர் எழுத்தாளர் பா.ராகவன். நடுத்தர வர்க்க மனிதர்களின் உளவியலை, அவர்களின் அகத் தத்தளிப்புகளை, கனவுகளை, பயங்களை மற்றும் சமூக யதார்த்தங்களை துல்லியமாகப் பதிவு செய்யும் வல்லமை கொண்டவர். அவர் எழுதிய ‘நாலு சக்கர போதிமரம்’ என்ற சிறுகதை நடுத்தர வர்க்க மனிதர்களின் பெருமூச்சுகளையும் அவர்களின் போலி இலட்சியங்களையும் கறாராகவும் ஆழமாகவும் தோலுரித்துக் காட்டுகிறது.
தனிமனித வாழ்வியல் சார்ந்து இக்கதை எழுப்பும் கேள்விகள் வெறும் ஒரு தம்பதியரின் வாழ்க்கையை மட்டும் குறிப்பதல்ல; நுகர்வு கலாச்சாரத்தையும் இலட்சியவாத முகமூடிகளையும் அணிந்து கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த நவீனச் சமூகத்தின் பிரதிபலிப்பாக அமைகின்றன.
இக்கதையின் நாயகனான அருணும் அவனது மனைவி அகிலாவும் நவீனப் பெருநகரத்தின் குறியீடுகள். கல்யாண வீட்டு நெரிசலில் தொடங்கி, நள்ளிரவுச் சாலைகளில் முடியும் இவர்களது பயணம், வெறும் இருபக்கப் பயணமன்று; இது அவர்களின் வாழ்வியல் தேடலின் சிறுபரிமாணம்.
பன்னாட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரியாக அருண் இருந்தாலும் இன்னொருவரிடம் சம்பளம் பெறும் அடிமைத் தளையை விடவும் சுயதொழில் செய்து சாதித்துவிட வேண்டும் என்ற வெறி அவர்களின் தூக்கத்தைக் கெடுக்கிறது.
“மனத்தில் மிச்சமிருக்கும் ‘மிடில் கிளாஸ்’ பயக் குப்பைகளை மொத்தமாகப் பெருக்கித் தள்ளியாக வேண்டும்”
என்ற எண்ணம் நடுத்தர வர்க்கத்தின் பொதுவான உளவியல் ஆகும்.
“சம்பாதிப்பதா ஒரு பொருட்டு? சேமிப்பல்லவா நினைத்ததை எல்லாம் சாத்தியமாக்கி வந்திருக்கிறது?”
என்ற சிந்தனை இவர்களின் வாழ்க்கையை இயந்திரமாக்குகிறது.
காருக்கு டிரைவர் வைத்துக் கொள்ள முடியாத பொருளாதாரச் சூழல் அன்று அது; “அநாவசியங்களைத் தொடர்ந்து தவிர்த்து வந்திருப்பதன் மூலமே கார் வாங்க முடிந்திருக்கிறது” என்ற சுயநலக் கணக்குகளே இவர்களின் இயல்பான சந்தோஷங்களைச் சுருக்குகின்றன.
தனிமனித வாழ்வியலின் மிகச் வலிமிகுந்த புள்ளியை இக்கதை தொடும் இடம், அருண் மற்றும் அகிலாவின் குழந்தை இன்மை குறித்த சமூகத்தின் கேள்விகளாகும்.
“உங்களுக்குக் கல்யாணம் ஆகி ஏழெட்டு வருஷம் இருக்கும் இல்லே?” என்ற சமூகத்தின் பொதுவான, ஆனால் குத்தூசி போன்ற கேள்விகள் இவர்களின் அக உலகைச் சிதைக்கின்றன.
மருத்துவக் கல்லூரியில் பதக்கம் பெற்ற, கைராசி டாக்டராக விளங்கும் அகிலாவால் மற்றவர்களின் பிரசவங்களை வெற்றிகரமாக நடத்தித் தர முடிகிறது. ஆனால், தன் சொந்த வாழ்வில் எழும் வெற்றிடத்தை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
சமூகத்தின் ஒற்றைக் கேள்விக்காக அகிலா தனியறையில் முகம் சிவந்து, கண்கள் கலங்கி, மூக்கிலிருந்து நீரூற்றுப் பீறிடும் அளவுக்கு அழும் அழுகை, வெறும் உடல் சார்ந்த குறைபாடு பற்றியதன்று; அது தன்னை முழுமையான பெண்ணாகச் சமூகத்தின் முன் நிரூபிக்க முடியவில்லையே என்ற உளவியல் சிதைவு. அருண், அகிலா அருகில் இருக்கும்போதே ‘குழந்தை’ என்ற சொல்லைத் தவிர்ப்பதும் அந்தத் தவிப்பைத் தாங்கிக் கொள்வதும் நடுத்தர வர்க்கத்தின் மற்றொரு பரிதாபகரமான முகம்.
கார் பள்ளத்தில் மாட்டிக்கொண்டு, நள்ளிரவில் திண்டாடும்போதுதான் அருணின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுகிறது. வசதியான வாழ்க்கையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் அவனுக்குச் சாலையோரத்தில் குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் உறங்கும் எளிய மக்களின் வாழ்க்கை கண்ணில்படுகிறது.
தன் சுயலாபத்துக்காக உழைத்துக் களைத்துத் தூங்கும் எளிய மனிதனை எழுப்புவதில் எத்தனை சதவீதம் பாவம் சேரும் என்ற குருட்டுக் கணக்குகள் அவனுக்கு ஓடுகின்றன. ஆனால், உதவிக்கு வரும் அந்த ஏழை மனிதனின் வாழ்வு அவனை உலுக்கி எடுக்கிறது.
தன் சொந்தக் குழந்தையோடு, தன் தற்கொலை செய்து கொண்ட சகோதரியின் நோயுற்ற இரட்டைக் குழந்தைகளையும் சேர்த்துத் தூக்கி வளர்க்கும் அந்த ஏழை மனிதனின் வார்த்தைகள் அருணை உறைந்துபோகச் செய்கின்றன.
“சோறு திங்கறவங்களுக்குத் தான் ஒரு சோறு சாஸ்தின்னு தோணும். நாங்க கஞ்சி தானே குடிக்கிறோம்? அதுக்கு ஒரு வாயி. அவ்ளோதான்…” என்ற அந்த எளிய மனிதனின் தத்துவம்தான் இக்கதையின் தலைப்புக்கு உண்மையான அர்த்தத்தைத் தருகிறது. அதுவே உண்மையான போதிமரம்; ஆடம்பர வசதிகளையும், கணக்கிட்ட இலட்சியங்களையும் தேடி ஓடிய அருணுக்கு, வாழ்க்கையின் எளிய அர்த்தத்தை அந்த நள்ளிரவில் போதித்த ஞான பீடம் அந்த ஏழையின் குடிசை வாழ்க்கைதான்.
இக்கதையின் இறுதியில், அசோக் பில்லரைக் கடக்கும்போது அகிலாவின் முகத்தில் தோன்றும் சிறு முறுவலும், “அருண், எனக்கு ஒண்ணு தோணுது…” என்ற சொல்லும் வாழ்வின் மீதான புதிய நம்பிக்கையைக் காட்டுகின்றன.
‘நாலு சக்கர போதிமரம்’ என்பது வெறும் காரையும் அதன் சக்கரங்களையும் குறிப்பதன்று; அது மனிதர்களைச் சுமந்து கொண்டு, லட்சியம் என்ற பெயரில் இலக்கின்றி ஓடிக்கொண்டிருக்கும் நவீன வாழ்வியலின் குறியீடு. பொருளாதார வெற்றிகளையும் அந்தஸ்துகளையும் மட்டுமே வாழ்க்கை என்று நம்பும் தனிமனிதர்களை, ஒரு நொடியில் இயற்கையும் எளிய மனிதர்களின் வாழ்வியலும் எப்படிப் புரட்டிப் போட்டு ஞானம் பெறச் செய்கிறது என்பதை இக்கதை மிகக் கறாராகவும் அதே சமயம் அழகாகவும் எடுத்துரைக்கிறது.
இலட்சியங்களின் கனத்தினால் நிம்மதியை இழந்து நிற்கும் மனிதர்களுக்கு, எளிய மக்களின் நிம்மதியான புன்னகையும் அரவணைப்புமே உண்மையான விடியலைத் தருகின்றன என்பதை இக்கதை ஆழ்ந்த மனிதநேயத்தோடு பதிவு செய்கிறது.
இக்கதை வாசகர்களுக்கு எழுப்பும் கேள்வி மிக ஆழமானது. “நாம் தேடிக்கொண்டிருக்கும் இலட்சியங்களும் அந்தஸ்துகளும் நமக்கு நிம்மதியைத் தருகிறதா அல்லது நம்மை மேலும் மேலும் அடிமைப்படுத்துகிறதா?” பொருளாதார வெற்றிகளைக் கடந்து, சக மனிதனின் துயரத்தைப் புரிந்துகொள்வதிலும் இருப்பதை வைத்துக்கொண்டு திருப்தியடைவதிலுமே உண்மையான மனித வாழ்வியல் அடங்கியிருக்கிறது என்பதை ‘நாலு சக்கர போதிமரம்’ மிகச் சிறப்பாகப் புலப்படுத்துகிறது.
– – –
