நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 47.நினைவுகளின் இசை  (வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ சிறுகதையை முன்வைத்து…)

தனித்துவமான எளிய நடையாலும் நுட்பமான உணர்வுகளின் பதிவாலும் வாசகர்களின் மனத்தை ஈர்ப்பவர் எழுத்தாளர் வண்ணதாசன். அவரது ‘ஒரு சிறு இசை’ சிறுகதை, இறப்பு, நினைவுகள், தலைமுறைகளைக் கடந்து தொடரும் மனித உறவுகள் மற்றும் காதலின் மெல்லிய இழைகள் ஆகியவற்றை ஓர் இசைக்கோர்வையைப் போல மிக அழகாகப் பதிவு செய்யும் உன்னத இலக்கியப் படைப்பு.

கதை தொடங்கும்போதே மரணம் குறித்த எளிய யதார்த்தம் பேசப்படுகிறது. வந்த இடத்தில் வீட்டில் வைத்து மூக்கம்மா ஆச்சி இறந்துபோவதில் யாருக்கும் பெரிய வருத்தமோ அதிர்ச்சியோ இல்லை. “நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம் அதற்கு” என்று எல்லோரும் நினைப்பதாகக் கதைசொல்லி குறிப்பிடுகிறார். இது மரணத்தைத் துயரமாக மட்டும் பார்க்காமல், அது நீண்ட வாழ்வின் இயற்கையான நிறைவு என்ற கோணத்தில் அணுகும் கிராமிய மனநிலையைக் காட்டுகிறது.

மூக்கம்மா ஆச்சி வெறும் மூதாட்டி மட்டுமன்று; அவள் கடந்த காலத்தின் ஆவணம். காது வளர்த்துப் பாம்படம் போட்டவள், பழைய கதைகளைச் சொல்பவள், எல்லாரிடமும் கைப்பிடித்துப் பேசும் பழக்கமுடையவள். அவளது இறப்பு வீட்டில் எந்தப் பெரும் கூச்சலையும் உருவாக்கவில்லை என்றாலும் அவளின் நினைவுகள் அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் சிறு இசையைப் போல ஒலிக்கத் தொடங்குகின்றன.

மூக்கம்மா ஆச்சி சொல்லும் கதைகள் யதார்த்தத்தின் எல்லைகளை மீறிய கற்பனை வளம் கொண்டவை. தாத்தா மாஞ்சோலை எஸ்டேட்டில் வேலை பார்த்ததும் அவரை வெள்ளைக் காரிச்சி குதிரையில் தூக்கிச் சென்றதும் மூன்றாம் நாள் ராத்திரி பூப் போலக் கொண்டுவந்து இறக்கியதும் போன்ற கதைகள் விசித்திர உலகைக் கண்முன்னே நிறுத்துகின்றன.

“எல்லாக் கதையும் ஒரே கதைதான். ஆதியிலே இருந்து ஒரு கதையைத்தான் ஒம்பது கதையா சொல்லிக்கிட்டு இருக்கோம் திலுப்பித் திலுப்பி” என்று ஆச்சி சொல்வது இக்கதையின் மிக முக்கியமான தத்துவார்த்த வரியாகும்.

மனிதர்களின் வாழ்வும் காதலும் தலைமுறைகள் கடந்தாலும் அதன் அடிப்படை உணர்வுகள் மாறுவதில்லை என்பதை இந்த வரி ஆழமாக உணர்த்துகிறது. எம்.ஜி.ஆர் படக் கதைகளையும் பழைய புராணக் கதைகளையும் ஆச்சி ஒன்றிணைக்கும் விதம், சாதாரண மக்களின் கற்பனை உலகை வெளிப்படுத்துகிறது.

இக்கதையின் உச்சகட்ட உணர்ச்சிப் பகுதி என்பது ஆச்சி தன் இளமைக்காலத்தில் பட்ட வேதனையும் தாத்தாவின் மீது கொண்ட ரகசியக் காதலுமாகும். 

தாத்தா இறந்த பிறகு மூக்கம்மா ஆச்சி ஒரு சொல்கூட அவரைப் பற்றிப் பேசியது கிடையாது. ஆனால், பிற்காலத்தில் அவள் மறைவுக்குப் பின்பு திறக்கப்படும் அந்த மரப்பெட்டிக்குள், தாத்தாவின் வட்டக் கழுத்து சந்தனக் கலர் சட்டையும் அதன் மூன்று தங்கப் பித்தான்களும் சிவப்பு உல்லன் நூலும் பத்திரமாக இருக்கின்றன.

தாத்தா இறந்த காலத்தில், தன் இளம் வயதில் கணவனை இழந்த அவளது சோகம், யாருக்கும் தெரியாமல் அந்தச் சட்டையை முகர்ந்து பார்ப்பது, அம்மாச்சி அவளைக் கட்டிக்கொண்டு அழுவது போன்ற காட்சிகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெரும் துயரத்தை வாசகர்களின் நெஞ்சில் விதைக்கின்றன. வாழ்நாள் முழுவதும் வெளிக்காட்டாத காதலின் ஆழம், அந்தப் பெட்டியின் வழியாக சிறு இசையாக வெளியே கேட்கிறது.

கதைசொல்லி தன் அம்மாச்சியின் பெட்டியைத் திறக்கும்போது, அந்த மரப்பெட்டி ஒரு ஹார்மோனியப் பெட்டி போலவும் விரல் படும் இடத்திலெல்லாம் சிறு இசையின் ஒலி உண்டாகும் போலவும் உணர்கிறார். அந்தப் பெட்டிக்குள் இருக்கும் பழைய பத்திரங்கள், புடவைகள், ஸ்படிகமணி மாலை ஆகியவற்றுடன் சேர்த்து மூக்கம்மா ஆச்சியின் புகைப்படமும் தாத்தாவின் சட்டையும் கிடைப்பது காலத்தைக் கடந்து நிற்கும் காதலின் சாட்சியாக அமைகிறது.

ஆச்சி சிரித்துக்கொண்டிருக்கும் அந்தப் புகைப்படம், அவள் வாழ்ந்த எளிய வாழ்க்கையின் அழகையும் எத்தகைய துயரங்களையும் தாங்கி நிற்கும் அவளது புன்னகையையும் நமக்கு உணர்த்துகிறது.

வண்ணதாசனின் ‘ஒரு சிறு இசை’ சிறுகதை, மரணம், நினைவுகள், மறைக்கப்பட்ட காதல்கள் மற்றும் மனித மனங்களின் ஆழம் ஆகியவற்றை மென்மையான மொழியில் பேசும் காவியச் சுவடு. சத்தமில்லாமல் ஓடும் ஆசியைப் போல, மனிதர்களின் மனங்களுக்குள் ஊடுருவிச் செல்லும் நினைவுகளின் இசையை இக்கதை நம் செவிகளில் நிரந்தரமாக ஒலிக்கச் செய்கிறது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *