
நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் மனித மனங்களின் நுட்பமான அடுக்குகளையும் மரணம், வலி, பொய் மற்றும் விசுவாசம் ஆகியவற்றையும் ஆழமாகவும் தத்துவார்த்தமாகவும் பதிவு செய்துவரும் எழுத்தாளர்களுள் சுனில் கிருஷ்ணன் குறிப்பிடத்தக்கவர்.
அவரது ‘அம்புப் படுக்கை’ சிறுகதை, மரணத்தின் விளிம்பில் கிடக்கும் மனிதனின் இறுதித் தருணங்களையும் அவன் வாழ்நாள் முழுவதும் கட்டியெழுப்பிய புனைகதைகளையும் அவற்றை எதிர்கொள்ளும் இளைய தலைமுறையின் மருத்துவம் சார்ந்த யதார்த்தத்தையும் மிகச் செறிவான நடையில் பேசும் படைப்பாகும்.
கதையின் மையக் கதாபாத்திரமான ஆனாரூனா ஊரின் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தவர். ஆனால், இன்றைய நிலையில் கவனிப்பாரற்றுப் படுத்திருக்கும் அவர், தன் வாழ்நாளில் தான் பர்மா நாட்டிலிருந்து தப்பிவந்த கதைகளையும் குண்டுவெடிப்புகளில் சிக்கித் தப்பிய வீரதீரச் செயல்களையும் அடிக்கடிச் சொல்லித் திரிந்தவர்.
பர்மாவிலிருந்து தங்கம் கடத்தியது, கர்னல் சாமுவேலிடம் தப்பியது, கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது என அவர் கூறுபவை யாவும் எல்லைமீறிய கற்பனைகளாகவும் தன்னை ‘ஜேம்ஸ்பாண்ட்’ போல முன்னிறுத்திக் கொள்ளும் புனைகதைகளாகவுமே ஊராரால் பார்க்கப்பட்டன.
ஆனால், அந்தப் பொய்களுக்குப் பின்னால் இருப்பது சாதாரணமான மனிதனின் பயமும் அக உலகத் தவிப்பும் ஆகும். மரணம் தன்னைத் தொடர்ந்து வேட்டையாடுகிறது என்ற ஆழ்ந்த அச்சத்தில்தான் அவர் தன்னை ஒரு மாவீரனாகக் கற்பனை செய்து கொண்டார். தன் மீதான பரிதாபத்தையும் கவனத்தையும் ஈர்ப்பதற்காக அவர் உருவாக்கிய அந்தப் பொய் உலகமே அவருக்கான உண்மையான வாழ்வாக மாறியிருந்தது.
கதைசொல்லியான சுதர்சனின் தாத்தாவும் இறுதிநாளில் படுக்கையில் கிடந்தவர்தான். தண்டுவட டி.பி. நோயின் கொடூரமான வலியை அனுபவித்த தாத்தா, மகாபாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்ததை ஒப்புமைப்படுத்தி, “அம்புப் படுக்கைன்னா என்னன்னு கிருஷ்ணன் எனக்குக் காட்டுறான்” என்று புலம்புவார்.
தாத்தா வாழ்நாள் முழுவதும் மருத்துவ அறிவியலையும் ஆயுர்வேதத்தையும் கற்றுத் தந்ததோடு, மரணத்தின் குறிகளையும் அதன் இயல்பையும் எளிய முறையில் புரிந்துகொள்ள முயன்றவர்.
ஆனால், இன்றைய நவீன மருத்துவக் கல்வியின் குறுகிய எல்லைக்குள் நுழைந்துள்ள சுதர்சனுக்கு, தாத்தா கற்பித்த நாடிப் பரிசோதனை மற்றும் மரணக் குறிகள் யாவும் அறிவியலற்ற மூடநம்பிக்கைகளாகத் தெரிகின்றன. மருத்துவக் கல்லூரியின் முதல் வகுப்பே அதைச் “செத்த காலேஜ்” என்றும் வரலாறு மட்டுமே என்றும் கூறி அவனுக்குள் இருந்த மீதமுள்ள நம்பிக்கையையும் சிதைத்துவிடுகிறது.
செட்டியாரைப் பார்க்கச் சென்று அவரது நாடியைப் பார்க்கும் சுதர்சன், ஆரம்பத்தில் அதனை இயந்திரத்தனமான கடமையாகவே பார்க்கிறான். ஆனால், நாடியைப் தொடும்போது அவனுக்கு ஏற்படும் அந்த விசித்திரமான தரிசனம் (கடலாமை, பாம்பு கொத்துவது போன்ற குறியீடுகள்) அவனது அறிவியல்பூர்வமான மனத்தை உலுக்குகிறது) செட்டியார் மரணத்தின் விளிம்பில் கிடக்கும் அந்தத் தருணத்தில், அவரைச் சுற்றியுள்ள குடும்பத்தினரும் உறவினர்களும் சொத்துரிமை குறித்தும் இறுதிச் சடங்குகள் குறித்தும் மட்டுமே கவலைப்படுகிறார்கள்.
அங்குள்ள எவருக்கும் செட்டியாரின் மீதோ அவரது அகத் தவிப்பின் மீதோ உண்மையான அக்கறை இல்லை. அந்தத் தருணத்தில்தான் சுதர்சன் முக்கியமான முடிவை எடுக்கிறான். செட்டியாரின் நாடி தளர்ந்துவிட்டதை உணர்ந்தாலும் மரணத்தின் பிடியில் கிடக்கும் அந்த மனிதனிடம் உண்மையைச் சொல்லி அவரது பயத்தை அதிகரிக்காமல், “அய்யா உங்களுக்கு ஒண்ணுமில்ல… தாத்தா சொல்ல இன்னுமொரு கத பாக்கியிருக்கு” என்று பொய்யைச் சொல்கிறான்.
இதுவரை ஆனாரூனா சொன்ன பொய்களைக் கேலி செய்த சுதர்சன், இப்போது அதே மனிதனின் இறுதி நிம்மதிக்காகத் தானே ஒரு பொய்யைச் சொல்கிறான். அது வெறும் பொய் அன்று; அது மரணத்தின் வாயிலில் நிற்கும் மனிதனுக்குக் கொடுக்கப்படும் ஆகச்சிறந்த பிரியாவிடை மருந்து.
கதையின் தொடக்கத்திலும் இறுதியிலும் வரும் தர்மாவின் சைக்கிள் ஓசை, இந்தச் சமூகத்தின் வறுமையையும் நிலையாமையையும் குறிக்கிறது. பசையற்று உலர்ந்த எலும்புகள் ஒன்றையொன்று உரசிக் கொள்ளும் ஓசை போன்ற அந்தச் சைக்கிள் ஓசை, ஆனாரூனாவின் உலர்ந்துபோன உடலையும் வாழ்வையும் பிரதிபலிக்கிறது. தர்மா தன் எஜமானனுக்காகத் தொடர்ந்து உழைப்பவனாகவும் எதார்த்தத்தின் கடினமான முகத்தைச் சுமப்பவனாகவும் இருக்கிறான்.
சுதர்சன் செட்டியாரிடமிருந்து வெளியேறிச் செல்லும் போது, வாயிலில் காத்திருக்கும் ஆச்சியின் பெருங்குரல் ஓலம் ஒலிக்கிறது. அந்த ஓலம் மரணத்தின் தவிர்க்க முடியாத பேருண்மையைச் சுட்டுகிறது. ஆனாரூனா எத்தனைதான் புனைகதைகளாலும் வீரதீரச் செயல்களாலும் தன்னை மூடிக்கொண்டிருந்தாலும் இறுதி நிமிடம் எல்லோரையும் போல அவனும் அந்தச் சுடுகாட்டுப் பாதையை நோக்கித்தான் செல்ல வேண்டும்.
சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ சிறுகதை, அறிவியலுக்கும் நம்பிக்கைக்குமான இடைவெளியை மிக அழகாக ஆராய்கிறது. மனிதர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் கொடூரமான நிஜங்களிலிருந்து தப்புவதற்காகப் புனைந்து கொள்ளும் பொய்களும் கதைகளும் எவ்வளவு அவசியமானவை என்பதை இக்கதை உணர்த்துகிறது. இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவனுக்கு அறிவியல் தரும் மருந்தைவிட, மனிதநேயமும் ஆறுதலும் கலந்த சிறிய பொய் எந்தளவுக்கு நிம்மதியைத் தரும் என்ற மனோதத்துவத்துடன் இப்படைப்பு நிறைவடைகிறது.
– – –

நுட்பமான பார்வை. சிறப்பு. வாழ்த்துக்கள்