நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 53.வடுக்களின் பாரம்  (ப. தெய்வீகன் எழுதிய ‘திருவேட்கை’ சிறுகதையை முன்வைத்து…)

 

எழுத்தாளர் ப. தெய்வீகனின் ‘திருவேட்கை’ சிறுகதை, காலனித்துவ கால பிரித்தானியச் சாம்ராஜ்யத்தின் சட்டகங்களுக்குள் சிக்கிச் சிதைந்த எளிய மனிதர்களின் வாழ்வியலையும் தலைமுறைகளைக் கடந்து தொடரும் அகத்துயரங்களையும் ஆழமாகப் பேசும் முக்கியமான இலக்கிய ஆக்கம் ஆகும். 

இக்கதை வெறும் கடந்த கால வரலாற்றின் மீதான பதிவாக மட்டும் நின்றுவிடுவதில்லை; அதிகாரம், வர்க்க வேறுபாடு, குற்ற உணர்ச்சி மற்றும் அகதிகள் எதிர்கொள்ளும் நிரந்தர அவலம் ஆகியவற்றைத் தனிமனித வாழ்வியலோடு இணைத்து மிகக் கறாராக ஆராய்கிறது.

லண்டன் நகரின் பனிமூடிய வீதிகளில் தொடங்கும் கதை, கைக்குட்டையைக் குறியீடாகக் கொண்டு அதிகாரத்தின் கொடூர முகத்தை வெளிப்படுத்துகிறது.

உயர் பதவி வகிக்கும் மோர்கனின் மகனான அல்பேர்ட், ஆசையின் நிமித்தம் திருடும் கைக்குட்டைக்காக, அப்பாவியான பணிப்பெண் கரோலினா குற்றவாளியாக்கப் படுகிறாள். “அவர்கள் ஏழைகள். தண்டிக்கப் படுவதற்காகவே பூமிக்கு வருகிறார்கள்” என்ற தாயின் வார்த்தைகள், வர்க்கச் சமூகத்தின் கோர முகத்தையும் அநீதியின் இயல்பையும் பட்டவர்த்தனமாக உணர்த்துகின்றன.

கரோலினா தண்டனை பெற்று ஆஸ்திரேலியாவின் வன் டீமன் தீவுக் கரையை அடைவது, காலனித்துவத்தின் வன்முறையை வெளிப்படுத்துகிறது. குற்றமே செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் ஆயிரக்கணக்கான எளிய மனிதர்களின் கண்ணீர்க் கடலில் கரைகிறது.

இக்கதையின் ஆன்மா நினைவுகளும் குற்ற உணர்ச்சியும் உருவாக்கும் அகப் போராட்டங்களில்தான் அடங்கியுள்ளது.

தாயின் இழப்பிலிருந்து மீண்டெழுந்த டேவிட், தான் தயாரிக்கும் ரொட்டிகளுடன் இலவசமாகக் கைக்குட்டைகளைக் கொடுக்கத் தொடங்குகிறான். அது வெறும் வியாபார யுக்தியன்று; “நீதியின் கறையால் அழிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையை, அவளது மேன்மையைக் கருக்கிய ரத்தம் உலராத கொடுமையின் நான்கு மூலை கொண்ட நினைவுச் சின்னம்” என்று அவன் கூறுவது அவனது ஆழ்மனக் காயங்களின் வெளிப்பாடாகும்.

தாய் இழந்த துயரமும் சமூகம் இழைத்த அநீதியும் டேவிட்டின் வழித் தோன்றல்களையும் தொடர்ந்து துரத்துகின்றன. தனிமனிதனின் அக உலகத்தில் வடுக்கள் எவ்வாறு தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகின்றன என்பதை இது மிகத் துல்லியமாக விளக்குகிறது.

கதையின் இறுதிப் பகுதி, வரலாற்றின் வடுக்கள் எவ்வாறு இன்றைய ஈழத் தமிழர் வாழ்வியலோடு பொருந்திப் போகின்றன என்பதை வலியுடன் விவரிக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்குக் கடல் வழியாக வந்தடைவதும் சொந்த மண்ணில் யுத்தத்தினால் கசக்கி வீசப்பட்ட கைக்குட்டைகளைப் போலக் கொல்லப்பட்ட குழந்தைகளும் பெண்களும் கதையின் காலவெளியை விரிவுபடுத்துகின்றன.

மிஷேலும் திலீபாவும் பேசிக்கொள்ளும் உரையாடல்கள், இந்தப் பிரபஞ்சத்தில் நீதிக்கும் பூமிக்கும் இடையே ஏற்பட்டுள்ள பெரும்பாழைச் சுட்டிக் காட்டுகின்றன. ஆயுதங்களாலும் வஞ்சகங்களாலும் அழிக்கப்பட்ட இனத்தின் மிச்சமாய் மிதக்கும் நினைவுகள் மட்டுமே மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

எழுத்தாளர் ப. தெய்வீகன் மொழிநடை கவித்துவமும் யதார்த்தமும் கலந்த வலிமிகுந்த ஊடகமாகச் செயற்படுகிறது. ‘கைக்குட்டை’ என்பது இக்கதையில் வெறும் துணி துண்டன்று; அது அதிகாரம் பறித்த கௌரவம், தாயின் கண்ணீர் மற்றும் தலைமுறைத் தொடர்ச்சியின் சாட்சியம்.

சட்டம், நீதி, நாகரிகம் என்ற பெயரில் ஏழை எளியவர்கள் மீதும் விளிம்புநிலை மக்கள் மீதும் நடத்தப்படும் ஒடுக்குமுறைகளை இக்கதை எந்தவித சமரசமுமின்றி விமர்சிக்கிறது. குற்றமற்றவர்கள் எப்போதும் தண்டிக்கப்படுவதும் அதிகாரத்தில் உள்ளவர்கள் தப்பிப்பதும் மனித குலத்தின் மீதான சாபக்கேடு என்பதை எழுத்தாளர் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

‘திருவேட்கை’ சிறுகதை, தனிமனித வாழ்வியலின் வேதனைகளையும் வரலாற்றின் கறைகளையும் ஒருங்கே பேசும் இலக்கியப் படைப்பாகும். கடலின் அலையில் ஆடும் கைக்குட்டைகளைப் போல, அகதிகளின் வாழ்வும் நினைவுகளும் இந்தப் பிரபஞ்சத்தில் அலைக்கழிக்கப்பட்டாலும் அந்த நினைவுகளின் வழியேதான் மனித இனம் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்கிறது என்பதை இக்கதை நிறைவாக உணர்த்துகிறது.

வரலாற்றின் மூலம் தன் மீது திணிக்கப்பட்ட வடுக்களையும் அநீதிகளையும் எதிர்கொள்ளும் தனிமனிதன், தன் நினைவுகளையே தனது பலமாக மாற்றிக்கொள்ள முடியுமா அல்லது அந்த நினைவுகளே அவனை நிரந்தரச் சிறைக்குள் அடைத்துவிடுமா என்ற கேள்வி எழுகிறது. 

இந்தச் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, வரலாற்றின் மூலம் தனிமனிதனின் மீது திணிக்கப்படும் வடுக்களும் அநீதிகளும் அவனை ஒருபுறம் நிரந்தரச் சிறைக்குள் அடைக்கக் கூடும் என்றாலும் அதே நினைவுகளைச் சரியான முறையில் எதிர்கொண்டு அவற்றைப் பகிர்தலின் மூலமும் கலை வடிவத்தின் மூலமும் வெளிப்படுத்தும் போது, மனிதன் தன் நினைவுகளையே தனது பலமாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதே யதார்த்தமாகும்.

வரலாற்றின் ஒடுக்குமுறைகளும் அதிகார வர்க்கத்தின் அநீதிகளும் எளிய மனிதர்களை ஒருபோதும் எளிதில் விடுவிப்பதில்லை. இக்கதையில் கரோலினா குற்றமே செய்யாமல் தண்டிக்கப்பட்டு, ஆஸ்திரேலியச் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவதும் அவளது வாழ்வு சிதைக்கப்படுவதும் வரலாற்றின் கொடூர முகம்.

தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதியால் டேவிட்டின் அக உலகம் நிரந்தரமான வடுக்களைச் சுமக்கிறது. நினைவுகளைச் சுமந்துகொண்டு வாழ்வது பல சமயங்களில் மனிதனை நிகழ்காலத்தில் வாழ விடாமல், கடந்த காலத்தின் இருண்ட அறைகளுக்குள்ளேயே அடைத்துவிடும் ஒரு நிரந்தரச் சிறையாகவே மாறுகிறது.

அதே நேரத்தில், அந்த நினைவுகளையே ஆயுதமாக, எதிர்ப்பின் வடிவமாக மாற்றும் சாத்தியத்தையும் கதை பேசுகிறது. டேவிட் தான் தயாரிக்கும் ரொட்டிகளுடன் இலவசமாகக் கைக்குட்டைகளைக் கொடுத்து, தன் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதியை அந்தப் பிரதேசத்திற்கே நினைவூட்டுகிறான்.

அவன் கைக்குட்டைகளை வெறும் துண்டுத் துணியாகப் பார்க்காமல், “நீதியின் கறையால் அழிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையை, அவளது மேன்மையைக் கருக்கிய ரத்தம் உலராத கொடுமையின் நான்கு மூலை கொண்ட நினைவுச் சின்னம்” என்று பிரகடனப்படுத்துகிறான்.

இங்கு நினைவுகள் அவனைச் சோகத்தில் முடக்கிப் போடவில்லை; அவனுக்குள் வரலாற்றின் சாட்சியாகவும் பலமாகவும் உருவெடுக்கின்றன.

வரலாற்றின் வடுக்கள் தனிமனிதனைச் சிறைப்படுத்த முற்படும்போது, அவன் அதனைத் மௌனமாக ஏற்றுக்கொள்கிறானா அல்லது எதிர்த்து நிற்கிறானா என்பதில்தான் அவனது ஆன்மாவின் பலம் அடங்கியுள்ளது. 

இந்தச் சிறுகதை உணர்த்துவது போல, நினைவுகளை மௌனமான வுடுக்களாகச் சுமந்தால் அது நிரந்தரச் சிறையாகும்; அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நினைவுக் குறியீடுகளாக மாற்றும்போது, அவையே அடக்குமுறைக்கு எதிரான தனிமனிதனின் மகத்தான பலமாகவும் விடுதலையாகவும் மாறும்.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *