நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 61. பசியின் விலை (சுஷில் குமார் எழுதிய ‘கன்னிகை’ சிறுகதையை முன்வைத்து…)

 

எழுத்தாளர் சுஷில் குமாரின் ‘கன்னிகை’ சிறுகதை, சமகாலச் சமூகத்தில் நிலவும் தீவிர வறுமை, சாதிய மற்றும் மத வழிபாட்டுப் பெயரால் நடக்கும் ஆன்மிகச் வணிகம், தனிமனித வாழ்வியல் ஆகியனவற்றின் முரண்பாடுகளைக் காட்டுகிறது.

இக்கதை வெறும் எளிய குடும்பத்தின் பொருளாதாரத் தவிப்பை மட்டும் பேசவில்லை; பிழைப்புக்காகவும் வயிற்றுப் பசிக்காகவும் பெற்ற தாயும் தந்தையும் தங்களது சொந்தக் குழந்தைப் பருவத்தின் வடுக்களை மறுஉற்பத்தி செய்து, ஆண் குழந்தையைப் பெண் வேடமிட்டுத் கோயிலுக்கு அனுப்பும் அவலத்தை விமர்சிக்கிறது.

கதையின் தொடக்கத்தில், அன்றாட உணவுக்கும் பிழைப்புக்கும் வழியின்றித் தவிக்கும் அத்தானுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையிலான உரையாடல் வறுமையின் கோரத்தை முகத்தில் அறைவது போலச் சித்தரிக்கிறது. “பௌதியம்மைக்க பைசாதான?” என்ற கேள்வி, மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் எத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளுக்குத் தள்ளுகின்றன என்பதை உணர்த்துகிறது.

“எம்பிள்ள கோயில் நடையத் தொடக்கூடாது” என்று அத்தான் ஆரம்பத்தில் தன்மானத்தைக் காட்டினாலும் சூழலின் இறுக்கமும் குடும்பத்தின் பசியும் அந்தத் தன்மானத்தை நொடியில் சுக்குநூறாக உடைத்துவிடுகின்றன. ஆயிரம் ரூபாய் பணத்திற்காகத் தன் மகனைப் பெண் வேடமிட்டு அனுப்பத் துணியும் தம்பதியரின் தவிப்பு, வறுமை மனிதர்களை எத்தகைய முடிவுகளுக்கும் தள்ளும் என்பதன் சாட்சியாகும்.

மச்சபுரத்துப் பகவதி அம்மன் கோயிலில் நடைபெறும் ‘கன்னி தான பூஜை’ என்பது ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் திட்டமிடப்பட்ட வணிகமாகும். பெரும் வசதி படைத்தவர்களின் பாவங்களைப் போக்கவோ அல்லது வேண்டுதல்களை நிறைவேற்றவோ ஏழைச் சிறுமிகளைப் பலிகடாவாக்கும் இம்முறை, மதத்தின் பெயரால் அரங்கேறும் சாதிய மற்றும் வர்க்கச் சுரண்டலாகும்.

தாயே தன் சிறுவயதில் இதே போன்றதொரு சடங்கில் ‘கன்னிகையாக’ப் பங்கேற்றவள் என்பது கதையின் மிக முக்கியமான உளவியல் திருப்பமாகும். அன்று தான் அனுபவித்த அந்த மயக்கமும் ஏமாற்றமும் பின்னாளில் தன் சொந்த மகனுக்கே அதே வேடத்தை அணிவித்து அனுப்பும் நிலைக்கு அவளைத் தள்ளுகிறது. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இந்த வறுமைச் சுழற்சி, பெண்களின் உடலையும் அடையாளத்தையும் ஒருபொருளாக மாற்றுவதை வெளிப்படுத்துகிறது.

வேடமிட்டுச் செல்லும் சிறுவன், தன் தாயின் பேச்சைக் கேட்டுத் தன்னைப் பெண் தெய்வமாகக் கற்பனை செய்துகொண்டு கோயிலுக்குச் செல்கிறான். ஆனால், அங்கு அவனுக்கு நடக்கும் சடங்குகளும் இறுதியில் அவன் தற்செயலாகச் சிறுநீர் கழித்துவிட்டு நடுங்கி நிற்பதும் ஆன்மிகப் புனிதத்தின் பின்னால் இருக்கும் வக்கரித்த யதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.

சடங்கின் பெயரால் வழங்கப்படும் நகைகள் பெரும்பாலும் கவரிங் அல்லது பித்தளையாக இருந்தாலும் ஏழை மக்களுக்கு அவை தங்கமாகவே மினுக்குகின்றன. அந்தப் பொய்யான மாயைக்குள் உழைக்கும் எளிய மக்கள் தங்கள் குழந்தைகளைத் துச்சமாகத் தூக்கி எறிவதை இந்தக் கதை  விமர்சிக்கிறது.

கதையின் இறுதியில், தாய்க்குத் தன் இளம் வயதில் அந்தச் சடங்கு நடந்தபோது ஏற்பட்ட ஆன்மிக அனுபவமும் தான் தெய்வமாக மாறியதாக நம்பிய மயக்கமும் விவரிக்கப்படுகிறது. வறுமையின் வலியிலிருந்து தப்பிக்க மனித மனம் எப்படிப்பட்ட மாயத் தோற்றங்களைச் சிருஷ்டித்துக் கொள்கிறது என்பதற்கு இதுவே சான்றாகும்.

தன் மகன் மடியில் அதே புன்னகையுடன் நடுங்கிக் கிடப்பதைக் காணும் தாய், வறுமை தந்த அந்த வடுக்களைத் தன் வம்சத்தின் பாரம்பரியமாகவே ஏற்றுக் கொள்கிறாள்.

எழுத்தாளர் சுஷில் குமாரின் ‘கன்னிகை’ சிறுகதை, பசியும் வறுமையும் மனிதர்களை எவ்வாறு தங்கள் சொந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தையே அடகுவைக்கத் தூண்டுகின்றன என்பதையும் ஆன்மிகம், நம்பிக்கை ஆகியனவற்றின் பெயரால் சமூகம் எளியவர்கள் மீது நிகழ்த்தும் வன்முறையையும் மிக நேர்மையாகவும் கறாராகவும் காட்டுகிறது. 

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *