நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 64 .அகக் கண்கள் (ஜெயகாந்தன் எழுதிய ‘வாய்ச்சொற்கள்’ சிறுகதையை முன்வைத்

 

தமிழ் நவீன இலக்கிய உலகில் முற்போக்குச் சிந்தனைகளையும் மனிதநேய ஆழத்தையும் தன் எழுத்துகளின் வழியே விதைத்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை, அவர்களின் அக உலகச் சிக்கல்களை, மானுட உறவுகளின் விசித்திரங்களை எந்தவித சமரசமுமின்றிப் பதிவு செய்த அவரது படைப்புகளுள் ‘வாய்ச்சொற்கள்’ சிறுகதை தனித்துவமானது. 

பிறவிக் குருடர்களான ருக்குமணி, கண்ணப்பன் ஆகியோர் விளிம்புநிலை மாந்தர்கள். அவர்களின் வழியே எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசும் காதல், வறுமை, தனிமனித வாழ்வியல் மற்றும் உடல்ஊனம் குறித்த கருத்துகள் சமூகத்தின் மீதான கறாரான விமர்சனங்களாக அமைகின்றன.

சமூகத்தால் ஒதுக்கப்பட்ட, அநாதையாக்கப்பட்ட எளிய மனிதர்களின் இருண்ட வாழ்வை எழுத்தாளர் ஜெயகாந்தன் இக் கதையில் மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகிறார். ஊருக்கு வெளியே பாழடைந்து கிடக்கும் சத்திரம், இரவில் ஒளியிழந்த வெளி, டூரிங் டாக்கீஸ் கொட்டகை போன்ற பின்னணிகள் இவர்களின் ஒற்றையடிப் பாதையான தனிமையைச் சித்தரிக்கின்றன.

தற்காப்புக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் செங்கேணிக் கிழவனால் பழக்கப்பட்ட கூடை முடையும் தொழிலும் பார்வையற்ற நிலையிலும் விரல்களில் கண்களைப் போலத் தொழிலைக் கற்கும் ருக்குமணியின் வாழ்வியலும் உழைப்பின் தீவிரத்தைக் காட்டுகின்றன. இங்குத் தனிமனித வாழ்வு ஒரு போராட்டம்; அதில் உறவுகளும் பாதுகாப்பும் அற்ற நிலையில், இயற்கையோடும் தனிமையோடும் போராடியே அவர்கள் உயிர் வாழ வேண்டியுள்ளது.

பொருளாதார வறுமை வெறும் வயிற்றுப் பசியோடு நின்றுவிடுவதில்லை; அது மனிதர்களின் மாண்பையும் உரிமைகளையும் பறித்துக்கொள்கிறது. ருக்குமணியும் கண்ணப்பனும் வறுமையின் உச்சத்தை அனுபவிப்பவர்கள். டிக்கெட் இல்லாமல் ரயிலில் ஏறிப் பாட்டுப் பாடிப் பிழைக்கும் கண்ணப்பனின் நிலையோ, எதிர்காலப் பாதுகாப்பிற்காக எவ்வித உதவியுமின்றி உழைக்கும் ருக்குமணியின் நிலையோ வறுமையின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது.

சமூகம் இவர்களைப் போன்ற உடல்ஊனமுற்றோரைச் ‘சுமையாக’ மட்டுமே பார்க்கிறது. “கண்ணே இல்லாத ஒனக்கு யாரு இருந்து என்ன பிரயோசனம். அவங்களுக்கு நீ சொமையாத் தான் இருப்ப” என்று செங்கேணிக் கிழவன் கூறும் வார்த்தைகள், ஏழை எளியோரின் உலகில் ஊனம் எத்தகைய சாபக்கேடானது என்பதை அழுத்தமாகப் புலப்படுத்துகிறது.

உடல்ரீதியான ஊனம் என்பது பார்வை இழப்பைக் குறிப்பதாகச் சமூகம் நம்புகிறது. ஆனால், எழுத்தாளர் ஜெயகாந்தன் இந்தக் கருத்தாக்கத்தைத் தலைகீழாக மாற்றுகிறார். கண்களற்ற ருக்குமணிக்கு விரல்களிலும் செவியிலும் உடலெங்குமே கண்களுண்டு. இசையை, ஒலியை, மனிதர்களின் மனநிலையைத் தொட்டுணரும் ஆற்றல் அவளுக்கு உண்டு.

“அவளுக்கு விரலில் கண் உண்டு. விரலில் மட்டும்தானா? செவியில், நாவில், உடலெங்கும் கண்கள்தான். ஆனால் முகத்தில் எல்லோருக்கும் கண்கள் இருக்கின்ற இருக்க வேண்டிய இடத்தில் இமைகள் மட்டுமே.”

கண்ணப்பனும் அவளைப் போலவே பார்வையை இழந்தவன். உலகைக் கண்களால் காண முடியாத இவர்கள், அன்பினாலும் ஒலியினாலும் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்துகொள்கிறார்கள். இவர்களது ஊனம் வெறும் உடல் குறைபாடன்று; புற உலகின் பாசாங்கான மாயவலைகளில் இருந்து அவர்களை விடுவிக்கும் அகச்சாவி என்றே கூறலாம்.

காதல் அழகிய வடிவங்களையோ, சமூக அந்தஸ்தையோ சார்ந்தது அன்று; அது இரண்டு ஆன்மாக்களின் பரஸ்பர புரிதல். வள்ளுவர் “கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல” என்று கண்களின் பார்வையின் வழியாகக் காதலின் ஆழத்தைக் குறிப்பிடுவார். ஆனால், பார்வையற்ற ருக்குமணியும் கண்ணப்பனுமோ கண்களால் ஒருவரையொருவர் பார்க்கவே முடியாது. அவர்களின் காதல் பார்வைக்குப் புலப்படாதது.

அவர்கள் ஒருவரையொருவர் தொட்டுத் தடவி, குரலைக் கேட்டு, இசையின் வழியாகக் காதலை உணர்கிறார்கள். கண்ணப்பன் தன் கண்களின்லாத் தன்மையைக் குறித்து வருந்தும்போது, ருக்குமணி எழுப்பும் கேள்வி அத்தகைய காதலின் உன்னதத்தை வெளிப்படுத்துகிறது: “கண்ணுன்னா நீதான்! நீதான் எனக்கு கண்ணு இனிமேலே..”

இவர்களது காதலுக்கு வாய்ச்சொற்களும் தொடுதல்களுமே சாட்சியாகின்றன. கண்கள் இல்லாததால் உருவான இடைவெளியை அவர்களின் தூய காதலும் அகக் கண்களும் நிரப்புகின்றன.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘வாய்ச்சொற்கள்’ சிறுகதை, எளிய மனிதர்களின் துயரங்களை வெறும் பரிதாபத்திற்குரியதாகக் காட்டாமல், அவர்களின் தன்மரியாதையையும் காதலின் தூய்மையையும் கம்பீரமாக வெளிப்படுத்துகிறது. 

வறுமையும் உடல்ஊனமும் சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட போதிலும் மனிதநேயமும் அன்பும் ஒளியைவிட வலிமையானது என்பதை இச்சிறுகதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இலக்கிய அடிப்படையிலும் சமூகவியல் பார்வையிலும் இது காலத்தைத் தாண்டி நிற்கக்கூடிய உன்னதமான படைப்பு.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *