
நவீனத் தமிழ்ச் சிறுகதை இலக்கிய உலகில் மனித மனங்களின் விசித்திரமான அசைவுகளையும் சாதாரண மனிதர்களின் அக உலகத்தில் ஊடுருவும் சந்தேகங்களையும் உளவியல் ஆழத்துடன் பதிவுசெய்துவரும் எழுத்தாளர் போகன் சங்கரின் சிறந்த படைப்புகளுள் ‘பைத்தியம்’ என்ற சிறுகதை தனித்துவமான இடத்தைப் பெறுகிறது.
‘பைத்தியம்’ என்ற சொல் இன்றைய சமூகத்தில் எவ்வாறு மருவி, ஒரு தற்காப்புச் சொல்லாகவும் அதேசமயம் எதார்த்தத்தின் கொடூரமான முகமூடியாகவும் இயங்குகிறது என்பதை இக்கதை மிகக் கறாராகவும் சமரசமின்றியும் ஆராய்கிறது. தனிமனிதனின் உறவுச்சிக்கல்கள், சந்தேகங்கள், தலைமுறை வழியே தொடரும் மரபுவழி மனப்பிறழ்வு ஆகியவற்றைப் பற்றி இக்கதை விரிவாகப் பேசுகிறது.
கதை சொல்பவர் (கதைசொல்லி) தன் வாழ்வில் சந்திக்கும் இளம் பெண்ணை அணுகும்போதே ‘பைத்தியம்’ என்ற கருத்தாக்கத்தை விவாதிக்கத் தொடங்குகிறான். நவீனக் காலத்தில் மனநல மருத்துவர்களின் மருத்துவச் சொற்களுக்குள் மறைந்துவிட்ட ‘பைத்தியம்’ என்ற சொல், அன்றாட மனிதர்களின் உறவுச்சிக்கல்களில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை அவனது சிந்தனை வெளிப்படுத்துகிறது.
கவிஞர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் தன்னைப் பைத்தியம் என்று அழைத்தால் கோபப்படுவதில்லை என்ற அவனது கூற்று, சமூகத்தில் பைத்தியம் அல்லது மனப்பிறழ்வு என்பதும் ஒரு வகையான கலை அல்லது சுதந்திரமாகப் பார்க்கப்படும் முரண்பாட்டைச் சுட்டுகிறது.
சமூகத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு ஏன் அதிகளவில் மனப்பிறழ்வுகள் ஏற்படுகின்றன என்ற விவாதம் கதையில் எழுகிறது. தன் அம்மாவின் பைத்தியமும் கர்ப்பப்பை அகற்றப்பட்ட பின் அது அடங்கியதும் ஆனால் தொடர்ந்து அவள் தன் சந்தேக புத்தியால் குடும்பத்தை வதைத்ததும் மனித மனத்தின் விசித்திரமான இருள் பக்கங்களை வெளிப்படுத்துகிறது.
கதையின் மையக்கதையான அம்மாவின் பைத்தியம் என்பது வெறும் மருத்துவச் சிக்கலன்று; அது குடும்ப உறவுகளின் மீதான நம்பிக்கையின்மையின் உச்சமாகும். அப்பா தன் சட்டையில் மல்லிகைப் பூவை வைத்துக் கொண்டுவந்தார் என்ற சந்தேகத்தில், சம்பந்தப்பட்ட பெண்மணியான கமலம் மாமியின் வீட்டுக்கே அம்மாவும் சிறுவனான கதைசொல்லியும் செல்வது கதைக்கு ஒரு திகைப்பூட்டும் பரிமாணத்தைத் தருகிறது.
கமலம் மாமியின் வீட்டின் கதவைத் தட்டி, சாமி முன்னால் சத்தியம் செய்யச் சொல்லும் அம்மாவின் பிடிவாதம், ஒரு குடும்பத்தின் நிம்மதியை எந்தளவிற்குச் சிதைக்கிறது என்பதைப் பேசுகிறது. கணவனின் மீதுள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொள்ளத் துடிக்கும் ஒரு பெண்ணின் மனம் இறுதியில் எத்தகைய விபரீதத்தை உருவாக்குகிறது என்பது கதையின் சோகமான பக்கமாகும்.
அடுத்த நாள் கமலம் மாமி மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்துகொண்ட செய்தி கதையை உலுக்கும் தருணமாக மாறுகிறது. ஆனால், அப்படியொரு கொடூரமான மரணம் நிகழ்ந்த பின்னரும் அம்மா எஞ்சிய குற்றவுணர்ச்சியின்றி, “நான் பைத்தியம் இல்லேன்னு ப்ரூவ் ஆயிட்டுதே?” என்று கேட்பது மனித மனத்தின் சுயநலமான வன்மத்தையும் உளவியல் சிதைவையும் மிகக் கறாராக வெளிப்படுத்துகிறது.
அம்மாவிடம் தொடங்கிய சந்தேகமும் மனப்பிறழ்வும், அடுத்த தலைமுறையான கதைசொல்லியின் மனைவியிடம் வேறு வடிவத்தில் தொடர்வதைக் கதை மிக நுட்பமாகக் காட்டுகிறது. இரவு மாத்திரை போடுவதை நினைவுபடுத்தும் மனைவியின் பேச்சும் அவனது சந்தேகப் பார்வையும் பைத்தியம் என்பது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எவ்வாறு பரம்பரையாகத் தொடர்கிறது என்பதை உணர்த்துகிறது.
கதைசொல்லியைத் தேடிவரும் வாசகிகளும் அவனது சபலப் புத்தியும் அவனது அக உலகை எப்போதும் கலங்கடித்தபடியே இருக்கின்றன. தனக்கு வரும் தொந்தரவுகளையும் மனைவியின் சந்தேகங்களையும் சமன்செய்ய முயலும் அவனது வாழ்க்கை ஓர் அமைதியற்ற இயந்திரமாகவே ஓடுகிறது.
கமலம் மாமியின் தற்கொலைக்குப் பின் வேலைக்குச் சென்ற அவளைப் பார்த்து ஊரார் பயந்தபோது, “ஏன் பயப்படணும்? நான்தான் பைத்தியம் இல்லேன்னு ப்ரூவ் ஆயிட்டுதே?” என்று அம்மா கூறுவது, தன் மீதான குற்றச்சாட்டைத் துடைக்க எத்தகைய கொடூரத்தையும் நியாயப்படுத்தும் மனிதர்களின் அறமற்ற முகத்தை அப்பட்டமாக அறைகிறது.
போகன் சங்கரின் ‘பைத்தியம்’ சிறுகதை, தனிமனிதனின் அக உலகத் தத்தளிப்புகளையும் சந்தேகங்கள் மனித உறவுகளில் நிகழ்த்தும் வன்முறையையும் செதுக்கியுள்ள உளவியல் பிரதியாகும்.
பைத்தியம் யார் மீதுள்ளது – தன் கணவனின் மீது சந்தேகப்பட்டு ஊரைக் கூட்டிய அம்மாவின் மீதா? அல்லது அந்தச் சந்தேகத்தினால் தீப்பற்றி எரிந்துபோன கமலம் மாமியின் மீதா? அல்லது இந்தச் சுமையைத் தலைமுறையாகத் தாங்கிவரும் கதைசொல்லியின் மீதா? என்ற வினாவை இக்கதை வாசகர் நெஞ்சில் விதைக்கிறது.
சந்தேகங்களை நியாயப்படுத்திக்கொள்ள நாம் நடத்தும் வாதங்கள் எத்தனை உயிர்களைப் பலிவாங்கினாலும், “நான் பைத்தியம் இல்லை” என்று நாம் நம் மனசாட்சியிடம் நிரூபித்துவிடுவதால் மட்டும் நமது குற்றங்கள் சரியாகிவிடுமா, என்ன?
– – –
