
பெண்களின் உடல்சார்ந்த உளவியல் சிக்கல்களையும் மாதவிடாய், வெள்ளைப்படுதல் போன்ற இயல்பான உடலியல் நிகழ்வுகளைச் சமூகமும் குடும்பமும் ஒரு களங்கமாக அல்லது வியாதியாகப் பார்க்கும் முரண்களையும் மிகக் கறாராகப் பதிவுசெய்தவர் எழுத்தாளர் ஐ. கிருத்திகா. அவரின் ‘கற்றாழை’ என்ற சிறுகதை தனித்துவமான இடத்தைப் பெறுகிறது. ரஞ்சனி என்ற இளம் பெண்ணின் அக உலகத் தத்தளிப்புகளையும் அவளது உடல் குறித்த கூச்சத்தையும் அவளது தாயின் பதற்றங்களையும் இக்கதை சமரசமின்றிப் பேசுகிறது.
கதை தொடங்கும்போதே ரஞ்சனியின் உள்ளாடை நனைவதும், அதையொட்டிய அவளது மனக் கணக்குகளும் பெண்களின் உடலியல் சார்ந்த எதார்த்தங்களை முகத்தில் அறைகின்றன. மாதவிடாய் சுழற்சியின் தாமதமும், வெள்ளைப்படுதலும் அவளுக்குத் தரும் அசௌகரியங்கள் சாதாரணமானவை அல்ல; அவை அவளைச் சமூகத்தின் முன் கூச்சப்பட, கூனிக்குறுக வைக்கின்றன.
தன் உடலின் மீதான தாழ்வுணர்ச்சியிலிருந்து தப்பிக்கப் பேடட் பிராக்களைத் தேர்ந்தெடுப்பதும் சுடிதார்களுக்கு ஏற்ப அவைகளை மாற்றுவதும் ரஞ்சனிக்குத் தற்காலிகத் தைரியத்தைத் தருகிறது. ஆனால் அந்தச் செயற்கை வசீகரம் அவளுக்கு ஒருவித சுயவெறுப்பையும் குற்றவுணர்ச்சியையுமே தருகிறது.
அலுவலகம் முடிந்து வீடு திரும்பியதும் உள்ளாடையைத் தூக்கி எறிந்துவிட்டு, கண்ணாடியில் தன் வெற்றுடம்பைப் பார்த்துக் கதறும் ரஞ்சனி, தன் உடலின் மீது தனக்கே ஏற்படுகிற அருவருப்பை வெளிப்படுத்துகிறாள். உடன் பணிபுரியும் ராதிகாவின் பூரிப்பான உடலைக் காணும்போதெல்லாம் அவளுக்குள் எழும் வன்மமும் ஏக்கமும் பெண் உடல்களுக்கு இடையிலான போட்டிச் சமூகக் கட்டமைப்பை உணர்த்துகிறது.
ரஞ்சனியின் உடல்சார்ந்த மாற்றங்களை ஒரு வியாதியாகவே கருதும் தாய், காலம்காலமாகச் சொல்லப்படும் கைவைத்தியங்களையும் நாட்டு மருந்துகளையும் அவள் மீது திணிக்கிறாள். வெந்தயம் ஊறவைப்பது, கற்றாழைச் சாறு கொடுப்பது என்று தாய் நடத்தும் பரிசோதனைகள் ரஞ்சனிக்கு மேலும் மன உளைச்சலைத் தருகின்றன.
பெண்ணின் உடல் என்பது அவளுக்கே சொந்தமானது அன்று; அது குடும்பமும் சமூகமும் கவனித்துத் திருத்த வேண்டிய ஒரு பொருள் என்ற மனநிலையைத் தாய் வெளிப்படுத்துகிறாள். “வெள்ளைப் படுறது நின்னுடுச்சின்னா உடம்பு நல்லாப் பூரிச்சு வந்துடும்” என்ற தாயின் ஏக்கமும் துடிப்பும் தன் மகளை ஒரு சந்தைப்பொருளாக அல்லது திருமணத்திற்குத் தகுதியானவளாக மாற்றத் துடிக்கும் சமூகத்தின் பிரதிபலிப்பாகும்.
கதையின் இறுதியில் கற்றாழை மடலை நறுக்கும்போது வெளிப்படும் கொழகொழப்பான வெண்ஒழுக்கைக் கண்டு ரஞ்சனி ஓங்கரித்து ஓடுவதும் தாயும் தன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அமர்வதும் பெண் உடலியல் திரவங்களைச் சமூகம் எந்தளவுக்கு அசூசையாகவும் அருவருப்பாகவும் பார்க்கப் பழக்கியுள்ளது என்பதை மிகக் கறாராகப் புலப்படுத்துகிறது.
பகலில் தன் மீது விழும் ஆண்களின் பார்வைகளையும் மற்றவர்களின் உடல் வடிவங்களையும் பார்த்துச் சோர்வடையும் ரஞ்சனி, இரவை ஒரு பாதுகாப்பான போர்வையாகக் கருதுகிறாள். இருள் தன் உடலை மூடிக்கொள்வதாகவும் அந்தத் தனிமையில் அவள் தன்னைத் தொலைப்பதாகவும் கற்பனை செய்துகொள்கிறாள்.
தாயின் கவனிப்பும் தோழிகளின் இயல்பான பேச்சுகளும் ரஞ்சனிக்கு ஆறுதலைத் தருவதற்குப் பதிலாக அவளது தனிமையை மேலும் தீவிரமாக்குகின்றன. ஸ்கூட்டியில் போகும்போது ராதிகாவின் முதுகில் தன் உடல் படுவதால் உண்டாகும் சிலிர்ப்பும், பின் அதுவே அவளுக்குள் குற்றவுணர்ச்சியாய் மாறுவதும் அவளது மனத்தின் முரண்களைக் காட்டுகிறது.
ஐ. கிருத்திகாவின் ‘கற்றாழை’ சிறுகதை, பெண்களின் உடல்சார்ந்த எதார்த்தங்களை எந்தவிதத் தயவுதாட்சன்யமும் இன்றிப் பேசும் துணிச்சலான பிரதியாகும். உடலின் இயல்பான உபாதைகளைக் கூடப் பேசத் தயங்கும் சமூகத்தில், அவற்றை ஒரு பெண்ணின் அக உளவியலோடு பொருத்திப் பார்த்துள்ள இக்கதை, முக்கியமான விவாதத்தை எழுப்புகிறது. பெண்ணின் உடல் என்பது சமூகத்தின் ஒழுக்கத்திற்கோ அல்லது கைவைத்தியங்களின் பரிசோதனைச்சாலைக்கோ உரியதன்று; அது அவளது சுதந்திரமான ஆன்மாவின் பிரிக்க முடியாத வெளிப்பாடு என்பதை சமூகம் எப்போது உணரப் போகிறது?
– – –
