நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 91 அகந்தையின் சிதைவு  (சா. கந்தசாமி எழுதிய ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ சிறுகதையை முன்வைத்து…)

 

‘சிறுகதை’ என்ற வடிவத்திற்குத் தமிழ் இலக்கிய உலகத்தில் புதிய பரிமாணங்களைப் பெற்றுத் தந்த ஆளுமைகளில் எழுத்தாளர் சா. கந்தசாமிக்கு முக்கியமான இடமுண்டு. மனித மனங்களின் ஆழங்களை, அவற்றின் நுட்பமான முரண்களை, வன்மங்களை, அகந்தைகளையும் எவ்வித சமரசமுமின்றிக் காட்டுவதில் அவர் வல்லவர். 

கிராமியச் சூழலின் சிறு புள்ளிக்குள் பிரபஞ்ச அளவிலான மனித மனப் போதாமைகளை அவர் ஒளிரச் செய்வார். அந்த வகையில், அவரது கைவண்ணத்தில் உருவான ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற சிறுகதை, தலைமுறை இடைவெளி, அகந்தை, உடைமை மனப்பான்மை, ஈகோ (Ego) மற்றும் தனிமனித இருத்தலியல் சிக்கல்களைப் பேசும் முக்கியமான படைப்பாகும்.

கதையின் மையப் பாத்திரமான மாணிக்கம், தன் காலத்தின் மரபுவழிச் சாமானிய மனிதராகவும், அதேநேரத்தில் குடும்பத்தின் மீதும் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தின் மீதும் முழுமையான அதிகாரம் செலுத்த விரும்பும் ஆதிக்க மனநிலை கொண்டவராகவும் சித்திரிக்கப்பட்டுள்ளார்.

மாணிக்கம் நாற்பத்திரண்டு ஆண்டுகளாகத் தாழ்ப்பாள் போட்டு வெற்றிலை இடிப்பவர். தன் அனுபவத்தையே பெரிய சாதனையாகக் கருதும் அவர், இளம் வாலிபரான ராமு தன் வழியிலேயே நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். 

“நாப்பத்திரெண்டாம் வயசிலேயிருந்து வேத்தலே இடிக்கிறேன்… இதுக்குத்தான் சொல்றதைக் கேக்கனுங்கறது” 

என்ற அவரது கூற்று, தன் அனுபவத்தின் மீது அவர் கொண்டுள்ள அதீத அகந்தையைக் காட்டுகிறது.

ராமு தன் வழியிலிருந்து விலகி, தனக்கென ஒருவழியைத் தேடிக்கொள்ளும் போது (கிழக்குத் துறைக்குப்போய் மீன் பிடிப்பது), மாணிக்கத்தின் அகந்தை ஆட்டம் காண்கிறது. ராமுவை ஒடுக்க வேண்டும், தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் ஏற்படுகிறது. ராமுவின் வெற்றி அவனுக்கு மட்டுமல்லாமல், மாணிக்கத்தின் அதிகாரத்திற்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது.

ராமு என்பவன் வெறும் பேரப்பிள்ளை மட்டுமல்லன்; பழைய மரபுகளின் மீது கேள்விகேட்கும் நவீன மனநிலையின் அல்லது இளமையின் சுதந்திர வேட்கையின் குறியீடு.

தாத்தா மாணிக்கம் ஓரிடத்தில் தூண்டில் போட்டு அமைதியாகக் காத்திருக்கும் முறையைப் பின்பற்றுவதை ராமு மறுக்கிறான். அவன் இடம் மாறுகிறான்; தன் அதிர்ஷ்டத்தைத் தானே தேடிக்கொள்கிறான். “தாத்தாவிடமிருந்து பிரிந்து வந்த அன்றே அந்த இடத்தைக் கண்டுபிடித்தான்” என்ற வரி, ராமு தன் தாத்தாவிடம் உள்ள தங்கியிருத்தலில் (Dependency) இருந்து விடுபட்டு, சுயாதீனமான தனிமனிதனாக உருவெடுப்பதைக் குறிக்கிறது.

“அவனுக்கொரு தனிக்குணம்; முறித்துக்கொண்டு போவது.” என்ற இந்த வரி ராமுவின் ஒட்டுமொத்த வாழ்வியலையும் விளக்கிவிடுகிறது. தாத்தாவின் வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் பலியாகாமல், தன் சொந்த உழைப்பாலும் கவனத்தாலும் பெரிய வாளை மீனைப் பிடித்துக் காட்டுவதன் மூலம், ராமு தன் இருப்பை (Existence) நிரூபிக்கிறான்.

கதையின் உச்சக்கட்டக் கட்டங்களில் மாணிக்கத்தின் அகந்தை எப்படி ஒரு மனிதனைச் சிதைக்கிறது என்பது துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது. குளத்தில் வலம்வரும் ‘வாளை’ மீனைப் பிடிப்பது என்பது அவருக்கு ஓர் இலக்கன்று; அது தன் மேலாண்மையை, தன் ஆண்மைச் செருக்கை நிலைநிறுத்திக் கொள்ளும் போர்க்களம்.

மீனைப் பிடிப்பதற்காக அவர் படும் பாடும், காட்டும் வெறியும் தனிமனிதனின் குரூர அகந்தைக்குச் சான்றாகும். மீன் தப்பிச் செல்லும்போதெல்லாம் அவர் மனம் முறிந்துபோகிறது. “ஒண்ணு நான்; இல்லே அது… ரெண்டு பேருக்கும் இருக்க கணக்கைத் தீர்த்துக்கொள்ளனும்” என்று மீனுடன் அவர் மோதும் இடமானது, இயற்கையை வென்றுவிடத் துடிக்கும் மனிதனின் அகங்காரத்தின் தோல்வியைக் காட்டுகிறது.

மீனிடம் தோற்றுப் போகும் கோபமும் ஆத்திரமும் தன் மனைவடைடமும் பேரப்பிள்ளையான ராமுவிடமிடமும்தான் வெளிப்படுகிறது. பெல்ட்டால் மனைவியை அடிப்பதும் ராமுவைத் தாக்குவதும் அதிகாரத்தை இழந்த மனிதனின் கையறு நிலையையும் வன்முறையையுமே வெளிப்படுத்துகிறது. சா. கந்தசாமி இங்குத் தனிமனித வாழ்வியலின் கொடூரமான பக்கமான ‘உள்ளீட்டு வன்முறையை’க் கறாராகக் காட்டியுள்ளார்.

கதையின் முடிவில் மாணிக்கம் காணும் கனவும் அதைத் தொடர்ந்து நிகழும் உண்மையும் மனித வாழ்வியலின் பெரிய முரணாக அமைகிறது.

கனவில் மீனைப் பிடித்து அதன் மீது அமர்ந்து போராடும் அவர், நிஜத்தில் தோற்றுப் போய் நிற்கிறார். ஆனால், தான் எவ்வளவோ முயன்றும் பிடிக்க முடியாத அந்தப் பெரிய வாளை மீனை, ராமு எளிதாகக் கிணற்றடியில் கொண்டு வந்து நிறுத்துகிறான்.

ராமு வெற்றியோடு நிற்பதைப் பார்க்கும் மாணிக்கத்தின் கைகள் அவன் தோள்மீது விழுந்து, பின்பு கழுத்தில் உராய்ந்து காதுக்குச் செல்வது இரண்டு உணர்வுகளின் மோதலைக் காட்டுகிறது — ஒருபுறம் பேரனின் சாதனை மீதான தாத்தாவுடைய பெருமிதம்; மறுபுறம் தன் அதிகாரம் பறிபோய்விட்டதே என்ற ஆழமான பொறாமையும் ஏமாற்றமும். 

ராமு “ஆத்தா” என்று அலறிக்கொண்டு ஓடுவதில், அந்த உறவுகளுக்கு இடையிலான உள்ளார்ந்த பயமும் இடைவெளியும் என்றென்றும் நிரந்தரமாகிவிட்டமை புலனாகிறது.

சா. கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ சிறுகதை, வெற்றிகரமாக மீன் பிடிப்பதைப் பற்றியோ அல்லது கிராமத்துக் கதையைப் பற்றியோ பேசுவது அன்று. அது மனித மனம் காலங்காலமாக எதை எதையோ தேடி ஓடுகிறது என்பதையும் தன் பலவீனங்களை மறைக்க கோபத்தையும் அகந்தையும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறது என்பதையும் உணர்த்தும் ஒரு தத்துவார்த்தக் கண்ணாடி.

மாணிக்கம் தன் அகந்தையின் எடராலேயே கீழே விழுகிறார்; ராமுவோ தனது எளிய சுதந்திரமான நகர்வுகளால் வெற்றி பெறுகிறான். தனிமனிதனின் வாழ்வியல் நெறிகளை, தோல்விகளை, அதிகாரத்தைத் துல்லியமாக வாசகரின் மனச்சாட்சியின் முன் நிறுத்துவதில் இச்சிறுகதை என்றும் மிளிரும்.  

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *