நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 94.மனத்தின் தனிமை  (ஜி. கார்ல் மார்க்ஸின் ‘கேன்வாஸ்’ சிறுகதையை முன்வைத்து…)

 

உளவியல் முரண்களையும் தனிமனிதனின் தனிமை மற்றும் தாங்குதற்கரிய நினைவுகளின் சுமைகளையும் அமானுஷ்யக் கலைப்பார்வையுடன் இணைத்து எழுதும் எழுத்தாளர்களில் ஜி. கார்ல் மார்க்ஸ் முக்கியமானவர். 

இவரது ‘கேன்வாஸ்’ என்ற சிறுகதை, நடுசாமத்தில் புதிய நிலப்பகுதிக்கு லாரியிலிருந்து இறக்கிவிடப்படும் முரளிதரன் என்ற இளைஞனின் அக உலகப் பயணத்தையும் அவனது கடந்தகால சோகங்களையும் ஓவியத்தின் வண்ணங்களாக மாற்றிப் பார்க்கும் விசித்திரமான கதை. தனிமனிதனின் வாழ்வியல் சிதைவுகளை பெரிய கேன்வாஸின் கட்டமைப்போடு ஒப்பிட்டு இக்கதை பேசுகிறது.

நள்ளிரவில் லாரி ஓட்டுநரால் பாதியில் இறக்கிவிடப்படும் முரளிதரனின் சூழல் அவனது பாதுகாப்பற்ற மற்றும் ஆதரவற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. கையில் பையும் சில சான்றிதழ்களுமாய் நின்று கொண்டிருக்கும் அவனுக்கு அந்த இடம் முற்றிலும் புதியதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கிறது.

அந்தத் தெருவும் வீடுகளும் மஞ்சள் ஒளியில் ஜொலிக்கும் தெருவிளக்கும் அவனுக்கு பிரம்மாண்டமான கேன்வாஸ் போலத் தெரிகிறது. புற உலகின் எதார்த்தங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அவற்றை வண்ணங்களாகவும் நிழல்களாகவும் மாற்றிக் கற்பனை செய்யும் அவனது மனநிலை, அவன் ஏற்கனவே சமூகத்திலிருந்து உளவியல் ரீதியாக விலகிவிட்டதைக் காட்டுகிறது.

அவனது நிழல் அவனைக் கால்களோடு பிணைத்திருப்பது போலவும் அந்த விளக்கு அணைந்தபோது அவன் அடைந்த விடுதலை மற்றும் இழப்பின் தத்தளிப்பு மனிதர்களின் அகச் சுமைக்குச் சிறந்த குறியீடாகும்.

முரளிதரன் சாதாரண மனிதர்களிடமிருந்து விலகி நிற்பதற்குக் காரணம் அவனது மனைவி மேகலாவின் தற்கொலை மற்றும் அதன் பின்னணியிலுள்ள கொடூரமான நினைவுகளாகும். மேகலா தீக்குளித்து எரிந்த அந்தத் தருணத்தைக்கூட அவன் வெறும் நெருப்பாகப் பார்க்காமல், ஒரு ‘வண்ணமாக’, ‘ஆரஞ்சு வானமாக’ உருவகித்து ரசித்ததுதான் அவனது குடும்பத்தினரையும் ஊராரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“எல்லாவற்றையும் ஓவியமாகப் பார்க்கும் பைத்தியக்காரனை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்?” என்று கருதித்தான் அவனது அண்ணனும் குடும்பத்தினரும் அவனை லாரியில் ஏற்றி ஊரைவிட்டு அனுப்பியிருக்கிறார்கள். மனிதர்களின் வலிகளையும் தற்கொலைகளையும் கூட அழகியலாகப் பார்க்கும் ஒருவனால் சமூகத்தோடு இயல்பாக வாழ முடியாது என்ற எதார்த்தம் இங்கு வெளிப்படுகிறது.

குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கும் போதே, தன் கடந்த கால நினைவுகளைக் கோர்வையாக யோசிக்க முடிகிற அவனது மனம், தான் இழந்த உறவுகளையும் குடும்பத்தினரின் கோபத்தையும் மெல்லப் புரிந்துகொள்ள முயல்கிறது.

மதில்சுவர் மாடியில் எரிந்த சன்னல் விளக்கு வெளிச்சமும் அங்கே ஒரு பெண் கையை நீட்டிச் சன்னலை மூடுவதும் முரளிதரனின் அகத்தில் புதிய வண்ணங்களை உருவாக்குகிறது. அந்தத் தெருவில் தன்மீது அன்பு செலுத்த ஒருத்தி காத்துக்கொண்டிருக்கிறாள் என்ற அவனது கற்பனை அவனுக்கு ஆறுதல் அளிக்கிறது.

வயல்வெளிக்கு அருகில் இருக்கும் பூவரச மரத்தடியில் அமர்ந்திருக்கும்போது, அவனிடம் தேடி வந்து தழுவும் முக்காடிட்ட பெண், அவனது ஏங்குதலின் மற்றும் பிரமைகளின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.

அந்தப் பெண்ணுடன் இணைந்த பின் அவள் அங்கேயே புல்தரையில் அமைதியாகக் கிடப்பதும் முரளிதரன் மீண்டும் வந்து மதகில் உட்கார்ந்து காத்திருப்பதும் தனிமனிதன் தன் கனவுகளின் வழியே மட்டுமே தன் துயரங்களைச் சமாளிக்கிறான் என்பதை உணர்த்துகிறது.

ஜி. கார்ல் மார்க்ஸின் ‘கேன்வாஸ்’ சிறுகதை, தனிமனித வாழ்வியலின் மிகமெல்லிய மனச்சிதைவுகளையும் இழப்புகளிலிருந்து தப்பிக்க மனம் உருவாக்கும் கற்பனை உலகங்களையும் ஓவியத்தின் வழியே விவரிக்கும் அற்புதம் வாய்ந்த பிரதியாகும். 

நிஜ உலகத்தின் கொடூரங்களிலிருந்து விடுபட வண்ணங்களையும் கலை வெளிப்பாடுகளையும் நாடும் மனிதனின் அகத் தத்தளிப்பை இப்படைப்பு காட்டுகிறது.

வாழ்க்கையின் வலிகளை வண்ணங்களாக மாற்றிக் கற்பனை செய்யும் மனிதனின் அக ‘கேன்வாஸ்’, சமூகத்தின் பார்வையில் ஒருவேளை பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம்; ஆனால், அந்தத் தனிமையின் வழியேதான் அவன் தன் மீட்சியைக் கண்டடைய முயல்கிறான்!

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *