இரு நூறு தமிழ்ச் சிறுகதைகள் – 110.நினைவுகளின் நிழல் (மௌனியின் ‘மனக்கோட்டை’ சிறுகதையை முன்வைத்து…)

 

உளவியல் ஆழம், தத்துவார்த்தத் தேடல் மற்றும் மனித மனத்தின் விவரிக்க முடியாத விசித்திரப் போக்குகள் ஆகியவற்றைச் சிறுகதைக்குள் கொண்டுவந்தவர்களுள் முன்னோடியாகத் திகழ்பவர் எழுத்தாளர் மௌனி (எஸ். மணி ஐயர்). இவரது கதைகள் பௌதிக உலகிற்கு அப்பால் உள்ள சூட்சுமமான அக உலகப் பயணங்களை மையமாகக் கொண்டவை. அந்த வகையில், எழுத்தாளரின் மௌனியின் ‘மனக்கோட்டை’ என்ற சிறுகதை, தனிமனித வாழ்வியல் சார்ந்து தீவிரமான விவாதங்களையும் ஆழ்ந்த தத்துவார்த்தக் கேள்விகளையும் எழுப்பும் சிறந்த பிரதியாகும்.

உறவுகளின் விளிம்பில் நிற்கும் தனிமை, நண்பனின் மரணம் எழுப்பும் குற்றவுணர்ச்சி, கனவுக்கும் நனவுக்கும் இடையிலான கோடுகளின் அழிவு மற்றும் கற்பனை உலகத்தில் தன்னைத் தொலைத்துவிட்ட மனிதனின் அகத் தவிப்பு ஆகியவற்றை இக்கதை முன்வைக்கிறது. 

கதைநாயகனின் வாழ்க்கை எந்தவிதமான லட்சியப் பிடிப்பும் இல்லாமல், போக்குப் புரியாமல் நழுவிச் செல்லும் தன்மையுடன் தொடங்குகிறது. பெற்றோர்களின் மறைவு, உயர் உத்தியோகத்தைத் துறந்த நிலை, கிராமத்தின் தனிமை ஆகியவை அவனை ஒருவித விநோதமான மனநிலையில் நிறுத்துகின்றன. 

அவன் உலக வாழ்க்கையையே பெரிய சூழ்நிலைத் தோற்றமாகப் பார்க்கிறான்:- “மனது வேதனை கொள்ளவதாகிறது, எல்லாம் ஈசுவர சங்கல்பமென, தன்னை விடுத்துக் கொள்ளும் நம்பிக்கையும் இல்லை. இவன் தோற்றம், நடையுடை பாவனைகள், பேச்சுப் பழக்கங்கள், எல்லாம் சேர்ந்து, விநோத விரோத பாவத்தில் கலந்து… இவனைத் தெரியாதவர்களுக்கும்கூட இவனைப் பார்க்குங்கால், தெரிந்து கொள்ள அவா கொடுப்பதாக இருக்கும்.”

இந்தத் தனிமனித வெளிப்பாடு சாதாரணமானதன்று. அவன் சமூகத்திலிருந்து விலகி, தன் சொந்த கற்பனை உலகத்தில் அல்லது அகவெளியில் சஞ்சரிப்பவன். மாதக்கணக்கில் வெளியூர்களுக்குச் செல்வதும், சரித்திரச் சின்னங்களையும் பாழடைந்த இடங்களையும் தேடி அலைவதும் அவனது ஆத்மா தேடும் ஒருவிதத் தீர்வுக்கான முயற்சிகளாகும். ஆனால், அந்தப் பயணங்கள் எங்குமே அவனுக்கு அமைதியைத் தருவதில்லை; அவனை மேலும் மேலும் கேள்விகளுக்கு உள்ளாக்குகின்றன.

பட்டிணத்திற்குத் திரும்பும்போது பழைய நண்பர்களின் சந்திப்பு கதையின் திசையை மாற்றுகிறது. நண்பர்கள் அவனிடம் சங்கரின் இறப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவனுக்குள் எழும் அதிர்ச்சி உடல் ரீதியானதல்ல, அது அக ரீதியானது.

சங்கர் என்பவன் வெறும் நண்பன் மட்டுமல்லன்; அவனது கற்பனை உலகத்தில் வாழ்ந்த கண்ணாடிப் பிம்பம். சங்கர் வடக்கே சென்று சுரங்கப் பணியில் விபத்துக்குள்ளாகி இறந்த செய்தி அவனுக்குக் கிடைக்கப் பெறுகிறது. ஆனால், சங்கரின் குடும்பத்தினரோ அவனைக் குறித்துத் தவறாகப் புரிந்து கொள்ளவில்லை; சங்கர் தனது கடிதங்களில் இவனைப் பற்றித் தன் குடும்பத்தாரிடம் அளவுக்கு அதிகமாகப் பேசியிருக்கிறான்.

“என் கற்பனையில் பிறந்து, அவர்கள் மனத்தில் நீ வாழ்வது, எவ்விதமோ தெரியவில்லை. எல்லோருமே, உன்னையும் பற்றி பேசுமளவிற்கு, நீ எங்கள் குடும்பத்தினரிடை ஒருவரினென்ற தோற்றம் நாங்கள் கொண்டிருக்கிறோம்.”

இங்கு ஒரு மனிதன் தன் நிஜ வாழ்க்கையில் எவ்வாறு வாழ்கிறான் என்பதைவிட, இன்னொருவனின் கற்பனையில் அவன் எப்படிப் பிரதிபலிக்கிறான் என்பது முக்கியமாகிறது. சங்கரின் தங்கையான சுமி, இவனை நேரில் பார்த்திராதபோதும் தன் அண்ணனின் கடிதங்கள் மற்றும் பேச்சின் மூலமாக இவனை ஆழமாக உணர்ந்திருக்கிறாள். சங்கரின் மரணம் சுமிக்கும் இவனுக்கும் இடையிலான அகப் பாலத்தை உருவாக்கிவிடுகிறது.

கதைநாயகன் சிற்றூருக்கு அருகில் உள்ள பாழடைந்த மலைக்கோட்டைக்குச் செல்லும் பகுதி, அவனது அக உலகத்தின் வறட்சியையும் பிரமைகளையும் மிக அழகாகக் குறியீட்டு ரீதியில் வெளிப்படுத்துகிறது.

“எவ்வளவு அபத்தமாகப் படுகிறது எல்லாம். அல்பசக்தி கண்டு, தாங்கமுடியாது, மேலே போக வழிகாணாது, தவித்துக் கொந்தளிக்கும் மனோவியக்திகள், இவ்வகை வெளிவிளக்க ஆர்ப்பாட்டம்… எவ்வளவு அபத்தமாகப் படுகிறது. எவ்வித பிரமாண்டத் தோற்றமும் அல்பசக்தியின், அல்ப பவிஷாசையின், வெளிவிளக்கமாகத்தானே, தோற்றம் கொள்ளுகிறது.”

சரித்திரப் பிரசித்திபெற்ற கோட்டைகளும், சுரங்கப் பாதைகளும், மன்னர்களின் வீரதீர பராக்கிரமங்களும் இறுதியில் பாழடைந்து போவதைப் போலவே, மனிதன் தன் வாழ்க்கையில் கட்டமைக்கும் பெருமைகளும் மனக்கோட்டைகளும் ஒருநாள் அழிந்து போகக் கூடியவையே. 

பகல் ஒளியின் தீவட்டிகளுக்கும் அந்தகார இருளை முழுமையாக நீக்க முடியாது என்பதை அவன் உணர்கிறான். அவனது இந்தத் தத்துவார்த்தச் சிந்தனை, பவுதிக உலகப் பற்றுக்களிலிருந்து அவனை முழுமையாக விடுவிக்கிறது.

மழையின் காரணமாக ஒரு பங்களாவில் தஞ்சம் புகும் அவன், எதிர்பாராதவிதமாகச் சங்கரின் குடும்பத்தினரின் இல்லத்திற்குச் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் சூழல் யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடையிலான எல்லையை மங்கச் செய்கிறது.

சங்கரின் மைத்துனர் அல்லது உறவினர் அவனிடம் பேசும்போது, சங்கரின் இறப்பு மற்றும் அதன் தாக்கம் சுமி மீது ஏற்படுத்திய வடுக்களை விவரிக்கிறார். 

சங்கரின் மறைவைத் தாங்க முடியாமல், அவனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த சுமி, இறுதியில் கன்னியாஸ்திரியைப் போல வாழ்ந்து தன் ஆன்மாவைத் தொலைத்துவிட்டாள் என்ற உண்மை வெளிப்படுகிறது.

அங்கு கதைநாயகன் வெளிப்படுத்தும் வாதம் கறாரானது:- “இப்போது யதேச்சையாகவா, வந்து சேர்ந்தேன்? இல்லை. என் வாழ்க்கை அவன் கற்பனையில், என்பதில் அவர்களும்கூட இருப்பது, உங்களுக்குத் தெரியவில்லை. இப்போது? – நான் இருப்பதில்…”

அவன் தன் இருப்பை அந்தச் சூழலோடு இணைத்துப் பார்க்கிறான். சங்கர் தன் கற்பனையில் இவனை உயிர்ப்புடன் வைத்திருந்ததால் மட்டுமே, அந்தக் குடும்பத்தினரால் இவனை ஏற்றுக்கொள்ள முடிகிறது. சுமி இவனைத் தன் அண்ணனின் தொடர்ச்சியாகவும், தன் அக உலகத்தின் நிழலாகவும் காண்கிறாள்.

அவன் அங்கிருந்து வெளியேறும் போது, மழையும் காற்றும் கடுமையாக வீசுகின்றன; யாரும் அவனைத் தடுத்து நிறுத்தவோ, தன் துக்கத்தை வெளிப்படுத்தவோ முற்படுவதில்லை. ஏனென்றால், அவர்கள் சந்தித்துக் கொண்டது இரண்டு மனிதர்களை அல்ல;, நினைவுகளின் நிழல்களையும் கனவுகளின் மிச்சங்களையும் ஆகும்.

எழுத்தாளர் மௌனியின் ‘மனக்கோட்டை’ சிறுகதை, மனித மனத்தின் சிக்கலான ஊசலாட்டங்களை, வெளிப்படையான நிகழ்வுகளைவிட அக உலகத்தின் அசைவுகளின் வழியே ஆராயும் அரிய பிரதியாகும். பௌதிக உலகின் யதார்த்தங்களை மீறி, ஒரு மனிதன் தன் கற்பனையிலும் இன்னொருவனின் நினைவிலும் எப்படி வாழ்கிறான் என்பதை இக்கதை ஆழமாகப் பதிவு செய்கிறது.

தனிமனித வாழ்வியலின் தனிமை, மரணம் தரும் அதிர்ச்சி மற்றும் மனதுக்குள் கட்டப்படும் கோட்டைகள் எவ்வாறு நிஜங்களை விஞ்சுகின்றன என்பதற்கான சிறந்த சாட்சியாக இக்கதை திகழ்கிறது. மனிதனின் அக உலகச் சுமையைத் தோலுரித்துக் காட்டும் மௌனியின் கலை ஆளுமை இக்கதையில் முழுமையாக வெளிப்பட்டுள்ளது.

– – –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *